> குருத்து: The Pope’s Exorcist (2023)

April 15, 2023

The Pope’s Exorcist (2023)


கணவனை ஒரு விபத்தில் இழந்து, தன் கணவரின் பரம்பரை சொத்தை சரி செய்து, வாழ்க்கைக்கு எதையாவது தேத்தலாம் என ஸ்பெயினுக்கு வருகிறார் அந்த அம்மா. கல்லூரி படிக்கும் பெண்ணுடன், பள்ளி செல்லும் மகனுடன் வருகிறார்.


வீட்டை சரி செய்வதற்கான வேலைகளில் ஊழியர்கள் ஈடுபடும் பொழுது, நெருப்பு விபத்து ஏற்பட்டு ஒரு தொழிலாலி காயம்பட இனி இங்கு வேலை செய்ய முடியாது என சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள்.

அந்த வீட்டில் இருந்த சாத்தான் அந்தப் பையனைப் பிடித்து ஆட்டத் துவங்குகிறான். உள்ளூரில் ஒரு பாதர் வருகிறார். ”இவரெல்லாம் வெத்துவேட்டு பெரிய ஆளை வரசொல்லு” என மிரட்டுகிறது.

இந்த செய்தி உள்ளூர் சர்ச் மூலம் வாடிகனுக்கு வந்து சேர்கிறது. அங்கு இந்த மாதிரி பேய் விரட்டும் ஆட்களில் தலைமை ஆளாக இருக்கிறார் நாயகனான அந்த பாதிரியார். ”கடந்த காலத்திலும் அந்த ஊரில் இருந்து பிரச்சனைகள் வந்தது. அதை உடனடியாக போய் என்னவென்று பார்!” என போப் அவரை அனுப்புகிறார்.

அந்த சாத்தான் வழக்கமான, சாதாரண பேயாக இல்லாமல், சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. தன்னை விரட்ட வரும் பாதிரியாரின் பலவீனங்களை எல்லாம் நன்றாக தெரிந்துவைத்திருக்கிறது. அந்த பாதிரியாரைப் பிடித்துக்கொண்டு, வாடிகனுக்குள்ளேயே நுழைந்து நிறைய காரியங்களை செய்துவிடும் பெரிய திட்டத்துடன் இருக்கிறது. இதெல்லாம் படம் துவங்கி கொஞ்ச நேரத்திலேயே சொல்லிவிடுகிறார்கள்.

தலைமை பாதிரியாரால் அந்த சாத்தானை விரட்ட முடிந்ததா? அல்லது சக்தி வாய்ந்த சாத்தான் ஜெயித்ததா? என்பதை கொஞ்சம் பயமுறுத்தி சொல்லியிருக்கிறார்கள்.
****


சாத்தான். வழக்கமான பேய்விரட்டும் படலம். பயமுறுத்தல் என்ற வழக்கமான படமாக இல்லாமல் , மொத்தப் படத்தையும் காப்பாற்றியிருப்பது தலைமை பாதிரியாக வரும் Russel Crowe தான். அவருடைய தடிமனான உடம்பு, எதற்கும் அலட்டிக்கொள்ளாத குணம் எல்லாமும். அதற்கு பிறகு வழக்கமான பேயாக இல்லாமல், வரும் சாத்தான். அதுவும் சக்தி வாய்ந்ததாக இருப்பது. குறைவான பாத்திரங்கள் தான். மற்றவர்கள் கொடுத்த வேலைகளை செய்திருக்கிறார்கள்.

வாடிகனில் உள்ள சாத்தான் விரட்டும் தலைமை பாதிரியாரின் வாழ்க்கையிலிருந்து உண்மை பகுதிகள் என விளம்பரப்படுத்துகிறார்கள். வாடிகன் படத்தை நிறுத்திவிடும் என பயம் வந்துவிட்டதா என தெரியவில்லை. இந்தப் படம் ஒரு கற்பனை கதையே என முதலிலேயே ஜகா வாங்குகிறார்கள்.

மற்றபடி, பேயெல்லாம் உலகத்தில் இல்லை. ஹாலிவுட் துவங்கி, கோலிவுட் வரை தயாரிப்பாளர்கள் கல்லா கட்டுவதற்கு பேய், சாத்தான் எல்லாம் நன்றாக பயன்படுகின்றன. இப்படி கற்பனையான பாத்திரம் ஒன்று கிடைத்துவிட்டால், கதையும், திரைக்கதையிலும் எவ்வளவு புகுந்து விளையாடலாம். ஆனால் அதில் நமது கதையாசிரியர்கள் கற்பனை வறட்சியுடன் இருப்பது தான் இதில் பெரிய சோகம்.

இந்தப் படம் இப்பொழுது திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. தமிழிலும் வெளியாகியிருக்கிறது. ஓடிடிக்கு விரைவில் வந்துவிடும். பேய் விரட்டும் படங்களில் ஆர்வமுள்ளவர்கள் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: