வேறு ஒரு கிரகத்திலிருந்து ஒரு இளம்பெண் பூமிக்கு வருகிறாள். வந்து இறங்கிய சிறிது நேரத்திலேயே கார் விபத்தில் மாட்டிக்கொண்ட நாயகனை காப்பாற்றுகிறாள். இந்த களேபரத்தில் அவள் தன் கழுத்து செயினில் இருந்த ஒரு கல் அவன் இதயத்தில் போய் மாட்டிக்கொள்கிறது.
சிப் பொருத்தப்பட்ட அந்த கல்லின் உதவி இல்லாமல் தன் கிரகத்தை தொடர்பு கொள்ளமுடியாது. ஆகையால் போகவும் முடியாது. வேறு வழியும் இல்லாததால், அவனைத் தேடிப் போகிறாள். அவனோ ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருக்கிறான். தன்னை ஏலியன் என சொல்லாமல், அவனிடம் பழகுகிறாள். அவன் இவளின் அப்பாவித்தனம் பிடித்துப்போய் காதலிக்க ஆரம்பிக்கிறான். இவளோ தான் ஏலியன் என்பதால், அவன் காதலை ஏற்க மறுக்கிறாள். ஆனால், கல்லுக்காக திரும்ப, திரும்ப அவனிடமே போகவேண்டிய நிலை.
இதற்கிடையில், நாயகனுக்கு வேறு சில பிரச்சனைகளும் இருக்கின்றன. தன் சின்னஞ்சிறு வயதில், ஒரு மழை நாளில் அம்மாவை ஒரு விபத்தில் பறிகொடுக்கிறான். அதன் பாதிப்பால், ஒரு மழை நாளுக்கு பிறகு அவனுக்கு பல விசயங்கள் மறந்துபோகின்றன. அதில் அவன் காதலிக்கின்ற பெண்ணும் அடக்கம். நினைவுகள் போன பிறகு எப்படி மறுபடி காதலிப்பது? ஆகையால், அவர்களுக்கு அவர்கள் ஏற்கத்தக்க ஒரு இழப்பீட்டைக் கொடுத்து ஒதுங்கிவிடுகிறான். இந்த மறதி பிரச்சனையை யாரிடம் சொல்லாமல் கவனமாக மறைத்துவருகிறான். அதற்காக தன் வாழ்நாளில் நடக்கின்ற அத்தனை செயல்களையும் பதிவு செய்து, சமாளித்து வருகிறான்.
இதுவரை சொன்னதெல்லாம், துவக்க காட்சிகள் தான். அதற்கு பிறகு, அந்த கல் அவனின் இதயத்தில் இருப்பதால், அதை எடுத்தால், அவன் உயிருக்கு ஆபத்து என்கிறார்கள். இங்கேயே நீண்ட நாட்களுக்கு அவளால் வாழ முடியாது. பிறகு என்ன ஆனது என்பதை காதலுடன் சொல்லியிருக்கிறார்கள்.
*****
”ஊர்ல இத்தனை பொண்ணுங்க இருந்தும், நான் ஏன் ஜெஸ்ஸியை காதலிச்சேன்” என புலம்புகிற கதை தான இந்தப் படமும்! அவள் ஒரு ஏலியன். அவள் பூமியிலேயே தங்கிவிட முடியாது என்ற எண்ணத்தில், அவன் மேல் காதல் இருந்தால் கூட ஏற்க மறுப்பாள். அவனோ இவளுக்கு தன்னைப் பிடிக்கிறது. இருந்தும் ஏன் இவள் மறைக்கிறாள்? என்ற இருவரின் காதல் பரிதவிப்பு தான் மொத்த கதையும். அது நன்றாகவும் வேலை செய்திருக்கிறது.
நம் தமிழ்ப் படங்களில் செமியாக வரும் நாயகிகளைப் போலவே, இதில் உள்ள
நாயகியின் பாத்திரமும்! அப்படிப்பட்ட நாயகிகளைப் பார்த்தால், நமக்கு எரிச்சல் வரும். ஆனால், இதில் அவள் ஒரு ஏலியன் என்பதாலும், அந்த பெண்ணின் வெள்ளந்தித்தனத்தாலும் நமக்கு பிடித்துவிடுகிறது.
இந்த மாதிரி தொடர்களில் எல்லாம் கவனிக்கிறேன். ஒரு விசயம் தெரிய வருகிறது. ஆனால், அதைப் பற்றி கேட்டால், தொடர் முடிந்துவிடும் என்பதால், அதை கண்டுகொள்ளாமலே நகர்கிறார்கள். ஒரு அத்தியாயம் 45 நிமிடங்கள். 10 அத்தியாயங்களில் எடுத்து முடித்திருக்க வேண்டிய ஒரு கதையை, 28 அத்தியாயங்கள் எடுத்து வைத்திருக்கிறார்கள். குறைவான கதாப்பாத்திரங்கள் தான். நாயகிக்கு சூப்பர் பவராக சில திறன்கள் இருந்தாலும், ஆங்காங்கே ஊறுகாய் போல தொட்டுக்கொள்கிறார்கள். இதன் வெற்றியில் இரண்டாவது சீசன் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 2022ல் வரும் என எதிர்பார்க்கலாம்.
இது ஒரு சீன தொடர். படத்தில் எல்லா வயதினை சார்ந்தவர்களும் தொப்பை இல்லாமல் இருப்பது ஆச்சர்யம்.
காதல் கதை பிடிக்கும் என்றால், நிறைய நேரம் இருந்தால் பாருங்கள். தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.