முதல் சிரீசில் இருந்து, போலீசு இளநிலை அதிகாரியாக (SI) இருக்கும் நாயகனையும், செய்த கொலைக்காக சிறையில் இருக்கும் நாயகியும் எடுத்துக்கொண்டு இந்த கதையை எடுத்திருக்கிறார்கள்.
நாயகியின் வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கும் பொழுது, அந்த வழக்கை எடுத்து திறம்பட நடத்திய வழக்கறிஞர் செல்லப்பா அவருடைய கடற்கரை வீட்டில் மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்படுகிறார்.
இப்படி குழம்பிய நிலையில், அடுத்தடுத்து ஏழு இளம் பெண்கள் நான் தான் வழக்கறிஞரை கொன்றேன் என அவர்களாக வந்து போலீசிடம் சரண்டாகிறார்கள்.
போலீசை இன்னும் குழப்புகிறது. இந்த விசாரணை எங்கு போய் முடிந்தது என்பதை திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.
****
முதல் சீரிஸின் வெற்றியில் இரண்டாவது சீரிஸை களமிறக்கியிருக்கிறார்கள். எட்டு அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயங்களும் 45 நிமிடங்கள் நீள்கின்றன.
ஊரில் பெருந்திரளான மக்கள் பங்கேற்கும் ஒரு திருவிழாவின் பின்னணியில் இந்த கதைக்களம் நடக்கிறது. அதனால் தான் மகாசிவராத்திரிக்காக பல ஊர்களில் திருவிழா நடக்கும் இந்த தேதியில் இந்த சீரிசை வெளியிட்டிருக்கிறார்கள். திருவிழாவின் சாரமான கதையை, கதையிலும் பொருத்தி கொண்டு வந்திருக்கிறார்கள். (இது கற்பனையா, உண்மையா என்பது தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.)
இறுதிக்காட்சிகளில் வரும் வசனம் ஊரில் கெட்டதும் அதை ஆதாயத்திற்காக செய்கிற கெட்டவர்கள் மட்டுமில்லை! நல்லவைகளும் பொது நோக்கத்திற்காக போராடுகிற நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் என்று நம்பிக்கையாக சொல்லிமுடிப்பது நன்றாக இருக்கிறது.
கதையில் நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். நாயகனாக கதிர், இன்னும் கொஞ்சம் உணர்வுகளை வெளிப்படுத்தினால் நன்றாக இருக்கும். (கதைப்படி) சோர்வான நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ், வழக்கறிஞராக வரும் லால், (இன்னும் தமிழ் உச்சரிப்பில் தெளிவு தேவை. கொஞ்சம் கவனம் கொடுத்து கேட்கவேண்டியிருக்கிறது. போலீசு அதிகாரியாக முக்கிய பாத்திரத்தில் கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தும் சரவணன், எட்டு இளம்பெண்களில் கெளரியும் மற்றவர்களும் என எல்லோரும் கொடுத்த கதாப்பாத்திரத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.
வெப் சீரிசை கொஞ்சம் இழுக்கவேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட கதாப்பாத்திரங்களை மெளனிகளாக்கி விடுகிறார்கள். அல்லது வார்த்தைகளை அளந்து பேசுபவர்களாக மாற்றிவிடுகிறார்கள். மொத்தம் எட்டு அத்தியாயங்களில் 3,4,5 கொஞ்சம் சோர்வைத் தருகிறது. மற்றவை சிறப்பு. சாம் சி.எஸ். இசையால் ஈர்த்திருக்கிறார். பின்னணி இசையில் இப்பொழுது இவர் பேசப்படுகிறார் என்கிறார்கள். வாழ்த்துகள்.
இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி கதையில், அத்தியாயங்களை பிரம்மாவும், சர்ஜன் என்பவர்களும் இயக்கியிருக்கிறார்கள். வெப் சீரிஸ்களில் இன்னொரு ஆச்சர்யத்தையும் பார்க்கிறேன். பல அத்தியாயங்களை பல இயக்குநர்கள் இயக்குகிறார்கள். ஆனால் எல்லாமும் (நடிப்பு, கேமரா கோணம் என) ஒரே டோனில் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?
அமேசான் பிரைமில் தமிழிலும், பிற மொழிகளிலும் மாற்றம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment