> குருத்து: வருங்கால வைப்பு நிதி திட்டம் - நிறுவனமும், தொழிலாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

December 11, 2023

வருங்கால வைப்பு நிதி திட்டம் - நிறுவனமும், தொழிலாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!



பி.எப் குறித்து தொழில் உலகம் டிசம்பர் இதழில் வெளிவந்துள்ளது.
இனி தொடர்ந்து எழுதுவேன்!
இதழை அறிமுகப்படுத்தி, தொடர்ந்து எழுதுவதற்கும் உற்சாகப்படுத்தும் GSTPS சொசைட்டியின் தலைவர் திரு. செந்தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நன்றி.

****


வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF)   நிறுவனமும், தொழிலாளர்களும் அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான அம்சங்கள் என்னென்ன?

வருங்கால வைப்பு நிதி திட்டம் ஏன் உருவாக்கப்பட்டது?

தொழிலாளர்கள் தங்கள் வாழ்நாளில்  வேலை செய்யும் பொழுது எதிர்கால நலனுக்காக சேமிக்கவேண்டும்.  அப்பொழுது தான் ஓய்வு பெறும் காலத்தில் சேமிப்பு தொகை மொத்தமாக வரும் பொழுது, அவர்களுடைய அத்தியாவசிய தேவைக்கும், ஓய்வு காலத்தில் ஓய்வூதியமாக ஒரு தொகை கிடைப்பது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.


இந்த திட்டம் எப்பொழுது உருவாக்கப்பட்டது? எவ்வளவு தொழிலாளர்கள் பலன் பெறுகிறார்கள்?


தொழிலாளர்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக 1952லிலேயே உருவாக்கப்பட்ட திட்டம் இது. இந்த திட்டத்தில், ஆகஸ்ட் 2023 நிலவரத்தின் படி, இணைந்துள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை மொத்தம் 7,53,297.  பயன்பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 6,88,82,855.  ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 76,63,766.


வ.வை. நிதி திட்டத்தில் எப்பொழுது இணையவேண்டும்?

 

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை துவங்கிய நாளிலிருந்து என்றைக்கு 20 பேர் வேலை செய்கிறார்களோ, அன்றைய நாளில் இருந்து இந்த திட்டத்தில் நிறுவனம் இணைவது கட்டாயமாகும்.  இதை அரசோ, பி.எப் நிறுவனமோ கண்டுபிடித்து நமக்கு சொல்வதில்லை. நாமே பி.எப் விதிகளைப் புரிந்துகொண்டு இணைதல் வேண்டும்.  இதை நிறுவனம் தெரிந்தும், தெரியாமலும் பதிவு பெறாமல் கடந்து செல்லும் பொழுது,  அடுத்து வரும் சில மாதங்களிலோ, வருடங்களிலோ நிறுவனம் பி.எப்பில் பதிவு செய்யும் பொழுது, கடந்த வந்த காலங்களுக்கும் நிறுவனம் பி.எப் நிதியை தன்னிடம் வேலை செய்த அத்தனை தொழிலாளர்களுக்கும் பி.எப் நிதியை செலுத்தவேண்டிய நெருக்கடிக்குள்ளாகும். பல தொழிலாளர்கள் வேலையை விட்டு போயிருப்பார்கள்.  அந்த தொழிலாளர்களிடம் அப்பொழுது மொத்தமாக பிடித்தம் செய்வதும் முடியாது. ஆகையால், தொழிலாளர்கள் செலுத்தவேண்டிய பணத்தையும் நிறுவனமே செலுத்தவேண்டிய நெருக்கடிக்குள்ளாகும்.  ஆகையால், உரிய காலத்தில் பி.எப் திட்டத்தில் இணைவது நிறுவனத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது.


ஒரு நிறுவனத்தில் 20 தொழிலாளர்களுக்கு குறைவாக தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.  அவர்களும் பி.எப் திட்டத்தில் இணைய முடியுமா?

சம காலங்களில் ஒரு பெரும் நிறுவனங்களில் ஒரு நிறுவனம் வேலை கொடுக்க கேட்கும் பொழுது, “பி.எப், இ.எஸ்.ஐ இருந்தால் வேலை தருவோம். இல்லையெனில் வேலை தர முடியாது” என்பதை தெளிவாக சொல்லிவிடுகின்றன.  ஏனெனில், அப்படி வேலை கொடுத்தால்,  அந்த நிறுவனத்தில் வேலை செய்கிற தொழிலாளர்களுக்கும் பி.எப், இ.எஸ்.ஐ செலுத்தவேண்டிய பொறுப்பு முதன்மை முதலாளிக்கு (Principal Employer)  வந்துவிடுவதால், அந்த பொறுப்பை கவனமாய் ஏற்பதில்லை.


ஆக, தொழில் வாய்ப்புகளை பெருக்கவேண்டுமென்றால், 
ஒரு நிறுவனத்திற்கு பி.எப் திட்டத்தில் பதிவு செய்யவேண்டியது 
அவசியமாகிறது. இதற்காகவே, 20 தொழிலாளர்களுக்கும் குறைவாக இருந்தாலும், 
பி.எப். திட்டத்தில் இணையலாம் என சட்டம் சொல்கிறது.  
அதற்கு பெயர் தன்னார்வத்துடன் விரும்பி இணையும் திட்டமாகும். 
பி.எப் சட்ட பிரிவு 1 (4) இன் கீழ் பதிவு செய்யலாம்.  நிறுவனத்தின் 
முதலாளியும், நிறுவனத்தில் வேலை செய்கிற அனைத்து 
தொழிலாளர்களும் கையெழுத்திட்டு ஓப்புதல் தரும் பட்சத்தில் இணையலாம்.
 
பி.எப் திட்டத்தில் எவ்வளவு நிதி தொழிலாளர் செலுத்தவேண்டும்? 
நிறுவனம் எவ்வளவு செலுத்தவேண்டும்?
 
ஒரு தொழிலாளியின் சம்பளத்தில் அடிப்படை சம்பளம் (Basic Salary), 
பஞ்சப்படி (Dearness Allowance) இரண்டிலும் வேலை செய்த நாட்களுக்கு 
சம்பளம் கணக்கிட்டு,  12% பிடித்தம் செய்யவேண்டும்.  நிறுவனமும் 
அதே அளவிற்கு 12% செலுத்தவேண்டும்.
 
உதாரணம் :  ஒரு தொழிலாளியின் சம்பளம் 15000. 
(இதில் அடிப்படை சம்பளம் எவ்வளவு, பஞ்சப்படி எவ்வளவு என்பதை 
துறைவாரியாக அரசு நியமித்து  சட்டம் (The Minimum Wages Act, 1948) 
இயற்றியுள்ளது. 
 
அதன்படி ஒரு கடைநிலை ஊழியருக்கான அடிப்படை சம்பளம், 
பஞ்சப்படி என்பதை  இப்படிப் பிரித்துக்கொள்ளலாம்.

சம்பளம் ரூ. 15000
வேலை செய்த நாட்கள் 30
மொத்த சம்பளம் ரூ. 15000

இதில் அடிப்படை சம்பளம் + பஞ்சப்படி ரூ. 12500 என கணக்கிட்டால், 
அதில் 12%  ரூ. 1500 என பிடித்தம் செய்யவேண்டும்.
 
நிறுவனமும் அதே அளவு 12% கணக்கிட்டு ரூ. 1500 யும் சேர்த்து, 
தொழிலாளியின் கணக்கில் ரூ. 3000 செலுத்தவேண்டும்.

இன்னும் வளரும்!
 
 
 
 

 

 

 

 

0 பின்னூட்டங்கள்: