> குருத்து: Level cross (2024) மலையாளம்

October 28, 2024

Level cross (2024) மலையாளம்


காலையில் ஒரு பயணிகள் ரயில் வண்டி. மாலையில் ஒரு சரக்கு ரயில் வண்டி என மிக மிக குறைவாக ரயில்கள் கடக்கும் ஒரு லெவல் கிராஸிங்கில் நாயகன் கேட் கீப்பராக வேலை செய்கிறார். அந்த லெவல் கிராசிங்கை கடக்கும் மற்ற வண்டிகளும் அபூர்வம். அவருக்கு குடும்பம் ஏதும் இல்லை. தனியனாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். அங்கு ஒரு கழுதை மட்டும் அவனுடன் இருக்கிறது.


ஒரு பயணிகள் ரயில் கடக்கும் பொழுது அதில் இருந்து யாரோ விழுவது போல தெரிகிறது. அருகில் சென்று பார்த்தால் ஒரு பெண் கீழே விழுந்து கிடக்கிறார். தூக்கி வந்து முதலுதவி செய்கிறான்.

முதலில் தவறி விழுந்துவிட்டதாக சொல்பவள், தன் கதையை விவரிக்கிறாள். அதில் கணவன் மோசமானவனாக இருக்கிறான். அவனிடமிருந்து தப்பிப்பதற்காக தானே குதித்தேன் என்கிறாள்.

நாயகனுடைய உடமைகளை அவள் எதைச்சையாகப் பார்க்கும் பொழுது, அவனுக்கு ஒரு மோசமான பின்கதை இருப்பது தெரிய வருகிறது.

மனைவியை தேடி வரும் கணவன் அவள் சொன்னதற்கு மாறாக வேறு ஒரு கதை சொல்கிறான். நாயகனுக்கு அவள் இங்கிருந்தால் தனக்கு துணையாக இருக்கும் என நினைக்கிறான்.

பிறகு என்ன நடந்தது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
***


ஒரு மனிதனுக்கு/மனுசிக்கோ துணை என்பது உடலுக்கும், மனதுக்கும் அவசிய தேவையாய் இருக்கிறது. பரஸ்பரம் நாம் நமது துணையின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, பரஸ்பரம் நமக்குள் வரும் வேறுபாடுகளை பேசி, புரியவைத்து கையாளவும் தெரியவில்லை அல்லது ஆணோ/பெண்ணோ சிக்கலாக இருக்கிறார்கள் என்பது தான் பெரிய ரோதணையாக இருக்கிறது.

துணையின் முரண்பாடுகள் குறித்து நிறைய கதைகள் வந்திருக்கின்றன. முரண்பாடுகள் இருக்கும் வரைக்கும் இன்னும் பல கதைகள் வரும். அதில் ஒரு கதை தான் இந்த கதையும். மூன்றே பாத்திரங்கள் தான். அவர்களுடைய மன உணர்வுகள் தான் கதை.

ஆள் அரவமற்ற அந்த லெவல் கிராசிங் என்ற கதை நடக்கும் இடம் புதுசு. நடைமுறையில் இப்படிப்பட்ட இடங்களுக்கு எல்லாம் ஒரு ஆளைப் போட்டு பராமரிக்கிற வசதியோ, மன நிலையோ இந்திய ரயில்வே நிர்வாகத்துக்கு நிச்சயம் இல்லை. இருந்தாலும் கதைக்காக ஏற்றுக்கொள்வோம். இந்த கதைக்காக துனிசியாவிற்கு போய் எடுத்ததாக ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

அதே போல ஒரு ஆளுக்குப் பதிலாக இன்னொரு ஆள் பணி செய்வது எல்லாம் ரயில்வே நடமுறையில் சாத்தியமில்லை தானே! அதையும் கதைக்காக ஏற்போம்.

நாயகனாக ஆசிப் அலி, நாயகியாக அமலா பால், சர்புதீன் கணவராக வருகிறார்கள். மூவருமே பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அர்பஸ் அயூப் இயக்கியிருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். பிரைமில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கிடைக்கிறது. பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: