> குருத்து: July 2010

July 30, 2010

பட்டினியில் வதங்கும் மக்களும்! வீணாய் போகும் உணவும்!


இந்திய உணவு கழகம் விவசாயிகளிடமிருந்து அரிசி, நெல், மக்காசோளம் என பல விளைபொருட்களை கொள்முதல் செய்கிறது. ஆனால் அதை முறையாக பாதுகாப்பதற்கு குடவுன்கள் இல்லாததால், வெயிலிலும், மழையிலும் காயவிட்டு விடுகிறார்கள். இதனால் ஏற்படுகிற இழப்பு எவ்வளவு தெரியுமா? வருடத்திற்கு ரூ. 50000 கோடிக்கும் மேலே! அளவில் மதிப்பிட வேண்டுமென்றால், கொள்முதல் செய்யும் பொருட்களில் 20% வீணாய் போகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அறியும் சட்டம் மூலம் உணவு இந்திய உணவு கழகம் சொன்ன பதில் என்ன?

1997 முதல் 2007 வரையிலான கடந்த 10 ஆண்டுகளில் வீணாகிப்போன பொருட்களின் மதிப்பு - 10 லட்சம் டன். அதை அப்புறப்ப்டுத்த சில கோடிகள் செலவானது.

10 லட்சம் டன் உணவை கொண்டு, 1 கோடி இந்தியருக்கு 1 வருடத்திற்கு வயிறார சாப்பாடு போடலாம் என்கிறார்கள்.


இப்படி வீணாய் போவதைப் பற்றி நடந்த வழக்கில், சமீபத்தில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து, சில கேள்விகளுக்கு அரசிடம் பதிலளிக்க சொல்லியிருக்கிறார்கள்.

"மக்கள் பசியால் வாடும் பொழுது, ஒரு கோதுமையை வீணடித்தால் கூட குற்றம் தான். பாதுகாப்பதற்கு குடவுன் இல்லையென்றால், குறைந்தபட்சம் தார்ப்பாலின் போட்டு மூட வேண்டியது தானே! உங்களால் பாதுகாக்க முடியவில்லை யென்றால், பசியால் வாடும் மக்களுக்கு சாப்பிட கொடுங்கள்"

அதிகாரிகளுக்கும், அரசுக்கும் எத்தனை கேள்விகள் கேட்டாலும் உரைக்காது. நாமும் பல காலம் பார்த்து கொண்டு தானே இருக்கிறோம்.

பசியால் வாடும் மக்கள் உணவு கிடங்குக்குள் உள்ளே புகுந்து, உணவை கைப்பற்றுவது தான் ஒரே தீர்வு. அந்த நல்ல நாள் எந்த நாளோ?!


தொடர்புடைய சுட்டிகள் :

http://www.deccanherald.com/content/84222/food-grains-rot-fci-godowns.html

http://sikhsangat.org/2010/07/rs-800-cr-wheat-goes-waste-annually-why-not-let-farmers-exports-their-crops-in-a-democratic-way/

வயிற்றில் அடிக்கிறார்களே! - தினமணி தலையங்கம்

July 26, 2010

நலிவடையும் நகைத் தொழிலாளர்கள்!


முன்குறிப்பு : "செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை" என்கிற விளம்பரத்தைப் பார்த்தால், எப்பொழுதுமே எரிச்சல் வருகிறது. செய்வதற்கு ஏன் கூலி இல்லை? இதையே காரணம் காட்டி, நகை செய்யும் தொழிலாளர்களின் கூலியை குறைத்து தருகிறார்கள் என்று முன்பு ஒருமுறை ஒரு செய்தி கண்ணில்பட்டது. அதற்கு பிறகு, செய்திகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நகைக்கடை தொழிலாளர்கள் சிலர் தற்கொலை செய்தி படிக்கும் பொழுது இது தொடர்பாக தரவுகள் தேடி எழுத வேண்டும் என நினைத்ததுண்டு. தினமணியில் வந்த இந்த கட்டுரை நகைக்கடை தொழிலில் உள்ள சில பிரச்சனைகளை தொட்டுக்காட்டுகிறது. படியுங்கள். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

*****

நகைத் தொழிலை மற்ற தொழிலைப்போல சாதாரணமாகக் கருதிவிட முடியாது.​ அதிக நுட்பமும்,​​ வேலைப்பாடும் மிகுந்த இத் தொழில்,​​ தமிழகத்தில் பாரம்பரியமிக்க தொழிலாகவும்,​​கலையின் சிகரமாகவும் கருதப்படுகிறது.​ தமிழகத்தில் நகைத் தொழிலில் சுமார் 10 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.​ இவர்கள் நகைத் தொழிலைப் பாரம்பரியமாகச் செய்து வருபவர்களே.​ கலை சார்ந்தும்,​​ கலாசாரம் சார்ந்தும் இருக்கும் இத் தொழில்,​​ இப்போது அழிவை நோக்கி வேகமாகப் பயணிக்கிறது.

​ உலக அரங்கில் இந்திய நாட்டு நகைகளுக்கு அதிக மதிப்பும்,​​ நல்ல வரவேற்பும் இருக்கிறது.​ ஆனால்,​​ அதை உருவாக்கும் தொழிலாளர்களுக்கு மதிப்பும்,​​ வரவேற்பும் அண்மைக்காலமாகக் குறைந்து வருகிறது.​ நகைத் தொழிலில் பல ஆயிரம் கோடி பணம் புழக்கத்தில் இருந்தாலும்,​​ இந்தத் தொழில் ஈடுபடுகிறவர்கள் வறுமையிலேயே இருக்கின்றனர்.

​ நகைத் தொழிலாளர்கள் வாழ்க்கையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வளம்கூட இப்போது இல்லை.​ இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.​ முக்கியமாக,​​ ஆன்-லைன் வர்த்தகமும்,​​ இயந்திரமயமாக்கலும் இத் தொழிலில் ஈடுபடுகிறவர்களை வறுமைக்கு வேகமாக இழுத்துச் செல்கிறது.

​ பல சாகசங்களைச் செய்து ஒருவர் தொழிலை நிமிரச் செய்தாலும்,​​ ஒரு காலகட்டத்தில் அவர் பெரும் நஷ்டத்திலும்,​​ கடனிலும் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுவதாக அத் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் கூறுகிறார்கள்.

​ கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கம் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து ​ வருவதால்,​​ சிறுதொழிலாகச் செய்த பலர், வேறு தொழிலுக்குச் செல்கின்றனர்.​ இன்னும் ​ சிலர் வேறுவழியின்றி இத் தொழிலைச் செய்து வருகின்றனர்.​ விலை உயர்வால் சாதாரண மக்களுக்குத் தங்கம் கனவாகி வருவதால்,​​ இவர்களுக்கு சாதாரணமாகக் கிடைக்கும் வேலைகள் குறைந்துள்ளன.​ இதன் காரணமாக முகூர்த்தம்,​​ பண்டிகை காலங்கள் தவிர்த்து மற்ற காலங்களில் தொழிலாளர்கள் வேலையின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

​ 10 ஆண்டுகளுக்கு முன்புவரை இத் தொழிலில் ஒரு சில பெரிய நகைக் கடைகள் ​ மட்டுமே இருந்தன.​ ஆனால் இன்று அப்படியில்லை.​ தொழில் துறையில் பெரிய அளவில் கால்பதித்திருக்கும் தனியார் நிறுவனங்கள்,​​ நகை தயாரிப்புத் தொழிலிலும் போட்டிபோட்டு இறங்கி வருகின்றன.​ இந் நிறுவனங்களிடம் எந்தவிதத்திலும் போட்டியிட முடியாமல் சிறிய அளவில் நகைப் பட்டறை வைத்து,​​ தொழில் செய்து வந்தவர்கள் விழிபிதுங்கிய நிலையில் உள்ளனர்.

​ இது ஒருவகை நெருக்கடி என்றால்,​​ ஆன்-லைன் வர்த்தகம் மற்றொரு வகை நெருக்கடியைக் கொடுக்கிறது.​ தங்க வர்த்தகம் ஆன்-லைன் வர்த்தகத்தில் சேரும்வரை பண்டிகைக் காலங்கள்,​​ முகூர்த்தங்கள் போன்ற நாள்களில் மட்டுமே தங்கம் விலை உயர்ந்து வந்தது.​ ஆனால்,​​ இப்போது ஆன்-லைன் வர்த்தகத்தால் காலையில் ஒரு விலை,​​ மாலையில் ஒரு விலை என தங்கத்தின் விலை சூதாட்டம் போன்று நிலையில்லாமல் இருக்கிறது.​ பெரிய வியாபாரிகளுக்கு இந்த விலை உயர்வும்,​​ குறைவும் பொழுதுபோக்காக மாறியுள்ள நிலையில்,​​ நகைத் தொழில் மூலம் வாழ்க்கை நடத்திவந்த தொழிலாளர்கள் தெருவுக்கு வந்துள்ளனர்.

​ சொந்தமாக நகைப் பட்டறை வைத்து முதலாளியாக இருந்த பலர்,​​ இப்போது பெரிய நகைக் கடைகளில் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர்.​ மேலும்,​​ நகைத் தொழிலாளர்கள் பரம்பரையாகச் செய்து வந்த தங்களது தொழிலுக்கு வேறு வழியின்றி விடை கொடுத்து,​​ இன்று கட்டடத் தொழிலாளி,​​ ஹோட்டல் ஊழியர் என வேறு தொழிலுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது.

​ இத் தொழிலில் இப்போது இளைய தலைமுறையினர் குறைவான அளவே காணப்படுகின்றனர்.​ இதனால் நகைத் தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.​ இத் தொழிலின் பெரும் பகுதி,​​ இப்போது பெரிய வணிக நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதால்,​​ நகைத் தொழிலாளர்கள் வாழ்க்கையும் அந் நிறுவனங்களை மையமாக வைத்தே சுழலத் தொடங்கியுள்ளது.

​ இதில் சில நகைத் தொழிலாளர்கள் கந்துவட்டிக்குக் கடன் வாங்கித் தொழில் செய்து,​​ கந்து வட்டியிலேயே தங்களது வாழ்நாள் சம்பாத்தியம் முழுமையையும் இழந்து வரும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.​ சிலர் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவமும் அண்மைக்காலமாக அதிகமாக நடைபெறுகின்றன.

​ நகைத் தொழிலில் இனிமேல் நல்ல எதிர்காலத்துக்கு வாய்ப்பு இல்லை எனக் கருதப்படுவதால்,​​ இத் தொழிலுக்கு முன்புபோல இளைய தலைமுறையினர் வருவது இல்லை.

இன்னும் சில ஆண்டுகளில்,​​ இளைய தலைமுறையினரே இத் தொழிலில் ஈடுபடாத சூழ்நிலை ஏற்படலாம்.

பெரிய வணிக நிறுவனங்கள் நகையைத் தயாரிப்பது,​​ விற்பது என முழுமையாக வாணிப நோக்கில் செயல்படுவதால்,​​ நகைத் தொழிலில் கலாசாரம் சார்ந்த விஷயங்கள் மறைந்து வருகின்றன.​

​ இத் தொழிலில் ஈடுபடுகிறவர்களை காப்பாற்ற,​​ தங்க விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்.​ ​ ஏற்கெனவே இருந்த தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

பொற்கொல்லர் நலவாரியத்தின் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த வேண்டும்.​ சிறு நகைத் தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்.​ இந் நடவடிக்கைகளை எடுத்தால்,​​ ஓரளவு இத் தொழிலில் ஈடுபடுகிறவர்களைப்​ பாது​காக்​க​லாம்.

​ அறிவியலின் வளர்ச்சியை வரவேற்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருந்தாலும்,​​ நமது கலையையும்,​​ கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமையும் நமக்கு உண்டு.​ நகைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு அவர்களோடு நின்றுவிடும் எனக் கருதிவிட முடியாது.​ அவர்கள் இன்று பாதிக்கப்படுகிறார்கள் என்றால்,​​ அந்தப் பாதிப்பு நாளை மற்ற தொழிலுக்கு வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.


- நன்றி : கே. வாசுதேவன், தினமணி, 23/07/2010

July 21, 2010

ஏழாம் நாளிலும் மார்ச்சுவரியில் காத்திருந்த ஜிதேந்தர்!


அரசு மருத்துவமனை. மனிதர்களின் அழுகுரல்களால் மார்ச்சுவரி சூழப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்த பொழுது, உடலில் புதிதான அதிர்வுகள் எழுவதை உணர்ந்தேன். இப்படியே திரும்பி போய்விடலாமா என நினைத்தேன். பார்த்தே ஆக வேண்டும்.

அருகே நெருங்கிய போழுது, அந்த இளம் உடல் குளிரில் நன்றாக விரைத்து கிடந்தது. முதல்நாள் பார்த்ததை விட, இன்று வித்தியாசமானதாக இருந்தது. உறவினர்கள் யாரும் வராததாலும், உரிய ஆவணங்கள் தரப்படாததாலும்.... ஆறாம் நாளிலும் மார்ச்சுவரிலேயே இருந்தது.

****

வழக்கமான வேலைகளில் மூழ்கியிருந்தேன். நுண்பகல் வேளை. என் முதலாளியிடமிருந்து அந்த அவசர அழைப்பு வந்தது. செய்தி சொன்னதும், அதிர்ச்சியாய் இருந்தது. நான் இந்த நிறுவனத்தில் வேலை சேர்ந்ததில் இருந்து, பல தொழிலாளர்களின் கைவிரல்கள், கை துண்டித்திருப்பதை எல்லாம் பார்த்திருக்கிறேன். கண் போனதை பார்த்திருக்கிறேன். முதன்முறையாக உயிர் போயிருக்கிறது. உடனே அந்த நிறுவனத்திற்கு போய் ஆக வேண்டிய வேலைகளை போய் பாருங்கள்! என்றார். உடனடியாக விரைந்தேன்.

****

அந்த தொழிற்சாலையில் இருபது, முப்பது பேர் குழுமியிருந்தார்கள். எல்லோர் முகத்திலும் இறுக்கம் பரவிகிடந்தது. கூட்டம் விலக்கி உள்ளே நுழைந்து பார்த்தேன். இருபது வயது இளைஞன் ஒருவனை அவசரம், அவசரமாக காரில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். மின்சார ஷாக்கினால், உடல் நிறம் மாறியிருந்தது. உடலில் உயிரே இல்லை. இருப்பினும் மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்கள். அவர் ஏற்கனவே இறந்து போனதாக மருத்துவர் உறுதிப்படுத்திய தகவல் இருபது நிமிடத்தில் வந்தது.

அந்த தொழிற்சாலை துவங்கி 7 ஆண்டுகள் தான் ஆகியிருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த வேலை செய்து கொண்டிருந்த மூவர் பல இரும்பு தகடுகள் சரிந்து விழுந்து இறந்து போனார்கள். இப்பொழுது மீண்டும் ஒரு விபத்து. அந்த தொழிற்சாலை எனக்கு இப்பொழுது கொலைக்களம் போல காட்சியளித்தது.

****

இந்த விபத்து குறித்து... நிறுவனங்களுக்காக இருக்ககூடிய அரசு தரப்பு ஆய்வாளர் அறிக்கையை பின்வருமாறு எழுதினார்.

"எந்தவித சுயபாதுகாப்பு சாதனமும் (Hand Gloves, Safety shoes and Googles) அணியாமலும், தகுந்த மேற்பார்வையாளரின் மேற்பார்வை இன்றியும் ஈடுபட்டதால்...இந்த மரண விபத்து ஏற்பட்டது. இந்த தொழிலாளி வட இந்தியாவை சேர்ந்தவர். போதிய தமிழறிவு இல்லாதவர். இது போன்ற தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் பொழுது, அவருக்கு போதிய தமிழறிவு
மற்றும் தொழிற்பயிற்சி இல்லாத காரணத்தினால் இம்மரண விபத்து ஏற்பட்டது. தற்காலிக மின் இணைப்பு பெற்று பணி மேற்கொள்ளும் காலங்களில் மின் இணைப்பைச் சார்ந்த ஸ்விட்ச் போர்டு, பிளக் மற்றும் ஒயர் இவை யாவும் ISO சான்றிதழ் உள்ளனவா, சரியாக பொருத்தப்பட்டுள்ளவையா தகுந்த installation செய்யப்பட்டுள்ளதா என்று அறியாமல் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இம்மரண விபத்து ஏற்பட்டுள்ளது. இம்மரண விபத்து மேற்காணும் பிரிவு 41வது விதி 61 & F யின் படி கடும் முரண்பாடாகும்"

*****

இறந்தவரின் பெயர் : ஜிதேந்தர் மோட் வயது : 20

முகவரி : , சுனேலா, இராம்நகர், கட்ராம்பூர் போஸ்ட், தியேரியா ஜில்லா, உத்திரப்பிரதேசம்.

***

ஜிதேந்தரை சேர்த்துவிட்ட ஒப்பந்தக்காரர் மூலமாக ஊருக்கு தகவல் அனுப்பியும், உடனடியாக பதில் ஏதும் இல்லை. இறந்தவருக்கு அப்பா இல்லை. மூன்று அண்ணன்கள். மூவரும் ஹரியானா, குஜராத், டெல்லி என தொலைதூரங்களில் வேலை செய்கின்றனர். தொடர்பு கொள்ளவே இரண்டு நாள்களாகிவிட்டது என பதில் சொன்னார்கள். ஊரில் இருப்பதோ, அம்மாவும், அண்ணனின் குடும்பங்கள் மட்டுமே.

****

தொடர்ச்சியாக முயற்சி செய்து, ஐந்தாம் நாள் உரிய ஆவணங்கள் தபாலில் வந்து சேர்ந்தன. அந்த குடும்ப ரேசன் அட்டையை பார்த்ததும்... மனம் கனத்துப் போனது






கமலா தேவி - தாயார் - வயது 60

சந்தோஷ்குமார் - மகன் - வய்து 30
மீனாகுமாரரி - மருமகள் - வ்யது 24
பிகாஸ் - மகன் - வயது 7
பிஜி - மகன் - வயது 3

ராஜ்குமார் - மகன் - வயது 25
தேவி - மருமகள் - வயது 22
நரேஸ் - மகன் - வயது 3
சமியா - மகள் - வய்து 1

தர்மேந்திரர் குமார் - மகன் - வயது 23
அலோகா - மருமகள் - வயது 21
ஆதித்தா - மகன் - வயது 2
மாதுரி - மகள் - வயது 1

ஜிதேந்தர் மோட் - மகன் வயது - 20

அல்கா - மகள் - வயது 15
கிரண் - மகள் - வயது - 12

மூன்று அண்ணன்கள், அண்ணன்களின் குடும்பங்கள், இரு தங்கைகள் என சொந்தங்கள் சூழ, குடும்ப அட்டையில் மத்தியில் இருந்தார். 15பேர் கொண்ட பெரிய குடும்பம் இருந்தும், ஆறு நாள் ஆகியும் ஒருவர் கூட வந்து சேரவில்லை. அனாதையாக மார்ச்சுவரியில் ஜிதேந்தர் மார்ச்சுவரியில் கிடக்கிறார்.

****

ஏழாம் நாள். மூத்த அண்ணன் மட்டும் டெல்லியிலிருந்து, ரயிலில் வந்து சேர்ந்தார். அப்படியே கையோடு அழைத்துப் போய், உடலைப் பெற்று, மின் தகனத்தில் எரித்தார்கள். இரவு 9 மணி அளவில், அலுவலகம் வந்து சேர்ந்தார்.

கொஞ்ச நேரம் அமைதி. ஏதும் பேச்சில்லை. பிறகு பேச ஆரம்பித்தார். "எவ்வளவு தருகிறீர்கள்?" ஒரு தொகை சொல்லப்பட்டு, அது கொஞ்சம் அதிகப்படுத்தப்பட்டு உடனடியாக தரப்பட்டது. பணம் தந்ததற்காகவும், இனி வேறும் ஏதும் கேட்கமாட்டோம் என உறுதியளித்து எழுதப்பட்டிந்த பத்திரத்தில் கையெழுத்திட்டார்.

ஜிதேந்தர் சம்பந்தமான கோப்பு மூடப்பட்டுவிட்டது.

***

சில நாட்கள் கழித்து... வேறு ஒரு தேவைக்காக அந்த கோப்பை திறந்து பார்த்த பொழுது... சில குறிப்புகள் பென்சிலால் ஒரு தாளில் குறிக்கப்பட்டிருந்தன. அவை :

Police cons. 2500
Police Diesel 1000
Po. writter 1500
Po. photo 500
Po. stationery 200

Po. Inspector 40***
Factory Inspector 50***

என பட்டியல் நீண்டு கொண்டு சென்றது.

****

பின்குறிப்பு : இந்த மரணம் நிகழ்ந்து... சில மாதங்களாகிவிட்டன. ஜிதேந்தர் குறித்த நினைவுகளிலிருந்து. என்னால் இன்றும் மீள முடியவில்லை. படித்த பிறகு, உங்களையும் பல மாதங்கள் நிச்சயம் தொந்தரவு செய்வான்.

July 18, 2010

இயல்பாய் நடந்த திருமணம்!

முன்குறிப்பு : சமீபத்தில் நடந்த ஒரு தோழரின் எளிமையான "வாழ்க்கைத்துணை ஏற்பு விழா"வில் கலந்து கொண்டேன். அந்த திருமணத்தைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். அதற்குள் தோழரின் அலுவலக நண்பரே அதைப் பற்றி எழுதிவிட்டார். உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள். அவருக்கு நமது நன்றிகள்.

****

கடந்த வாரம், எனது அலுவலகத் தோழனின் திருமணத்தில் கலந்துகொண்டது முதலே அதுகுறித்து ஒரு பதிவு போட வேண்டுமென மனது தூண்டிக்கொண்டே இருந்தது! (அதுக்கு வேற வேலை என்ன!). இன்றுதான் அதற்கான நேரம் வாய்த்தது.

அப்படியென்ன விஷேசம் அந்தத் திருமணத்தில் எனக் கேட்கத் தோன்றும். ஒரு விஷேசமும் இல்லையென்பதே அதில் விஷேசம்! ஆம். வாசலில் மணமக்களின் பெயர் இருந்தது, ஆனால், அதில் மணமகனின் பெயர் முதலாவதாக இல்லை! வரவேற்க வரவேற்பாளர்கள் இருந்தார்கள், ஆனால், மேளதாளங்கள் இல்லை! அருந்த குளிர்பானங்கள் கொடுத்தார்கள், ஆனால், அதில் கோக், பெப்சி இல்லை! மேடையில் புகைப்படக்காரர்கள் இருந்தார்கள், ஆனால், புரோகிதரோ, ஓமகுண்டப் புகையோ இல்லை! மணமக்கள் புத்தாடையில் வீற்றிருந்தார்கள், ஆனால், அதில் பகட்டோ, மினுமினுப்போ துளியும் இல்லை! மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டார்கள், ஆனால், தாலி கட்டவில்லை! அன்பளிப்பு வாங்கினார்கள், ஆனால், அதில் புத்தகங்களைத் தவிர வேறெதுவும் இல்லை!

அப்புறம், சொல்லிக்கிறமாதிரி அதில் என்னதான் இருந்தது? காதல் இருந்தது, பெற்றோரின் சம்மதமும் கலந்திருந்தது. அதற்குச் சாட்சியாக மணமக்களைப் பெற்றவர்களும் மணமக்களோடு மேடையில் அமர்ந்திருந்தார்கள். ஜாதி கடந்து, மதம் கடந்து, பெரியாரின் சுயமரியாதைப் பாதையிலே அத்திருமணம் நடைபெற்றது. மணமக்களை வாழ்த்திப்பேசிய மணமகனின் தாத்தா வாரியாரை நினைவுபடுத்தும் விதமாக நெற்றி நிறைந்த திருநீற்றுடன் இருந்தார். தனது பேரனின் திருமணத்தைப் பார்த்து, பரவசத்துடன் வாழ்த்துரை வழங்கினார். அவர் பேரனுக்கு அளித்த அன்பளிப்பு, காந்தியின் சுயசரிதைப் புத்தகம்!

பெரியவர்கள் வாழ்த்துரையுடன், மணமக்களின் உறுதிமொழியுடன், சமுதாயப் பெரியவர் தாலி எடுத்துக் கொடுத்து நிறைவுபெறும் தற்கால அரைகுறைச் சீர்திருத்தத் திருமணங்களைப் போலல்லாமல் முழுமையான சீர்திருத்தத் திருமணமாக நடைபெற்றது. ஆம், இத்திருமண விழாவில் மணமக்களும் ஏற்புரை நிகழ்த்தினார்கள். ஒவ்வொரு நிகழ்விலும், மணமகளுக்கு முன்னுரிமை தரப்பட்டது.

அரைகுறை சீர்திருத்தத் திருமணங்களில் புரோகிதர், ஓமகுண்டச் சடங்கு சம்பிரதாயங்கள் மட்டுமே புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால் இத்திருமணத்தில் வரதட்சணை புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேளதாளங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, தாலி புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் முதல்வர்போல மணமக்களுக்கு வழங்கப்படும் படாடோபங்கள், வெட்டிச் செலவுகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளன. வந்திருந்த அனைவருக்கும் மணமக்கள் வீட்டாரால் வழங்கப்பட்ட அறுசுவை விருந்து உபசரிப்புடன் விழா இனிதே நிறைவுபெற்றது. திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு தாம்பூலப் பைக்குப் பதிலாக சுயமரியாதைத் திருமணங்கள் ஏன் வேண்டுமென்ற, தந்தை பெரியாரின் கருத்துக்கள் அடங்கிய சிறு புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

திருமணத்தில் கலந்துகொண்ட பலரும், இத்திருமண விழா மிகவும் வித்தியாசமாக நடைபெற்று வருவதாக தவறாமல் குறிப்பிட்டார்கள். பின்பு ஏற்புரை நிகழ்த்திய மணமகன், இவ்விழா இயல்பாக நிகழும் திருமண விழா தான் என்றும், இது வித்தியாசமாகப்படுவது நம் சமூகத்தின் அவல நிலை என்றும் சுட்டிக்காட்டியது சிந்திக்கத்தக்கதாக இருந்தது. ஜாதி, மதங்களும், அவற்றின் சடங்கு சம்பிரதாயங்களும் பிற்காலத்தில் வடிவமைக்கப்பட்டவை என்பதையும் குறிப்பிட்டார். ஆண், பெண் வாழ்க்கைத்துணையாக இணையும் இயல்பான நிகழ்விற்கு, நாம் பண்ணுகின்ற பகட்டு, பந்தா, சடங்கு சம்பிரதாயமென்ற அழிச்சாட்டியங்களை உணர வைத்தது அவரது பேச்சின் சாரம். உண்மைதானே?

July 15, 2010

வாங்கப்படாத பிறந்த நாள் கேக்!


மதியம் 2 மணி.நல்ல பசி. அலுவல் வேலை தொடர்பான பயணத்தில் இருந்தேன்.கையில் சாப்பாடு இருந்தாலும், சாப்பிட முடியாது. இன்னும் சாப்பிட ஒருமணி நேரமாவது ஆகும். தற்காலிகமாக பசியை அடக்க வேண்டுமே! என யோசித்த பொழுது... ஒரு பேக்கரி கண்ணில்பட்டது. உள்ளே நுழைந்து.. ஷோகேசில் வரிசையாக இருந்த அயிட்டங்களை நோட்டம் பார்த்த பொழுது.. இரண்டு நாளைக்கு முந்திய (13/07/2010) தேதியிட்ட ஒரு பிறந்த நாள் கேக் தென்பட்டது. பிறந்த நாள் வாழ்த்துடன், 'சுஜிதா' என பெயர் எழுதியிருந்தது. அன்று முழுவதும் அந்த கேக்கும், கேக்குரிய குழந்தையைப் பற்றிய நினைவுகளும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தன.

ஆர்டர் கொடுத்த கேக்கை ஏன் வாங்கவில்லை? அந்த குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போயிருக்குமோ? நான் பார்த்திருந்த பிறந்த நாள் கேக்குகளிலேயே அளவில் ஆக சிறியதாக இருந்தது. அங்கிருந்த மற்ற கேக்குகளை விடவும் சிறியதாக இருந்தது. ஆகையால், அது வசதியில்லாத ஒரு தொழிலாளி வீட்டுக் குழந்தையுடையதாக இருக்க நிறைய வாய்ப்புண்டு.நம்முடைய இந்த மோசமான வாழ்க்கை சூழலில் பிறந்த நாள் கொண்டாட்டம் தேவை தானா என பெற்றோர்களிடையே சண்டை வந்திருக்குமோ? அல்லது கொண்டாடுவதற்காக ஏதும் பணம் எதிர்ப்பார்த்து... வராமல் போயிருக்குமா?

சென்னைக்கு வந்த புதிதில்... என் நண்பர் ஒருவர் "தன் உறவினர் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் சும்மா தானே இருக்கிறாய்! வா போய் வரலாம்" என அழைத்தார். நெருங்கிய சொந்தங்கள் கலந்து கொள்கிற எளிமையான பிறந்தநாள் நிகழ்வாக இருக்கும் என நினைத்து தான் போனேன்.

ஒரு தரமான ஹோட்டலில் வண்டியை நிறுத்தும் பொழுது கேட்டேன். "இங்க என்ன?" "வா இங்க தான் நிகழ்ச்சியே!" என்றான். திருமணமே நடத்துவதற்கான விசாலமான அறையாக இருந்தது. அந்த ஹாலில் 125 லிருந்து 150 பேர் வரை கூடியிருந்தார்கள். அறை நிறைய அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திருமணத்திற்கு வருவதற்கான முஸ்தீபுகளுடன் அங்கு வந்திருந்தவர்கள் இருந்தார்கள். ஆளுக்கொரு கனமான பரிசு பொருளுடன் இருந்தார்கள். ஒரு வயது குழந்தை என்பதால்.. ஒரு விளையாட்டு பொருளை வாங்கி கையில் வைத்திருந்தேன். அந்த கூட்டத்திலேயே என்னுடைய பரிசு தான் ஆக சிறியதாக இருந்தது.

சாப்பாடு தடபுடல் தான். பபே சிஸ்டம். விசாரித்தால்.. ஒரு சாப்பாடு ரூ. 125/ யாம். வந்திருந்தவர்களின் எண்ணிக்கை குத்துமதிப்பாக 125 என எண்ணிக்கை வைத்துக்கொண்டால் கூட...ரூ. 16000/- ஆகிவிடும். இந்த பணம் இருந்தால்.. எங்க பகுதியில் மூன்று வகை கூட்டு, பொரியலுடன், 600 பேருக்கு சாப்பாடு போட்டு ஒரு கல்யாணத்தையே முடித்துவிடலாமே என எண்ணினேன்.

இப்படி அப்பாவித்தனமாய் (!) நினைப்பதற்கு நான் வளர்ந்த வந்த பின்னணியும் ஒரு காரணம். நான் தென் தமிழகத்தில் ஒரு முக்கிய நகரம் சார்ந்தவன். இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழும் பகுதியில் பிறந்து வளர்ந்தவன். அங்கு எந்த தொழிலாளி வீட்டிலும் எந்த குழந்தைக்கும் பிறந்த நாள் கொண்டாடி பார்த்தது இல்லை. கேள்விப்பட்டது கூட இல்லை. கேக் என்பது கூட அவர்கள் வாழ்வில் எங்கும், எப்பொழுதும் கடந்து சென்றது இல்லை. அந்த பகுதியில் ஒரு பேக்கரி கூட கிடையாது. திரும்பிய பக்கமெல்லாம் தேநீர் கடைகள் உண்டு. அங்கு வடை சுடுவார்கள். ஆமை (கடலைப்பருப்பில் செய்யும் ) வடை என்போம். தொழிலாளர்கள் ஒரு வடை சாப்பிட்டு, தேநீர் குடித்தால்.. வேலை நேரத்தில் இரண்டு மணி நேரத்தை எளிதாக கடந்துவிடுவார்கள். மெது(உளுந்த)வடை குறைவாக தான் சுடுவார்கள். பக்கத்து ஏரியா நடுத்தர மக்கள் வாழும் பகுதி. அங்கு நண்பனை பார்க்கும் பொழுது, அங்குள்ள தேநீர் கடைகளில் கவனித்திருக்கிறேன். அங்கு ஆமை வடை குறைவு. மெதுவடை அதிகமாக சுடுவார்கள். வடையில் கூட வர்க்கம் இருக்கத்தான் செய்கிறது.

அங்குள்ள குழந்தைகள் பிறந்த நாள் கேக் எல்லாம், படங்களில் பார்த்தது தான். அங்கு வாழும் யாருக்கும் பிறந்த நாள் என்பதே மறந்து போன ஒன்று. வயது கேட்டால் கூட... குத்துமதிப்பாக தான் சொல்வார்கள். அங்கு வாழும் ஒரு தொழிலாளிக்கு ஒரு நாள் வாழ்வே சிரமமாய் நகரும்பொழுது, பிறந்த நாள் ஏது? கொண்டாட்டம் ஏது? வசதி, வாய்ப்பு உள்ளவர்களுக்கு தான் வாழ்க்கையை சந்தோசமாக நகர்த்த கொண்டாட்டங்கள் தேவைப்படுகின்றன.

கடைசியாய் ஊருக்கு சென்ற பொழுது எங்கள் பகுதியில் பேக்கரி ஒன்றைப் பார்த்தேன். காரணம் அவலமானது. எங்கள் பகுதியில் இருந்த லட்சகணக்கான கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் தொழில் நசிந்து போனதால்.. கரூர், ஈரோடு, வெள்ளக்கோவில், சென்னிமலை என இடம் பெயர்ந்துவிட்டார்கள். இப்பொழுது எங்கள் பகுதி, நடுத்தர மக்களும், கந்துவட்டிக்காரர்களும் வாழும் பகுதியாகிவிட்டது. வசதியுள்ளவர்கள் வந்துவிட்டதால், பேக்கரியும் வந்துவிட்டது.

இப்படி பல லட்சகணக்கான மக்கள் பிறந்ததற்காக வாழ்ந்து தொலைத்துக் கொண்டிருக்கும் நாட்டில் தான், பிரமாண்டமான பிறந்த நாள் கொண்டாட்டங்களும், மிக ஆடம்பரமான திருமண நிகழ்ச்சிகளும் எந்தவித கூச்சமும், அருவருப்பும் இல்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன.

பின்னலாடை நகரில் பெருகி வரும் தற்கொலைகள்!

திருப்பூர் : பின்னலாடை உற்பத்தியின் மூலம் அன்னியச் செலாவணியை அதிகளவில் ஈட்டி வரும் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் தற்போது தற்கொலைகள் பெருகி வருகின்றன.

கடன் தொல்லை, குடும்ப உறவுகளில் விரிசல், கலாசார சீரழிவுகளால் அதிகரித்து வரும் இத் தற்கொலைகளை தடுக்க மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது.

÷ஆண்டுக்கு ரூ.11 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி, உள்நாட்டு வர்த்தகத்தில் ரூ.5 ஆயிரம் கோடி என பின்னலாடை உற்பத்தி தொழில் மூலம் பெருமளவில் வருவாயைக் குவித்து வரும் திருப்பூர் மாவட்டம் தற்கொலைகளிலும் முதல் இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், கடந்த 2009ம் ஆண்டில் மட்டும் இம்மாவட்டத்தில் 491 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், ஆண்கள் 307, பெண்கள் 165, மாணவியர் 13, மாணவர்கள் 8 பேர் அடங்குவர்.

சராசரியாக 50 தற்கொலைகள்...: இதேபோல், நடப்பாண்டில் கடந்த ஜூன் வரையிலும் 302 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், ஆண்கள் 183, பெண்கள் 99, மாணவிகள் 14, மாணவர்கள் 6 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதன்படி, சராசரியாக மாதம் 40 முதல் 50 தற்கொலைகள் நடைபெறுகின்றன. இது போன்று தற்கொலை செய்யவர்களில் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் என்றும், குறிப்பாக ஆண்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்வதாகவும் மாவட்ட காவல் துறை சார்பில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ÷மேலும், இதுபோன்று தற்கொலை செய்து கொள்பவர்கள் தூக்கு போடுதல், விஷம் குடித்தல், சாணிப்பவுடர் உள்ளிட்டவற்றையே அதிகளவில் பயன்படுத்தியுள்ளதும் தெரியவருகிறது.

÷இதுபோன்ற தற்கொலைகளுக்கான காரணம் குறித்து சேவ் தன்னார்வ தொண்டு நிறுவன இயக்குநர் ஆ.அலோசியஸ் கூறுகையில், தொழில் வளமுள்ள இம்மாவட்டத்துக்கு பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான குடும்பங்கள் பிழைப்பு தேடி வந்து கொண்டுள்ளன. அதில், குறிப்பிடும்படியாக தென் மாவட்டங்களிலுள்ள பின்தங்கிய கிராமப்புற குடும்பத்தினரே அதிகம்.

கந்து வட்டிக் கொடுமை...: அவ்வாறு, திருப்பூர் நிறுவனங்களில் அவர்கள் இரவு, பகலாக உழைத்துச் சம்பாதித்தாலும் ஈடுகட்டமுடியாத செலவுகளும் இங்கே உள்ளன. ஏற்கெனவே, பல்வேறு கடன் சுமைகளில் திருப்பூர் வந்து வேலை பார்க்கும் அவர்களால் இந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் தோல்வி நிலையை அடைகின்றனர். இதன் விளைவு கந்து வட்டிக் கொடுமை, குடும்பத்தில் விரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கி இறுதியில் தற்கொலை முடிவு எடுக்கின்றனர்.

÷இது போன்ற தற்கொலைகளை தடுக்க திருப்பூரில் நிரந்தரமாக மனநல ஆலோசனை மையங்கள் துவங்கி உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தவிர, அயல்நாடுகளில் உள்ளதுபோல் ஹெலப் லைன் தொலைபேசி வசதிகள் ஏற்படுத்தி தற்கொலை நிலையில் உள்ளவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கலாம் என்றார்.

அதிகரிக்கும் கள்ளத் தொடர்புகள்...: பெருகி வரும் தற்கொலைகள் குறித்து ஆராய மாவட்ட நிர்வாகம் சார்பில் சமீபத்தில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில், மாவட்ட சமூக நல அலுவலர் ஷெரின்பிலிப், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் நூர்மாலிக், மாவட்ட சுகாதார துணை இயக்குநர் விஜயலட்சுமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

÷இதில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் நூர்மாலிக் மேற்கொண்ட ஆய்வில், பெருகியுள்ள கள்ளத் தொடர்புகள், வறுமை, குடும்ப

உறுப்பினர்களிடையே விட்டுப்போன அன்பு பறிமாற்றம் போன்றவையே தற்கொலைகள் அதிகரிக்க காரணம் என தெரியவந்துள்ளது.

மன அழுத்தத்தை குறைக்க...: தற்கொலைகள் அதிகரிப்பதை தடுக்க காவல்துறை சார்பில் வாரந்தோறும் சிறப்பு ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டன. அம்முகாம்கள் கடந்த பல மாதங்களாக நடத்தப்படுவதில்லை. இப்பிரச்னையின் வீரியத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை சார்பில் தற்கொலைகள் தடுப்பு மனநல ஆலோசனை மையங்கள் துவக்கி செயல்படுத்த வேண்டும்.

÷தவிர, தொழிலாளர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் தொழில் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கவும் தொழிலாளர் துறை மற்றும் தொழிற்சாலைகள் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.

மேலும், தொழிலாளர்கள் கடுமையாக உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை நல்வழியில் செலவிட்டு மனஅமைதியை ஏற்படுத்திக்கொள்ள திருப்பூர் மாவட்டத்தில்

ஆரோக்கியமான பொழுதுபோக்கு அம்சங்களை கூடுதலாக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட வேண்டும் என்பது சமூகநல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

நன்றி : என். தமிழ்ச்செல்வன், தினமணி, 13/07/2010

பின்குறிப்பு : கோடிக்கணக்கில் அந்நிய செலாவணி ஈட்டும் திருப்பூரில் தொழிலாளர்கள் தற்கொலையில் சாகிறார்கள் என்றால்.. வலுவான காரணம் இருக்கத்தான் வேண்டும்.

7,8 ஆண்டுகளுக்கு முன்பே, திருப்பூரில் சில காலம் தங்கி இருக்கிறேன். அங்கு உள்ள விலைவாசி பெருநகர சென்னைக்கு ஈடானது. வாடகையும் கூட அப்படித்தான். இப்பொழுது உள்ள விலைவாசி உயர்வு பிரச்சனையில், அந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை நினைத்து பார்க்க கூட முடியவில்லை.

தமிழகம் தழுவிய அளவில் தலைநகரம் சென்னைக்கு வேலை இல்லாமல் இடம்பெயர்கிறார்கள் என்றால், தென்தமிழக அடித்தட்டு மக்களுக்கு திருப்பூர் தான் கதி.

அங்கு ஒரு சிப்ட் என்பதே 12 மணி நேரம் தான். மற்றபடி கூடுதல் வேலை செய்தால் தான், வாழ்க்கையை ஒட்ட முடியும். தொழிலாளர்கள் இருக்கும் பகுதி என்றாலே, கந்து வட்டி கும்பலும் நிச்சயம் இருக்கும். தொழிலாளர்களின் நெருக்கடியான வாழக்கையில், அவசரத்திற்கு பணம் தருவது. பிறகு, அநியாய வட்டி வாங்குவது என தொடர்வார்கள். கந்து வட்டி கும்பலுக்கு, அனைத்து கட்சி பிரமுகர்கள், போலீஸ் எல்லாம் உடந்தை தான்.

பிரச்சனைக்கு தீர்வு என்பது தினமணி செய்தி சொல்வது போல, ஆலோசனை, ஹெல்ப்லைன் தீர்வாகாது. அதெல்லாம் வெறும் கண்துடைப்பு. தொழிலாளர்கள் சங்கமாய் ஒன்றுப்பட்டு தங்கள் சகல பிரச்சனைகளுக்காகவும் போராடாமல், இந்த தற்கொலைகளை தடுக்க முடியாது. எங்கள் பகுதி நெசவு தொழிலாளர்கள் பகுதி தான். எப்பொழுதெல்லாம், புரட்சிகர அமைப்புகள் பகுதியில் வலுவாக இருந்தனவோ, அப்பொழுதெல்லாம் கந்துவட்டி பிரச்சனை, தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறைவாக இருந்தன.

அங்கு இயங்கும் கழக, போலி கம்யூனிச தொழிற்சங்கங்கள் தொழிலாளர் பிரச்சனைகளை தீர்த்துவிடாது. தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு நேர்மையாக போராடக்கூடிய ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் தான் அதற்கு ஒரே தீர்வு.

July 13, 2010

மானம் என்ற பெயரில்...

ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண்' என்று பெண்கள் எல்லாத் துறையிலும் சிறந்து விளங்கும் இந்தக் கணினி யுகத்திலும்கூட மானப் படுகொலைகள் நடக்கிறது என்பது வேதனையான உண்மை.

பாகிஸ்தானில் மிக அதிக அளவில் இந்த மானப் படுகொலை நடைபெறுகிறது. சில ஆயிரம் பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தால், இந்தியாவில் அது அதிகமாக நடந்துகொண்டிருக்கிறது என்று அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் படுகொலைகளில் தெரியவந்துள்ளது.

ஒரே கோத்திரத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டதற்காக கொலை செய்யப்பட்டனர். வேறுஜாதியைச் சேர்ந்த நபரைத் திருமணம் செய்துகொண்ட பெண், ஊர் பஞ்சாயத்து உத்தரவின்பேரில் கொல்லப்பட்டாள் என்று செய்திகள் வருகின்றன. ஆண்டுதோறும் வடஇந்தியாவில் சுமார் 900 பேரும், தென்னிந்தியாவில் 100 பேரும் குடும்ப மானத்தைக் காரணம்காட்டி கொல்லப்படுகிறார்கள் என்கிற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இந்த மானப் படுகொலையில் பலியாவது 90 விழுக்காடு பெண்கள் மட்டுமே.

இத்தகைய கொலைகள் அண்மையில் பரவலாகவும் அதிக எண்ணிக்கையிலும் நடக்கத் தொடங்கி, அவை பத்திரிகைகளிலும் வெளியாகி வருவதால், இதைத் தடுக்க எத்தகைய சட்டத் திருத்தம் கொண்டு வரலாம் என்பதைப் பரிந்துரைக்க அமைச்சர்கள் குழுவை நியமித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

மானப் படுகொலை என்பது பாகிஸ்தானில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும்கூட, தண்டனையில்லாத குற்றமாக இருந்து, தற்போது குறைந்த தண்டனைக்குரிய குற்றமாகத்தான் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. ஜோர்தான் நாட்டில் இப்போதும்கூட, தன் மனைவியின் கள்ளத்தொடர்பின் காரணமாக கொன்றதாக நிரூபித்தால் தண்டனை கிடையாது. இந்தச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பெண்கள் அமைப்பு போராடியும் பயனில்லை. கணவன் கள்ளத்தொடர்பு வைத்திருந்து, அவனை மனைவி கொன்றால் மன்னிப்பீர்களா என்ற வாதத்தையும்கூட முன்வைத்தனர். ஜோர்தான் அரசு கொஞ்சம் கூட மாறவில்லை. சிரியா நாட்டில், இத்தகைய மானப் படுகொலைக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

மானப் படுகொலைகளை பொருள்படுத்தாத நிலைமை பிரேஸில் நாட்டில் 1991 வரையிலும், கொலம்பியாவில் 1980 வரையிலும் இருந்தது. ஆனால் நாகரிகம் வளர்ந்ததும், இந்த மானப் படுகொலைகளை வெறும் கொலையாகவே கருதி தண்டனை வழங்கத் தொடங்கி விட்டனர்.

இந்தியாவில் ஹரியாணா, உத்தரப்பிரதேசம், பிகார், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில்தான் இத்தகைய மானப் படுகொலைகள் ஊர் பஞ்சாயத்து முன்னிலையில் நடத்தப்படுகிறது. இது சட்டப்படி கொலை என்று தெரிந்தாலும், புகார் அளிக்கவும், சாட்சி சொல்லவும் அந்த ஊர் மக்கள் முன்வராதபோது இதன் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையால் முடிவதில்லை என்பதுதான் அரசு இதுநாள் வரையிலும் பொதுவாகக் கூறிவந்த பதில்.

மானப் படுகொலை என்று புகார் வருமேயானால், அதில் தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அக்கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளான குடும்பம் அல்லது ஊர் பஞ்சாயத்தைச் சேர்ந்தது என்கிறபடியாக சாட்சிகள் சட்டத்தைத் திருத்தி அமைத்தால் இந்தப் பிரச்னைக்கு முடிவு ஏற்படும் என்று அமைச்சர்கள் குழு கருதுகிறது. அந்த வகையில் முடிவுகள் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

தற்போது இந்தியாவில் நடைபெறும் மானப் படுகொலைகள் பலவும் குடும்பத்தினருக்கோ அல்லது ஊர் பஞ்சாயத்துக்கோ உடன்பாடில்லாத கலப்புத் திருமணம் அல்லது காதல் திருமணம் காரணமாகத்தான் நடைபெறுகிறது. இந்தத் திருமணங்கள் பெரும்பாலும், ஊரைவிட்டு வெளியேறிப்போய் செய்துகொள்ளும் திருமணங்களாகவும் சட்டப்படி பதிவு செய்யப்படாத திருமணங்களாகவும் இருப்பதால், இவர்கள் ஜாதிக் கட்டுப்பாடு அல்லது குடும்ப விருப்பத்துக்கு எதிராக திருமணம் செய்துகொண்டார்கள் என்று உறுதிப்படுத்த முடியாத நிலையில், இந்தச் சட்டத் திருத்தமும்கூட எதிர்பார்க்கும் பயனைத் தருமா என்கிற தயக்கம் இருக்கிறது.

இத்தகைய வழக்கில், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு குற்றவாளியைச் சார்ந்தது என்று திருத்தம் செய்வதுடன் திருமணப் பதிவுச் சட்டத்திலும் சில திருத்தங்களைச் செய்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். தற்போதைய சிறப்புத் திருமணச் சட்டத்தின் படி (ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட்), கலப்புத் திருமணம் செய்துகொள்ளப் போகும் ஆணும் பெண்ணும் 30 நாள்களுக்கு முன்பாக பெயர் பதிவு செய்ய வேண்டும் என்றிருக்கிறது. இதனை மாற்ற வேண்டும். ஒன்று இந்த நாள்களின் எண்ணிக்கையை சில தினங்களாகக் குறைக்க வேண்டும். அல்லது திருமணப் பதிவு செய்திருந்த நிலையில் கொல்லப்பட்டாலும் அதனை மானப் படுகொலையாகக் கருதி வழக்குப் பதிவு செய்ய வகை செய்ய வேண்டும்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் என்று பதிவு செய்யப்படும் பெரும்பாலான வழக்குகளில், "ஏதோ ஒரு ஆத்திரத்தில், கொலை செய்யும் நோக்கமில்லாமல் தாக்கியதில் மனைவி இறந்தார்' என்பதாக குறைந்த ஆண்டுகளே சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் என்று கொலை செய்தாலும் மானப் படுகொலையாகவே பதிவு செய்து, வழக்கை நடத்த வேண்டும்.

ஒருபுறம் உலகமயம், மேலைநாட்டு மோகம் என்கிற பெயரில் ஒழுக்கக்கேடான இயற்கைக்கு முரணான வாழ்க்கை முறைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. இன்னொருபுறத்தில், கற்கால மனிதர்களிடமும் கல்வி அறிவேயில்லாத அநாகரிக சமுதாயத்திலும் மட்டுமே காணப்படும் மானப் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு அடையாளங்கள் பங்குச்சந்தையும் இரண்டு இலக்க வளர்ச்சி விழுக்காடும் அல்ல, பகுத்தறிவும் அடிப்படை மனித தர்மமும் ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை நெறியே. மானப் படுகொலைகள் என்பது தேசிய அவமானம்!

நன்றி : தினமணி தலையங்கம்....14/07/2010

பின்குறிப்பு :
// "தற்போதைய சிறப்புத் திருமணச் சட்டத்தின் படி (ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட்), கலப்புத் திருமணம் செய்துகொள்ளப் போகும் ஆணும் பெண்ணும் 30 நாள்களுக்கு முன்பாக பெயர் பதிவு செய்ய வேண்டும் என்றிருக்கிறது."//

தற்பொழுது தமிழக அரசு அனைத்து திருமணங்களையும் பதிவு செய்வது அவசியம் என்று ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறது. அதனால், சிறப்பு திருமணச் சட்டத்தில் பதிவு செய்ய வேண்டியவர்களும் இந்த சட்டத்தின் அடிப்படையிலேயே திருமணத்தை பதிவு செய்யலாம். ஆனால், திருமணம் முடிந்து மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்வது அவசியம்.

கூடுதலாக ஒரு கொசுறு தகவல் : சமீபத்தில் ஒரு நண்பரின் பதிவு திருமணத்திற்காக பத்திர அலுவலகத்திற்கு விசாரிக்க சென்றிருந்தேன். அங்கு காத்திருந்த வேளையில்.. நான்கைந்து ஜோடியினர் சிறப்பு திருமண சட்டத்தில் பதிவு செய்வதற்காக விண்ணப்பித்திருந்த விண்ணப்பங்களை புகைப்படங்களோடு ஒட்டி வைத்திருந்தார்கள். அத்துடன் ஒரு கடிதமும் ஒட்டியிருந்தார்கள்.

கடிதத்தின் சாரம் இதுதான் :

எங்களுடைய நன்றாக படித்த பெண்ணை, படிக்காத ஒரு டிரைவர் ஒருவன் உடன் அழைத்து சென்றுவிட்டான். அவர்கள் திருமணம் முடித்தால்... அந்த பெண் வாழ்க்கை வீணாக போய்விடும். ஆகையால், பதிவு செய்ய வந்தால்...பதிவு செய்யாமல்.. எங்களுக்கு தெரிவியுங்கள் என பெயர், ஊர் என பல தகவல்களுடன் இருந்தது. அந்த கடிதம் மிகுந்த கோபத்துடனும், வன்மத்துடனும் இருந்தது. கூடுதலாக, சார் பதிவாளர் ஒப்புகையுடன், அரசு முத்திரையும் இருந்தது. தமிழகத்தின் எல்லா பதிவு அலுவலங்களிலும் ஒட்டப்பட்டிருக்கும். இதற்கும் அரசே ஊக்குவிக்கிறது.