பணியாளரை பதிவு செய்வதில் புதிய மாற்றம்
இந்த புதிய மாற்றம் ஏன் கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால்,
01/08/2025 காலம் துவங்கி 31/07/2025 காலம் வரைக்கும் ரூ. 15000த்தை பி.எப். உதவித்
தொகையாக இரண்டு தவணைகளில் பணியாளர்களுக்கு வழங்க இருக்கிறது.
முதன்முறையாக பணிக்கு சேர்பவர்களுக்கு சம்பளம் குறைவாக
இருக்கும். ஆகையால், நிறுவனத்தில் தங்களுக்கு
பி.எப். தொகையைப் பிடித்தம் செய்தால், தங்களது
குடும்பத்தின் அடிப்படை செலவுகளுக்கு போதுமான சம்பளம் கிடைக்காது. ஆகையால் சம்பளத்தில்
பி.எப். பிடிக்காதீர்கள் என பணியாளர்களே நிறுவனத்திடம் சொல்வதை இயல்பாக நாம் கேட்டிருப்போம். ஆகையால், அவர்களுக்கு சம்பளத்தில் குறையாக கூடாது
என்ற நல்லெண்ணத்தில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது என புரிந்துகொள்ளலாம்.
புதிய மாற்றத்தை புரிந்துகொள்வதற்கு முன்பு பணியாளரை பதிவு
செய்வதற்கு ஜூலை 2025 வரை என்ன நடைமுறை இருந்தது என தெரிந்துகொள்வது அவசியம்.
பழைய
பதிவு செய்யும் முறை
நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பணியாளரை நிறுவனத்திற்கென
இயங்கும் தளத்தில், பணியாளரின் அடிப்படை விவரங்களான, ஆதாரின் அடிப்படையில், அவருடைய
பெயர், பிறந்தநாள், தந்தை/கணவரின் பெயர், ஆதாரோடு இணைக்கப்பட்ட மொபைல் எண், மின்னஞ்சல்
முகவரி, எந்த தேதியில் பணிக்கு இணைந்தார் போன்ற விவரங்களை கொடுத்தால், பி.எப். தளம்
ஆதார் தளத்தில் ஒப்பிட்டு, சரி என சொன்ன பிறகு, பி.எப். தளம் அந்த பணியாளருக்கென அடையாள
எண் (Universal Account No.) ஒன்றை உருவாக்கித்தந்தது.
ஒரு வேளை அவர் ஏற்கனவே முந்தைய நிறுவனத்தில் வேலை செய்த
பொழுது, அவருக்கென அடையாள எண்ணை உருவாக்கியிருந்தால், அந்த எண் அந்த பணியாளரிடம் இல்லையென்றால்
கூட, பணியாளரின் ஆதார் எண்ணின் அடிப்படையில்
தளமே அவருடைய அடையாள எண்ணை தெரியப்படுத்தியது.
இப்பொழுது
புதிய முறை
புதிதாக பணிக்கு சேர்ந்திருக்கும் பணியாளர் தன்னுடைய செல்போனில்
அல்லது நிறுவனம் உதவும் செல்போனில் இரண்டு ஆப்களை பிளே ஸ்டோரில் (Play Store) தரவிறக்கம்
செய்யவேண்டும்.
1. Aadhar
FaceRD
2. Umang
App
இரண்டையும் தரவிறக்கம் செய்த பிறகு, இரண்டாவது ஆப்பான உமாங் ஆப்பில் சம்பந்தப்பட்ட பணியாளரின்
ஆதார் லிங்க் மொபைல் எண்ணையும், என்ன மாநிலம் என்பதையும் தேர்ந்தெடுக்கவேண்டும். ஒரு ஓடிபி (One Time Password) வரும். அதையும் உள்ளீடாக
கொடுத்தால், MPIN ஒன்றை உருவாக்கச் சொல்லும். இப்படி கொடுத்துவிட்டால், ஒவ்வொருமுறையும்
உள்ளே நுழைவதற்கு இந்த MPIN போதுமானது.
இப்பொழுது நமது மொபைல் எண், MPIN உதவியுடன், உமாங் ஆப்பில்
மீண்டும் உள்ளே நுழையவேண்டும். இந்த உமாங்
ஆப் என்பது மத்திய மாநில அரசுகளின் குடிமக்கள்
தொடர்பான பிறந்த சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ரேசன் அட்டை, MSME, போன்ற பல விசயங்கள் உள்ளே இருக்கின்றன. அதில் ஒரு அம்சம் தான் நமக்கு தேவையான EPFO சம்பந்தப்பட்டது. தேடு (Search in Umang) என்கிற மேலே இருப்பதில்
EPFO என்பதை தட்டச்சு செய்தால், வந்துவிடும்.
அதைக் கிளிக் செய்தால், உள்ளே வரிசையாக பல அம்சங்கள் இருக்கின்றன். அதில் அடையாள எண்
உருவாக்கம் (UAN Allotment and Activation) என்பதை கிளிக் செய்தால், ஆதார் எண் கேட்கும். ஆதார்
லிங்க் மொபைல் எண் கேட்கும். இரண்டையும் கொடுத்தால், ஒரு ஓடிபி மொபைலுக்கு வரும். அதையும்
அதில் கொடுத்தால், சம்பந்தப்பட்ட பணியாளருக்கான ஒரு அடையாள எண்ணை கொடுத்துவிடும்.
அடுத்து Aadhar face RD யைக் காட்டும். முகத்தை தெளிவாக
வெளிச்சம்படும் இடத்தில் காண்பித்தால், நம் முகம் தெளிவாக இல்லையென்றால் சிவப்பு நிறம்
வட்டத்தில் காண்பிக்கும். வெளிச்சம் சரியாகப்
பட்டு, முகம் தெளிவாக இருந்தால், பச்சை நிறம் வட்டத்தில் காண்பிக்கும். அதற்கு பிறகு உங்களுடைய ஆதார் அடிப்படை விவரங்களை
வரிசையாகக் காட்டும். அதற்கு ஒரு ஓடிபி வந்து அதையும் கொடுத்தால், அடையாள எண்ணை நமக்கு
காட்டும். அடையாள எண்ணையும், அதற்குரிய கடவுச்சொல்லையும்
(Password) சம்பந்தப்பட்டவரின் மொபைல் எண்ணுக்கு
அனுப்பிவைக்கும். அந்த எண்ணை நிறுவனத்திடம் கொடுத்துவிட்டால், அதைக் கொண்டு பணியாளராக
பதிந்துகொள்ளமுடியும்.
அடையாள எண் ஏற்கனவே இருக்கிறது. முகத்தைப் பதிவு (Face
Authenticattion) செய்யவில்லை என்றால், அதைச் செய்வதற்கு ஏற்கனவே சொன்னது படி, உமாங்
ஆப்பில் உள்ளே நுழைந்து, சம்பந்தப்பட்ட EPFO என்ற இடத்திற்கு சென்று அடையாள எண் செயலாக்கம்
(UAN Activation) என்பதை கிளிக் செய்தால்,
மேலே சொன்னது போல ஆதார், மொபைல் எண் கொடுத்து செயல்படவேண்டும்.
EPFO
விண்ணப்பங்கள்
EPFO குறித்த விண்ணப்பங்கள் குறித்த ஒரு அறிமுகத்தைத் தாருங்கள்
என நமது கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிக்கும் ஒரு வாசகர் போனில் தெரிவித்தார். ஆகையால்
விண்ணப்ப
பி.எப் விண்ணப்பங்கள்
: 31, 19, 10C & 10D
Form
31 - முன்பணம் மற்றும் கடன் படிவம் (PF Part Withdrawal)
நாம் செலுத்திய பி.எப்.
பணத்தில் இருந்து நெருக்கடியான காலக்கட்டங்களில் முன்பணம், கடன் பெறுவதற்கு வாய்ப்பு
இருக்கின்றன. அதற்கான நிர்ணயிக்கப்பட்ட அளவு கோல்களையும், விதிகளையும்
விதித்திருக்கிறது.
கொரானாவினால் அரசு ஊரடங்கு அறிவித்த
பொழுது பலருக்கும் வேலையில்லை. சம்பளம் இல்லை. யாரிடமும் கடனும் பெற முடியாத நிலை என்னும்
பொழுது, கோரிக்கைகளைப் புரிந்துகொண்டு எந்தவித ஆவணத்தையும் நிர்பந்தம் செய்யாமல்
கடன் வழங்கியது. திரும்ப செலுத்த தேவையில்லை. நமது நிதியில் இருந்து கழித்துக்கொண்டார்கள்.
கடந்த ஆண்டு ஜூனிலிருந்து
மீண்டும் கடன் தருவதற்கு புதிய நிபந்தனைகளை உருவாக்கியுள்ளார்கள். (விரிவாக 17வது
அத்தியாயத்தில் எழுதியிருந்தேன். இப்பொழுது சுருக்கமாக தருகிறேன்.)
பி.எப்.
உறுப்பினருக்கான தளத்தில் Online service என்ற
பகுதியில் Claim என காண்பிக்கும். அதில் முன்பணம் (Advance) என்ற (Form 31) விண்ணப்பத்தை தெரிவு செய்து கொள்ளவேண்டும். அதில் நாம் வேலை செய்த நிறுவனங்களை வரிசையாக காட்டும். முந்தைய கணக்குகளை இப்பொழுதோ அல்லது கடைசியாக வேலை
செய்யும் நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றிக்கொள்வது நல்லது.
பிறகு
என்ன காரணங்களுக்காக முன்பணம் என்பதை நாம் தேர்ந்தெடுக்கவேண்டும். அதில் வரிசையாக இப்படி காண்பிக்கும்.
இரண்டு
மாதங்களுக்கு மேலாக சம்பளம் இல்லை. (Non
receipt of wages > 2months)
இயற்கை
பேரிடர் (Natural Calamites)
உடல்நலக்குறைவு
(Illness)
மின்சாரம்
துண்டிப்பு (Power Cut)
மாற்றுத்திறனாளிக்கான
உபகரணங்கள் வாங்குதல் (Purchase of Handicap Equipment)
வீடு
வாங்குவது/கட்டுவது/ மராமத்து செய்வது
இன்னும்
சில அம்சங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு தலைப்பிற்கும்
உரிய நிபந்தனைகளும் சில ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். எவ்வளவு நிதி கொடுக்கப்படும்
என்பதற்கும், பட்டியலில் உள்ள அம்சங்களுக்கு தகுந்தவாறு நிபந்தனைகள் இருக்கின்றன. மொத்தத்தையும் எடுத்துவிட முடியாது.
உதாரணமாக,
இரண்டு மாதங்களுக்கு மேலாக சம்பளம் இல்லை என்றால், நாம் கடைசியாக வேலை செய்த நிறுவனத்தில்
இருந்து வேலையில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பாக வெளியேறியதை (Exit) பதிந்திருக்கவேண்டும்.
சம்பந்தப்பட்ட பணியாளருக்கோ, குடும்பத்தினருக்கோ உடல்நலக்குறைவு
என்றால்… நிறுனத்தின் பொறுப்பாளரும் , மருத்துவரும் சான்றிதழ் சி வழங்கவேண்டும்.
வீடு
வாங்குவது என்றால்… வீட்டை யார் தொழிலாளிக்கு விற்பவர் என்கிற விவரத்தை கொடுக்கவேண்டும்.
முன்பணம் நமக்கு வராது. கவனம். சம்பந்தப்பட்டவருக்கே
சென்றுவிடும். வீடு வாங்குவது குறித்து நிறைய வழிகாட்டுதல்கள் தந்திருக்கிறார்கள்.
படித்து விண்ணப்பியுங்கள்.
ஆகையால்
விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் கவனமாக படித்து முன்பணத்திற்கு விண்ணப்பிக்கவேண்டும்.
இல்லையெனில், விண்ணப்பத்தை பி.எப். ஏற்காது. திருப்பி (Reject) அனுப்பிவிடும்.
பி.எப்
முன்பணம் குறித்த விதிகளும், வழிகாட்டுதல்களும் (INSTRUCTIONS AND GUIDELINES FOR THE ADVANCES TO BE CLAIMED THROUGH FORM
31) இணையத்தில்
மூன்று பக்கங்களில் PDF பைலாக எளிதாக கிடைக்கின்றன.
Form 19 – மொத்தப் பணத்தையும் திரும்ப பெறும் விண்ணப்பம்
இந்த விண்ணப்பம் என்பது
பணியாளரின் கணக்கில் உள்ள மொத்தப் பணத்தையும் திரும்ப பெறுவதற்கான விண்ணப்பமாகும்.
முழுமையாக திரும்ப
பெறுவது என்பது இரண்டு சமயங்களில் சாத்தியப்படும்.
1.பணியாளர் தன்னுடைய
பணிக்காலம் முழுவதும் வேலை செய்து, ஓய்வு பெறும் காலமான 58 வயது நிறைவு பெற்றதற்கு
பிறகு விண்ணப்பித்து வாங்குவது.
2. ஒரு நிறுவனத்தில்
வேலை செய்து, வேலையில் இருந்து நின்ற பிறகு இன்னொரு நிறுவனத்தில் இரண்டு மாதம் வரை
இணையாத பொழுது, அதுவரைக்கும் நாம் செலுத்திய பணத்தை முழுவதுமாக திரும்ப பெறுவது.
இந்த திட்டம் ஓய்வு
பெறும் காலத்தில் பணியாளருக்கு பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற தொலைநோக்கு
திட்டத்தில் தான் உருவாக்கப்பட்டது. ஆனால், பல பணியாளர்கள், ஒரு
குறிப்பிட்ட இடைவெளிகளில் பணத்தை திரும்ப பெறுகிறார்கள்.
ஆரோக்கியமாகவும்,
வருமானம் இருக்கும் காலத்திலேயே நிதியை
பெற்றோம் என்றால், ஆரோக்கியம் குறைவாக, வருமானம் இல்லாத ஓய்வு பெறும் வயதில் என்ன
செய்வோம் என நிதானமாக யோசிக்கவேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான
தேவையான அம்சங்கள்.
1. பணியாளரின்
ஆதார் இணைக்கப்பட்டிருக்கவேண்டும். அது நிறுவனத்தினரால், டிஜிட்டல் கீ கொண்டு
அங்கீகரிக்கப்பட்டு இருக்கவேண்டும்.
2. தொழிலாளியின்
வங்கி கணக்கு இணைக்கப்பட்டிருக்கவேண்டும். அதுவும் டிஜிட்டல்
கீ கொண்டு அங்கீகரிக்கப்பட்டு இருக்கவேண்டும்.
(அப்பா/கணவர்/மனைவி என
இணைப்பு (Joint Account) கணக்காக இருக்க கூடாது. தனியாக கணக்கு
இருக்கவேண்டும். ஆதாரில் உள்ள பெயர், முதல் எழுத்து எல்லாம் வங்கியில் உள்ள
பெயரோடு 100% ஒத்துப்போகவேண்டும். அப்படி ஏதாவது வித்தியாசம் இருந்தால் சரி
செய்துகொள்ளவேண்டும்.
3. நிறுவனத்தில்
இருந்து விலகிய (Exit) தேதியை குறிப்பிட்டு இருக்கவேண்டும். இதை
நிறுவனமும் செய்யலாம். பணியாளரும் செய்யலாம்.
4. ஒரு
பணியாளர் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால், இக்கட்டுரையின் படி செய்தால்
போதுமானது. அவரே இரண்டு, மூன்று நிறுவனங்களில் வேலை செய்தவராய்
இருந்தால், கடைசியாய் வேலை செய்த கணக்கிற்கு முந்தைய கணக்குகளை முறையாக
(Transfer) விண்ணப்பித்து ஒரு கணக்காக மாற்றவேண்டும். அவசியம்.
5. பணியாளரின்
பான்கணக்கு இணைக்கப்பட்டிருக்கவேண்டும். நிறுவனத்தினரால், டிஜிட்டல் கீ
கொண்டு அங்கீகரிக்கப்பட்டு இருக்கவேண்டும்.
விண்ணப்பத்தை
திறந்ததும் வங்கி விவரத்தை சரி செய்வதற்கு ஒரு ஏற்பாட்டை
செய்திருக்கிறார்கள். அதை நிரப்பவேண்டும்.
அடுத்து, தேவைப்படும்,
15G/15H படிவத்தை நிரப்பி, பதிவேற்றவேண்டும். இணையத்தில் கிடைக்கின்றன.
இறுதியில் பணியாளருடைய
ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும் (OTP). அதை நிரப்பும்
பொழுது, விண்ணப்பம் பூர்த்தியடையும்.
மேற்சொன்ன எல்லா
அம்சங்களும் சரியான பொருந்தும் பட்சத்தில், ஒரு மாதத்திற்குள் பணம் வங்கிக்கு
வந்துவிடும். இல்லையெனில், நிராகரித்து உரிய காரணத்தையும் பணியாளரின்
பாஸ்புக் தளத்தின் உள்ளே போய் பார்த்தால், குறிப்பிடுகிறது. சரி செய்து,
மீண்டும் விண்ணப்பித்தால், பணம் வந்துவிடும்.
இன்னும் உள்ள பிற
விண்ணப்பங்களை அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.
இன்னும்
வளரும்.
வணக்கங்களுடன்,
இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி, வருமானவரி, பி.எப், இ.எஸ்.ஐ, ஆலோசகர்,
9551291721