”தேவைக்கு எப்பொழுதும் இந்த உலகத்தில் எல்லாமும் கிடைக்கும்.
1910 காலக்கட்டம். மகாராஷ்டிராவில் ஒரு குக்கிராமம் தும்பாட். எப்பொழுதும் மழை பெய்துகொண்டே இருக்கிறது. அது ஒரு சாபம் என ஒரு கதை சொல்கிறார்கள்.
பூர்த்தித் தேவி தான் எல்லா கடவுள்களுக்கும் தாய். அவளின் முதல் மகன் ஹஸ்தர். அவனுக்கு பேராசை. தேவியின் எல்லா தங்கங்களையும் கைப்பற்றியவன். தானியங்களையும் கைப்பற்ற முயலும் பொழுது, மற்ற பிள்ளைகள் மொத்தமாய் அவனை எதிர்க்கிறார்கள். முதல் மகன் என்பதால் அவனை பாதுகாக்கும் பொருட்டு, அவனை யாரும் வழிபடமாட்டார்கள் என சொல்லி தன் வயிற்றுக்குள்ளேயே வைத்துக்கொள்கிறாள்.
அந்த பெரியவருக்கு நிறைய வயதாகிவிட்டது. படுத்த படுக்கையாய் இருக்கிறார். அவருக்கு எல்லாமுமாய் ஒரு பெண் இருக்கிறார். அவர் வழியாக இரண்டு பையன்கள். அந்த ஊரில் அஸ்தருக்கு என ஒரு கட்டிடம் இருக்கிறது. அதில் நிறைய தங்கம் இருப்பதாக ஊரில் கதை உலவுகிறது. அந்த பெரியவரின் உறவினரான ஒரு அம்மா கொடூர நிலையில் அந்த கட்டிடத்தில் அடைப்பட்டு இருக்கிறார்.
பெரியவர் இறக்கிறார். ஒரு விபத்தில் இளைய மகன் இறக்கிறான். அங்கு வாழ வழியில்லாமல் தன் பெரிய மகனை அழைத்துக்கொண்டு பூனேவிற்கு திரும்புகிறார்.
எப்பொழுதும் புதையல் தூங்காது. தூங்கவும் விடாது. பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு, இளைஞனாக மீண்டும் தும்பாட்டுக்கு வருகிறான். அந்த கொடூர அம்மாவின் மூலம் எப்படி தங்க நாணயங்களைப் பெறுவது அறிந்துகொள்கிறான். அது மிகவும் ஆபத்தானதாகவும் தோற்றுப்போனால், வாழ்நாள் முழுவதும் நரகமாகவும் இருக்கிறது. இருப்பினும் துணிந்து இறங்குகிறான்.
ஆசை எப்படி பேராசை ஆகிறது? பிறகு என்ன ஆனது என்பதை அமானுஷ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.
***
இயக்குநர் ரஹி அணில் பர்வே 1990 களில் எங்கோ ஒரு நாட்டுப்புறக் கதையைக் கேட்டு, அதற்கு ஒரு திரைக்கதை எழுதி, அதை படமாக்க முயன்று… தோல்வியுற்று, துவண்டு, பிறகு இயக்குநர் அனுராக் காஷ்யப், இந்த படத்தின் நாயகனைப் பார்த்து, படம் தயாரிக்க முடிவு செய்து, படம் மெல்ல மெல்ல உருப்பெற துவங்கியுள்ளது. இருப்பினும் பல சோதனைகள். பிறகு 2018ல் வெளிவந்தது. 5 கோடியில் எடுக்கப்பட்டு, பெரிய வெற்றியில் நிறைய கல்லாக்கட்டிவிட்டது.
கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் வெளியிடப்பட்டு, பெரிய வசூல் செய்து, இப்பொழுது இரண்டாவது பாகம் வெளிவரும் என அறிவித்திருக்கிறார்கள். இப்பொழுது இந்தப் படமே ஒரு புதையல் தானே!
குறைவான நடிகர்கள். நாயகன் தான் பிரதான பாத்திரம். படத்தின் தாங்குவது எல்லாம் மற்ற அம்சங்கள் தான். பின்னணியில் காட்டப்படுகிற அந்த கிராமம், எப்பொழுதும் பெய்கிற மழை, அந்தக் கட்டிடம், இயல்பான வெளிச்சத்தைப் பயன்படுத்தியது, இசை, இரண்டு மணி நேரத்திற்குள் நறுக்கென முடித்தது என படத்தில் எல்லாமும் சிறப்பாக அமைந்துவிட்டது.
பெரும் செல்வம் எப்பொழுதும் சீரழிக்கும். அழிவுகளை கொண்டு வரும். நாயகனையும் சீரழிக்கிறது. அவனின் ஆசையை அவளின் அம்மா கண்டிப்பார். அவளின் இறப்பிறகு பிறகு அவனின் விருப்பமாகிவிடுகிறது. அவனின் வழியாக வந்த மகன், அவனைப் பார்த்து வளர்ந்த மகன் அவனின் அடுத்த ஜென்மம் தானே. இன்னும் பேராசையை வெளிப்படுத்துகிறான். படத்தின் முடிவு சரி தான்.
ஆனால், நிஜத்தில் நானூறு தலைமுறை சொத்துக்களோடு நரை வந்து சாகும் வரை வாழ்ந்து தான் சாகிறார்கள். அடுத்த வேளைக்கு சோறு இல்லாமலும் செத்து தானே போகிறார்கள். பேராசை பெரு நஷ்டம் என கதைகள் நம்மை சாந்தப்படுத்துகின்றன.
பிரைமில் தமிழிலேயே மொழிமாற்றம் செய்து கிடைக்கிறது. ஹாரர், திரில்லர் ரசிகர்கள் பாருங்கள்.