December 26, 2007
இரத்தம் தோய்ந்த செங்கல் - குஜராத்!
கொதிக்கின்ற - தார்ச்சாலையில் நிர்வாணமாக கிடக்கிறாள் அந்தப் பெண் - பிணமாக. அவள் உடம்பிலிருந்து உரித்தெறியப்பட்ட சேலை அருகே சுருண்டு கிடக்கிறது. கிழித்தெறியப்பட்ட அவளது உள்ளாடையின் ஒரு பாதியை தவிப்புடன் இறுகப் பற்றியிருக்கிறது அவளது இடது கை. உடலும் கையும் நசுங்கிச் சிவந்து ரத்தம் உறைந்திருக்கிறது. இடது தொடை முழுவதும் ரத்தம். உடலுக்கருகில் பரிதபமாக கிடக்கிறது அவளது பிளாஸ்டிக் செருப்பு.
அருகே ரத்தமும், வெறுப்பும் தோய்ந்த ஒரு செங்கல். கொலைகாரர்கள் அவள் மீது எறிந்த இறுதி ஆயுதம், அதுவும் கிடக்கிறது.
அவளது பெயர் கீதாபென். மார்ச் 25ம் தேதி அகமதாபாத்தில் அவளுடைய வீட்டு வாசலிலேயே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் வைத்து பட்டப்பகலில் அவள் கொடூரமாகக் கொல்லப்பட்டாள்.
அவள் ஒரு இந்துப் பெண். இருந்தும் ஒரு முசுலீம் இளைஞனைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் மாபாதகத்தைச் செய்துவிட்டாள். "அவனை ஒப்படைத்து விடு" என்று வீட்டு வாசலில் நின்று ஆர்.எஸ்.எஸ் காலிகள் மிரட்டிய போது ஒருபாறையைப் போல அவள் உறுதியாக நின்றாள் - கணவன் தப்பிச்செல்லும் வரை.
முசுலீமைக் காதலித்த குற்றம், அவன் உயிரைக் காப்பாற்றிய குற்றம். இந்த இரண்டு குற்றங்களுக்காகவும் அந்தக் கணமே, அங்கேயே அவள் நிர்வாணமாக்கப்பட்டு, நடுத்ததெருவில் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டாள்.
- செய்தி: Times of India, 19th April/2002.
கொதிக்கின்ற தார்ச்சாலையில்
நிர்வாணமாகக் கிடக்கிறாள்
அந்தப் பெண்.
கீதா பென்னின்
உயிரைப் பறித்த செங்கல்
ஆயிரக்கணக்கான முசுலீம்களின்
உயிரைக்குடித்த அதே செங்கல்
செங்கல் காவு கொண்ட
கீதா பென்னின் உயிர்
காவுக்குத் தப்பிய
அவள் கணவனின் உயிர்
கீதாபென் - கள் பலர்
குஜராத்தில் இருந்திருந்தால்
கீதா பென்
நடுவீதியில் ஆடையின்றி
பிணமாகக் கிடந்திருக்க
மாட்டாள்.
குஜராத்தும்
அம்மணமாக நின்று
அவளை வேடிக்கை
பார்த்திருக்காது.
இந்து - முசுலீம் தம்பதியர். திருமணப் பதிவு அலுவலகத்திலிருந்தும் பிற அரசு ஆவணங்களிலிருந்தும் இத்தகைய கலப்பு மணம் புரிந்தோரின் பட்டியலை சேகரித்துக் கையில் வைத்துக் கொண்டு தம்பதியரில் முசுலீமை மட்டும் கொலை செய்திருக்கிறது இந்து மதவெறிக்கும்பல். ஆனால் இது திடீரென்று நடக்கவில்லை.
கடந்த 15 ஆண்டுகளில் இந்து மதவெறி இயக்கங்களின் வளர்ச்சியையொட்டி குஜராத் சமூகத்தின் பண்பாடும் பாசிசமயமாகி வந்திருக்கிறது. மத மறுப்புத் திருமணத்தைக் கேலி செய்வது, இழிவு படுத்துவது, குடியிருக்க இடம் தராமல் தனிமைப்படுத்துவது ஆகியவை தொடர்ந்து நடந்திருக்கின்றன. இதனை முகாந்திரமாக வைத்தே பல முசுலீம் எதிர்க் கலவரங்கள் நடந்துள்ளன.
இவையனைத்திற்கும் மேலாக மாநில பாரதீயஜனதா அரசு ஆகஸ்டு'98ல் காவல் துறைக்கு அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஒரு சுற்றறிகையை அனுப்பியது. "மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டுதான் இந்து முசுலீம் திருமணங்கள் நடைபெறுகின்றன; எனவே, இத்தகைய எல்லா திருமணங்களையும் புலன் விசாரனை செய்யவேண்டும்" எனக் கூறி இதற்க்கென தனியே ஒரு போலீஸ் படையையும் அமைத்தது குஜராத் அரசு.
மதமாற்றம் செய்வோருக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கும் மசோதா ஒண்றை இருப்பினும் இந்த முடிவை அரசு வாபஸ் பெறவில்லை.குஜராத் பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. நாடு முழுவதும் எழுந்த கண்டனங்களின் விளைவாக தற்காலிகமாக அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் வாழும் கிறித்தவர்களையும் முசுலீம்களையும் மட்டும் கணக்கெடுப்பதற்கென்றே தனியாக ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும் ஜனவரி'2000-ல் குஜராத் அரசு அறிவித்தது. குஜராத் உயர் நீதிமன்றம் இதற்குத் தடை விதித்துள்ளது.
கீதாபென்னும் திடீரெனக் கொல்லப்படவுமில்லை.
புதிய கலாச்சாரம் - மே 2002- இதழிலிருந்து
நன்றி : இயல் from http://venmani.blogspot.com
பின்குறிப்பு:
இயல் அக்டோபர் மாத இறுதியில், இதை தன் பதிவில் போட்டிருந்தார். அதை மீண்டும் எடுத்துப் போட்டதற்கு, மூன்று முக்கிய காரணங்கள்.
ஒன்று : குஜராத்தில், தனி பெரும் மெஜரிட்டி பெற்று, மோடி மீண்டும் முதல்வராகியிருக்கிறார். தனது நடவடிக்கைகளாலும், பேச்சினாலும் இட்லரின் வாரிசுகளாக அறியப்பட்ட ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் நிறைய உற்சாகமடைந்திருக்கின்றன. அவர்களைப் பற்றி மீண்டும் நினைவுப்படுத்த இந்த பதிவு.
இரண்டு : இயல் பதிவாய் போட்டவுடனே, கெட்ட கெட்ட வார்த்தைகளால், ஆர்.எஸ்.எஸ்.
ஆதரவாளர்கள் நிறைய திட்டியிருந்தார்கள். அது எனக்கு நிறைய பிடித்துபோனது.
மூன்று : மோடி வெற்றி பெற்றதுமே, மதுசூதனன் என்ற பதிவர், வாழ்த்து சொல்லி பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கான பின்னூட்டங்களில், மதுசூதனன் இப்படி ஒரு பதில் சொல்லியிருந்தார்.
//என்வரையில் மோடி நல்லவர். ஏனென்றால் பத்து பேருக்கு கெடுதல் செய்தாலும் ஆயிரம் பேருக்கு நல்லது செய்தவர் என்பதையும் இங்கே வாதிடும் யாராலும் மறுக்க முடியாது //
மூவாயிரம் உயிர்களை கொன்று குவித்த மோடி இட்லரின் வாரிசு என்றால், மதுசூதனன் போன்றவர்கள், மோடியின் வாரிசுகள்.
December 14, 2007
காமம் + களவு = மரணம்
நேற்று நடுநிசி
'அவனும் + நானும்'
யாரோ உளவு சொல்லி...
அப்பாவும், அண்ணனும்
செருப்பால்
விளக்குமாற்றால்
இருவரையும்
வதைத்தார்கள்
"நான் தான் அழைத்தேன்
அவரை விட்டுவிடுங்கள்"
அழுத்தமாய் சொன்னேன்
அழுகை
வரவேயில்லை
சுற்றிலும்
முணுமுணுப்பு கேட்டது
மகன் ஏதுமறியாமல்
தூங்கி கொண்டிருந்தான்
வெறுமையாய்
வெறுப்பாய் இருந்தது
காலை 11 மணி
மார்ச்சுவரியில் - 'நான்'
கிடத்தப்பட்டிருந்தேன்
காமம் - இனி
என்னுள் ஊறாது
காதில் - இனி
எதுவும் விழாது
என்னை நானே
தண்டித்துவிட்டேன்
முன்கதை சுருக்கம்
நோயாளி - துணை
முதலில்
கொஞ்சமாய் ஊறி
தொல்லை செய்தது
தணிக்கப்படவில்லை
ஒருநாள்
அதிகாலையில்
துணை மரித்துப்போனான்
பெருக்கெடுத்தது
செல்கள்,
எண்ணங்கள் - அனைத்தையும்
ஆக்கிரமிக்கத் தொடங்கியது
மானம், அவமானம்
குடும்பம், சமூகம்
கண்களில்
மறையத் தொடங்கியது
என் கண்களில்
'நீலத்தை - 'அவன்'
கண்டுகொண்டான்
பின்குறிப்பு :
பதிவின் சாரம் கற்பனையல்ல. நடந்த சம்பவங்களின் சாரம் தான். (தூரத்து சொந்தமான) அண்ணனின் மனைவி தூக்கிலிட்டு கொண்டார் என நேற்று காலையில் செய்தி வந்தது. அவரை, கடந்த 10 ஆண்டுகளில், விசேஷ வீடுகளில் 4 அல்லது 5 முறை சந்தித்து பேசியிருப்பேன். கடந்த ஓர் ஆண்டுக்கு முன்னால், நோயில் அண்ணன் இறந்து போனார்.
இந்த பதிவின் மூலம், எழுப்பும் கேள்வி இதுதான். இந்த நாட்டில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடப்பதே, மிகுந்த சிரமமாயிருக்கிறது.
கணவனை இழந்த பெண்ணுக்கு, அதுவும் பத்து வயது பையன் வைத்திருக்கிற பெண்ணுக்கு மறுதிருமணம். சிரமம்.
ஆனால், இயற்கையாய் உடலில் எழுகிற காமத்தை என்ன செய்வது?
"நான் தான் அழைத்தேன்
அவரை விட்டுவிடுங்கள்"
- இறந்து போன வசந்தாவின் உண்மை உரையாடல் தான்.
எனக்கென்னவோ, பிற்போக்குத்தனமான சமூகம் தான் சத்தமில்லாமல் பல கொலைகளை செய்கிறது. நாம் தாம் அந்த கொலையை, தற்கொலையென தனிநபர் சம்பந்தபட்ட விசயமாய் புரிந்து கொள்கிறோம்.
December 4, 2007
இளமையின் கீதம் - நாவல் - அறிமுகம்
"நான் படித்த நூல்களில், சிறந்த புத்தகங்கள் என பத்து தேர்ந்தெடுத்தால், அந்த வரிசையில் இந்த புத்தகம் நிச்சயம் இடம் பெறும். இது கற்பனை நாவல் அல்ல. ரத்தமும், சதையுமான விடுதலைப் போராட்ட வரலாற்று நாவல்" - என்று... மகா அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு, அவருடைய பதிவில் அறிமுகப்படுத்தியிருந்தார்.
பிறகு, தேடிப்படிக்க சில காலங்கள் கடந்துவிட்டன. நல்ல ஆரோக்கியமான குண்டு புத்தகம் தான். மொத்தம் 748 பக்கங்கள். இப்படி கனமான புத்தகங்கள் நான் படித்தது மிகு குறைவு தான். அதும், நான் விரைவாக படித்த சில புத்தகங்கள் தான்.
அதில், மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவல் முதல் புத்தகம். கடைசியாக படித்தது மொழிபெயர்ப்பு நாவலான பட்டாம்பூச்சி. சில ஆண்டுகளுக்கு பிறகு, இந்த புத்தகம் தான் விரட்டி, விரட்டி படித்த புத்தகம். மகா அவர்கள் சொன்னது போல, அற்புதமான நாவல்.
இன்றைக்கு கதை மட்டும் சொல்கிறேன். வரும் நாட்களில், நாவலில் சொல்லத்தக்க விசயங்கள் நிறைய இருக்கின்றன, அதையும் சொல்கிறேன்.
கதை தொடர்கிறது.
ஒரு நிலப்பிரவுவால் சீரழிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் நாயகி லிண்டாவோ சிங். நெருக்கடியில், தன்னந்தனியாக தன் சொந்த ஊரைவிட்டே வெளியேறுகிறாள்.
தேடிப்போன மாமாவும் அந்த கடலோர கிராமத்தில் இல்லாமல் போக, அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல், ஆதரவின்றி குழப்பத்தில் நிற்கும் அவளை, மேலும் துயரங்கள் துரத்த, மிகவும் தளர்ந்து தற்கொலைக்கு முயல்கிறாள்.
டாவோசிங்கைப் பிடித்துப்போய், அவளும் அறியாமல் பின் தொடரும் யூங்சே என்ற மாணவரால் காப்பாற்றப்படுகிறாள். அடுத்து வரும் காலங்களில் இருவரும் விரும்பி, காதலிக்கிறார்கள். காலங்கள் உருண்டோட, பீப்பிங் நகரத்துக்கு நகர்ந்து, அவன் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் தன் படிப்பைத் தொடர, இருவரும் இணைந்து வாழ்கிறார்கள்.
அப்பொழுது, சீனாவில் 1930க்குப் பிறகான காலகட்டம். ஏகாதிபத்திய நாடான ஜப்பான், வடக்கு சீனாவையும், வடகிழக்கு சீனாவையும் கைப்பற்றி மேலும் தனது ஆக்கிரமிப்பு எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே போனது. நிலவிய கோமிண்டாங் ஆட்சியும் மக்களுக்கு துரோகமிழைத்தது. சீனமண்ணை ஜப்பான் ஏகாதிபத்தியத்திற்கு விட்டு தரக்கூடிய அரசாக இருந்தது. சீன மக்கள் தங்கள் மண்ணை மீட்க, கம்யூனிஸ்டுகள் தலைமையில், போராடிக் கொண்டிருந்த காலம்.
அநீதிகளை எதிர்க்கும் பண்பும், சுதந்திர மனப்பான்மையும் கொண்ட டாவோசிங்கை இயல்பாகவே புற போரட்டச் சூழல் ஈர்க்கிறது. இந்த காலத்தில் கம்யூனிஸ்டுகள் அறிமுகமாகிறார்கள். அவர்களின் மூலம் மார்க்சிய-லெனினிய புத்தகங்கள் அறிமுகமாகின்றன. சமூகத்தையும், நாட்டின் சமகால நிலைமையையும் புரிந்து கொள்கிறாள்.
அறிமுக காலத்தில் முற்போக்காளனாய் தெரிந்த யூங்சே, இப்பொழுது, தன் படிப்பு, அந்தஸ்தான பதவிக்காக மிகுந்த கவனம், சமகால போராட்டத்திலிருந்து ஒதுங்கி நிற்கும் போக்கு, டாவோசிங்கின் கம்யூனிஸ்டுகளுடான தொடர்பில் வெறுப்பு என இன்னும் சில பிற்போக்குத்தனங்களுடன் வெளிப்படையாய் நடந்து கொள்ள, இனி அவனுடன் வாழ்வது சாத்தியமில்லை என்ற உறுதியான முடிவோடு அவனைப் பிரிகிறாள்.
டாவோசிங் சில போராட்டங்களில் ஈடுபட அரசின் உளவாளிகள் பிடித்து மிரட்ட, சுதாரித்து அங்கிருந்து தப்பித்து, ஒரு கிராமத்திற்கு போய் ஆசிரியப் பணி செய்கிறாள். அங்கும் போராட்டத்தில் ஈடுபட, கைது செய்ய அரசு படைகள் நெருங்க, அங்கிருந்தும் சிலரின் உதவியால் தப்பிக்கிறாள். இப்படி அடுத்தடுத்து வரும் நடைமுறை போராட்டங்களில் நிறைய தெளிகிறாள்.
அச்சமயத்தில் கோமிண்டாங் அரசு கம்யூனிஸ்டு என சந்தேகப்பட்டாலே, சிறையில் தள்ளியது. கொடூர சித்திரவதை செய்தது. காட்டிக்கொடுக்க மறுப்பவர்களை உயிரோடு புதைத்தது. இப்படி பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகளை கொன்று குவித்தது. பலவீனமானவர்களை மிரட்டி, காட்டிக்கொடுக்கும் உளவாளிகளாக மாற்றியது.
டாவோசிங் ஒருமுறை நகரம் வந்தடைந்ததும், அரசு படைகளால் பிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறாள். கடும் சித்ரவதைக்குள்ளாகிறாள். நடமாட முடியாமல் படுத்தப் படுக்கையாகிறாள். அச்சமயத்தில், சிறையில் அடிப்படைத் தேவைகளுக்காக கைதிகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அந்த மோசமான உடல்நிலையிலும், மனநிலையிலும் மன உறுதியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்கிறாள்.
டாவோசிங்கின் பொராட்டக்குணம், மன உறுதி, துணிவு எல்லாவற்றையும் கம்யூனிஸ்டு கட்சி பரிசீலனை செய்து, தன் உறுப்பினராக்குகிறது. மேலும் உற்சாகத்துடன் கட்சி வேலைகளில் ஈடுபடுகிறாள்.
அச்சமயத்தில், கோமிண்டாங் அரசு ஏற்கனவே நடந்த மாணவர் போராட்டங்களை ஒடுக்க கையாண்ட கடும் அடக்குமுறையால் மாணவர் அமைப்புகள் மந்த நிலையில் இயங்குகின்றன. கட்சி முடிவு செய்து, மாணவர்களிடையே வேலை செய்ய அனுப்புகிறது.
ட்ராஸ்கியவதிகள், கோமிண்டாங் விசுவாசிகள், பிற்போக்குவாதிகடையே கருத்து ரீதியாக மோதி, சில ஆதாரங்களை காட்டி அம்பலபடுத்தி, கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பு உற்சாகத்துடன் முன்னேறுகிறது.
இறுதியில், ஒரு ஆர்ப்பாட்டத்தை மாணவர் அமைப்பு பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்கிறது. தூக்கமில்லாமல் இரவு பகலாக டாவோசிங்கும், மாணவர்களும் வேலைகள் செய்கிறார்கள்.
திட்டமிட்டப்படி, வெற்றிகரமாக ஊர்வலம் தொடங்கி,
"என் தாய்நாட்டு மக்களே, அணிதிரட்டுங்கள்! ஆயுதமேந்துங்கள்!
தேசத்தைக் காக்க கிளர்ந்தெழுங்கள்!"
என்ற விண்ணை எட்டும் முழக்கங்கள் மீண்டும் மீண்டும் கிளர்ச்சியுடன் ஒலித்தன. தொழிலாளர்களும், இளைஞர்களும், அறிவுஜீவிகளும் இணைந்து கொள்ள, கோமிண்டாங் படைகள் கொடூரமாய் தாக்கி, தடுக்க முயன்று திணறின. டாவோசிங் அந்த மக்கள் திரளில் ஒரு போராளியாய் எதிரி படைகளோடு போராடுவதில் முனைப்பாய் இருந்தாள். தடைகளை எல்லாம் கடந்து, மேலும், மேலும் அந்த தேசபக்த படை முன்னேறிக்கொண்டே இருந்தது.
போராட்டமே மகிழ்ச்சி என்றார் மார்க்ஸ். இங்கு போராட்டத்தை இளமையின் கீதமாக அந்த மாணவர்கள் இசைத்தார்கள். வரலாற்றில் மக்கள் சீனா மலர்வதற்கான துவக்கமாக அந்த கீதம் விடுதலையின் கீதமாக காற்றில் கலந்தது.
Subscribe to:
Posts (Atom)