> குருத்து: சென்னையின் 'அழகிய' சுவர்கள்!

February 11, 2013

சென்னையின் 'அழகிய' சுவர்கள்!

//சென்ற வாரம் எழுதியிருந்தது போல போஸ்டர் ஒட்டுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு மாநகராட்சியின் பக்கத்திலிருந்து வெளிவந்த விஷயத்திற்கு பிறகு கண்ட் இன்னொரு நல்ல விஷயம் கோயம்பேடிலிருந்து, அசோக் நகர் வரை மெட்ரோ ரயில் மறைப்புகளின் மீது ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டிருந்ததுதான். தொடர்ந்து இதே போல சென்னையின் மேம்பால சுவர்கள் மீது ஒட்டப்படும் போஸ்டர்களின் மீதும் நடவடிக்கை எடுத்தால் சென்னை அழகுறும். செய்வீர்களா மேயர் சார்..?

- பதிவர் கேபிள் சங்கர்

*****

சென்னையில் முக்கிய வீதிகளில் இருக்கும் சுவர்களில் தமிழ் மன்னர்களின் 'கொடை வள்ளல்' மற்றும் இன்னபிற சிறப்புகள், தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் அழகிய ஓவியங்கள் 'அலங்கரித்து' இருக்கின்றன. சென்னையை அழகுப்படுத்தும் பணிகளில் இந்த பணியும் உள்ளடங்கியது. இனி, இந்த 'அழகான ' சுவர்களில் சுவரொட்டி ஓட்டக்கூடாது. மீறினால், கைது, சிறை என சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டே அறிவித்துவிட்டது.

சென்னையை 'அழகுப்படுத்துதல்' பற்றியே நாம் தனியாக பேச வேண்டும். இப்பொழுது நான் சொல்ல வருவது வேறு.

சுவர்களை வெறும் சுவர்களாக பார்த்தவர்களா நீங்கள்? எனக்கு சுவர்கள் அப்படி இல்லை. இந்த சமூகம் ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கின்றன? ஏன் இத்தனை கோளாறுகள்? இதை சரி செய்ய முடியாதா? சரி செய்வது என்றால் எப்படி என்று தேடுதலோடு திரிந்து கொண்டிருந்தேன். தேடுதலோடு திரிந்த என்னை, பாதைக்காட்டி அழைத்துச் சென்றது சுவர்கள் தான்.

நான் வாழ்ந்த பகுதியில், பட்டிமன்றமா? வழக்காடு மன்றமா? கலை நிகழ்ச்சியா அல்லது பொதுக்கூட்டமா? எல்லாவற்றையும் எனக்கு தெரிவித்தவை சுவர்கள் தான். தினம் ஒரு நிகழ்ச்சி. இன்றைக்கு ஒரு சரியான அமைப்பை வந்தடைய உதவியவை சுவர்கள் தான்.

சுவர்களை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள்? வாக்கு அரசியல் கட்சிகள். கொள்கை இல்லாது போனதால், தன் தலைவர்களின், வீரத் தளபதிகளின் மூஞ்சிகளை வரைந்து வைக்கிறார்கள். செத்துப்போன பிறகும், இன்று வரைக்கும் சுவரை கெட்டியாக பிடித்திருப்பது தொப்பி எம்.ஜி.ஆர். இன்னும், விளம்பர சுவரொட்டிகள் மற்றும் மாற்று அரசியலை மக்களிடையே கொண்டு செல்லும் ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர அமைப்புகள்.

இப்படி சுவர்களை தடை செய்வதின் மூலம், யாருக்கு உண்மையிலேயே இழப்பு? வாக்கு அரசியல் கட்சிகள் இப்பொழுது தனித்தனியாகவே தொலைக்காட்சி அலைவரிசையை சொந்தமாக வைத்திருக்கின்றன. அவ்வளவு வசதியில்லை என்றாலும், பத்திரிக்கைகளை சொந்தமாக வைத்திருக்கின்றன. தன் சரக்குகளை விற்பனை செய்யும் விளம்பரதாரர்கள் வேறு ஊடகங்களுக்கு எளிதாக நகர்ந்துவிடுவார்கள். பணம் கொஞ்சம் கூடுதலாக செலவழியும். அவ்வளவு தான். உண்மையில் பாதிப்பு என்பது முற்போக்கு, புரட்சிகர சக்திகளுக்கு தான்? தனது நிகழ்ச்சி நிரலை பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால், தேசிய நீரோட்டத்தில் கலந்து அவர்களோடு அந்த ஜனநாயக சகதியில் படுத்து உருண்டால் தான், சின்ன செய்திகளை கூட வெளியிடுவார்கள். இல்லையென்றால், இருட்டடிப்பு தான்.

இதனால் தான், அரசு, தன்னைப் பார்த்து கேள்வி எழுப்புகிற, குடைச்சலை தருகிற சுவர்களை, 'அழகிய' ஓவியங்கள் மூலம் தடை செய்கின்றன. இனி, மக்களை சென்றடைய புதிய 'சுவர்களை' நாம் கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால், பழைய 'அழகில்லாத' சுவர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும்.

0 பின்னூட்டங்கள்: