> குருத்து: (EPF) : புதிய மாற்றங்களும் இ.எஸ்.ஐயின் சமாதான திட்டமும்!

November 15, 2025

(EPF) : புதிய மாற்றங்களும் இ.எஸ்.ஐயின் சமாதான திட்டமும்!




இனி முழுமையாக பணம் எடுக்க 12 மாதங்கள்

 

வேலையை விட்டு விலகி 2 மாதங்கள் வேலையின்றி இருந்தால், கணக்கில் உள்ள முழு தொகையையும் எடுக்கமுடியும் என்பது பழைய விதி.  புதிய விதியாக அந்த காலம் 12 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் பி.எப். உள்ள நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டால், பணத்தை பெறுவதற்கு வாய்ப்பில்லை. திட்டத்தில் தொடரவேண்டியது தான்.  ஓய்வு கால நிதியை பாதுகாக்கவேண்டும் என இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது.

 

பகுதியளவு பணம் எடுத்தல் (Partial Withdrawal)

 

முந்தையது போலவே இப்போது பல காரணங்களுக்காக தொகையின் ஒரு பகுதியை எடுக்க முடியும், ஆனால் விதிகள் இன்னும் எளிமையாக்கப்பட்டும், டிஜிட்டல் மயமாக்கப்பட்டும் உள்ளன.

 


கல்விக்கு கடன் வாங்க, 7 ஆண்டுகள் செலுத்தியிருக்கவேண்டும்.  பணியாளர் செலுத்தியதில் 50% பெறலாம். திருமணம் – பணியாளருக்கோ, சகோதரி, சகோதரனுக்கோ, குழந்தைக்கோ 50% கடன் பெறலாம். மருத்துவத்திற்கு கால வரையறை இல்லை. மூன்று மாத மொத்த பங்களிப்பு அல்லது 50% இரண்டில் எது குறைவோ பெறலாம்.  வீடு கட்டுதல்/வீடு வாங்குதலுக்கு குறைந்தது 5 ஆண்டுகள் பங்களிப்பு செலுத்தியிருக்கவேண்டும். 90% வரை கடன் பெறலாம். மருத்துவம் / திருமணம் போன்ற காரணங்களுக்கு ஆவணப் பிரதி சேர் தேவையில்லை. சுய உறுதிமொழி கடிதம்  (self declaration)  மட்டும் போதும்.

 

புதிய குறைந்தபட்ச நிலை – “25% Balance Rule”

 

கடன் வாங்குவதில் பணியாளரின் கணக்கில் 25% நிதி இருக்கவேண்டும் என்பது புதிய விதியாக இருக்கிறது.  அதாவது, மொத்த சேமிப்பு ரூ. 4 லட்சம் என்றால், ஒரு லட்சம் மீதி இருக்கவேண்டும்.  இதுவும் முதல் அம்சத்தில் சொன்னது போல, பி.எப். நிதியை பாதுகாக்கவேண்டும் என்பதற்காக இந்த விதியை கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளது.

 

புதிய முறை அமுல்படுத்துதல் (ECR)

 


ஒவ்வொரு மாதமும் தொழிலாளர்கள் விவரங்களையும், செலுத்தவேண்டிய நிதியையும் தாக்கல் செய்வதில் செப்டம்பர் மாதத்தில் இருந்து புதிய முறை அமுலாகியுள்ளது. அதனடிப்படையில் செப்டம்பர் மாத சலானை  வழக்கமாய் தாக்கல் செய்வது போலவே சலான் உருவாகிவிட்டது.   ஆகஸ்டு வரைக்கும் பணியில் இருந்து விடுபட்டவர்களுக்கு விலகிய தேதியை (Exit) சரியாக கொடுத்துவிடவேண்டும் என தளம் வலியுறுத்துகிறது.

 

முன்பு பணியில் இருந்து விலகியவர்களுக்கு உடனுக்குடன் விடுபட்ட தேதியை பதிவு செய்துவிடுங்கள் என வலியுறுத்தியது. இப்பொழுது மீண்டும் வலியுறுத்துகிறது.   விரைவில் அதை செய்தால் தான் சலானை உருவாக்கமுடியும் என்ற நிலையை உருவாக்கிவிடும் என்ற நிலை இருக்கிறது.  சில பெரிய நிறுவனங்களில் வருடக்கணக்கில் பல பணியாளர்களுக்கு விலகிய தேதியை கொடுத்திருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு எல்லாம் உடனே தங்களுடைய பதிவுகளைப் பார்த்து கொடுத்துவிடுவது நல்லது.

 

முன்பு தாமதமாக பணம் செலுத்தும் பொழுது, வட்டியையும், அபராதத்தையும் வருடத்திற்கு ஒருமுறை அல்லது மொத்தமாக தனியாக சலான் போட்டு செலுத்த சொல்லி வலியுறுத்திகொண்டே இருந்தது. இப்பொழுது அது பெரிய வேலையாக இழுபறி வேலையாக இருப்பதால், இனி மாதம் மாதம் மாதம் சலான் உருவாக்கும் பொழுதே கணக்கிட்டு கட்ட சொல்லிவிடுகிறது.   இதுவும் நல்ல முறை தான்.

 

பி.எப். ஓய்வுநிதி (Pension) 58 வயதுக்கு பிறகு!

 

ஒரு பணியாளரின் வருங்கால வைப்பு நிதி ஓய்வு நிதி கணக்கில் 58 வயது வரை தான் பணம் செலுத்தவேண்டும். ஏனெனில் 58 வயது என்பது ஓய்வு பெறும் வயது.

 

ஒரு பணியாளரின் ஓய்வு நிதி கண்ககில் 58 வயதுக்குள் குறைந்தப்பட்சம் ஓய்வு நிதிக்கான பத்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கவேண்டும். அப்பொழுது தான் ஓய்வு பெறுவதற்கான தகுதியை அடைகிறார்.  அப்படி பத்து ஆண்டுகள் நிறைவு செய்யவில்லை என்றால்,  அதுவரை செலுத்திய நிதியை... விண்ணப்பித்து  திரும்பப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது விதி.

 

ஒரு பணியாளர் 58  வயதுக்கு பிறகு வேலையை தொடர்வாரா என்றால், நடைமுறையில் பலரும் தொடர்வார்கள் தானே!   ஆனால், 58 வயதுக்கு பிறகு  அவருடைய ஓய்வு நிதி கணக்கில் (A/c No: 10) நிதி செலுத்துவதை நிறுத்திவிடவேண்டும்.  அதற்கு பிறகு செலுத்தும் நிதி பத்து ஆண்டு விதிகளுக்குள் அடங்காது. 58 வயது நிறைவு பெற்றுவிட்டது என்பதை நமக்கு பி.எப். தளமும் கவனித்து நமக்கு சொல்வதில்லை.  சில நிறுவனங்களும்  கவனமாய் இருப்பதில்லை. 

 

ஆனால் ஒரு பணியாளர் 58 வயதுக்கு பிறகும் நிறுவனங்களில் வேலை செய்தால் அவருக்கு பி.எப். பிடிக்க கூடாதா? என்றால் பிடிக்கலாம். அவருடைய ஓய்வு நிதி கணக்கில் அந்த தொகையை செலுத்தக்கூடாது. முழுப் பணத்தையும் EPF கணக்கிலேயே செலுத்தவேண்டும்.

 

முன்பு 58 வயதுக்கு பிறகு ஓய்வு நிதியில் தொடர்ந்து செலுத்தி... பிறகு பணத்தைப் பெற விண்ணப்பிக்கும் பொழுது... 58 வயதுக்கு பிறகு செலுத்திய நிதியை பி.எப் கணக்கிற்கு... உரிய விண்ணப்பம் கொடுத்து மாற்றிய பிறகு தான்... பணத்தை பெறமுடியும் என்கிற நிலை இருந்தது.

 

இப்பொழுது செய்யப்பட்ட புதிய மாற்றத்தின்படி... தளமே 58 வயது பூர்த்தியானதை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. நாம் கட்ட முயற்சித்தாலும், அனுமதிப்பதில்லை.  இந்த வசதி உண்மையிலேயே அலைச்சல்களை குறைக்கிறது. பாரட்டத்தக்க முயற்சி. ஆனால் இதை செய்வதற்கு பத்து ஆண்டுகளாகிவிட்டது என்பதை நினைக்கையில் தான்…!

EPF – புது அறிவிப்பு : படிவம் 5A இன் பின்வரும் விவரங்கள் இருக்க வேண்டும்

நிறுவனத்தின் நுழைவாயிலில், அல்லது  நிறுவனத்தின் வலைத்தளத்தில் (மற்றும் மொபைல் செயலி, ஏதேனும் இருந்தால்)  1. நிறுவனத்தின் EPF கோடு.  2. பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்தின் பெயர் 3. EPF இன் கீழ் காப்பீடு செய்யப்பட்ட தேதி 4. கிளைகளின் எண்ணிக்கை மற்றும் முதன்மை கிளை முகவரி 5. பிராந்திய EPFO ​​அலுவலகம்.

காலக்கெடு & விளைவுகள் : நிறுவனங்கள் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட (07/10/2025) நாளிலிருந்து 15 நாட்களுக்குள் (அக்டோபர் 22, 2025 க்குள்) இதை செய்ய வேண்டும்.

செய்யத் தவறினால் EPF & MP சட்டம், 1952 மற்றும் திட்ட விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என அறிவித்துள்ளது.   என்ன படிவம் ஒட்டப்படவேண்டும் என பி.எப் வெளியிட்டுள்ளது.

 

ஊழியர் மாநில காப்பீட்டு கழகம்  - புதிய சமாதானத் திட்டம் – 2025

 


ஊழியர் மாநில காப்பீட்டு கழகம் (ESIC) தனது 196-வது கூட்டத்தில் (27.06.2025) புதிய மன்னிப்பு திட்டம் – 2025” என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் இரண்டு:

  1. வழக்குகள் குறைந்து, நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணும் வசதி ஏற்படுத்துதல்.
  2. தொழிலாளர்கள், முதலாளிகள் ஆகியோரிடையே நம்பிக்கையும் நல்ல பெயரும் பெறுதல்.

இந்தத் திட்டம் 01.10.2025 முதல் 30.09.2026 வரை அமலில் இருக்கும் எனவும்,  31.03.2025 தேதி வரைக்கும் உள்ள காலத்தினுள் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் இதில் கணக்கில்கொள்ளப்படும் அறிவித்துள்ளது.

 

1. நீதிமன்ற வழக்குகளை தீர்க்கும் வாய்ப்பு

ESI சட்டம் பிரிவு 75, 82 மற்றும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 226 கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளை இத்திட்டத்தின் மூலம் தீர்க்கலாம்.

() காப்பீட்டுப் பதிவு (Coverage) குறித்த வழக்குகள்:

5 ஆண்டுகளுக்கு மேல் மூடப்பட்ட தொழிற்சாலைகள்:  வழக்கு 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தால், எந்த மதிப்பீடும் (assessment) செய்யப்படாமல் இருந்தால், அவை விலக்கப்படலாம்.

கடந்த 5 ஆண்டுக்குள் மூடப்பட்ட தொழிற்சாலைகள்:  முதலாளி தன்னுடைய பதிவுகளைச் சுட்டிக்காட்டி, ஏற்றுக் கொண்ட தொகையையும் அதற்கான வட்டியையும் செலுத்தினால், சேதப்பரிசு (damages) விலக்கு அளிக்கப்படும்.

இன்னும் இயங்கும் தொழிற்சாலைகள்: முதலாளி தன் தொழில் காப்பீட்டுக்குள் வராதது அல்லது பிற்பட்ட தேதியிலிருந்து வர வேண்டும் என்பதை நிரூபித்தால், அதும் ஏற்கப்படும்.

குறிப்பு: தாங்களே இணையதளம் வழியாக பதிவு செய்த தொழிலாளர்கள்/ முதலாளிகள் (Form-01 வழியாக) இந்தத் திட்டத்திற்கு தகுதியற்றவர்கள்.

() பங்களிப்பு (Contribution) குறித்த வழக்குகள்:

முதலாளி நீதிமன்றத்தில் வழக்கைத் திரும்பப் பெற வேண்டி மனு தாக்கல் செய்து, நீதிமன்ற அனுமதி பெற்ற பின், கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் தீர்வு பெறலாம்:

1.தன்னுடைய பதிவுகளின் அடிப்படையில் ஊழியர் மற்றும் முதலாளியின் பங்களிப்பு மற்றும் வட்டி முழுமையாக செலுத்த வேண்டும்.

2.பதிவுகள் இல்லாவிட்டால், பதிலாக EPF அல்லது வரித்துறை பதிவுகள் பயன்படுத்தலாம்.

3.எந்தப் பதிவும் இல்லாவிட்டால், குறைந்தது மதிப்பீட்டுத் தொகையின் 30% கட்டணம் செலுத்த வேண்டும்.

4.அபராதம் (damages) எதுவும் விதிக்கப்படாது. அ) எதிர்காலத்தில் ESI சட்டத்திற்குட்பட்ட ஒழுங்கான பங்களிப்பை செய்வேன் என்ற உறுதிமொழி அளிக்கவேண்டும்.

 

2. அபராதம் (Damages) குறித்த வழக்குகள்

முதலாளி அபராதம் விதிக்கப்பட்டதின் மீது வழக்கு தொடுத்திருந்தால், மொத்த தொகையின் 10% மட்டும் செலுத்தி வழக்கை முடிக்கலாம்.
ESIC
தானே மேல்முறையீடு செய்திருந்தால், கீழ்மட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று வழக்கை வாபஸ் பெறும்.

 

3. குற்றவியல் வழக்குகள் (u/s 84, 85, 85A) : 

() தொழிலாளர்கள் மீதான வழக்குகள் (பிரிவு 84):

தவறான தகவல் கொடுத்து அதிக தொகை பெற்றிருந்தால். அதனை முழுமையாகத் திருப்பிச் செலுத்த வேண்டும். வட்டி விலக்கு தரப்படும்.  இனி தவறான அறிக்கை தரமாட்டேன் என்ற எழுத்து உறுதிமொழி தரவேண்டும். தொழிலாளி காணாமல் போயிருந்தால் வழக்கு 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தால், வழக்கு வாபஸ் பெறப்படும். மோசடி, போலி ஆவணம் போன்ற குற்றங்கள் இதில் சேராது.

 

() முதலாளிகள் மீதான வழக்குகள் (பிரிவு 85, 85A):

31.03.2025 வரை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்:  முதலாளி முறையான ஆவணங்கள் இருந்தால், அதன்படி பங்களிப்பு மற்றும் வட்டி செலுத்தலாம்.

பதிவுகள் இல்லாவிட்டால் EPFO, வரித்துறை அல்லது சர்வே அறிக்கை / குறைந்தபட்ச ஊதியம் அடிப்படையில் கணக்கிடலாம். அபராதம் விலக்களிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொகை செலுத்தப்பட்ட வழக்குகள், முதலாளி மனு தராமலேயே ESIயால் திரும்பப்பெறப்படும். தொழில் தற்போது சட்டப்படி முறையாக பங்களிப்பு தொடர்ந்து செலுத்தும் நிலையிலிருக்க வேண்டும்.

 

4. மிகப் பழைய சிறிய தொகை வழக்குகள் - 15 ஆண்டுகளுக்கும் மேல் பழைய வழக்குகள், ₹25,000 வரை பங்களிப்பு நிலுவை இருக்கும்பட்சத்தில், மூடப்பட்ட தொழிற்சாலைகள் என்றால் வழக்கு திரும்பபெறப்படும்.  இயங்கும் தொழிற்சாலைகள் என்றால் நிலுவையின் 30% + வட்டி மட்டும் செலுத்தி தீர்வு.

 

5. பங்களிப்பு அறிக்கை (Return of Contribution) தாக்கல் செய்யாத வழக்குகள்

இவை நிதி இழப்பில்லாதவை என்பதால், மூடப்பட்ட தொழிற்சாலைகள் என்றால் அந்தக் காலத்துக்கான பங்களிப்பு, வட்டி செலுத்தினால் வழக்கு திரும்பபெறப்படும். இயங்கும் தொழிற்சாலைகள் என்றாலும் அதே நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

 

6. தாமதமான அறிவிப்பு வழக்குகள்

பணியாளர் விவரங்கள் தாமதமாக அளிக்கப்பட்ட வழக்குகள், பங்களிப்புச் செலுத்தி, விபத்து வழக்குகள் தீர்ந்திருந்தால், 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தால் திரும்பப் பெறப்படும்.

 

7. பழைய மன்னிப்பு திட்டங்களில் கலந்து கொண்டவர்களுக்கும், மீண்டும் இந்த புதிய மன்னிப்பு திட்டம் – 2025 பயன்படும்.

 

இந்தத் திட்டம் தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் பழைய வழக்குகளை முடித்து, நிம்மதியடைவதற்கு நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக்கொள்வது அவசியமானது.

 

வணக்கங்களுடன்,

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, பி.எப், இ.எஸ்.ஐ, ஆலோசகர்,

9551291721

0 பின்னூட்டங்கள்: