> குருத்து: September 2007

September 28, 2007

Stinking Place Called India - பத்திரிக்கையாளர் சாய்நாத்




நன்றி : திரு. பிரகாஷ்

சாய்நாத் அவர்கள் கடந்த 19ந்தேதி சென்னைக்கு வந்திருந்த பொழுது, அந்த கூட்டத்திற்கு அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்ற நினைத்திருந்தேன். வேலை காரணமாக, அன்றைக்கு கலந்து கொள்ள முடியவில்லை.

பிரகாஷ் அவர்களின் பதிவில், அந்த கூட்டம் தொடர்பான செய்திகள், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் சாரத்தையும் படித்த பொழுது, மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், அதை மறுபதிவிடுகிறேன்.

பிரகாஷ் அவருடைய பதிவில், சில இணைப்புகளை தந்துள்ளார். அதை என்பதிவில் எடுத்து போடும் போழுது, நமக்கு டெக்னிக்கல் அறிவு குறைச்சல் என்பதால், அப்படியே காப்பி, பேஸ்ட் செய்துள்ளேன். அந்த லிங்க் வேண்டும் என நினைப்பவர்கள் அவருடைய பதிவிற்கு சென்று பார்த்துக்கொள்ளுங்கள். விரைவில் யாருடைய உதவியின் மூலம் அந்த அறிவையும், கற்றுக்கொள்கிறேன். நன்றி.

******

The Farm Crisis: Why have more than a lakh farmers ended their lives in India during the past decade” என்ற பொருளிலே, தி ஹிந்து நாளிதழின் ரூரல் எடிட்டரும், இந்த ஆண்டின் ( 2007 ) ரமோன் மக்சேசே விருது பெற்றவருமான பாலகும்மி சாய்நாத் பாராளுமன்றத்தில் ஒரு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சி, நேற்று இரவு 12 மணிக்கு , லோக்சபா டிவியிலே ஒளிபரப்பானது.

சமீபகாலமாக, பாராளுமனறம், பல்துறை வித்தகர்களைக் கொண்டு இது போன்ற சிறப்புச் சொற்பொழிவுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

பி.சாய்நாத், ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு முடித்து விட்டு, ப்ளிட்ஸ், தி டெய்லி போன்ற பத்திரிக்கைகளில், தன் இதழியல் பணியைத் துவங்கினார். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஃபெலோஷிப் மூலமாக, கிராமப்புறப் பொருளாதாரம் மற்றும் விவசாயிகளின் நிலைமை ஆராய்ச்சி மற்றும் ரிப்போர்ட்டிங் செய்யும் பணியை மேற்கொண்டார். கடந்த இருபது வருடங்களாக, வருடத்தில் 300க்கும் மேற்பட்ட நாட்களை, கிராமப்புறங்களில் செலவழித்து அங்கே ஏழ்மை மிகுந்து காணப்படும் பிரதேசங்களில் பயணம் செய்து அங்குள்ளவர்களின் நிலை பல கட்டுரைகளை டைம்ஸ் ஆஃப் இந்தியா , தி ஹிந்து போன்ற நாளிதழ்களில் எழுதியுள்ளார். இவர் எழுதி 1996 இலே வெளிவந்த Everybody Loves a Good Drought - Stories form India’s Poorest Districts ( வாசித்துக் கொண்டிருக்கிறேன் ) என்ற நூல், இந்திய மற்றும் உலக அளவில் பதிமூன்று விருதுகளைப் பெற்றிருக்கிறது.

லக்மே அழகிப் போட்டிகளைக் கவர் செய்ய, ஐநூற்றுக்கும் மேற்பட்ட ‘ஜெர்னெலிஸ்ஸ்ட்டுகள்’ தங்கள் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் எக்ஸ்ளூசிவ் புகைப்படத்துடன் வெளியிடத் துடிக்க, அதே சமயம், அழகிப் போட்டி நடக்கும் நகரங்களிலிருந்து சில நூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் விவசாயிகள் , வறுமை காரணமாகத் தற்கொலை செய்து கொள்வதன் பொருளாதார / அரசியல் / உளவியல் காரணங்களை, வெகுசன ஊடகங்கள் கண்டுகொள்ள மறுக்கும் நிலைமை பற்றி சாய்நாத்தின் பேச்சில் தென்படும் நாகரீகம் குறையாத நக்கலைக் கண்டு கொள்ள மொழியியலிலே பட்டம் பெற்றிருக்கத் தேவை இல்லை என்கிற நிதர்சனத்தை, இந்தக் கட்டுரையின் அடுத்த சில பகுதிகளிலே பார்த்துக் கொள்ளலாம்.

இப்போது நேராக மேட்டர்.

கிராமப்புற பொருளாதாரம், பழங்குடி இனங்கள், அவர்களின் வாழ்வாதாரங்கள், விவசாயம் போன்ற பல்வேறு காரணிகளைக் கொண்டு இயங்கும் சங்கதிகளைப் பற்றிய அடிப்படை அறிவு சிறிதும் இல்லாத எனக்கு, சாய்நாத் அவர்கள் கொடுத்த லெக்சரில் இருந்து விளங்கியவை இதுதான்.

- பின் தங்கிய மாவட்டங்களில் வசிக்கும் மிகக் கடுமையான வறுமையில் உழலும் தாழ்த்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடியினரைப் போன்ற இளிச்சவாயர்களை நாம் உலகில் எங்குமே பார்க்க முடியாது.

- கடந்த பத்து வருடங்களில் நடந்த தற்கொலைகளின் எண்ணிக்கை லட்சத்தைத் தொடும். இதுவும் துல்லியமான கணக்கு அல்ல. சொந்தமாக நிலம் இருந்து தற்கொலை செய்து கொண்டால் தான், அவர் அரசாங்கத்தின் கணக்கெடுப்புக்குள் வருவார். விவசாயிகளின் குடும்பத்தினரோ அல்லது நிலமில்லாத விவசாயக்கூலிகள் செய்து கொள்ளும் தற்கொலைகள் கணக்கில் வராது.

- தற்கொலைகளுக்கு முக்கியமான காரணம் கடன் தொல்லை. நான்கு ஆண்டுகளாக , லாபகரமாக விவசாயம் செய்ய , ரூபாய் ஒரு லட்சம் வரை கடன் சுமை ஏறி தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒரு ஆந்திர விவசாயியை நண்பர்கள் சரியான சமயத்தில், மருத்துவர்கள் உதவியுடன் காப்பாற்றி விட்டார்கள். நான்காண்டுகளாக சிறுகச் சிறுக அசல் மற்றும் வட்டியுடன் சேர்ந்திருந்த ஒரு லட்ச ரூபாய்க் கடன் சுமை, அவர் காப்பாற்றப்பட்ட நான்கு நாட்களில் , சடாரென்று ஒன்றரை லட்சமாக உயர்ந்தது. Thanks to The Fifth Most Privatised Health Care System in the World, India.

- 2004 இலே India Shining என்ற பெயரில், பொதுத்தேர்தலுக்காக ஊடகங்களில் விளம்பரம் செய்து, முந்தைய அரசு, மக்களிடம் செருப்படி வாங்கிய பிறகுதான், விவசாயிகளின் வாழ்வாதாரப்பிரச்சனை பற்றி லேசாக ஊடகங்களில் செய்திகளில் வரத்துவங்கியது. ஆந்திரத்தின் பின் தங்கிய மாவட்டங்களில் தற்கொலைகள் மிக அதிகமாக இருந்த காலகட்டத்தில் தான், எகானாமிக் டைம்ஸ் நாளிதழ், அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு CEO of the Year என்ற விருது கொடுத்து மகிழ்ந்தது.

- மானியம் இல்லாத விவசாயம் உலகில் எங்குமே கிடையாது. விவசாயத்தைப் பொறுத்தவரை மானியம் என்பது உலக மரபு. மானியம் அளிக்கப்படாத விவசாயத் தொழில் என்பது உலகத்தில் எங்கும் இல்லை. 3.9 பிலியன் டாலர் பருத்தி விவசாயத்துக்கு, அமெரிக்க அரசாங்கம் அளிக்கும் மானியம் 4.7 பிலியன் டாலர்கள்.

- விவசாயம் லாபகரமான தொழில் இல்லை என்பது உண்மை. ஆனால், அது நட்டத்தில் இயங்கவில்லை. நட்டத்தில் இயங்க வைக்கப்படுகிறது. சாய்நாத் வார்த்தைகளிலேயே சொல்வதானால், ‘agriculture in India is not unviable but being made unviable by imposition’

- ஒரே குடும்பத்தில், குறைந்த இடைவெளியில் அடுத்தடுத்து தற்கொலைகள் நடப்பது சகஜம்.

- ஒரு பின் தங்கிய மாவட்டத்தில், ஒரு விவசாயி , தன்னுடைய பெண் திருமணத்தின் போது கடன் கொடுத்தவர்களால் ( எட்டாயிரம் ரூபாய் ) அவமானப்படுத்தப் பட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தான், ஒரிசா போன்ற இடங்களில் இருந்து வந்திருந்திருத உறவினர்களை மீண்டும் வரவழைத்து திருமண ஏற்பாடுகள் செய்ய முடியாது என்பதால், இறந்தவரை அடக்கம் செய்து விட்ட கையோடு பெரியவர்கள் திருமணத்தையும் நடத்தி வைத்தார்கள். இந்தச் சம்பவம் நடந்த போது உடன் இருந்த சாய்நாத், வேலை முடிந்து தன்னுடைய இல்லத்துக்குத் திரும்பிய போது, ஒரு மல்டிநேஷனல் வங்கியில் இருந்து ‘ பென்ஸ் கார்’ வாங்கிக் கொள்ள லோன் ஆ·பர் அவருக்கு வந்திருந்தது. ஜஸ்ட் 6 சதவீத வட்டி. No collateral Required. இந்தச் சம்பவம் நடந்த இடத்துக்கு சில நூறு மைல்கள் தூரத்தில், தே நேரத்தில் உலகின் மிகக் காஸ்ட்லி திருமணம் ( லக்ஷ்மி மித்தல் இல்லத்திருமணம் ) நடந்தது.

- ட்சுனாமி தாக்கிய போது, பாதிக்கப்பட்ட நாடுகளில் ( இந்தியா , இலங்கை, இந்தோனேசியா ) இருந்த பங்கு சந்தைகளின் பர்ஃபாமன்ஸ் சட சடவென்று உயர்ந்தது. குழப்பமாக இருக்கிறதா? பங்குமார்கெட்டுக்கு, ட்சுனாமியினால் ஏற்பட்ட தேசியத் துயரத்தை விடவும், நிவாரணப்பணிகளை முன்னிட்டு உள்ளே வரவிருக்கும் ‘பணம்’ பற்றித்தானே மகிழ்ச்சி ஏற்படுவதுதானே நியாயம்?

- National Sample Survey அளித்த அறிக்கையின் படி, விவசாயத்தில் ஈடுபடுபவர்களில் நாற்பது விழுக்காட்டினர் உண்மையில் விவசாயம் செய்வதை விரும்பவில்லை. வேறு தொழிலுக்கு பெயர முயற்சி செய்கிறார்கள்.

- மகாராஷ்டிரத்தின் விதர்பா உள்ளிட்ட மாவட்டங்களில் சென்ற ஆண்டு பள்ளி இறுதி ஆண்டுத் தேர்விலே , தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையில் பெரிய சரிவு ஏற்பட்டது. இது பற்றிய விவாதம் எழுந்த போது, கல்வித்தரம், ஆசிரியர்கள் தரம் பற்றிப் பேசிய அரசாங்கப் பீடாதிபதிகள், ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள மறுத்து விட்டார்கள். அது, அந்த மாவட்டங்களில், தேர்வு நடப்பதற்கு மூன்று மாதங்கள் முன்பு வரை, தோராயமாக நாள் ஒன்றுக்கு பதினேழு மணிநேரங்கள் மின்வெட்டு இருந்தது. இது போல ஒரே ஒரு நாள், நரிமன் பாய்ண்ட் வட்டாரத்தில் மின் வெட்டு ஏற்பட்டால், மாநில அரசு கவிழ்ந்து விடும். முரண் நகை என்ன என்றால், மகாராஷ்டிரத்தில், மிக அதிகமாக மின் உற்பத்தி செய்யும் மாவட்டம், விதர்பா.

- வறுமைத் தற்கொலைகள் அதிகமாகி, ஊடகங்களில் பரவலாகச் செய்தி வந்ததும், அந்த இடங்களுக்குச் சென்று பார்வையிடச் செல்ல, பிரதமர் எடுத்துக் கொண்ட காலம், இரண்டு மாதங்கள். அதே சமயம் பங்கு மார்கெட்டில் பிரச்சனை என்றதும் , நிலைமையைச் சீர் செய்ய அங்கே செல்ல நிதி அமைச்சர் எடுத்துக் கொண்ட நேரம், வெறும் அரை மணி நேரம். இந்திய ஜனத்தொகையில் , பங்குமார்க்கெட்டில் ஈடுபட்டிருக்கும் மக்களின் சதவீதம் 1.8 %. விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களின் சதவீதம், 40 சதவீதத்துக்கும் மேலே.

- Indian Express, Telegraph போன்ற - பிசினஸ் பத்திரிக்கை அல்லாத - general interest தேசிய நாளிதழ்களில் வர்த்தகச் செய்திகளைக் கவர் செய்ய 12 அல்லது 13 நிருபர்கள் உண்டு. விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இங்கே விவசாயம்/ கிராமங்களைக் கவர் செய்ய ஒருத்தர் அல்லது இருவர் இருந்தால் அதிகம்.

- ஆந்திராவில் மென்பொருள் ஏற்றுமதித் தொழிலை விட அதிகமாகப் பணம் புழங்கும் துறை விதைகள் வியாபாரம். 1991 இலே கிலோ எட்டு ரூபாய்க்கு விற்ற விதை, இப்போது கிலோ இரண்டாயிரத்துச் சொச்சம். விற்பது வெளிநாட்டு நிறுவனம். சந்திரபாபு நாயுடு, தலையிட்டு அதை ஆயிரத்துச் சொச்சமாகக் குறைக்க வைத்திருக்கிறார்.

***********

பி.கு 1:

சாய்நாத் கொடுத்த லெக்சரில் இருந்த புள்ளிவிவரங்கள் ஜீரணிக்க முடியாததாக இருந்தது. அவை அனைத்தும், அரசு பொதுவிலே வைக்கும் தகவல்களில் இருந்தும், மக்களை நேரடியாகச் சந்தித்தும் பெறப்பட்டவையே. பல விஷயங்கள் நினைவில் இல்லை. இந்த நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை அன்று பகல் 12 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தொட்டதற்கெல்லாம் குற்ற உணர்ச்சி அதிகமாகி அவஸ்தைப் படுபவர்கள் பார்க்க வேண்டாம்.

பி.கு 2:

ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மேல், இழுக்காமல் உடனடியாகப் படித்து முடிக்கிற வழக்கம் கொண்டிருக்கும் எனக்கு, சாய்நாத் எழுதிய Everybody Loves a Good Drought - Stories form India’s Poorest Districts’ நூலை ஒரே மூச்சில் படிக்க இயலவில்லை. சரமாரியாக வந்து விழும் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களைச் சீரணம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. சில அத்தியாங்களைப் படிக்கையில் விரல்கள் நடுங்குகின்றன. இந்தியாவின் அச்சு அசலான ஏழைகளை அறிமுகப்படுத்தும் அந்த நூலின் தலைப்பைக் குறித்த சந்தேகம், முதல் சில பக்கங்களைப் படித்ததும் நீங்கியது. சாய்நாத் சந்திக்கும் ஒருவர் சொல்கிறார்,

” In this year’ drought, all i did was sub-contract one small dam. I bought a new scooter. If there’s a drought next year, I shall buy a new jeep.”

படித்து முடித்தவுடன், நூல் குறித்த அபிப்ராயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

பி.கு 3.

விவசாயிகளின் தற்கொலைகள் பற்றி சாய்நாத் எழுதி வந்த கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

பி.கு 4 :

இந்த கருத்துக்களையும் உள்ளடக்கி, சாய்நாத், இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் ( சென்னை ) நடத்திய நிகழ்ச்சியில், When rising inequalities threaten democracy என்ற பொருளில் , சென்றவாரம் ஒரு உரை நிகழ்த்தினார். உரை, ஒலி வடிவத்தில் இங்கே கிடைக்கும். 46 எம்பி சொச்சம் இருக்கும் கோப்பை இறக்கிக் கேட்பது சிரமம் தான். இருந்தாலும் கேளுங்கள்.

from http://icarusprakash.wordpress.com/

September 16, 2007

விநாயகர் ஊர்வலம்! உஷார்! உஷார்!



நன்றி : மகா

விநாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டது. இனி தேதி வாரியாக, இந்துத்துவ வெறியைத் தூண்டும் இயக்கங்கள் வரிசையாக விநாயகர் ஊர்வலம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். கலவரத்தையும், பதட்டத்தையும் உருவாக்கியும் வருகிறார்கள்.

பின்வருகிற ஆர்.எஸ்.எஸ் எழுப்பும் இந்த கேள்வியும், பின் வருகிற ம.க.இ.க வினரின் பதிலும், விநாயகர் ஊர்வலத்தின் அர்த்தம் நன்றாக உணர்த்தும். ஆர்.எஸ்.எஸ்-இன் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கவும் முடியும்.

மசூதிமுன் ஊர்வலம் நடப்பதேயில்லையா?

"நாடு முழுவதிலும் எங்கெல்லாம் ஒரு மசூதி அல்லது ஒரு முசுலீம் பேட்டை இருக்கின்றதோ, அந்தப் பகுதியை உண்மையில் தமக்கே சொந்தமான சுதந்திரமான பிரதேசமாக முசுலீம்கள் கருதுகின்றனர். ஹிந்துக்களின் ஊர்வலம் இசைக்கருவிகளுடனும், பாட்டுகளுடனும் அவ்வழியே சென்றால், அவர்கள் தமது மத உணர்ச்சிகள் புண்படுத்தப்பட்டதாகக் கடுங்கோபம் கொள்கின்றனர்.

இனிய இசையைக் கேட்டுப் புண்படும் அளவிற்கு, அவர்களுடைய சமய உணர்ச்சி தொட்டால் சிணுங்கியாக இருக்குமானால் தமது மசூதிகளைக் காடுகளுக்கு மாற்றி அமைத்துக்கொண்டு அங்கு மெளனமாகத் தொழுகை நடத்தக் கூடாதா? சாலை ஓரத்தில் ஒரு கல்லை நட்டு அதற்கு வெள்ளையடித்து, அதனைத் தொழுகைத் தலம் என்று அறிவித்துவிட்டு, அங்கு இசை பாடப்படுவது தமது தொழுகையைக் கலைப்பதாகும் எனக் கூப்பாடு போடுவானேன்?"

- ஆர்.எஸ்.எஸ் - இன் இரண்டாவது தலைவர் கோல்வால்கர்,
('ஞானகங்கை'- இரண்டாம் பாகம் - பக். 170)


மசூதிக்கு முன்னால் நடக்கவோ, பாடவோ, மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்துமத வெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம். மசூதிகளின் தொழுகைக் காலத்தோடு பிரச்சனை இல்லாமல், நல்லிணக்கத்தோடு இயங்கி வந்த மக்களிடையே - இல்லாத ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி, முசுலீம் எதிர்ப்புக் கலவரம் நடத்துவதே அவர்கள் நோக்கம். அதைப் பல இடங்களில் ஆண்டுதோறும் செய்தும் வருகிறார்கள்.

முதலில் மசூதிகள் பிரபலமான, பரபரப்பான தெருக்களிலும், சந்தைகளிலும், வணிக முக்கியத்துவம் மிகுந்த இடங்களில் இருப்பது உண்மைதான். காரணம், அவ்வட்டாரத்தில் கணிசமான முசுலீம்கள் வாழ்வதும், அதிலும் வணிகர்களாக இருப்பதும், தமது வேலை நேரத்தில் குறிப்பாக வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்துபோக வசதியாக இருக்கவும்தான் அப்படி கட்டப்படுகின்றன. வேறு எந்த நோக்கமும் இல்லை.

அதே சமயம் மசூதிகள் முன்பு மாணவர்கள், தொழிலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் ஊர்வலமாய்ப் போகிறார்கள். ஏன், கோவில் திருவிழாக்கள் கூட இடையூரின்றிச் செல்லுகின்றன. மசூதி அருகே பொதுக்கூட்டங்கள் நடப்பதும், பாங்கு ஓதும் நேரம் ஓரிரு நிமிடம் அமைதி காப்பதும் தமிழகத்தில் இயல்பான காட்சிகள்தான். இதனாலெல்லாம் எங்கும் கலவரம் ஏற்பட்டதில்லை.

1980-களில் தோன்றிய இந்து முன்னணி, மசூதி முன்பு விநாயகர் ஊர்வலத்தை வம்படியாக நடத்திய போதுதான், இக்கலவரங்கள் ஆரம்பித்தன. சரியானத் தொழுகை நேரத்தில் ஊர்வலம் நடத்துவது, "துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியைக் கட்டு, அல்லாவுக்குக் குல்லா போட்டு அரேபியாவுக்கு அடிச்சுத் துரத்து, இந்த நாடு இந்து நாடு இல்லேங்கிற துலுக்கன் யாரு" போன்ற 'இனிய இசை மொழிகளை'க் கூவுவது இவற்றினால்தான் தகராறுகல் ஆரம்பித்துக் கலவரங்களாய் முடிகின்றன.

பம்பாய், ஹைதாரபாத், சென்னை மூன்று நகரங்களிலும் ஆர்.எஸ்.எஸ். வானரங்கள் நடத்த்டும் விநாயகர் ஊர்வலங்கள் மசூதி வழியாகச் சென்று முசுலீம் மக்களைத் தாக்குவதற்கான அவலங்களாய் மாறிவிட்டன. தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் இந்த நோய் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. எனவே, மசூதி முன்பு ஊர்வலம் நடத்தும் இந்து மதவெறி அமைப்புக்களை முழுமையாகத் தடை செய்யும் போதுதான் இந்த அராஜகங்களுக்கு முடிவு கட்ட முடியும்.

பெரும்பான்மை இந்துக்களின் ஏகபோகப் பிரதிநிதிகள் என உரிமை கொண்டாடும் சிறு கும்பலான பார்ப்பன-இந்து மதவெறி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி முறியடிப்பது உழைக்கும் மக்களின் கடமையாகும்.

மசூதியை வைத்து உரிமைக்குரல் எழுப்பும் இவர்கள்தான் அக்கிரகாரம், ஊர், தேரோட்டம் போன்றவற்றில் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கிறார்கள். கேவலம், தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து தேரை இழுக்க முடியாது என கண்ட தேவியில் சில ஆண்டுகளாய் நிறுத்தப்பட்டிருக்கும் மரத்தேர் இந்த மரமண்டைகளின் யோக்கியதைக்குச் நல்ல சான்று.
******

சமீபத்தில், "கண்ணை மறைக்கும் காவிபுழுதி" என்றொரு புத்தகத்தை, மக்கள் கலை இலக்கிய கழகம் வெளியிட்ட புத்தகத்தை மீண்டும் வாசித்தேன். அதில், விநாயகர் ஊர்வலம் தொடர்பாக ஒரு கட்டுரை சிறப்பாக இருந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

from mahasocrates.blogspot.com

September 14, 2007

'கலைஞர் டிவி' - ஆரம்பமே 'அசத்தலா' இருக்கே!


நாளை முதல், இந்திய சானல்களில் (பில்டப் அதிகமா இருக்கோ!) தமிழ்சானல் ஒன்று ஆர்ப்பாட்டமாய் தன் ஒளிபரப்பைத் தொடங்க இருக்கிறது.

காலை முதல் இரவு வரைக்கும் திரை நட்சத்திரங்கள் தங்கள் வியர்வை சிந்தி உழைத்த நேரங்களை, நம்மோடு பகிர்ந்து கொள்ள இருப்பதை, இன்றைக்கே டிரைலர் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். நாளை முதல், தமிழனின் வாழ்வு ஒருபடி உயரப்போகிறது(!).

திராவிட வெகுஜனக் கட்சிகளில், திமுகவின் தலைவர் கலைஞர் தான், இன்றைக்கும் அவ்வப்பொழுது பகுத்தறிவு பேசி, இந்துத்துவ ஆட்களிடம் திட்டு வாங்கிக்கொண்டு இருக்கிறார். இது நாடறியும்.

ஆனால், அப்படிப்பட்ட கலைஞரின் பெயரில், தொடங்குகிற சானலை, இரண்டு நாட்களுக்கு முன்பாக அண்ணாவின் பிறந்த நாளில் தொடங்கியிருக்கலாம். அல்லது, இன்னும் மூன்று நாளில், செம்டம்பர் 17 ந்தேதியன்று பெரியாரின் பிறந்த நாள் வருகிறது அன்றைக்கு தொடங்கியிருக்கலாம்.

இப்படிப்பட்ட சிறப்பான நாட்களை விட்டு விட்டு, ஏன் விநாயகர் சதுர்த்தியன்று தொடங்குகிறார்கள்?

கலைஞருக்கு பிடிக்காத நபர் யாராவது இப்படி இந்த நாளில், சானல் தொடங்குவதைப் பற்றி, கேள்வி கேட்டிருந்தால், கலைஞர் என்ன பதில் சொல்லியிருப்பார்.

"ஒரு தடவை சிவபெருமான் கையாலயத்தில் தியானத்தில் ஆழ்ந்துவிட, தனிமையில் விடப்பட்ட பார்வதி தன் மீது அன்பு செலுத்தவும் தன்னை பாதுகாக்கவும் வேண்டி தன் உடல் அழுக்கை உருட்டி இளைஞன் ஒருவனை உருவாக்கினாள். அவனைக் காவலாளாக நியமித்து யாரையும் அனுமதிக்க வேண்டாமென்று கட்டளையிட்டு, குளிக்க செல்கிறாள்.

இதற்கிடையில், சிவன் தியானத்திலிருந்து விடுபட்டு, பார்வதியின் அந்தப்புரத்திற்குள் சிவன் நுழைய, காவலுக்கு நின்ற அவன் அனுமதி மறுக்க, சிவன் கோபப்பட்டு, தலையை வெட்டிவிடுகிறார். பிறகு, அழுது வடிந்த பார்வதியை சமாதனப்படுத்த, வடதிசையில் கண்ணில்பட்ட ஒரு யானையின் தலையை வெட்டி வந்து ஒட்ட வைக்கிறார்கள். இப்படித்தான், யானை முகம் கொண்ட விநாயகர் தோன்றினார்".

இதிலிருந்து நாம் பெறுகிற செய்தியாவது, அழுக்கில் உருவானவர் விநாயகர். இந்த நாளில் தொடங்கப்படுகிற சானலின் தரமும் இப்படி அழுக்காகத்தான் இருக்கும்"

இது சிரிப்பதற்காக, சொல்கிற செய்தி அல்ல! திமுகவின் கொள்கைகளும், இந்துத்துவ கொள்கைகளும் இருவேறு துருவங்கள் என்று நினைப்பவர்கள், இப்படி இரண்டும் இணைகிற இந்த புள்ளியைப் பார்த்தாவது, புரிந்து கொண்டால் சரி.