December 27, 2011
வேண்டாம், அணு மின்சாரம்!
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட மக்கள் நடத்திவரும் போராட்டத்தைநாம் செய்திகளில் பார்த்துவருகிறோம். இந்த போராட்டம் சில மாத காலங்களாக நடந்துவருகிறது. இவ்வளவு மக்கள் திரண்டு வந்து இவ்வளவு நாட்களாக ஒரு விஷயத்திற்காக போராடுவதன் அவசியம் என்ன?
அணுமின் நிலையத்தில் அப்படி என்ன தான் நடந்து வருகிறது? மின்சார உற்பத்தி தான்.
பொதுவாக சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கும் டைனமோ போன்ற ஒரு பெரிய ஜெனரேட்டரை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. சைக்கிளில் நாம் பெடலை அழுத்தி, சக்கரத்தை சுற்றவைத்து, அதன் மூலம் டைனமோவை சுற்ற வைத்து மின்சாரத்தை பெறுகிறோம். மின் நிலையத்தில் இந்த வேலையை ஒரு அணையிலிருந்து பாய்ந்து வரும் தண்ணீரை கொண்டோ, நீராவியை கொண்டோ செய்கிறார்கள். நெய்வேலி மின் நிலையத்தில் நிலக்கரியை எரித்து நீரை ஆவியாக்கி அதன் மூலம் ஜெனரேட்டை இயக்கி மின்சாரம் தயாரிக்கிறார்கள். அணுமின்நிலையத்திலோ அணுவை பிளக்கும் போது உற்பத்தியாகும் வெப்பத்தைக் கொண்டு நீரை ஆவியாக்கி மின்சாரம் தயாரிக்கிறார்கள்.
அணுமின் நிலையத்தினால் என்ன நன்மைகள்?
அணுவை பிளக்கும் போது உண்டாகும் வெப்பமானது மிக மிக அதிகம். ஆகையால், சிறு அளவில் எரிபொருளைக்கொண்டு அதிக மின்சாரத்தை தயாரிக்கலாம். மேலும், டீசல், நிலக்கரி போன்ற எந்த பொருளும் எரிக்கப்படுவதில்லை. அணுமின் நிலையங்கள் மூலம் கார்பன் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் காற்றில் கலப்பதில்லை.
சரி, பிறகு ஏன் மக்கள் இதை எதிர்க்கிறார்கள்?
கார்பன் டை ஆக்ஸைடை காற்றில் கலக்காவிட்டாலும், அணுமின் நிலையத்தின் சுற்றுப்புறத்தில் அணுக்கதிர் வீச்சு இருக்க வாய்ப்பிருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை தான். ஆனால், மார்ச் மாதத்தில் ஜப்பானை தாக்கிய சுனாமி பலருடைய கண்களை திறந்துவிட்டது. சுனாமி அலை ஜப்பானின் புகோஷிமா நகரத்தின் கரையோரத்தில் இருக்கும் அணுமின் நிலையத்தை தாக்கி செயலிழக்க செய்தது. விபத்து நேரங்களில் அணுவை பிளக்கும் இயந்திரம் (நியுக்ளியர் ரியாக்டர்) ஆட்டோ மேடிக்காக நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால், உள்ளிருக்கும் எரிபொருளின் வெப்பத்தை குறைக்க தண்ணீரை உள்ளே செலுத்தும் மோட்டாரும் பழுதடைந்துவிட்டதால், எரிபொருள் உருகி, அபாயகரமான கதிர்வீச்சு சுற்றுப்புறத்தில் கலக்க ஆரம்பித்துவிட்டது. சுற்றுவட்டாரத்தில் இருந்த சுமார் ஒரு லட்சம் வெளியேற்றப்பட்டார்கள். மக்கள் இனி நீண்ட காலத்திற்கு யாரும் அங்கே வசிக்கமுடியாது. அந்தக் கதிர்வீச்சினால், மக்களுக்கு ஏற்பட்டு உள்ள பாதிப்பு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அணுக்கதிர் தாக்கினால் பலவிதமான புற்று நோய்கள் மற்றும் தோல் வியாதிகள் வரும். இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் அமெரிக்காவால் போடப்பட்ட அணுகுண்டு லட்சகணக்கானவர்களை உடனடியாக கொன்று குவித்தது. அன்றோடு முடிந்துவிடவில்லை. கதிர்வீச்சினால் பல தலைமுறைகள் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அணுமின் நிலையத்தில் விபத்து நேர்ந்தால் நம் நிலைமை என்ன ஆகும் என்று மக்கள் கவலைப்படுவது சரியே. போபாலில் 1984ல் நடந்த விபத்தில் கசிந்த விஷவாயு பலருடைய உயிரை குடித்துள்ளது. இவ்வளவு காலங்களுக்குப் பின்னும் அந்த பாக்டரியின் சிதைந்த பகுதிகள் அப்புறப்படுத்தப்படவில்லை. அணுமின் நிலைய விபத்து இதைவிட பல மடங்கு நாசத்தை ஏற்படுத்தும்.
இதெல்லாம் அரசுக்கு தெரியாதா? இருந்தும் ஏன் அணுமின் நிலையத்தை கட்டிக்கொண்டிருக்கிறார்கள்? என நீங்கள் கேட்கலாம். பெருகிவரும் மக்கள் தொகைக்கு தேவையான மின் உற்பத்தி செய்ய அணுமின் நிலையங்களே சரியான வழி என்று அரசு தரப்பில் வாதாடப்பட்டு வருகிறது. உலக அளவிலான மின்சார உபயோகத்தில் வெறும் 13 சதவிகிதமே அணுமின்சாரம். அத்துடன் அணுமின் நிலையத்தை கட்டி முடித்து அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி ஆவதற்ற்கு குறைந்த பட்சம் 10 ஆண்டுகளாவது ஆகும். அதற்குள் பல பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டியிருக்கும். இருப்பினும் பல நாட்டின் அரசுகள் அணுமின் நிலையங்களை ஏன் ஆதரிக்கின்றன?
அணு ஆயுதம் செய்வதற்கு தான்!
ஆம். அணுமின் நிலையத்தில் உபயோகப்படும் யுரேனியம் வேதியல் மாற்றத்திற்கு பின் ப்ளுடோனியமாக மாறும். ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தை செய்தும் ஒரு அணுமின் நிலையம் வருடத்திற்கு 150 - 200 கிலோ ப்ளுடோனியம் தயாரித்துவிடும். இதைக் கொண்டு எளிதாக ஜப்பானின் நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டு போல் 25 தயாரித்துவிடலாம். ஒரு அணுமின் நிலையத்தின் ஒரு வருட தயாரிப்பே இவ்வளவு என்றால், உலகில் 439 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதிலிருந்து கிடைக்கும் ப்ளுடோனியத்தை கொண்டு எவ்வளவு குண்டுகளை தயாரிக்கலாம். நினைக்கவே பயமாக இருக்கிறது.
பிறகென்ன, பல அரசுகளின் முழு ஆதரவும், அணுமின் நிலையங்களுக்கு கிடைக்காமலா இருக்கும்?
அணு ஆயுதத்தை நாம் எதிர்ப்போமேயானால், அணுமின் நிலையங்களையும் எதிர்த்தே ஆகவேண்டிய தேவையிருக்கிறது. ஆகையால், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் போராட்டத்திற்கு நம்மால் முடிந்த ஆதரவை தெரிவிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
****
கட்டுரையாளர் : பாலாஜி
நவம்பர் 2011 தோழமை இதழிலிருந்து....
Subscribe to:
Post Comments (Atom)
3 பின்னூட்டங்கள்:
test
கூடுதல் செய்தி:புகுஷிமா அணு உலையை முறையாக மூடுவதற்கு (decommissioning) குறைந்த பட்சம் 40 ஆண்டுகள் ஆகுமாம். கதிர்வீச்சு அதிகமாக இருப்பதால் மனிதர்களைக் கொண்டு இதைச் செய்ய முடியாது என்பதால் இதற்கென ரோபோக்களை உருவாக்க வேண்டும். ஆனால் அதற்கான தொழில் நுட்பம் ஜப்பானிடம் தற்போது கிடையாது. இனிமேல்தான் உருவாக்க வேண்டும. ஐப்பானுக்கே இந்த நிலை என்றால் இந்தியாவைப் பற்றி சொல்லவேண்டுமா?
அணு குண்டு தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருளை உருவாக்குவதுதான் அணு உலைகளின் முதற் தேவை. அதுவும் ஏகாதிபத்திய நாடுகளின் தேவையை பூர்த்தி செய்ய. மின்சாரம் அதன் உபரிதான்.
மிகச் சரியாகத்தான் கட்டுரையாளர் கூறியுள்ளார்.
கூடங்குளம் பற்றி மேலும் சில விவரங்கள்:
கூடங்குளம்: 'மம்மி' நாயகன் வருவானா?
http://hooraan.blogspot.com/2011/11/blog-post_21.html
அணுமின்சாரம் தேவையா ..? - ஒரு பார்வை
( http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_16.html)
புகுஷிமாவும் கூடன்குளமும் ஒன்றா ? - ஒரு ஆய்வறிக்கை
(http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_20.html)
கதிரியக்கம் என்றால் என்ன - ஒரு அறிவியல் பார்வை
(http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_18.html)
Please read all the above articles , patiently, you may understand some thing regarding Nuclear Energy
Post a Comment