> குருத்து: சுவாரசியமான வாசகர் கடிதங்கள்!

July 30, 2014

சுவாரசியமான வாசகர் கடிதங்கள்!

படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே வாசகர் கடிதங்களும் அவ்வப்பொழுது எழுதி வந்திருக்கிறேன். பலரும் தங்கள் பெயர் பத்திரிக்கைகளில் வந்தால் போதும் என, ‘சூப்பர்’ ‘அசத்திட்டீங்க!’ என சுருக்கமாய் எழுதுகிறார்கள். அதில் என்ன பலன் இருக்கிறது? நான் எழுதிய சில வாசகர் கடிதங்களும் சில அனுபவங்களும் சுவாரசியமானவை!

ஒருமுறை திண்டுக்கல்லில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது, ஒரு மாலை இதழில் பல பட்டங்களை தன் பெயருக்கு பின்னால் போட்டுக்கொண்ட ஒரு பெண் பேராசிரியர், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் விழாவிற்கான சிறப்பிதழில் அம்மன் புகழ் பாடியிருந்தார். கோபம் வந்து, ”ஒரு பேராசிரியர் இப்படி அம்மன் புகழ் பாடலாமா?” என கடிதம் எழுதினேன். கடிதம் எழுதி 15வது நாளில் அந்த பேராசிரியர் “உங்களை மாதிரி முற்போக்கான இளைஞர்கள் தான் நாட்டுக்குத் தேவை” என்கிற சாரத்தில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். தலையில் அடித்துக்கொண்டேன்.

சில காலம் காலை வேளையில், கோடை பண்பலை தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்களின் ஒலிபரப்பின் எல்லை பெரியது என்பதால், எல்லோருரையும் பேசவைக்கவேண்டும் என்ற திட்டத்தில் இன்று இந்த மாவட்டத்துகாரர்கள் பேசவும், பெண்கள் மட்டும் பேசவும் என கோட்டா முறையை பயன்படுத்தி வந்தார்கள். அவர்கள் கேட்கும் எந்த பாடலையும் ஒலிபரப்புவார்கள். விடுமுறை என்பதால், ஞாயிறு மட்டும் குழந்தைகளுக்கு! ஆனால், அவர்கள் ஏதாவது குத்தாட்ட பாடலை கேட்டுவிட்டால், இந்த பாடலை ”குழந்தைகள் நீங்கள் இம்மாதிரி பாடலை கேட்க கூடாது” என அறிவுரை சொல்லி, பண்பலைகாரர்களே “நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே’ என்ற ரேஞ்சுக்கு ஒரு பாடலை ஒலிபரப்புவார்கள்.  வந்தது கோபம்.  வாரம் முழுவதும், அண்ணன், மாமா, சித்தி, தாத்தா எல்லோரும் குத்தாட்ட பாடல்கள், ஆபாச பாடல்கள் கேட்டால் ஒலிபரப்புவீர்கள்! குழந்தைகள் கேட்டால் போடமாட்டீர்கள்! இது என்ன நியாயம்?” என்று எழுதினேன்.  அடுத்த வாரத்திலிருந்து, எல்லோருக்கும் நல்ல பாடல் போடுவீர்கள் என்று தானே முடிவெடுத்திருப்பார்கள்! என நினைக்கிறீர்கள். ம்ஹூம்! குழந்தைகளும் எந்த பாடல் கேட்டாலும் ஒலிபரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்! நொந்தே போனேன்!

சொந்த ஊரில் புதிய கலாச்சார வாசகன் நான்.  அவ்வப்பொழுது கடிதங்கள் எழுதிக்கொண்டிருப்பேன்.  அப்படியே சென்னைக்கு வந்த சமயம், வாசகர் கடிதம் ஒன்றை எழுதி போட்டேன். இதழிலிருந்து நேரே என்னைத் தேடி வந்துவிட்டார்கள். எங்கெங்கோ அலைபாய்ந்து கொண்டிருந்த வாழ்க்கை, அப்பொழுது தான் சரியான திசையில் பயணப்பட துவங்கியது! இன்று வரை பயணித்துக்கொண்டிருக்கிறேன்!

எழுதி அனுப்பிய வாசகர் கடிதங்களை விட, எழுத நினைத்த வாசகர் கடிதங்கள் அதிகம்!  எழுதி அனுப்பாமல் விட்ட கடிதங்களும் கூட உண்டு!

இப்படிதான் ‘ஆட்டோகிராப்’ படம் பார்த்துவிட்டு, நாயகன் தன் வாழ்வில் கடந்த வந்த பெண்களை எல்லாம் சந்திக்கும் பொழுது, தான் உயிருக்குயிராக காதலித்த பெண் விதவையாக இருப்பாள். அதையும் இரண்டு சொட்டு கண்ணீரில் கடந்துவிடுவான். வந்தது கோபம். ”அவளைத்தானடா நீ கல்யாணம் முடிக்கவேண்டும்!” என நாலுபக்கம் கடிதம் எழுதி, முகவரி இல்லாததால், அனுப்பமுடியாமல் போய்விட்டது!


கால ஓட்டத்தில் செல்பேசியால் கடிதங்கள் அரிதாகி வருகின்றன! அன்றொருநாள் என் எட்டு வயது மகளுக்கு கடிதம் பற்றி விளக்கம் கொடுத்துகொண்டிருந்தேன். என்னதான் செல்பேசியில் மணிக்கணக்கில் பேசினாலும், கடிதம் இன்னும் மனதுக்கு நெருக்கமாகத்தான் இருக்கிறது!

2 பின்னூட்டங்கள்:

குருத்து said...

Test

Bagawanjee KA said...

பதிவர்களின் தளத்தில் நாம் எழுதும் கருத்துரைகள் இன்று வாசகர் கடிதத்தின் மறு வடிவம்தானே ?