> குருத்து: Garudan (2023) மலையாளம்

December 11, 2023

Garudan (2023) மலையாளம்


ஒரு கல்லூரியில் பண்பாடு நிகழ்வு போட்டிகள் நடைபெறுகின்றன. நிறைய மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள். அதில் ஒரு பெண் தன் வீட்டுக்கு போகும் வழியில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள்.


எதைச்சையாக அந்த இடத்திற்கு செல்லும் நபர்களால் அந்த பெண் காப்பாற்றப்பட்டாலும், கோமாவிற்கு போய்விடுகிறாள்.

வழக்கு போடப்பட்டு, நாயகனான போலீசு அதிகாரி விசாரணையை துவங்குகிறார். உடனடியாக யாரையும் கைது செய்யமுடியவில்லை. கைது செய்ய சொல்லி போராட்டங்கள் நடக்கின்றன. கொஞ்சம் சுற்றி வளைத்து ஆதாரங்களைத் திரட்டி ஒரு பேராசிரியரை கைது செய்து குற்றத்தை நிரூபித்து ஏழு ஆண்டுகள் தண்டனையையும் பெற்றுத் தருகிறார்கள்.

நிற்க. இதெல்லாம் எழுத்துப் போடுவதற்கு முந்தைய கதை. பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து அந்த பேராசிரியர் வெளியே வருகிறார். மீண்டும் வழக்கை விசாரிக்க அனுமதி கேட்கிறார். ஆச்சர்யப்படுகிறார்கள். அவரே சிறையில் இருந்த காலத்தில் வழக்கறிஞராக தேர்ச்சி பெற்று இருக்கிறார். அவரே தனக்காக வாதாடவும் செய்கிறார். ஒவ்வொரு சாட்சியத்தையும் உடைக்க துவங்குகிறார். தான் குற்றமற்றவர் என்பதை நிருபித்தாரா? அதற்கு பிறகு என்ன சிக்கல்கள் எழுந்தது என்பதை திரில்லாக சொல்லியிருக்கிறார்கள்.
****

பொதுவாக ஒரு குற்றத்திற்கு தண்டனை கிடைப்பது எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அந்த வழக்குக்கு வாய்தா, வாய்தா என அலைவதெல்லாம் தான் அதிகப்பட்ச தண்டனையாக இருக்கும். இதை அரசும் நீதிமன்றங்களும் தெரிந்தே தான் செய்கிறார்கள்.

ஒரு சொந்தத்தின் வீட்டு விசேசத்தில், தண்ணியைப் போட்டு தகராறு செய்து, ஒருவரை இன்னொருவர் குத்திவிட்டார். சொந்தக்காரர்களே என அக்கறைப்பட்டு உள்ளே புகுந்து விலக்கிவிட்டவர் எங்க அப்பா. அவரையும் கலாட்டா செய்த கோஷ்டி வழக்கில் சேர்த்து, பல வருடங்கள் வாய்தா, வாய்தா என அலையவிட்டார்கள். ஒவ்வொருமுறை வாய்தாவிற்கு போகும் பொழுது, மில்லில் விடுமுறை எடுக்க முடியாத சிக்கல். எடுத்தால், சம்பளம் பறிபோகும். எங்க அம்மா திட்டிக்கொண்டே இருப்பார். ஒரு வழியாய் வழக்கு முடிவுக்கு வரும் பொழுது, ”குத்திட்டு செத்தே போங்கடா! நான் விலக்கிவிட மாட்டேன்டா!” என அப்பா முடிவெடுக்கும் நிலைக்கு நீதிமன்றம் தள்ளிவிட்டது எனலாம்.

ஆனால், திரைப்படத்தில் எல்லாம் விரைவாக நடக்கும். பாலியல் பலாத்காரம், கோமா, மக்கள் போராட்டம் என்பதால், வழக்கை விரைவாக நடக்கும் என நாம் ஆறுதல் சொல்லிக்கொள்ளலாம்.

கதை கொஞ்சம் திரிஷ்யம் சாயல் தான். கதையில் கொஞ்சம் மெனக்கெட்டு வேலை செய்து, எடுத்திருக்கிறார்கள். ஆகையால் சுவாரசியமாய் இருக்கிறது.

படத்தில் கருடனுக்கு விளக்கம் சொல்லும் பொழுது தான் கொஞ்சம் ஜெர்க்கானது. நேர்மையான போலீசு அதிகாரியாக சுரேஷ் கோபி. நேர்மையாக இருப்பதினாலேயே வரும் சிக்கல்களை நன்றாக நடித்திருக்கிறார். (ஒரு சின்ன சதவிதம் பேர் அப்படி இருப்பது உண்மையிலேயே துறையில் இருப்பது, சிக்கிக்கொள்வது போல தான்!) அலட்டிக்கொள்ளாத பேராசிரியராக பிஜூ மேனனும் அருமையாக செய்திருக்கிறார். மற்றவர்களும் துணை நின்றிருக்கிறார்கள்.

படம் நவம்பரில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, இப்பொழுது பிரைமில் இருக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: