March 31, 2011
தேர்தல் புறக்கணிப்பு - சிறு வெளியீடு!
நன்றி : நல்லூர்முழக்கம்
ஒவ்வொருமுறை தேர்தல் நடக்கும் போதும் மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தேர்தலில் ஓட்டுப்போடுவதால் பலன் ஒன்றுமில்லை என்பதும் மக்களுக்கு தெரிந்தே இருக்கிறது. ஆனாலும் ஓட்டுப் போட தயாராக இருக்கிறார்கள் என்றால் அதன் காரணம் வேறு வழி எதுவும் அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்பது தான். மாற்று இருக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும், உணர்த்த வேண்டும் என்பதற்காக “ஓட்டுப் போடாதே புரட்சி செய்” எனும் குரலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் கலை இலக்கிய கழகம் வெளியிட்ட ஒரு சிறு வெளியீடு தொடராக இங்கு வெளியிடப்படவிருக்கிறது. படியுங்கள். பரப்புங்கள்.
*****
இது 13 வது சட்டமன்றத் தேர்தல். மீண்டும் வாக்களிக்கப் போகிறீர்களா? ஒரு முறை ஏமாறுவது மனிதனுக்கு இயல்பு; இரண்டு முறை ஏமாறுபவன் ஏமாளி; மூன்று முறை ஏமாந்தால் அவனை முட்டாள் என்றும் சொல்லலாம்.12 முறை ஏமாற்றப் பட்டபிறகும் சொரணையில்லாமல் பல்லிளித்துக் கொண்டு ஓட்டுப் போடச் செல்பவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது?
அப்பன், பாட்டன், கொள்ளுப்பாட்டன் என்று மூன்று தலைமுறைகள் ஏமாந்த பிறகும் புத்தி வராமல்,”அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே” என்ற சத்தம் கேட்டவுடனே நான்காவது தலைமுறையும் ஓடுகிறது; மசால் வடைக்கு மயங்கும் எலியைப்போல வாக்குச்சாவடியின் முன்னால் வரிசையில் நிற்கிறது. இந்த மானக்கேட்டை யாரிடம் சொல்லி அழுவது?
தேர்தல் என்ற அறிவிப்பு வந்தவுடன் கரண்டு கம்பத்தைக் கண்டால் காலைத்தூக்கும் தெருநாயைப் போல, தானாக வந்து ஓட்டுப் போடுவான் என்று நம்மைக் கேவலமாக நினைக் கிறார்களே ஓட்டுப் பொறுக்கிகள், இந்த அவமானத்திற்கு எப்போதுதான் முடிவு கட்டுவது?
பழனிக்கும் திருப்பதிக்கும் மொட்டை போடும் பக்தன் கூட தன்னுடைய நம்பிக்கைக்கு ஒரு விளக்கம் சொல்கிறான். ‘இந்தச் சாமிக்கு நேர்ந்து கொண்டால் இது நடக்கும்” என்று நம்பவும் செய்கிறான். ஆனால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச் ‘சாவடியில்’தவறாமல் மொட்டை போட்டுக் கொள்ளும் வாக்காளனுக்கோ இந்தத் தேர்தலின் மீது அப்படியொரு நம்பிக்கை கூடக் கிடையாது.
‘எவன் வந்தாலும் விலைவாசி குறையப் போவதில்லை, விவசாயம் விளங்கப் போவதில்லை, வேலை கிடைக்கப் போவதில்லை, லஞ்சம் ஒழியப் போவதில்லை, ஊழல் குறையப் போவதில்லை” என்று ஆணித்தரமாகப் பேசுகிறான். ‘அப்புறம் எதற்காக ஓட்டுப் போடுகிறாய்?” என்று கேட்டால், ‘வேறென்ன செய்ய முடியும்?” என்று எதிர்க் கேள்வி கேட்கிறான். வாக்குரி மையை ‘வேஸ்ட்’ க்காமல் யாராவது ஒரு திருடனுக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட வேண்டுமென்று துடிக்கிறான்.
‘ஓட்டுப் போடவில்லையென்றால் செத்ததுக்குச் சமமாமே” என்று பாமரத்தனமாகச் சிலர்அஞ்சுகிறார்கள். இது உண்மை யென்றால் மன்மோகன்சிங் செத்த இடத்தில் புல் முளைத்திருக்க வேண்டும். 3 தேர்தலாக ஓட்டுப்போடாத மன்மோகன்சிங் தான் இந்த நாட்டின் பிரதமர். தேர்தல் ஒரு நாடகம் என்றும் எவன் ஜெயித்தாலும் அந்த ஆட்சி நம்ம ஆட்சிதான் என்றும் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கும் டாடா பிர்லா போன்ற பெரு முதலாளிகள் முதல் உள்ளூர்ப் பணக்காரர்கள் வரை யாரும் எப்போதும் ஓட்டுப் போடுவதில்லை. கொளுத்தும் வெயிலில் வரிசையில் நின்று இந்த ‘ஜனநாயகத்தை’க் காப்பாற்றுவது பாமரமக்கள்தான்.
ஏனென்றால், ‘தேர்தலைப் புறக்கணித்து விட்டால் இருக்கின்ற ஒரே ஒரு பிடியையும் நாம் இழந்துவிடுவோம். ஜெயலலிதா சரியில்லை என்றால் கருணாநிதியைக் கொண்டு வரலாம், சோனியா சரியில்லை என்றால் வாஜ்பாயியைக் கொண்டு வரலாம். புறக்கணிப்பதன் மூலம் என்ன சாதித்து விடமுடியும்? வேறென்ன வழி இருக்கிறது?”என்று எண்ணுகிறான் வாக்காளன்.
தேர்தல் தோல்வி என்பது ஓட்டுப் பொறுக்கிகளுக்கு விதிக்கப்படும் தண்டனை அல்ல, இன்று தோற்றாலும் நாளை நாம்தான் என்று ஐந்தாண்டுகள் அவர்கள் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். ட்சிக்காலத்தில் அடித்த கொள்ளையை அனுபவிக்கிறார்கள். தத்தம் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்குப் பின் மீண்டும் அரியணை ஏறுகிறார்கள்.
‘மக்களுக்குத்தான் இதை விட்டால் வேறு வழியில்லை” என்ற சலிப்பு! ஓட்டுக் கட்சிகளுக்கோ ‘நம்மை விட்டால் மக்களுக்கு வேறு நாதி இல்லை” என்ற இறுமாப்பு!
தேர்தலைப் புறக்கணிக்க மக்கள் தயங்கலாம். ஆனால் மக்களின் இந்தக் கையறு நிலையைப் பயன்படுத்திக் கொண்டுதான் கடந்த 50 ஆண்டுகளாக இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை மிகவும் அலட்சியமாகப் புறக்கணித்து வருகிறது தேர்தல் அரசியல்.
தொடர்ந்து நம்மைப் புறக்கணித்து வரும் இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலை நாம் ஏன் புறக்கணிக்க மறுக்கிறோம் என்பதுதான் எங்களது கேள்வி.
வாக்காளர்களா, பிச்சைக்காரர்களா?
‘கலர் டிவி, கிலோ 2 ரூபாய்க்கு அரிசி, 2 ஏக்கர் நிலம்” என்று வாக்குறுதி தருகிறார் கருணாநிதி. ‘இலவச சைக்கிள் கொடுத்தேன், பாடநூல் கொடுத்தேன், வெள்ள நிவாரணம் கொடுத்தேன், கோயிலில் அன்னதானம் போட்டேன், இலவசத் திருமணம் நடத்திவைத்தேன்” என்று சாதனைப் பட்டியல் படிக்கிறார் ஜெயலலிதா. ‘மாதம் 15 கிலோ அரிசி இலவசமாகத் தருகிறேன், அதையும் வீட்டுக்கே கொண்டு வந்து தருகிறேன், கல்யாணம் பண்ணி வைத்து பிள்ளை பெத்தால் அதற்கும் பணம் கொடுக்கிறேன்” என்கிறார் நடிகர் விஜயகாந்த்.
இந்த வாக்குறுதிகளைப் படிப்பவர்கள், தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் பிச்சைக்காரர்கள் என்ற முடிவுக்குத்தான் வரமுடியும். இப்படி எல்லாவற்றையும் இலவசமாக அள்ளி அள்ளிக் கொடுத்தால் அரசாங்க கஜானாவே காலியாகி விடுமென்று ஆத்திரம் பொங்க பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள் திமிர் பிடித்த மேட்டுக்குடி அறிவாளிகள்.
யாருடைய பணத்திலிருந்து நமக்கு இந்த ‘இலவசங்களை’ வழங்குகிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகள்? அரசாங்க கஜானாவில் சேரும் வரிப்பணத்தில் கப்பெரும்பகுதி ஏழை- நடுத்தர மக்கள் கொடுக்கும் மறைமுக, நேர்முக வரிப்பணம்தான். ஏழை களின் வரிப்பணத்திலிருந்து ஏழைகளுக்குச் செலவிடுவதை ‘இலவசம்’ என்று எப்படி அழைக்க முடியும்?
இலவச சைக்கிளுக்கு 83 கோடி, பாடநூலுக்கு 113 கோடி, சத்துணவுக்கு 850 கோடி, உழவர் பாதுகாப்புத் திட்டத்துக்கு 300 கோடி – என்று பட்டியல் படிக்கிறார் ஜெயலலிதா.
போர்டு, ஹண்டாய், கோகோ கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலமும், தண்ணீரும், மின்சாரமும், சாலை வசதிகளும் செய்து கொடுத்து அவர்களுக்கு வரிச் சலுகை களையும் வாரி வழங்கியிருக்கிறது ஜெ அரசு. மக்களுடைய வரிப்பணத்திலிருந்து பன்னாட்டு முதலாளிகள் ஒவ்வொரு வருக்கும் எத்தனை ஆயிரம் கோடி சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்ற இரகசியத்தை ஜெயலலிதா வெளியிடுவாரா? ‘முதலாளிகளுக்கான இலவசத் திட்டங்கள்’ என்று இவை அழைக்கப் படுவதில்லையே, ஏன்?
2004-05 ஆம் ஆண்டில் மட்டும் பன்னாட்டு முதலாளிகள் மற்றும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு ப.சிதம்பரம் வழங்கி யுள்ள வரித்தள்ளுபடி 1,58,661 கோடி ரூபாய் என்கிறது முதலாளி வர்க்கத்தின் பத்திரிகையான பிசினஸ் ஸ்டாண்டர்ட். னால் இதே ஆண்டில் நாடு முழுவதும் உள்ள மக்களின் ரேசன் அரிசிக்காக சிதம்பரம் வழங்கிய மானியம் ரூ.25,000 கோடி மட்டும்தான். யார் வழங்கும் மானியத்தில் யார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறதா?
ஆண்டொன்றுக்கு டாஸ்மாக்கின் மொத்த விற்பனை 24,000 கோடி என்கிறார் ஜெயலலிதா. இதில் அரசுக்குக் கிடைக்கும் ண்டு வருவாய் சுமார் 5000 கோடியாம். என்றால், சசிகலாவின் சாராயக் கம்பெனி அடித்த லாபம் எத்தனை யிரம் கோடி? சாராயத்தில் வரவு 5000 கோடி, சத்துணவுக்குச் செலவு 850 கோடி. இந்த அயோக்கியத் தனத்துக்குப் பெயர் இலவசத் திட்டமாம்!
தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகிக் கொண்டிருக்கிறது என்றும் இதைச் சாதித்தது நான்தான் என்றும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் இந்தப் பெருமைக்குப் போட்டி போடுகிறார்கள். ஆனால், ஒவ்வொரு தேர்தலுக்கும் இத்தகைய ‘இலவச’த் திட்டங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இதுதான் தமிழகத்தின் முன்னேற்றமா?
கிலோ 2 ரூபாய்க்குக் கிடைக்கும் புழுத்த அரிசியில்தான் கஞ்சி குடிக்க முடியும் என்ற அளவிற்கு மோசமான வறுமை நிலையில் தமிழ்நாட்டின் பல கோடி மக்கள் வைக்கப்பட்டிருப் பது ஏன்? நிலமில்லாத கூலி விவசாயி மட்டுமல்ல, தன்னுடைய நிலத்தில் நெல் பயிரிடும் விவசாயி கூட சொந்த நிலத்தில் விளைந்ததை வந்த விலைக்கு விற்று விட்டு, இந்த 2 ரூபாய் புழுத்த அரிசியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? எதை நட்டாலும் விவசாயம் விளங்காத போது கருணாநிதி கொடுக்கவிருக்கும் புறம்போக்கு நிலத்தில் யாரை நடுவது?
பெற்ற பிள்ளைக்குத் திருமணம் செய்யவும், கட்டிய மனைவிக்கு சேலை எடுத்துக் கொடுக்கவும், அவளுக்குப் பிரசவம் பார்க்கவும் விஜயகாந்த் பணம் கொடுக்க வேண்டிய நிலைமைதான் 12 தேர்தல்களில் நாம் கண்ட முன்னேற்றமா?
2000 ரூபாய் காசுக்காக சென்னை நகரில் 50 பேர் மிதிபட்டுச் செத்திருக்கிறார்களே, மக்களை இந்த அவலமான வாழ்க்கை நிலைக்கு விரட்டியது யார்?
ஜெயலலிதா கூட்டத்துக்குப் போனால் சோறு போட்டு 100 ரூபாய், ஸ்டாலின் கூட்டத்துக்குப் போனால் சேலை, இன்னொரு மந்திரி கூட்டத்துக்குப் போனால் 2 கிலோ அரிசி, புரட்சித் தலைவி பிறந்த நாளுக்கு அன்னதானம்… என்று எட்டுத்திக்கும் பிச்சை யெடுத்துத் திரிய வேண்டிய மானங்கெட்ட நிலைமை மக்களுக்கு ஏன் ஏற்பட்டது?
இப்படிப்பட்ட கேள்விகளை ஓட்டுப்பொறுக்கிகள் யாரும் எழுப்புவதில்லை. இலவச டிவி கொடுக்க முடியுமா முடியாதா, 2 ரூபாய் அரிசி போட முடியுமா முடியாதா என்று அனல் பறக்கும் விவாதம் நடத்துகிறார்கள். பண்ணையார்களிடம் பொங்கல் இனாம் வாங்கப்போன பண்ணையாட்களைப் போல மக்களைத் தங்கள் முன்னால் கையேந்தி நிற்க வைக்கிறார்கள் இந்த ஓட்டுப் பொறுக்கிகள்.
தாம் சொந்தமாகச் சம்பாதித்த காசிலிருந்து பழனி படிக்கட்டில் காத்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு தருமம் செய்கிறார்கள் பக்தர்கள். ஆனால் ஓட்டுப்பொறுக்கிகளோ, நம்மைக் கொள்ளையடித்த பணத்திற்குச் சில்லறை மாற்றி 50, 100, 500 என்று நமக்கே விட்டெறிகிறார்கள். இவர்களுக்கு எப்படி வந்தது இந்தப் பணம்?
அரசாங்க காண்டிராக்டில் அடித்த கொள்ளை, காடுகளையும் மலைகளையும் வெட்டி விற்ற காசு, புறம்போக்குகளை விற்று ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றிக் குவித்த பணம், ரேசன் அரிசி,வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம்,வளர்ச்சித் திட்டங்கள் அனைத்திலும் சுருட்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்க அதிகாரிகள் வாங்கும் லஞ்சப்பணத்தில் வசூலிக்கும் கப்பம், சட்டவிரோத சமூக விரோதத் தொழில்கள், போலீசுடன் கூட்டு சேர்ந்து நடத்தும் கட்டைப் பஞ்சாயத்து கலெக்சன், இவையனைத்துக்கும் மேலாக பன்னாட்டு முதலாளிகளிடம் நாட்டைக் கூட்டிக் கொடுத்து வாங்கிய கமிசன்…….. என்று இவர்கள் சூறையாடிய பொதுச் சொத்துதான் தொகுதிக்கு 4 கோடி 5 கோடி என றாய்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது.
முன்னர் முதலாளிகளிடம் லஞ்சம் வாங்கித் தின்று கொண்டிருந்த ஓட்டுப்பொறுக்கிகள், தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய பின்னர் தாங்களே முதலாளிகளாக மாறத் தொடங்கிவிட்டார்கள். கந்து வட்டிக்காரர்கள், காண்டிராக்டர்கள், ரியல் எஸ்டேட் முதலாளிகள், சினிமா தயாரிப்பாளர்கள், தண்ணீர் வியாபாரிகள், கிரானைட் அதிபர்கள், பஸ் கம்பெனி அதிபர்கள், சுயநிதிக் கல்லூரி முதலாளிகள், பன்னாட்டுக் கம்பெனிகளின் ஏஜெண்டுகள் .. என இந்த ஓட்டுப் பொறுக்கித் தொழிலதிபர் களின் கொள்ளை லாபம் பன்மடங்கு அதிகரித்து விட்டது.
இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகத் தன்னுடைய சாராயக் கம்பெனி லாபத்திலிருந்து, ஜெயா-சசி கும்பல் ஓட்டுக்கு 1000 ரூபாய் கூடக் கொடுக்கும்; ஒரே ஆண்டில் போட்ட காசையும் எடுக்கும். தன்னால் போண்டியாக்கப்பட்ட ஏழை மக்களையே தனக்கு விசுவாசமான ஓட்டு வங்கியாக உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு, அவர்களைத் தன்னுடைய கையேந்திகளாகத் திட்டமிட்டே மாற்றி வருகிறது ஜெயா – சசி கும்பல். கருணாநிதியோ ஏழைகளை அரசாங்கக் கையேந்திகளாகக்கும் திட்டங்களை அடுக்கடுக்காக அறிவிக்கிறார்.
தள்ளாத வயதிலும் கடுமையாக உழைத்துக் கஞ்சி குடிக்கும் மானமுள்ள உழைக்கும் மக்கள் பிச்சைக்காரர்களாக நடத்தப் படுகிறார்கள். சூடு, சொரணை, மான ரோசமில்லாமல் பதவிக்காக எவன் காலையும் பிடிக்கத் தயங்காத இழிபிறவிகளும், அடுத்தவனை ஏமாற்றியே உடம்பை வளர்த்த சோம்பேறிகளும், பொதுச் சொத்தை வளைக்கவும் சொந்த மனைவியை விலை பேசவும் தயங்காத கயவர்களும் ‘எம்.எல்.ஏ காட்டன், மினிஸ்டர் காட்டன்’ சட்டைகளுக்குள் புகுந்துகொண்டு மினுக்கித் திரிகிறார்கள்.
கேவலம் ஒரு டீயைக் கூட அடுத்தவன் காசில் மட்டுமே குடித்துப் பழகிய இந்த அயோக்கியர்கள் மக்களுக்கு இலவசத் திட்டம் அறிவிக்கிறார்கள்; ஓட்டுக்கு 200, 300 பணமும் கொடுக்கிறார்கள். இவர்களிடம் கையேந்தி நிற்பதும், இப்படிப்பட்ட தேர்தலில் வாக்களிப்பதும் நம்மை நாமே பிச்சைக்காரர்கள் என்று ஒப்புக்கொள்வதற்குச் சமமல்லவா என்பதுதான் நாங்கள் எழுப்பும் கேள்வி.
தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்:
அண்ணே இது சம்பந்தமான புத்தகம் இருக்க?
"தேர்தல் புறக்கணிப்பு - சிறு வெளியீடு!"
என்று தலைப்பை பார்த்தவுடன் புத்தகம் போட்டுயிருக்கீக அப்புடியின்னு வேகமாக ஒடி வந்தேன்
சரி இதை நகல் எடுத்துகிறேன்
நன்றி நண்பரே
Post a Comment