முன்குறிப்பு : தேர்தல் ஜூரம் துவங்கிவிட்டது. வேட்டி கிழிப்பு காட்சிகள் அரங்கேறுகின்றன. கொள்ளையே கொள்கையாகி போனதால், வாக்காளர்களை கவர, கொள்ளையடிப்பதில் கொஞ்சம் பங்கு தருவதை போல இலவசங்களை அறிக்கையில் அள்ளிவீசுகிறார்கள். பணம் தந்து, பொருள் தந்து, வாக்காளனின் முகத்தில் காறித்துப்புகிறார்கள். இந்த தேர்தலால் பெரும்பான்மையான மக்களுக்கு ஒன்றும் மலர்ச்சி வரப்போவதில்லை. இன்னும் மோசமாக கொள்ளையடிக்கப்பட இருக்கிறார்கள். ஆகையால், நீண்ட கால நோக்கில், ஒரு ஆரோக்கியமான மாற்றத்திற்கு, இந்த தேர்தலை புறக்கணிப்பது தான் சரி! இதை எப்படி புரிந்து கொள்வது? விளக்குவதற்காக பல பதிவுகள் தேர்தல் வரை குருத்து தளத்தில், சில பழைய பதிவுகளும், புதிய பதிவுகளும் வெளியிடப்படும்.
*******
குளிரூட்டப்பட்ட வெளிநாட்டு வாகனங்களில்
புழுதி பரந்திருக்கும்: பாவியகற்கள் பெயர்ந்திருக்கும்
சாக்கடை தேங்கி இருக்கும்; பன்றிகள் மேய்ந்திருக்கும்
உங்கள் தெருக்களில்; சந்துகளில்; முடுக்குகளில்
இருகரம் கூப்பி, எப்பக்கமும் தொழுது,
புன்முறுவல் தேக்கி,
உடன்பிறந்தவர்களைப் பார்க்க வரும்
தூரத்தேசத்து தமையன் போல...
அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.
ஓகெனக்கல் குடிநீர்திட்டமா?
பொதுமருத்துவமனை திட்டமா?
எதுவேண்டும் வேண்டும் உங்களுக்கு?
வாரிவழங்குவார்கள்;
வாய் எனும் அட்சயப்பாத்திரம் கொண்டு!
68 கிரிமினல் குற்றவழக்குகள்
நிலுவையில் உள்ளவர்கள்
ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களின்
மனைவிகள்; மைத்துனிகள்;
இனத்துரோகிகள்; மொழித்துரோகிகள்;
மக்கள் துரோகிகள்; நாட்டுத்துரோகிகள்
வந்துகொண்டு இருக்கிறார்கள்.
'கும்பி எரியுது; குடல் கருகுது;
குளுகுளு ஊட்டி ஒரு கேடா? - என
45 ஆண்டுகளுக்கு முன்பு முழங்கியவர்கள்
இன்று தாமே
கொடைக்கானலாக, ஊட்டியாக,
சிம்லாவாக; குலுமனாலியாக
நடமாடி வருகிறார்கள்.
ஆடிக்கொண்டும்; பாடிக்கொண்டும்;
மிமிக்ரி செய்துகொண்டும்
கலையுலக பழைய; புதிய
கலைத்தளபதிகள்
வந்துகொண்டு இருக்கிறார்கள்.
ஈழத்தமிழனுக்காக ஆதரவு கோஷம்
விண்ணைத்துளைக்க
அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்
ஆடு வெட்டிப் பந்தி வைக்க;
சீமைச்சாராயப் பந்தல் நடத்த
ஊதாநிறக் காந்தித் தாட்கள் வழங்க
குடம், குத்துவிளக்கு, தாலி,
தாம்பளம், தட்டுமுட்டுச் சாமான்கள் தானம்தர
அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.
உண்ணா நோண்பு இருப்பார்கள்;
பேரணி நடத்துவார்கள்;
மனிதச்சங்கிலி கோப்பார்கள்;
ஆளுக்கு ஆஸ்கர் வாங்குமளவு நடிப்பதில்
திறமைசாலிகள்
வந்துகொண்டு இருக்கிறார்கள்.
ஆம்...
வந்து கொண்டேயிருக்கிறார்கள்
- நாஞ்சில் நாடன்
'தீதும் நன்றும்' என்னும் தலைப்பில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆனந்தவிகடனில் தொடர் கட்டுரைகள் எழுதினார். 22/04 - 29/04/09 இதழில் "அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்" என்ற உட்தலைப்பில் வெளிவந்த மூன்று பக்க கட்டுரையை சுருக்கி தந்துள்ளேன். அவருடைய சொந்த வார்த்தைகளிலேயே!
நன்றி : ஆனந்தவிகடன்
March 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்:
//கொள்ளையே கொள்கையாகி போனதால், வாக்காளர்களை கவர, கொள்ளையடிப்பதில் கொஞ்சம் பங்கு தருவதை போல இலவசங்களை அறிக்கையில் அள்ளிவீசுகிறார்கள். பணம் தந்து, பொருள் தந்து, வாக்காளனின் முகத்தில் காறித்துப்புகிறார்கள்.//
சாட்டையடி....
Post a Comment