> குருத்து: நீதிபதிகள் இனி தமிழில் தீர்ப்பு எழுதவேண்டும்!

July 2, 2014

நீதிபதிகள் இனி தமிழில் தீர்ப்பு எழுதவேண்டும்!முன்குறிப்பு : தமிழில் தீர்ப்பு எழுதும் சட்டத்தை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் செல்வாக்கில் 1994ல் ஒரு தீர்மானத்தைப் போட்டு தமிழில் தீர்ப்பு எழுதுவதை தடுத்து நிறுத்தியிருந்தார்கள்.

தமிழ் உணர்வு கொண்ட வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகங்களில் பல வகைகளில் தொடர்ந்து போராடி நெருக்கடி தந்து, நீதிபதிகளும், நீதிமன்றமும் இனிமேலும் இழுத்தடிக்கமுடியாது என்ற நிலையில் இப்பொழுது இந்த தீர்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.

இந்த தொடர் போராட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தனது பங்களிப்பை செய்திருக்கிறது! போராடிய அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொள்வோம்.

தொடர்ந்து போராடுவோம்!

******

கீழ் நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு: தமிழை கற்கவும் நீதிபதிகளுக்கு உத்தரவு- உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி


கீழ் நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் எழுதலாம் என்ற உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

பிற மொழியை தாய்மொழியாகக் கொண்ட நீதிபதிகள் தமிழைக் கற்று தமிழில் தீர்ப்புகள் எழுத வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்புகளை எழுதலாம் என உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் 1994-ம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை வழக்கறிஞர் சோலை சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்த மனு 2013 பிப். 22-ம் தேதி தள்ளுபடியானது. இந்த உத்தரவை மறு சீராய்வு செய்யக் கோரி மூத்த வழக்கறிஞர் ரத்தினம், மனு செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு:

1950-ம் ஆண்டின் அரசியல் சாசனத்தில் மத்திய ஆட்சி மொழிகள், மாநில ஆட்சி மொழிகள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன் 345-வது பிரிவில் அந்தந்த மாநிலங்களில் மாநில மொழிகளை ஆட்சி மொழியாக பின்பற்ற சட்டம் கொண்டுவரலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழகத் தில் 1956-ல் ஆட்சி மொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976-ல் அந்தச் சட்டத்தில் கீழ் நீதிமன்றங்களில் சாட்சி விசாரணை தமிழில் நடைபெற வேண்டும், தீர்ப்புகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் ரெங்கா தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது.

பின்னர், தமிழை தாய்மொழியாகக் கொள்ளாத கீழ் நீதிமன்ற நீதிபதிகள், தமிழில் தீர்ப்பு எழுத வேண்டும் என்ற உத்தரவில் தங்களுக்கு விதிவிலக்கு வழங்கக் கோரினர். இதையடுத்து ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் எழுதலாம் என உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவு ஆட்சி மொழிச் சட்டத்துக்கும், தமிழில்தான் தீர்ப்புகள், சாட்சிகள் விசாரணை நடைபெற வேண்டும் என்ற பிரிவுக்கும் எதிரானது. தமிழ் தெரியாதவர்கள் குறிப்பிட்ட நாள்களுக்குள் தமிழைக் கற்று தமிழில் தீர்ப்புகள் எழுத வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்ற உத்தரவு நிரந்தரமானதாக இருப்பதால் தமிழைக் கற்க வாய்ப்பு எழவில்லை.

எனவே, கீழ் நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் எழுதலாம் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தமிழை தாய் மொழியாக கொள்ளாத அரசு ஊழியர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என விதியுள்ளது. அந்த விதி நீதிபதிகளுக்கும் பொருந்தும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

செய்தி : தி தமிழ் இந்து - 01/07/2014

0 பின்னூட்டங்கள்: