கடன் தொல்லை காரணமாக நம் நாட்டில், 12 மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார் என, தகவல் வெளியாகியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த அவலநிலையை போக்க, மத்திய, மாநில அரசுகள் பெரிய அளவில் திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை என, விவசாய நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள், கடந்த 1990களில் தான், வெளிச்சத்துக்கு வந்தது. சில நேரங்களில் பருவமழை பொய்த்து விடுவதாலும், சில நேரங்களில் அதிகப்படியான மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்படுவதாலும், விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எதிர்பார்த்த விளைச்சல் கிடைப்பது இல்லை. இதனால், கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கிய விவசாயிகள், வட்டியையும், முதலையும் திரும்பச் செலுத்த முடியாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனர். கந்து வட்டிக்காரர்களின் மிரட்டலுக்கு பயந்து, தற்கொலை செய்து கொள்கின்றனர். சில சமயங்களில், கடன் தொல்லை தாங்க முடியாத விவசாயிகள், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் பரிதாபமும் அரங்கேறுகிறது.
தேசிய குற்றப் பிரிவு ஆவணத்தில், "நம் நாட்டில் கடந்த 1997ல் இருந்து, இதுவரை இரண்டு லட்சத்து 16 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து, உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளில் நடந்த விவசாயிகள் தற்கொலைகளை கணக்கில் எடுத்துப் பார்த்தால், 12 மணி நேரத்துக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். அதாவது, தினமும் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்" என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய விவசாய அமைச்சராக பதவி வகிக்கும் சரத் பவாரின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள விதர்பாவில் தான், விவசாயிகள் தற்கொலை அதிகம் நடக்கிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை அதிகம் நடக்கிறது.
இந்த பிரச்சினைக்கான காரணம் குறித்து விவசாய நிபுணர்கள் கூறுவதாவது:-
விவசாயிகள் தற்கொலையைத் தடுப்பதற்காக, மத்திய, மாநில அரசுகள் சில நடவடிக்கைகள் எடுத்தன. விவசாயிகளுக்கு வங்கிக் கடன் வழங்குவது, கடன் தள்ளுபடி வழங்குவது, இழப்பீடு மற்றும் உதவித் தொகை வழங்குவது ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், இந்த நடவடிக்கைகள் தீவிரமாக இல்லை. விவசாயத்தில் இருந்து கிடைக்கும் வருமானம், விவசாயிகளின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற போதுமானதாக இல்லை. ஆகவே தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள், இங்கு தொடர்கதையாகிறது. இவ்வாறு விவசாய நிபுணர்கள் தெரிவித்தனர்.
நன்றி : கூடல்.காம்
http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=5015358
1 பின்னூட்டங்கள்:
,// "நம் நாட்டில் கடந்த 1997ல் இருந்து, இதுவரை இரண்டு லட்சத்து 16 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து, உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளில் நடந்த விவசாயிகள் தற்கொலைகளை கணக்கில் எடுத்துப் பார்த்தால், 12 மணி நேரத்துக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். அதாவது, தினமும் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்" என, தெரிவிக்கப்பட்டுள்ளது//
இவர்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும்
மனதை ரனப்படுத்திய பதிவு
Post a Comment