> குருத்து: June 2011

June 30, 2011

தமிழக காவல்துறை அதிகாரிகளில் 20 பேர் கோடீஸ்வரர்கள்!

முன்குறிப்பு : அதென்னமோ தெரியல! அதிகாரிகளின் சொந்த பந்தங்கள் எல்லாருமே நல்ல வசதியுள்ளவர்களாகவே இருக்கிறார்கள்!

****

தமிழக காவல்துறையில் பணியாற்றும் 169 அதிகாரிகளில் 20 பேர் கோடீஸ்வரர்கள் என தெரிய வந்துள்ளது.

தமிழக காவல்துறை அதிகாரிகள் வெளியிட்ட சொத்து விவரங்களுக்கான பட்டியல் மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

இந்தப் பட்டியலில் தமிழக செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன ஐ.ஜி. ஏ.கே.விஸ்வநாதன் ரூ.15 கோடி சொத்து மதிப்புடன் முதலிடம் வகிக்கிறார். இந்தச் சொத்துகள், தனது தாயார் மற்றும் மனைவி மூலம் வந்த குடும்பச் சொத்துகள் என்று விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை டிஜிபி போலோநாத், சிபிசிஐடி ஏடிஜிபி ஆர்.சேகர், நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி டி.ராஜேந்திரன் ஆகியோர் ரூ.3 கோடிக்கும் அதிகமான சொத்துடன் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதி ரூ.2.8 கோடி மதிப்புக்கான சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த நான்கு அதிகாரிகளும் மாதம் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் பெறுகிறார்கள்.

இந்தக் கோடீஸ்வர அதிகாரிகள் அனைவரும் தங்களது பணத்தை நிலம் மற்றும் வீடு என ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டிஜிபி போலோநாத்துக்கு தில்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் வீடுகள் உள்ளன. சிபிசிஐடி ஏடிஜிபி சேகருக்கு ரூ.1.2 கோடி மதிப்பில் சென்னை அண்ணா நகரிலும், நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி டி.ராஜேந்திரனுக்கு பெசன்ட் நகரில் ரூ.75 லட்சம் மதிப்பிலும் வீடுகள் உள்ளன.

இந்நிலையில், மேற்கு மண்டல ஐஜி பி.சிவனாண்டி தனக்கு எந்த சொத்தும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி, 01/07/2011

June 25, 2011

கேஸ், டீசல் விலை அதிகரிப்பு: ‍ இந்திய கோயபல்சுகள்!

மத்திய அரசு இன்றைக்கு, கேஸ் ஒன்றுக்கு ரூ. 50/ம், டீசல் ஒரு லிட்டருக்கு ரூ. 3/‍ம், மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ. 2/‍ எனவும் விலையை ஏற்றி அறிவித்திருக்கிறது.

மத்திய அரசு சில பொய்களை திரும்ப திரும்ப சொல்வதின் மூலம் பொய்களை உண்மையாக்கப் பார்க்கிறது. கீழே ராவ் எழுதிய‌ கட்டுரை அவர்கள் திரும்ப திரும்ப சொல்லும் காரணங்களை பொய் என அம்பலப்படுத்துகிறார்.

*****

பெட்ரோல் விலை உயர்வும் : அரசின் கற்பிதங்களும்! - பி.எஸ்.எம்.ராவ்

.....

பெட்ரோலியப் பொருள்களின் விலையேற்றத்துக்கு அரசு கூறும் காரணங்கள் மூன்று. முதலாவது காரணம், கச்சா எண்ணெய் விலை. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால் அதற்கேற்றபடி பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவதைத் தவிர, வேறு வழியில்லை என்று அரசும் எண்ணெய் நிறுவனங்களும் கூறுகின்றன.

ஆனால், இதில் உண்மையில்லை. கச்சா எண்ணெயின் இப்போதைய விலை பீப்பாய்க்கு 94 அமெரிக்க டாலர்கள். கடந்த மாதத்திலிருந்து எடுத்துக்கொண்டால் சராசரியாக 100 டாலர்கள். ஒரு டாலரின் மாற்று மதிப்பு 44.9 ரூபாய். சராசரியாகக் கணக்கிட்டால் ஒரு பீப்பாயின் விலை ரூ.4,490. ஒரு பீப்பாய் என்பது 159.99 லிட்டர். ஆக ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் மதிப்பு ரூ.28.

பெட்ரோல் உற்பத்தியில் கச்சா எண்ணெய் 90 சதவீதமும் உள்நாட்டில் தயாராகும் பொருள்கள் 10 சதவீதமும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஒட்டுமொத்தமாக உற்பத்திச் செலவு ஒரு லிட்டருக்கு 30 ரூபாயைத் தாண்டாது. இந்தக் கணக்கின்படி பார்த்தால் கடந்த 2006-07-ம் ஆண்டில் உற்பத்திச் செலவு ரூ.19.47 ஆகவும், 2007-08-ம் ஆண்டில் 24.71 ஆகவும், 2008-09-ம் ஆண்டில் ரூ.26.11 ஆகவும், 2009-10-ம் ஆண்டில் ரூ. 21.75 ஆகவும் இருந்திருக்கும். அரசின் தகவல்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. வரிவகையில் அரசு எந்த லாபத்தையும் எதிர்பார்க்கவில்லை என்றால் பெட்ரோலை இதே விலைக்கே மக்களுக்குத் தந்திருக்க முடியும். அதனால் கச்சா எண்ணெயைக் காரணம் காட்டுவது போலியானது.

பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு அரசு கூறும் இரண்டாவது காரணம், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படுவதாகக் கூறப்படும் இழப்பு. கடந்த நிதியாண்டில் மட்டும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ரூ.78 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 208 கோடி நஷ்டம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் அரசு கூறுகிறது. இதன் அடிப்படையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு நியாயப்படுத்தப்படுகிறது.

இந்த வாதமும் மோசடியானது. ஏனெனில், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படுவது நஷ்டமே அல்ல. அது அரசின் விலைக்கும், இறக்குமதி விலைக்கும் இடையிலான வேறுபாடு மட்டுமே. இதை ரங்கராஜன் கமிட்டி தெளிவாக்கியிருக்கிறது. உண்மையில் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் லாபத்தில் இயங்குகின்றன என்பதை அந்தந்த நிறுவனங்களின் ஆண்டு அறிக்கையைப் பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்.

கடந்த 2006 முதல் 2010 வரையிலான நான்கு நிதியாண்டுகளில் இந்த நிறுவனங்கள் ரூ.1,26,288 கோடி லாபம் ஈட்டியிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோலிய உயர்வுக்கு அரசு கூறும் மூன்றாவது காரணம், மானியங்களால் ஏற்படும் பொருளாதாரச் சுமை. சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், டீசல் போன்றவற்றுக்கு அதிக அளவில் மானியங்கள் தரப்படுவதால் அவற்றை ஈடுகட்டும் வகையில் பெட்ரோல் மற்றும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்த வேண்டியிருக்கிறது என்று அரசு கூறுகிறது.

ஆனால், புள்ளிவிவரங்களின்படி 2006-07 முதல் 2009-10 வரையிலான நிதியாண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களுக்கு அரசு வழங்கியிருக்கும் மானியம் ரூ.23,325 கோடி. இதே காலகட்டத்தில் பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரிகள் மூலம் அரசுக்குக் கிடைத்திருக்கும் வருவாய் ரூ.4,10,842 கோடி. இதன்படி அரசு வழங்கியிருக்கும் மானியம், லாபத்தில் வெறும் 5.67 சதவீதம்தான். மாநிலங்களின் வரி வருவாயான ரூ.2,63,766 கோடியையும் சேர்த்தால் இந்த அளவு வெறும் 3.45 சதவீதம்தான்.

கிடைக்கும் லாபத்தில் சிறு துரும்பைத்தான் மானியம் என்கிற பெயரில் அரசு கிள்ளிப் போட்டிருக்கிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது. மொத்தத்தில் பெட்ரோலியத் துறை லாபம் கொழிக்கும் துறை. பெட்ரோலியப் பொருள்களின் விலைகளை உயர்த்துவதன் நோக்கம் லாபத்தை அதிகரிப்பதேயன்றி, நஷ்டத்தைச் சமாளிப்பதல்ல.

இதுதவிர டீசலில் லிட்டருக்கு ரூ.18.19, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெயில் லிட்டருக்கு ரூ. 29.69, சமையல் எரிவாயு சிலிண்டரில் ரூ.329.73 நஷ்டம் ஏற்படுவதாக அரசு கூறி வருகிறது. இப்படிப் பூதாகரமான நஷ்டக் கணக்கைக் காட்டுவதன் மூலம் மக்களின் எதிர்ப்பை அடக்கலாம் என்பது அரசின் திட்டம்.

பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவதற்கு அரசு போலியான காரணங்களைக் கூறிவருவதைப் பார்த்தால், சமையல் எரிவாயு, டீசல் போன்றவற்றின் விலையையும் கடுமையாக உயர்த்துவதே அதன் நோக்கமாக இருக்கும் என்று தெரிகிறது. இதுஒருபுறம் என்றால், முடிந்தால் எல்லா வகையான மானியங்களையும் ஒழித்துவிடவும் அரசு திட்டமிட்டு வருகிறது.

வீட்டு உபயோக எரிவாயுவுக்கு வழங்கப்படும் மானியத்தை இனிமேல் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கலாம் என்கிற திட்டம் அரசிடம் இருக்கிறது.

இதனால் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிக விலை கொடுத்து எரிவாயு சிலிண்டர்களை வாங்க வேண்டிய நிலை ஏற்படும். அதே நேரத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் மானிய விலையில்கூட எரிவாயு சிலிண்டர்களை வாங்க முடியாத நிலையில் இருப்பவர்கள் என்பதால், ஒட்டுமொத்தமாகவே மானியம் என்பது இல்லாமல் போய்விடும்.

இதுபோன்ற பெட்ரோலியப் பொருள்களில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற அரசின் கொள்கையால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி பல்வேறு சீர்திருத்தங்களை அவ்வப்போது அறிவித்து வருகிறது.

இந்த நடவடிக்கைகளில் சில, பொருளாதார வளர்ச்சியுடன் சமரசம் செய்து கொள்பவையாகக் கூட இருக்கின்றன. ஆனால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது.

ரிசர்வ் வங்கியின் கொள்கைகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்கலாம். ஆனாலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது ஒன்றே ரிசர்வ் வங்கிக் கொள்கைகளின் நோக்கம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், இதற்கு நேர் எதிராக அரசின் கொள்கைகள் இருக்கின்றன. பெட்ரோலியப் பொருள்களின் விலையை அவ்வப்போது உயர்த்துவதன் மூலமாக பணவீக்கம் உயர்வதற்கு அரசே காரணமாக இருக்கிறது. இதனால் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் எதுவும் உரிய பலனைத் தருவதில்லை.

நாடு சுதந்திரமடைந்தபோது, நமது தலைவர்கள் பெட்ரோலியத் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார்கள். அதனால்தான் அந்தத் துறை அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிற கொள்கையை வகுத்தார்கள்.

இந்தத் துறையில் அரசின் பொறுப்புகளை வலியுறுத்தினார்கள். ஆனால், எதிலும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இப்போதைய அரசு, அதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டது. கஜானாவில் பணத்தைக் கொட்டும் காமதேனுவாக மட்டுமே பெட்ரோலியத் துறையைப் பார்க்கிறது. அதன் விளைவுதான் பெட்ரோலிய பொருள்களின் அதிகப்படியான விலையேற்றமும் அதற்கு அரசு கூறும் பொருந்தாக் கற்பிதங்களும்.

தினமணி 23/06/2011 நாளிதழிலிருந்து...