இன்று பூந்தமல்லியில் ஒரு வேலை விசயமாக சென்றிருந்தேன். புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு குறித்து பேருந்தில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அவர் பேசியதின் சாரம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
உங்களுடைய காதுகளை ஒரு பொதுப்பிரச்சனைக்காக இரண்டு நிமிடம் இரவலாக தாருங்கள்.
கடந்த ஜூன் 28 அன்று நுங்கம்பாக்கம் கல்வி இயக்குநரகம் வாசலில் எங்கள் தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர்கள் ஒரு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். கோரிக்கை என்ன?
"அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி கொடு!
அனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகளையும் அரசுடைமையாக்கு!"
இந்த போராட்டத்தை காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கினார்கள். ஒரு பெண்ணை நான்கு போலீசார் வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றினார்கள். ஒரு கைக்குழந்தையை ஒரு அதிகாரி கழுத்தைப் பிடித்து தூக்கினார். இதையெல்லாம் அனைத்து தொலைக்காட்சி சானல்களிலும், பத்திரிக்கைகளிலும் நீங்களே பார்த்தீர்கள்.
இப்பொழுது நிலைமை என்ன?
ஒவ்வோரு ஆண்டும் 10வது, 12 வது தேர்வு முடிவுகள் வெளியே வரும் பொழுது தோல்வியடைந்த மாணவர்கள் ஒன்றிரண்டு பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அது போல ஜூனில் பள்ளி, கல்லூரிகள் துவங்கியதுமே தங்களது பிள்ளைகளுக்கு கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத பெற்றோர்கள் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
இந்த அவல நிலை ஏன் ஏற்பட்டது? கடந்த 20 ஆண்டுகளில் அரசு கல்விக்காக ஒதுக்கும் மானியங்களை படிப்படியாக வெட்டிக்கொண்டே வருகிறது. விளைவு புற்றீசலைப் போல தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகிபோய்விட்டன. எவனெல்லாம் கள்ளச்சாராயம் காய்ச்சினானோ, கந்துவட்டிக்கு பணத்தை கொடுத்து மக்களை கொள்ளையடித்தானோ, சாதி சங்க தலைவனோ அவனெல்லாம் இந்த 20 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து கல்வித்தந்தையாகவும், கல்வி வள்ளலாகவும் வளர்ந்து நிற்கிறார்கள்.
தான் வாழ்நாள் முழுவதும் சிறுக சிறுக சேமித்த பணத்தையெல்லாம் தன்னுடைய ஒரு பிள்ளையை கல்லூரியில் சேர்க்க செலுத்துகிறார்கள்.
கடந்த காலங்களில் மன்னர்களுடைய, நிலப்பிரபுக்களுடைய குலக்கொழுந்துகள் தான் படித்தார்கள். ஒரு விவசாயினுடைய, தச்சருடைய குழந்தையோ படிக்க வாய்ப்பே இல்லை.
அது போல, இன்றும் காசு இருப்பவர்களுக்கு தான் கல்வி என மாறிவருகிறது. எதிர்காலத்தில் உழைக்கும் மக்களுடைய குழந்தைகள் படிக்க முடியாத நிலை உருவாகி கைநாட்டாக மாறும் நிலை உருவாகி வருகிறது.
இந்த அவல நிலையை மாற்ற, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர்
தமிழகத்தில் ஐந்து இடங்களில் மாநாடு நடத்துகிறார்கள். சென்னையில் ஜூலை 17 அன்று மதுரவாயிலில் எம்ஜிஆர் பல்கலை கழகம் எதிரே எஸ்.வி. மகாலில் மாநாடு நடத்துகிறார்கள். சமூக அக்கறை கொண்ட பேராசிரியர்கள், கல்வியியலாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இது ஒரு நீண்ட நெடிய போராட்டம். இந்த போராட்டத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்! நன்றி!"
மக்கள் அருமையான ஆதரவு தந்தார்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment