March 22, 2010
"இன்று நமக்கு அஸ்திவாரக் கற்கள்தான் தேவை!" - பகத்சிங்!
23/03/1931- பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தோழர்கள் தூக்கிலிட்ட நாள் - அவர்களின் நினைவாக!
***
"முதலிலிருந்தே ஜெயதேவ் என்னைக் காட்டிலும் உடல் வலிமை பெற்றவர். ஆபத்துகளை எதிர்கொள்வதென்பது அவருக்கு மிகச் சாதாரண விஷயம்! அடிதடிச் சண்டைக்கு அவர் எப்போதுமே முன்னே நிற்பார். ஜெயதேவின் இச்சிறப்புக்களைக் கண்டே பகத்சிங், பிஸ்மில்லை விடுவிக்கும் 'ஆக்சனுக்கு'(Action) ஜெயதேவை அழைத்துச் செல்ல வேண்டுமென்று முடிவு செய்தார். ஒரு நாள் மத்தியானம் பகத்சிங் தன் முடிவைத் தெரிவித்தபோது, என் பலவீனமான உடலை வெறுத்தேன். கட்சியின் பணி செய்யத் தகுதியில்லாதவன் என நான் கருதப்பட்டதற்காக மிகவும் வருந்தினேன். அதனால் சற்று நேரமே உட்கார்ந்துவிட்டு தூக்கம் வருகிறதென்று சாக்குக் கூறி ஒரு பக்கமாகப் படுத்துக்கொண்டுவிட்டேன். நான் உறங்கவில்லை என்பதை பகத்சிங் அறிவார். அவர் கொஞ்ச நேரம் பக்கத்திலிருந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்துவிட்டு, என் தோளை மெல்ல உலுக்கி, "சிவா" என்று கூப்பிட்டார்.
"என்ன?" நான் அவர் பக்கம் திரும்பிக் கேட்டேன்.
"ஒரு விஷயம் கேட்கவா?"
"கேளேன்!"
ஒரு நபரின் பெயர் பெரிதா? கட்சியின் வேலை பெரிதா?"
"கட்சி வேலை தான் பெரிது"
"கட்சி வேலை தடங்கலின்றி நடந்து கொண்டே இருக்க வேண்டும். நாம் கைக்கொள்ளும் "ஆக்சன்'கள் எல்லம் வெற்றியடைந்து கொண்டிருக்க வேண்டும். நம்மைப் பற்றிய செய்தி நாட்டு மக்களுக்குத் தடையின்றிக் கிடைத்துக்கொண்டிருக்க வேண்டும். இந்த சுதந்திரப் போராட்டத்திலே நாம் ஒவ்வொரு திருப்பத்திலும் வெற்றி பெற்றுக்கொண்டிருக்க வேண்டுமல்லவா? இதற்கான முதல் நிபந்தனை என்ன தெரியுமா?"
"வலிமையாகவும், விரிவாகவும் மக்களைத் திரட்டுவதுதான்!"
"மக்களைத் திரட்டுவதும், பிரச்சாரமும் முக்கியம். நாட்டு மக்கள் நமது துணிவையும், செயல்களையும் பாராட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் நம்முடன் நேரடித் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். நாமும் மக்களுக்கு இதுவரை நாம் குறிப்பிடும் சுதந்திரம் எவ்வாறு இருக்கப்போகிறது, வெள்ளையர்கள் வெளியேறிவிட்ட பிறகு ஏற்பட போகும் நமது அரசு எப்படி இருக்கும் என்கிற விஷயங்களை விளக்கிக் கூறவில்லை. நாம் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவைத் திரட்டி நம்முடைய லட்சியங்களை மக்கள் மத்தியிலே கொண்டு செல்லவேண்டும். காரணம், பொதுமக்களின் ஆதரவைப் பெறாமல் நாம் இதுவரை செய்து வந்ததைப் போல, வெள்ளை அதிகாரிகளையும், அவர்களின் ஏஜெண்டுகளையும், கொன்று குவிப்பதிலேயே இனியும் காலத்தைக் கடத்த முடியாது. நாம் இதுவரை மக்களைத் திரட்டுவதையும், பிரச்சாரத்தையும் அலட்சியப்படுத்தி "ஆக்சன்'களுக்கே முக்கியத்துவம் அளித்து வந்தோம். இச்செயல்முறையை நாம் விட்டுவிட வேண்டும். நான் உன்னையும், விஜயையும் மக்களைத் திரட்டவும், பிரச்சாரத்தை நிர்வகிக்கவும் விட்டுச்செல்ல விரும்புகிறேன்" என்று கூறி பகத்சிங் சற்று நிறுத்தி,
"நாமெல்லாம் படை வீரர்கள். படைவீரர்களுக்கு எல்லாவற்றையும் போர்க்களம் தான் விருப்பமானது. அதனாலேயே எல்லோருமே "ஆக்சன்'களுக்குப் போகத்துடிக்கிறார்கள். என்றாலும், நம் இயக்கத்தை முன்னிறுத்தி சிலராவது "ஆக்சன்'கள் மேலுள்ள மோகத்தை விட்டுவிட வேண்டியது தான்; சாதாரணமாக "ஆக்ஷன்'களில் பங்கெடுப்பவர்களையும், தூக்குமேடை ஏறுபவர்களையும் தான், புகழ் தேடி வருகிறது. அவர்கள் நிலை ஒரு பெரிய மாளிகையின் தலைவாசலில் பதிக்கபட்ட வைரம் போன்றது; ஆனால் அஸ்திவாரத்திற்குள் விழுந்து கிடக்கும் ஒரு சாதாரணக் கல்லுக்குள்ள முக்கியத்துவம் அந்த வைரத்திற்கில்லை"....
"வைரங்கள் மாளிகையின் எழிலை அதிகரிக்கலாம், பார்ப்பவர்களை வியப்பிலாழ்த்தலாம். ஆனால், அவை மாளிகையின் அஸ்திவாரம் ஆக முடியாது. பல நூறாண்டுகள் தமது தோள்கள் மேல் சுமந்திருக்கமுடியாது. இதுவரையிலும் நம் இயக்கம் வைரங்களைத் திரட்டியதே தவிர, அஸ்திவாரக் கற்களைச் சேர்த்து வைக்கவே இல்லை. அதனால் தான் நாம் இத்தனை மாபெரும் தியாகங்கள் புரிந்தும் மாளிகையைக் கட்டவும் ஆரம்பிக்கவில்லை. இன்று நமக்கு அஸ்திவாரக் கற்கள்தான் தேவை!"
பகத்சிங் மேலும் தொடர்ந்தார்: "தியாகமும், உயிர்ப்பலியும் இரண்டு விதமானவை. ஒன்று, குண்டடிப்பட்டும், தூக்கிலிடப்பட்டும் மரணத்தைத் தழுவுவது. இதில் கவர்ச்சி அதிகமிருந்தாலும், கஷ்டம் குறைவு தான்! இரண்டாவது, வாழ்க்கை பூராவும் மாளிகையைச் சுமந்து கொண்டிருப்பது. போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது, நமக்கு எதிரான சூழ்நிலையில் நமது தோழர்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டுப் போய்க் கொண்டிருக்கும் போது நாம் ஒரு சில தேறுதல் வார்த்தைகளுக்காகத் தவிக்கிறோம். அப்படிப்பட்ட நேரங்களிலே தட்டுத்தடுமாறாமல் தமது லட்சியப் பாதையை விட்டு செல்லாதவர்கள், மாளிகையின் சுமையால் அசைந்து கொடுக்காதவர்கள், பளுவுக்குப் பயந்து தோள்களைக் கீழே இறக்காதவர்கள், ஒளி மங்கிவிடக்கூடாதென்பதற்காகத் தம்மைத் தாமே எரித்துக்கொள்பவர்கள், தன்மையான பாதையிலே இருள் சூழ்ந்துகொள்ளக்கூடாதென்று தம்மைத் தாமே மெழுகுவர்த்தியைப் போல் கரைத்துக்கொள்பவர்கள், உயிர்த்தியாகம் புரிபவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் இல்லையா?"
- சிவவர்மா
விடுதலைப் பாதையில் பகத்சிங்.... புத்தகத்திலிருந்து... பக் 39 முதல் 41 வரை.
குறிப்பு : "ஆக்சன்" (Action) என்றால்... சிறையிலிருந்து யாரையாவது விடுவிப்பதையும், எந்த அதிகாரியையாவது கொல்வதையும், கொள்ளையடிப்பதையும், போலீசாரை எதிர்த்துப் போராடுவதையும் புரட்சியாளர் மொழியில் ""ஆக்சன்' என்பர்.
March 20, 2010
விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடுகிறது அரசு!
உலகில் பருத்தி உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பருத்தி ஏற்றுமதியிலும் இந்தியாவுக்கு 2-வது இடம். ஆண்டுக்கு 240 லட்சம் பேல்கள் பருத்தி (ஒரு பேல் என்பது 170 கிலோ பருத்திப் பொதி) இந்தியாவில் உற்பத்தியாகிறது. 90 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்படுகிறது. பருத்தியை நம்பி 40 லட்சம் விவசாயக் குடும்பங்கள் வாழ்கின்றன. ஆனால், பருத்தி விவசாயிகளுடன்தான் விளையாடுகிறது மான்சாண்டோ நிறுவனம். இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
மான்சாண்டோ நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு பி.டி. பருத்தி வகையை அறிமுகம் செய்தது. பல்வேறு நோய்களைத் தாங்கி வளரும் என்றும், இதில் மரபீனியிலேயே புழுக்களை அழிக்கும் மூலக்கூறுகள் இருப்பதால் புழுத்தாக்குதல் இருக்காது என்றும் சொல்லி விற்பனை செய்தது. பருத்தி, ஆடைக்குத்தானே பயன்படுகிறது; இதனால் மனிதருக்கு என்ன பாதிப்பு என்று மான்சாண்டோவுக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன. இருந்தாலும்கூட, இந்த பி.டி. பருத்தியில் கிடைக்கும் பருத்திப் பிண்ணாக்கை மட்டுமல்ல, பருத்தி இலையைத் தின்னும் ஆடுகள்கூட இறக்கின்றன. இந்த ஆடுகளின் பால் மனிதருக்குக் கேடு விளைவிக்கும் என்றெல்லாம் கூட இயற்கை விவசாயப் போராளிகள் குரல் கொடுத்து ஓய்ந்துபோனார்கள்.
இப்போது மான்சாண்டோ நிறுவனம் ரொம்ப நியாயஸ்தன் போல ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதாவது, "குஜராத்தில் நடத்திய கள ஆய்வுகளில், இளஞ்சிவப்பு புழுக்களை எதிர்த்து வளரும் சக்தியை பி.டி. பருத்தி விதைகள் இழந்துவிட்டன. இந்தப் புழுக்கள் தங்களுக்குள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டுவிட்டதால் இனிமேல் பி.டி. பருத்தியில் 2-வது ரகத்தை விவசாயிகள் வாங்குவதுதான் நல்லது' என்று யாரும் கேட்காமலேயே அறிக்கை வெளியிட்டுள்ளது.
மான்சாண்டோ இந்த அறிக்கையை நியாயஸ்தன் போல வெளியிட்டாலும் இதன் மூலம் இரண்டு விஷயங்கள் அம்பலப்பட்டு இருக்கின்றன. ஒன்று, புழு, பூச்சித் தாக்குதலைத் தாங்கி வளரும் என்பது வெறும் பொய்தான். இரண்டாவது, இது ஒரு வியாபார உத்தி. காப்புரிமை பெற்ற பி.டி. விதைகளுக்குக் குறிப்பிட்ட காலம்வரைதான் உரிமத்தொகையைக் காட்டி விலை நிர்ணயம் செய்ய முடியும். குறிப்பிட்ட ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னர், அந்த விதைக்கான உரிமத்தொகை பெறும் உரிமை காலாவதியாகிவிடும். ஆகவே, தற்போது புதிய ரகம் என்ற பெயரில் பி.டி.பருத்தியின் இரண்டாவது ரகத்தை மான்சாண்டோ அறிமுகம் செய்கிறது. முதல் ரகம் தகுதியற்றது என்று சொல்வதன் மூலம் விவசாயிகள் அனைவரும் இரண்டாவது ரகத்துக்கு மாறியே ஆக வேண்டும்.
இந்த உத்தி இந்தியாவுக்குப் புதிது. அமெரிக்காவுக்குப் பழையது. உலகில் 90 சதவீத உயிரி-தொழில்நுட்பப் பயிர்களைக் கையாளும் மான்சாண்டோ, அமெரிக்காவில் அறிமுகம் செய்த மரபீனி மாற்றப்பட்ட சோயாபீன் விதைகளுக்கான உரிமத்தொகை பெறும் உரிமை 2014-ல் முடிகிறது. ஆகவே, அங்கேயும் புதிதாகக் காப்புரிமை பெற்றுள்ள இரண்டாம் வகை சோயாபீன் விதைகளைப் பயன்படுத்த விவசாயிகளைத் தூண்டில் போட்டுக்கொண்டிருக்கிறது மான்சாண்டோ.
மத்திய பருத்தி ஆய்வுக் கழகத்துக்கு இதுபற்றி தாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தெரிவித்துவிட்டதாக மான்சாண்டோ நிறுவனத்தின் இந்திய இயக்குநர் கூறியபோதிலும், இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு இதுவரை தகவல் தெரியாது என்பது ஆச்சரியமான ஒன்று. இத்தகைய பி.டி. ரக விதைகளுக்கு அனுமதி அளிப்பதே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான். ஆனால் அவர்களுக்கு மான்சாண்டோ அறிக்கை வெளியிட்டு, பத்திரிகையில் வெளியான பிறகுதான் தகவல் தெரியும் என்றால், நம்ப முடிகிறதா!
வியாபாரத்துக்காக மான்சாண்டோ போன்ற நிறுவனங்கள் இந்தியாவுக்குள் புகுந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எந்தவொரு பி.டி. ரக பயிருக்கும் அனுமதி பெறலாம், திடீரென்று இந்த விதை சரியில்லை; ஆகவே எங்களுடைய அடுத்த தயாரிப்பு விதைகளை வாங்கு என்று சொல்லலாம், விலையை தானே நிர்ணயிக்கலாம் அல்லது தான் விரும்புகிற விலையை நிர்ணயிக்கும்படி மத்திய அரசை வளைக்கலாம்...ஆனால் விவசாயிகள்? தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
பருத்தி உற்பத்தியில் உலகிலேயே இரண்டாம் நிலையில் இருக்கிறோம் என்ற எண்ணமோ பொறுப்போ இல்லாமல் மத்திய அரசு இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களை இந்திய விவசாயிகளிடம் நெருங்கவிடுகிறது. 40 லட்சம் குடும்பங்களின் வாழ்க்கை நாம் மேற்கொள்ளும் முடிவுகளில்தான் இருக்கிறது என்ற பச்சாதாபம்கூட அரசிடம் இல்லை.
மான்சாண்டோ போன்ற நிறுவனங்களின் வியாபாரத்தை தடுத்து நிறுத்தவும் தெம்பில்லை.
இதே நிலைமைதான் பி.டி கத்தரியிலும் ஏற்படும் என்பது நிச்சயம். இப்போது பி.டி மக்காச்சோளத்தை நமது வேளாண் பல்கலைக்கழகத்தில் கள ஆய்வு நடத்தி உற்பத்தி செய்து வருகிறார்கள். இன்னும் 40 உணவுப் பயிர்களுக்கு ஆய்வுகள் நடக்கின்றன.
ஒரு விவசாயி, கிராமப்புறச் சூழலில் கிடைக்கும் காட்டுத்தழை, வீட்டுக்குப்பை, ஆடு மாடுகளின் சாணம் என்று வயலில் போட்டு, தனது மாடுகளைக் கட்டி உழுது, அறுவடை செய்து, அடுத்த சாகுபடிக்கு விதைநெல் எடுத்து வைத்து, மற்றதை விற்றுப் பணம் பார்த்து.... அந்த அமைதியான வாழ்க்கையை விரட்டுகின்றன மான்சாண்டோ நிறுவனங்கள். அதற்குத் துணை போகிறது அரசு.
இன்றைய விவசாயி ரசாயன உரத்துக்காகச் செலவிட வேண்டும். ரசாயன உரம் விற்போர் கொழிப்பார்கள். டிராக்டரையும், அறுவடை இயந்திரங்களையும் நம்பியே வாழவேண்டும். இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் விநியோகஸ்தர்களும் கொழிப்பார்கள். விதைகளுக்கும் மான்சாண்டோவைப் போன்ற நிறுவனங்களையே நம்பியிருக்க வேண்டும். இத்தனையையும் மீறி, மழை பெய்து, விளைந்தால், அதற்கும் நியாயமான விலை கிடைக்காது. விவசாயத்தை அழிப்பதற்கு இதைவிட நல்ல உத்தி இருக்க முடியுமா! இதையெல்லாம் மீறி இந்தியாவில் விவசாயம் நடக்கிறதென்றால், மண்ணை நேசிக்கும் விவசாயிகள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதைத்தவிர வேறென்ன!
விவசாயிகள், குறிப்பாக தமிழக விவசாயிகள், தற்சார்பு தன்மைகொண்ட பாரம்பரிய விவசாயத்துக்கு மாறுவதைத் தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும். இயற்கை வேளாண்மைக் கொள்கையை தமிழக அரசு அறிவித்து, விவசாயிகளுக்கு புதிய பாதையைக் காட்ட வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.
நன்றி : தினமணி தலையங்கம் - 16/03/2010

March 7, 2010
சுதந்திரம் பறிபோகிறது...?
மத்திய அரசு ஏன், எதற்காக இப்படியெல்லாம் நடந்துகொள்கிறது? அப்படி என்னதான் நமது இந்திய அரசுக்கு நிர்பந்தம்? யாருடைய வற்புறுத்தலின் பேரில், யாருடைய நன்மையைக் கருதி இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து வருகிறது?- இதுபோன்ற கேள்விகளை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் எழுப்பியே தீரவேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த சில நாள்களாக நமது அரசின் சில செயல்பாடுகள் மக்களாட்சித் தத்துவத்துக்கும், தனிமனித சுதந்திரத்துக்கும் எதிரானதாக அமைந்திருப்பதை நம்மில் பலர் உணராமல் இருக்கிறோம். அதுமட்டுமல்ல, மிகவும் ரகசியமாக சில உடன்பாடுகள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. இந்தியாவின் வருங்காலத்தையே பாதிக்கும் இந்த உடன்பாடுகளுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தரப்பட்டிருப்பது நம்மிடமிருந்து மூடிமறைக்கப்பட்டிருக்கிறது.
விலைவாசி உயர்வு, நிதிநிலை அறிக்கைகள், இடைத்தேர்தல்கள் என்று அன்றாட அரசியல் நிகழ்வுகளை மட்டுமே மையப்படுத்திச் செயல்படும் நமது எதிர்க்கட்சிகளும் சரி, அவ்வப்போதைய பரபரப்புகளை விலைபேசி, தங்களது வாடிக்கையாளர்களையும் வாசகர்களையும் தேசத்தை எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்னைகளைப் பற்றிச் சிந்திக்கவே அனுமதிக்காமல் செயல்படும் ஊடகங்களும் சரி, மத்திய அரசின் முடிவுகளால் கேள்விக்குறியாகப்போகும் இந்திய விவசாயிகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலையே இல்லாமல் இருப்பது அதைவிட அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த வாரம் அமெரிக்காவுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை வெளியில் தெரியாதவண்ணம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அடுத்த மாதம் கையொப்பமிடப்பட இருக்கும் விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி விவசாய விரிவாக்கத்தில் தனியார்மயத்தைப் புகுத்துவதும் இந்திய வேளாண்மையில் அமெரிக்க விவசாயப் பன்னாட்டு நிறுவனங்கள் பங்குபெறுவதும் அனுமதிக்கப்பட இருக்கிறது.
அமெரிக்காவில் விவசாயம் என்பது வியாபாரம். இந்தியாவிலோ விவசாயம் என்பது வாழ்வாதாரம். இந்திய விவசாயி வியாபாரநோக்கில் தனது வயலில் உழுது பயிரிட்டு சாகுபடி செய்வதில்லை. தனது வயிற்றுப்பிழைப்புக்காக, வாழ்வாதாரமாக விவசாயத்தில்
ஈடுபடுகிறார். இவரது விவசாயம் லாபநோக்கில் நடத்தப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி இந்த விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி லாபகரமாக விவசாயம் செய்ய வழிவகுப்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.
மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாகிவிட்ட நிலங்களில் பயிரிடுவதை யார் தடுக்க முடியும்? இந்திய-அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் கர்க்கில், மான்சாண்டோ போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்க வழிகோலப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் இவர்கள் உறுப்பினர்களானால் நேரடியாகவே அரசின் மீது தங்களது செல்வாக்கைச் செலுத்துவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
இத்துடன் முடிந்துவிட்டது என்று நினைத்துவிடாதீர்கள். ஒரு சர்வாதிகார ஆட்சியில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு ராட்சத சட்டத்தையும் இந்தப் பன்னாட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் நமது ஆட்சியாளர்களின் உதவியுடன் நம்மீது திணிக்க இருக்கிறார்கள். உயிரி தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம் ஒன்றை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நம்மை விடுங்கள். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர் கவலைப்படுகிறார்கள்?
முறையான சாட்சியம் அல்லது விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில் அல்லாமல் மரபணு மாற்ற விதைகள் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பற்றித் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது இந்தச் சட்டம் பாயும். இந்தச் சட்டமுன்வரைவின் 13(63) -வது பிரிவின்படி, புதிய அறிமுகங்களுக்கு எதிராகத் தக்க ஆதாரம் இல்லாமல் பிரசாரம் செய்பவர்கள் குறைந்தது 6 மாதம் முதல் ஓராண்டு சிறைத்தண்டனை பெறுவதுடன், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவார்கள்.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித்தொழில்நுட்பவியல் துறையினரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்ட முன்வரைவின் 27(1) பிரிவின்படி, மரபணு மாற்றப்பட்ட பொருள்களின் ஆராய்ச்சி, அனுமதி போன்ற விஷயங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பார்வைக்கு உள்படுத்தப்படுவது மறுக்கப்படுகிறது. மேலும், மரபணு தொடர்பாக எந்தவொரு மாநிலத்தின் முடிவையும் நிராகரிக்கும் உரிமை உயிரித் தொழில்நுட்பவியல் துறையால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்கு இருக்கும் என்கிறது இந்தச் சட்ட முன்வரைவு.
இப்போதல்லவா தெரிகிறது ஏன் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விஷயத்தில் பின்வாங்கினார் என்பதும், தாற்காலிகமாகக் கைவிடப்பட்டது என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தார் என்பதும். இப்போதல்லவா தெரிகிறது, பிரதமர் மன்மோகன் சிங் ஏன் மரபணு மாற்றப்பட்ட பொருள்கள் மீதான முடிவு தாற்காலிகமானதுதான் என்று அறிவித்தார் என்பது.
இந்த ஆட்சியும் அரசும் யாருக்காக நடைபெறுகிறது? இவர்கள் இந்தியாவை என்னதான் செய்யக் கருதுகிறார்கள்? தனிமனித உரிமைக்கு, எதிர்ப்புக் குரல் எழுப்புவதற்கு இந்தியக் குடிமகனுக்கு உரிமை மறுக்கப்படும் அளவுக்கு நமது ஆட்சியாளர்களின் மரபணு மாற்றப்பட்ட அவலநிலையைக் கண்டு நமது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒருவருக்குக்கூட எதிர்ப்புக் குரல் எழுப்பத் துணிவில்லையா, இல்லை இவர்களும் விலைபேசப்பட்டு விட்டனரா?
பாரதியின் பாஞ்சாலி சபதம்தான் நினைவுக்கு வருகிறது. ""கோயில்பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல்போலும்... வாயில் காத்து நிற்போர் வீட்டை வைத்து இழத்தல்போலும்...''
சீச்சீ... சிறியர் செய்கை!
-நன்றி : தினமணி ... 27/02/2010 தலையங்கம்.

Subscribe to:
Posts (Atom)