1935ல் டாக்டர் அம்பேத்கர் அவர்களை இப்பொழுது பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு (ஒன்றுபட்ட இந்தியா என்பதால்) ஒரு அமைப்பு சார்பாக ”சாதி ஒழிப்பு” என்ற தலைப்பில், தயாரித்துப் பேச அழைக்கிறார்கள். அப்படியே அந்த மாநாட்டிற்கு தலைவராகவும் இருந்து நடத்தி தாருங்கள் என கோருகிறார்கள். இன்னின்ன கேள்விகளை எல்லாம் சாதியை காப்பாற்ற நினைக்கிறவர்கள் கேட்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு தயாரியுங்கள் என சில கேள்விகளையும் தொகுத்து அனுப்புகிறார்கள்.
”சாதி ஒழிப்பு” என்ற தலைப்பில் பேச அம்பேத்கர் விரிவாக பேச இருக்கிறார் என தெரிந்ததுமே உள்ளூரில் கடுமையான எதிர்ப்பு உருவாகிறது. சில பிரமுகர்கள் மாநாட்டின் பொறுப்புகளிலிருந்து கழன்று கொள்கிறார்கள். மாநாட்டின் குழுவில் சிலர் உரையிலிருந்து இதை மட்டும் நீக்கினால் நலம். அதை நீக்கினால் நலம் என கடிதம் எழுதுகிறார்கள். உரை தயாரிப்பில் இந்து மதத்தை கடுமையாக விமர்சனம் செய்து, முற்றிலுமாய் மறுத்துவிடுவது என்பது அவர்களில் சிலருக்கு உவப்பில்லை.
”எனக்கு உடல்நிலை சரியில்லாத பொழுதும் கூட நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மெனக்கெட்டு தயாரித்தேன். இப்பொழுது என் உரை குறித்து கருத்து சொல்ல உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் எதையும் மாற்றுவதற்கு நான் தயாரில்லை. அதன் சாரம் கெட்டுவிடும். கொள்கையில் விட்டுக்கொடுக்க தயாரில்லை. உங்களுக்கு சிரமம் என்றால் மாநாட்டை நிறுத்திக்கொள்ளுங்கள்” என கறாராக சொல்லிவிடுகிறார். மாநாடு நிறுத்தப்படுகிறது. இதை அச்சுக்கு கொடுத்து, மக்களிடையே கொண்டுசெல்கிறார்.
****
இந்து மதம் கடைப்பிடிக்கிற சமூக பழக்கவழக்கங்கள் மனித விரோதமாக இருக்கின்றன என நிறைய பட்டியலிடுகிறார்.
தாழ்த்தப்பட்ட ஒருவர் தான் யாத்திரை போய் வந்து, தன் சொந்தங்களுக்கு “நெய்” சேர்த்து சமைத்திருக்கிறார். அதெப்படி “நெய்” சேர்த்து சமைக்கலாம். அவ்வளவு திமிரா? என கொலைவெறித்தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். கொடூரம்.
”பலாய்” என்னும் சாதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடப்பட்ட கட்டளைகள் இப்படி இருக்கின்றன.
இந்து ஒருவன் செத்துப்போனால், உறவினர்கள் எவ்வளவு தூரம் இருந்தாலும் இழவுச் செய்தியை சொல்லவேண்டும்.
அழகான ஆடைகளையோ, ரவிக்கைகளையோ உடுத்தக்கூடாது. இந்து விசேசங்களில் பலாய்கள் மேள தாளங்களை இசைக்கவேண்டும். ஆனால் கூலி எல்லாம் கேட்டக்கூடாதாம். அவர்கள் மனம் உவந்து கொடுப்பதை மட்டுமே வாங்கிக்கொள்ளவேண்டுமாம். அயோக்கியப்பயல்கள்.
இந்து மதத்தின் ஆக கீழான விசயங்களை இப்படி பல அம்சங்களை குறிப்பிட்டு பிரி பிரி என பிரித்தெடுக்கிறார்.
***
மாற்று என வரும் பொழுது, சோசலிஸ்டுகளுக்கு வருகிறார். பொருளாதார நிலைகளை, அரசியல் அதிகாரத்தை மட்டுமே பேசுகிறார்கள். தொழிலாளர்களை ஒன்றிணைப்பதிலேயே சாதி குறுக்கு வந்து ஒன்று சேர விடாது என்கிறார். நாளை புரட்சியே நடத்தி முடித்தால் கூட சாதி வந்து ஒவ்வொரு செயல்பாட்டிலும் குறுக்கே நிற்கும் என்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம் வேண்டும் என்கிறார். ஆனால், புரட்சிகர வன்முறை மீதான ஒவ்வாமை அவரிடம் இருக்கிறது. அதெப்படி? அரசு ஒன்று உருவாகி, அதன் வளர்ச்சியில் பேராயுதங்களை வைத்துக்கொண்டு, பெரும்பாலான மக்களை ஒடுக்கிக்கொண்டு இருக்கும் பொழுது, புரட்சிகர வன்முறை இல்லாமல் அதிகாரத்தில் இருந்து எப்படி இறக்கமுடியும்?
ஆனால் அவர் சொல்கிற மாற்று என்பது (இந்தப் புத்தகத்தின் எல்லைக்குள் நின்று கொண்டு சொல்கிறேன்).
”இறுதியாக பார்க்கும் பொழுது சாஸ்திரங்கள், வேதங்கள் ஆகியவற்றின் அதிகாரத்தை அழிக்கவேண்டும் என்பதே இதன் பொருள்” (பக். 77)
இந்து மதத்திற்குள் நின்றுகொண்டு சீர்த்திருத்தம் பேசுவதெல்லாம் சாத்தியமில்லை. இந்து மதமே மனித விரோதமாக இருக்கிறது. ஆகையால் அதை தூக்கி கடாசுங்கள் என சொல்லிவிட்டு…
“உண்மையான மதம் சமூகத்துக்கு அஸ்திரவாரமாயிருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டு தான் எல்லா அரசாங்கங்களும், அவற்றின் அதிகாரங்களும் அமைந்துள்ளன. எனவே இந்தப் பழங்கால விதிகளாலான மதத்தை ஒழிக்கவேண்டும் என்று நான் கூறும் பொழுது அதற்கு பதிலாக தத்துவங்களால் ஆன மதம் ஒன்று வரவேண்டும் என்று வரவிரும்புகிறேன்” என மதத்தை தூக்கிப்பிடிக்கிறார். பின்னாளில் அவர் புத்த மதத்திற்கு மாறியதை இதோடு இணைத்துப் பார்க்கலாம்.
அம்பேத்கர் வைக்கிற இன்னும் சில வாதங்களை இன்னும் நிதானமாக படிக்கவேண்டும். விவாதித்து புரிந்துகொள்ளவேண்டும். அம்பேத்கர் சாதி ஒழிப்புக்கு தீர்வாக முன்வைக்கிற சில விசயங்களில் நமக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், சமூகத்தின் கோளாறுகளை களையவேண்டும். அடுத்தப்படி முன்னேறவேண்டும் என நினைக்கிற அனைவரும் இந்த புத்தகத்தைப் படிக்கவேண்டும்.
பக்கங்கள் : 100
விலை : ரூ. 95
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment