> குருத்து

August 29, 2008

அலைமோதும் மக்கள்! அள்ள நினைக்கும் அரசு




சென்னையில் வீட்டு வாடகை எகிறி கொண்டு, எங்கேயோ போய்கொண்டிருக்கிறது. வாடகைத்தர நடுத்தர வர்க்கங்களே திணறிக்கொண்டிருக்கிறார்கள்.

வீட்டு சொந்தகாரர்கள் இப்பொழுதெல்லாம், வாடகையை அதிகப்படுத்தி கேட்பதில்லை. மாறாக, காலி பண்ண சொல்கிறார்கள். ரூ. 3000 நாம் தந்து கொண்டிருந்தால், காலி பண்ண வைத்து, புதியவர்களிடம் ரூ. 5000க்கு வாடகைக்கு விடுகிறார்கள்.

பல குடும்பங்களுக்கு, சென்னையில் ஒரு வீடு என்பது கனவாகத் தான் இருக்கிறது. என் நண்பர்களில் இருவர் நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். இருவரும் சேர்ந்து, சென்னையில் வீடு வாங்க நினைத்து, எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது, ஆச்சரியப்படுகிறேன்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மக்களின் மனநிலை புரிந்து, அரசு ஒரு திருடன் மாதிரி, மக்களிடமிருந்து முடிந்ததை சுருட்டப் பார்க்கிறது.

கடந்த ஜுலை 31ந் தேதி செய்தித்தாள்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒரு விளம்பரம் செய்திருந்தது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - சென்னை முகப்பேர் ஏரி திட்டப்பகுதியில் மத்திய தர வர்க்கத்தினருக்காக 170 வீடுகள் 1998 - ஆம் ஆண்டு மற்றும் 2002ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்தன.

இடைக்காலத்தில் பல்கலை கழக மாணவர்களால் பயன்படுத்தப்பட்டு, இப்பொழுது, "உள்ளது உள்ளபடியே உள்ள நிலையில்" (மழையால் வீடு ஒழுகுது, ஓட்டை இருக்கிறது, அதனால் பாம்பு வருகிறது என சரி செய்து கொடுங்கள் என வீட்டு வசதி வாரியத்திடம் யாரும் உரிமை கோரமுடியாது). குறைவான விலையில் ரூ.6 1/4 லட்சத்திலிருந்து 7 1/2 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்திருக்கிறது.

விண்ணப்பம் - ரூ. 110. பதிவு செய்ய ரூ. 400 (BY D.D.) (பணம் திரும்ப தரப்பட மாட்டாது.)

20தேதி வரை 1.5 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகியிருக்கின்றன என பத்திரிக்கை செய்திகள் சொல்கின்றன.

கணக்குப் போட்டுப் பார்த்தால்.... 170 வீடுகள் @ 7 லட்சம் எனில்.... ரூ. 12 கோடி

1.5 லட்சம் விண்ணப்பம் விற்பனையெனில் .... 1.5 லட்சம் @ ரூ. 510.... 7 கோடியே 65 லட்சம்

இந்த மாத இறுதிக்குள் 2 லட்சத்தை எட்டிவிடும். அவ்வளவு கூட்டமாம். அப்படியானால்..

அடப்பாவி மக்கா! வீடு விற்காமலே, 10 கோடி லாபம்.

170 வீடுகள் 170 மக்கள் பெற இருக்கிறார்கள். அவ்வளவு தான். ஆனால், 2 லட்சம் மக்களிடம் கொள்ளையடிப்பது எந்த விதத்தில் சரி!

இந்த கொள்ளையை ஊடகங்களில் அம்பலப்படுத்தி, தொடர்ச்சியாய் பேசப்படவும்... முதலவர் கருணாநிதி 22ந் தேதி பதிவுக்கட்டணத்திற்காக வாங்கும் ரூ. 400 பணத்தை, திரும்ப தருவதாக அறிவிப்பு செய்திருக்கிறார்.

இந்த அரசின் மீது இன்னும் நம்பிக்கை வைத்தால், நாம் தாம் பரிதாபத்துக்குரியவர்கள்.

******

பின்குறிப்பு : கூட்டம் அலை மோதி, சுற்றியுள்ள வங்கிகள் தனது அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதை உணர்ந்து, வீ.வ.வாரியத்திற்கு DD தருவதை நிறுத்திவிட்டன. மக்கள் வங்கி வங்கியாக அலைகிறார்கள்.

அடுத்து ஒரு தலை போகிற பிரச்சனை இருக்கிறது. இது நாள் வரையும், வீ.வ.வாரிய அலுவலகங்கள் 4 இடங்களிலேயும், 4 வங்கிகளின் கிளைகள் 20 இடங்களிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்து முடித்துவிட்டார்கள்.

ஆனால், பதிவதோ, வீ.வ.வாரிய 4 இடங்களில் மட்டும். அங்கெல்லாம், கடந்த 1 வாரமாக திருவிழா கூட்டமாம். நாளையும், நாளை மறுநாளும் இன்னும் மக்கள் கூட்டம் அதிகமாகும். அரசு தகுந்த ஏற்பாடு செய்யவேண்டும். இல்லையெனில், அடிக்கிற வெயிலில் மக்கள் நின்று, பலர் மயங்கி விழுவர். அதிகபட்சமாக கூட்ட நெரிசலில், சில தலைகள் நசிவது நிஜம்.
பொறுப்பில்லாத அரசு. பாவம் மக்கள்.

August 26, 2008

எல்லாம் 'பய' மயம்!



'தெனாலி' பயம்

சமைக்க துவங்கினால்
சிலிண்டர் தீர்ந்துவிடுமோ என பயம்

ஏறும் விலைவாசியினால்
அரிசி, பருப்பு வாங்க பயம்

அலுவலகம் கிளம்ப
வண்டியை உதைத்தால்
பெட்ரோல் தீர்ந்துவிடுமோ பயம்

அலுவலகம் போனால்
மின்சாரம் இருக்காதோ பயம்

லிப்ட்-ல் போனால்
பாதியில் நின்று போய்விடுமோ பயம்

பிரவசத்துக்கு மனைவியை
மருத்துவமனையில் சேர்க்க பயம்

பிறந்த பிறகு
குழந்தையை மாற்றிவிடுவார்களோ பயம்

வளரும் பொழுது
சொட்டுமருந்து கொடுக்க பயம்
கொடுத்தால்
செத்துவிடுமோ பயம்

அம்மாவுக்கு
கண் ஆபரேசன் பண்ண பயம்
செய்தால்
கண்ணே போய்விடுமோ பயம்

மன்மோகன்சிங் யாரிடமாவது
சிரித்து கைகொடுத்தால் பயம்

சிதம்பரம் வாயைத்திறந்தால்
வரி பற்றிய அறிவிப்பு பயம்

கருணாநிதி புரிந்துணர்வு
ஒப்பந்தம் போட்டால் பயம்

எல்லாவற்றையும் சிந்திக்க
பயம்

சிந்தித்தால்
கிறுக்கு பிடித்துவிடுமோ
பயம்

இங்கு
சர்வமும் 'பய' மயம்

அரசு அதிகாரி - குட்டிக்கதை




முன்குறிப்பு : இது எனது முதல் சிறுகதை. நிஜமான அனுபவம் என்பதால், எழுத எளிதாக இருந்தது. படித்துவிட்டு, பின்னூட்டமிடுங்கள். தவறுகள் இருந்தால் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இல்லையெனில், இதே மாதிரி தொடர்ந்து எழுதுவேன். உங்களுக்குத்தான் சிரமம்.
******
மணி 9.30

அலுவலகம் போய்கொண்டிருந்த பொழுது, போன் வந்தது

"சார்! நீங்க சொன்னபடியே ESI இன்ஸ்பெக்டர் நம்ம ஆபிஸ்க்கு வந்துகிட்டு இருக்கிறாராம்" ராஜ்குமார்.

நாம் ஒரு வேலை நினைத்தால், திடீர் திடீரென வேறு வேலை வருகிறது. சே!

மணி 12

அந்த கம்பெனிக்கு போய் சேர்ந்தேன். அங்கு இருந்தது பி.எப் இன்ஸ்பெக்டர்.

விறைப்பாக தொடர்ச்சியாக கேள்விகள் கேட்டார்.



"எல்லா ரிஜிஸ்டர்ஸ் எடுங்க! கேஷ் புக் எடுங்க! பேலன்ஸ் சீட் எடுங்க! வாடகை ஒப்பந்தத்துல வேற பெயர். EB அட்டையில் வேறு பெயர். இது நீங்க தயாரிச்ச அட்டன்டன்ஸ், சம்பள ரிஜிஸ்டர். உண்மையானதை எனக்கு காட்டுங்க!"

சந்தோசமாயிருந்தது. இப்படித்தான் சீரியசா, கரெக்டா இருக்கனும். என மனசுக்குள் நினைத்தேன்.

அந்த நிறுவனத்தின் முதலாளி கரடி ராஜ்குமார் திருதிருவென விழித்தான்.

"எல்லாம் ஆடிட்டர் ஆபிஸில் இருக்கு சார்!" என்றான்

"இப்படித்தான் எல்லாரும் சொல்றீங்க! பி.எப். அப்ளை பண்ணியிருக்கீங்க! பரிசோதிக்க எல்லாம்
தயாரா இருக்கனுமா! இல்லையா! இப்ப எல்லாத்தையும் எடுத்துக் காட்டலைன்னா நான் ரிப்போர்ட் எழுதிடுவேன். உங்களுக்கு பி.எப். நம்பர் கிடைக்காது. - இன்ஸ்பெக்டர் சிங்கம் கர்ஜித்தது.

சிங்கம் சொல்கிற படி, எல்லாம் தயாரித்தது தான். 1 வருடத்துக்கு முன்னாடியே பி.எப். நம்பர்
வாங்கியிருக்க வேண்டும். வாங்கவில்லை. அப்புறம் எடுத்துக்கலாம்-னு கரடி மிச்சம் பிடித்தது.

அவசர வேலையால், அங்கிருந்து நகர்ந்தேன். 1 மணி நேரம்.

மணி 1.30

என்ன ஆச்சோ! சிங்கம் கரடியை கடிச்சு துப்பிக்கிட்டு இருக்குமோ! என வேகமாய் போனேன்.



கரடியும், சிங்கமும் மிலிட்டரி ஹோட்டலில் ஆடு, கோழிகளைத் தின்றுவிட்டு, சிரித்துப் பேசி வந்து கொண்டிருந்தன.

கோபமாய் இருந்த சிங்கத்தின் முகம் சாந்தமாய் மாறியிருந்தது.

கரடியைத் தனியாய் அழைத்து ரகசியம் கேட்டேன். 5 ஆயிரம் கொடுப்பதென பேசி முடிக்கப்பட்டதாம்

வீடு திரும்பும் பொழுது, இதே பாண்டி சிங்கம் போல தேவ சிங்கம், சசி சிங்கம், குரு சிங்கம்,
லோக சிங்கங்கள் எல்லாம் வரிசையாய் மனதுக்குள் வந்தன.

பாண்டி சிங்கம் இங்கு. மற்ற பி.எப். சிங்கங்கள் எங்கு வேட்டையாடிக் கொண்டு இருக்கிறனவோ?

குளிர் காய்கிற கரடிகள். பாவம் ஊழியர்கள்.

*******

பின்குறிப்பு : இது உண்மைச் சம்பவம். CBI - லஞ்சம் வாங்கினால், தெரியப்படுத்துங்கள் என சமீபத்தில் எனக்கு SMS அனுப்பியது. எனக்கு வேறு வேலை வாங்கித்தருவதாய் இருந்தால், நான் அப்ரூவராய் மாறத்தயார்.