> குருத்து: May 2013

May 14, 2013

ராஜூ என்றழைக்கப்பட்டவர்

றேழு மாதங்களுக்கு முன் அண்ணன் வீட்டில், மாத்திரை சாப்பிடுவது சம்பந்தமாக அண்ணன் கூறிய கடுமையான வார்த்தைக்கு கண்களில் நீர் கோர்க்க அப்பா கூறிய வார்த்தைகளை இங்கே எழுத விரும்பவில்லை. 'எப்படி வாழ்ந்தவன் நான்' என்று அவர் நினைத்திருக்கக் கூடும். அதனால் தான் வேளாவேளைக்குச் சாப்பாடும் இரவில் இன்சுலினும் மருந்து மாத்திரைகளும் கிடைத்தாலும் அவரால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. அவருக்குத் தேவைப்பட்டது கொஞ்சம் மரியாதையான சுதந்திரம். சட்டென்று ஒருநாள் ஆட்டோ ஏறி அவனியாபுரம் சென்று விட்டார். அங்கே சற்று வசதிக் குறைவிருந்தாலும் நிம்மதியாக இருந்திருப்பார். ஏனென்றால் அவனியாபுரம் வீட்டில் தம்பி சொல்வதை அவர் சட்டை செய்பவரல்ல.

அவர் அவனியபுரத்திலிருந்த நாட்களில் நான் அவரைப் பார்க்கப் போகவேயில்லை. ஒரு வசதியும் இல்லாத இடத்திலிருந்து கொண்டு சங்கடப்படுத்துகிறார் என்ற கோபம். நான் என்ன நினைத்தால் என்ன, அவர் மூர்த்தியின் மடியில் உயிர் பிரியும் வரையில் அவர் நினைத்ததையே செய்தார். பணம், கவனிப்பு, வசதி போன்றவற்றினால் கட்டுபடுத்தப் படாது உயிர் பிரியும் வரையிலும் தான் நினைப்பதைச் செய்யும் சுதந்திரமே ஒருவருக்கு தேவை போல.

அவர் அவனியாபுரம் செல்வதற்கு முந்தைய மாதங்களில், இரவுகளில் அவருக்குப் பணிவிடை செய்தது எனது குற்ற உணர்ச்சியை சிறிது குறைக்கிறது. இரவு ஆறேழு தடவை சிறுநீர் கழிப்பார். 'யப்பா' என்றவுடன் எழுந்து கொண்டுபோய் கழிவறையில் விடவேண்டும். இல்லையென்றால் படுக்கையில் போய்விடுவார். மீறிப் போய் விடும் தருணங்களில் காலை எழுந்ததும் பார்த்து  மிகவும் வெட்கமாய்ப் போய்விடும். அசிங்கமாகவும் உணர்ந்தார். விஷயம் கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது என்ற உணர்வே முதுமையின் துன்பம். வெட்கமும் இறுக்கமும் கொண்டவர்க்கு சாவே விடுதலை.

ஆனால் அப்பா அதை மருந்துகளின் துணை கொண்டு வெல்ல நினைத்தார். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவர் ஏதேனும் ஒரு மாத்திரையை தினந்தோறும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எனது சிறு வயதில் LIV 52, Digene, Gelusil போன்றவையோடு பிரச்சினைக்குத் தக்க வேறு மருந்துகளும் தொடர்ந்து எடுத்து வந்தார். டாக்டர் சொன்னதை ஒழுங்கு பிறழாது செய்தார். கடைசி நாட்களில், சிறுநீரகம் பழுதாகிவிட்டது என்றும் மருந்துகளால் இனி பலனில்லை என்றும் டாக்டர் சொல்ல, இவர் டாக்டரையே மாற்றிவிடலாம் என்றார். அதே பிடிவாதம் தான் நான் 3 வயதில் போலியோ தாக்கி நடக்க முடியாமல் போனபோது அவரைப் பல  இடங்களுக்கும் என்னைச் சுமக்க வைத்திருக்கிறது. டாக்டர்கள் கைவிரித்த போதும் சோராமல் பலனே அளிக்காத பலவிதமான எண்ணைகளையும் எனது மெலிந்த கால்களில் இரவு தூங்காமல் தேய்த்து விட்டிருக்கிறார்.

மாத்திரைகள் பொய்க்காது என்ற தீவிர நம்பிக்கை அவருக்கு கடைசிவரை இருந்தது. அல்லது நம்பிக்கை கொள்ள ஏதேனும் அவருக்குத் தேவைப் பட்டிருக்கலாம். மருந்துகளால் பலனில்லை என்றால் உபாதைகளை என்ன செய்வது என்ற பயங்கரம் அவரைச் சூழ்ந்திருக்கும். அலோபதியினால் அதைக் கடக்க முயன்றார். சிறிய மாத்திரை டப்பா பெரியதாகி அவர் இறக்கும் போது அது மாத்திரைப் பட்டைகளால் நிரம்பிக் கிடந்தது.

அப்பாவுக்கு இரு மனைவிகள். பெரியம்மாவுக்கு குழந்தை இல்லாததால், பெரியம்மாவின் தங்கையை மனம் செய்தார். அக்காலகட்டத்தில் பணம் கொழித்திருக்கிறது. மாமனாருடைய நிலங்களை மீட்டிருக்கிறார். புதிதாக நிலங்கள் வாங்கியிருக்கிறார். சகலைகளுக்கு உதவியிருக்கிறார். அப்போது அவருடைய பரோபகாரம் வயல்சேரியிலும் அவனியாபுரத்திலும் பிரசித்தம். பலருக்கும் படிக்க உதவியிருக்கிறார். அம்மாவின் சகோதரி பிள்ளைகளுக்கு மணம் செய்வித்திருக்கிறார். இதில் அம்மாவின் முனைப்பும் அதிகம். அப்போதெல்லாம் வீட்டில் உலை கொதித்தபடியே இருக்கும். சோற்றுச் சட்டி கழுவிக் கவிழ்த்தப் பட்டதேயில்லை. வெவ்வேரளவான பானைகளில் சுடுசோறோ பழையதோ இல்லாமல் போகாது.

அப்பா செல்வத்தின் வனப்பையும் வறுமையின் கோரத்தையும் எங்களுக்குக் காட்டினார். மூத்த அக்காவின் பூப்புனித நீராட்டு விழா ஒரு கல்யாணத்தைப் போல பெரும் செலவில் நடத்தப் பட்டது. கடைசித் தம்பியின் பிறந்த நாளன்று, 31 வருடங்களுக்கு முன், தொழில் சகாக்களின் பரிசுகளாக அவனுக்கு ரெடிமேட் ஆடைகள் குவிந்தது நினைவில் உள்ளது. இன்னொருபுறம் 90களில் அன்றாட உணவுக்கே பெரும் சிரமம். நான் பத்தாவது படித்த காலத்தில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் உணவு இருக்கும் என்பது நிச்சயமில்லை. அப்பா இரவு வீட்டிற்கு வந்த பிறகே சாப்பாடு. ஆனாலும் எக்காலத்திலும் எந்தச் சூழலிலும் மனதை விட்டவரல்ல. தனக்கு முன்னைப் போல பணமீட்டித் தராத தொழிலையே தினந்தோறும் ஒரு தவம் போலச் செய்தார். பட்டதாரி மூத்த பிள்ளைகளின் பொறுப்பின்மையையும் சகித்தவாறே அதைச் செய்தார். ஒருபோதும் மூத்த பிள்ளைகளை வேலைக்குச் செல்லக் கடிந்ததில்லை. என்னால் முடிந்த அளவு நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற தோரணையிலேயே இருந்தார். அந்தக் காலகட்டத்தில் செல்வம் அக்காவே ஒரு தாயைப் போல எங்களைப் பராமரித்தார். அவர் மணமாகிச் சென்ற 1998 வரையிலும் நான் எனது துணிகளைக் கூட துவைத்ததில்லை.இறப்பதற்கு கொஞ்ச காலம் முன்பு வரையிலும் கூட சம்பாதிக்க முடியும் என்று நம்பினார். ஆனால் 90கள் 70 கள் அல்ல என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஆட்ட விதிகள் வேகமாக மாறிக்கொண்டிருந்ததை அவர் உணர மறுத்தார். அல்லது தன் வழியே சிறந்தது என்று நம்பியிருக்கலாம்.

இது எல்லாவற்றுக்கும் மேலாக அம்மாவின் பிரிவு அவரைப் பாதித்தது. அதை ஒருபோதும் அவர் வெளிக்காட்டிக் கொண்டதில்லை என்றபோதும். 1989 என்று நினைக்கிறேன். அம்மா எங்களைத் தனியே விட்டுச் சென்றார். மனைவியற்று 6 பிள்ளைகளுடன், வயது வந்த இரண்டு பெண்களோடு, அப்பா தனியே நின்றார். அதிலிருந்து அம்மா இறந்த 2007 வரைக்கும் பிரிவு பற்றிய உளைச்சல் எதுமற்றவராகவே காட்டிகொண்டார். ஒருவேளை அம்மாவின் இறப்பு அவருக்கு ஆசுவாசத்தைக் கொடுத்திருக்கக் கூடும். அதன் பிறகே அவனியாபுரத்தில் தனது சொந்த வீட்டில் கால் வைத்தார்.

தனது சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து தனியே வாழ்ந்து ஒரே ஒரு தங்கையை மணம் செய்வித்திருக்கிறார். இளம் வயதில் பேபி என்ற பெண்ணைக் காதல் மணம் செய்திருக்கிறார். பதிவுத் திருமணமா என்று தெரியவில்லை. அந்த உறவு சிறிது காலமே நீடித்தது. பிரிவின் காரணம் தெரியவில்லை. வாழ்க்கை முழுவதுமே பெண்களுடனான அவரது உறவு நீடிக்காத வகையில் அவர் சபிக்கப் பட்டிருந்தார். பிரிவுகளை உள்ளூர ரசித்தாரா என்று தெரியவில்லை.

புத்தகம் படிக்கும் பழக்கமோ சினிமா, இசை போன்றவற்றைச் சிலாகித்துப் பார்க்கும் வழக்கமோ இருந்ததில்லை. நீண்ட காலத் தோழர் என்று யாருமில்லை. தனியான பொழுதுகளில் என்ன செய்திருப்பார் என்று யோசிக்கிறேன். இளம் வயதில் அவர் நாடகங்களில் நடித்திருக்கிறார் என்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது.

யாருடைய வழிகாட்டுதலோ குறைந்தபட்சக் கட்டுப்பாடுகளோ ஏதுமின்றியே அவர் வளர்ந்தார். எங்களையும் அப்படியே வளர்த்தார். பாவனை மிகுந்த தாயின் பாசமோ தந்தையின் கண்காணிப்போ இல்லாமலே நாங்கள் வளர்ந்தோம். சக நண்பர்களின் வீட்டில் அவர்களது பெற்றோர் அவர்கள் மீது காட்டும் கரிசனமும் சுமத்தும் கட்டுப்பாடுகளும் எனக்கு மிக அந்நியமாகத் தோன்றும். நானோ ஒரு காட்டுச் செடியைப் போல வளர்ந்தேன்.
அவர் வளர்ந்த விதம் அவரை எப்போதும் தனியனாக உணரச் செய்தது போலும். நானும் சில சமயம் நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருக்கையிலும் தனியனாகி விடுகிறேன். சட்டென்று தொடர்பறுந்தது போல.

சில வருடங்களுக்கு முன் அப்பாவின் நில விவகாரம் தொடர்பாக வயல்சேரி சென்றபோது அப்பாவின் இன்னொரு பரிமாணத்தை அங்கிருந்த பெரியவர்கள் சொல்லக் கேட்டேன். அவரது இளம் வயது அந்தரங்க வாழ்க்கையின் சில கீற்றுகள் தெறித்துப் பறந்தன. கிராமத்துச் சனங்கள் சம்பவங்களை மென்று மென்று சீரணிக்கத் தோதாக்கி விடுகிறார்கள்.

கிறிஸ்துமஸ் தினம் அதிகாலை 3.30 மணிக்கு மூர்த்தி மொபைலில் கூப்பிட்டபோது அப்பா இறந்து விட்டாரென்று மனம் சொல்லியது. அனால் அவருக்கு சர்க்கரை குறைந்து உடல் மயங்கியதே பிரச்சினை. பிறகு சர்க்கரை தண்ணீர் கொடுக்கச் சொல்லி எல்லாம் சரியாகி விட்டாலும் மனம் அமைதியற்றுக் கிடந்தது. அவரது இறப்பை மனம் வேண்டியதா? பிறகு பத்தரை மணியளவில் மீண்டும் பிரச்சினையாகி மூர்த்தி மருத்துவமனை செல்ல ஆட்டோ கூப்பிட முனைய அவர் வேண்டாம் என்றிருக்கிறார். 'இது வேற மாதிரி இருக்கு' என்றவர் கழிப்பறை கூட்டிச் சென்று வந்த பிறகு இறந்துபோனார்.

சென்னையிலிருந்து விரட்டிக்கொண்டு இரவு 7 மணிபோல அவனியாபுரம் சேர்ந்தபோது, தான் வாங்கிக் கட்டிய வீட்டின் முன்னறையில் குளிர் பெட்டியில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். பெற்றோரின் அண்மையின்றி வளர்ந்து சம்பாதித்து, ஒரு தங்கையை மனம் செய்வித்து, செல்வமீட்டி, காதல் புரிந்து, பிள்ளைகள் பெற்று, மனைவியைப் பிரிந்து, ஒரு கொந்தளிப்பான வாழ்கையைத் தனியே எதிர்கொண்ட மனிதனின் உடல். எந்த உணர்வும் அற்றதாக நான் அக்கணத்தை உணர்கிறேன். அமைதி கொள்ளுங்கள் அப்பா, இந்த அபத்த வெளியில் நீங்கள் செய்யக்கூடியது இனி ஏதுமில்லை.  

- வரதராஜன்,

விடயங்கள் தளத்திலிருந்து...

பிரார்த்தனை!


குற்றாலத்தில் மழை!
மதுரையில் மழை! ‍ என‌
கடந்தவாரம்
செய்தி கண்ணில்பட்டது.

மழைப் பார்த்து
மாதங்களாயிற்றே!
மழை பார்க்க
ஆசை வந்தது!

நேற்றிரவு ‍ யாரோ
எழுப்பியது போல எழுந்தேன்.
'சோ' வென பெரும்மழை
பூமியை நனைத்துக்கொண்டிருந்தது!

மழை விட்ட பிறகு தான்
தூங்கப்போனேன்!

May 3, 2013

இ.பி.எஃப். ஓய்வூதியம் போதாது!


வருங்கால வைப்புநிதி திட்டத்தின் (இ.பி.எஃப்.ஓ.) கீழ் வரும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை இப்போதுள்ள தொகையிலிருந்து ரூ.1,000 ஆக உயர்த்துவது, இத் திட்டத்தில் சேருவதற்கான ஊதிய வரம்பை ரூ.15,000 வரை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் உத்தேச நடவடிக்கைகளால் ஓய்வூதியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை.
ஒருவருடைய மாத ஊதியம் 50,000 ரூபாயாக இருந்தாலும் அல்லது அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாயாகவே இருந்தாலும் அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,600 தான் அவரால் பெற முடியும்.
மாதாந்திர ஓய்வூதியத்தை நிர்ணயிக்கக் கடைப்பிடிக்கப்படும் சூத்திரத்தை நினைவுபடுத்திக்கொள்வோம். ஓய்வூதியம்பெற "தகுதியான' மாத ஊதியத்துடன், அந்த ஊழியர் எத்தனை ஆண்டுகள் பணி புரிந்தாரோ அத்தனை எண்ணிக்கையால் பெருக்கி, எழுபதால் வகுக்க வேண்டும். அப்படி வரும் ஈவுத்தொகைதான் அவருடைய மாதாந்திர ஓய்வூதியம்.
ஓய்வூதியம் கணக்கிட அனுமதிக்கப்படும் மாதாந்திர ஊதியம் ரூ.6,500 மட்டுமே. அதற்கு மேல் தொழிலாளர் எவ்வளவு ஊதியம் பெற்றாலும் அவருடைய ஊதியம் வெறும் 6,500 ஆக மட்டுமே அதிகபட்சம் கணக்கில் கொள்ளப்படும். இந்த அளவே 1952-இல் வெறும் 300 ரூபாயாக மட்டுமே இருந்தது. இதை படிப்படியாக உயர்த்தி 2001-இல் ரூ.6,500 ஆக உயர்த்தியிருக்கிறார்கள்! இந்த அடிப்படையில்தான் ஓய்வூதியத்துக்கு "சந்தா' வசூலிக்கப்படுகிறது. தொழிலாளர் அல்லது ஊழியர் தன் பங்குக்குச் செலுத்தும் தொகையுடன் ஆலை நிர்வாகமும் ஒரு பங்கைச் செலுத்த வேண்டும்.
இதில் நிர்வாகத்துக்கு ஒரு சலுகையும் தரப்பட்டிருக்கிறது. அதாவது, அவர்கள் தங்கள் பங்குக்குரிய குறைந்தபட்ச தொகையைக் காட்டிலும் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் அதிகமாகச் செலுத்தலாம். ஆனால் நடைமுறையில் எந்த முதலாளியும், ஆலை நிர்வாகமும் அரசு நிர்ணயித்தத் தொகையைவிட சல்லிக்காசு கூட அதிகம் தருவதில்லை. அதிகம் தருவது இருக்கட்டும், தொழிலாளர் ஓய்வூதியத்துக்குத் தர வேண்டிய சந்தாவையே பலர் ஒழுங்காகச் செலுத்துவதில்லை!
1995-இல் வேலைக்குச் சேர்ந்து, 35 முழு ஆண்டுகள் பணிபுரிந்து 2030-இல் ஓய்வு பெறும் ஊழியர்கூட, இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ.3,250 தான் ஓய்வூதியம் பெற முடியும். இப்போது மாதந்தோறும் ரூ.1,600 ஓய்வூதியம் பெறுவோரும் 2030-இல் ரூ.3,250 பெறுவோரும் எப்படி, யார் தயவும் இல்லாமல் காலம்தள்ள முடியும்? ஆனால் துயரம் என்னவென்றால் இப்போது பெரும்பாலானவர்கள் இந்த ரூ.1,600-ஐக் காட்டிலும் மிகக் குறைவாகவே பெற்றுவருகின்றனர்.
தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் சமீபத்தில் மாநிலங்களவையில் தெரிவித்த தகவல்களின்படி, ஓய்வூதியர்களில் 83 சதவீதம் பேர் மாதம் ரூ.1,000-க்கும் குறைவாகவும், அதிலும் 27 சதவீதம் பேர் மாதம் ரூ.500-க்குக் குறைவாகவும் பெறுகின்றனர்!
இப்போது இந்த மாதாந்திர ஓய்வூதியத் தொகையின் குறைந்தபட்ச அளவை 1,000 ரூபாயாக உயர்த்த உத்தேசித்திருக்கிறார்கள். இதை "ஓய்வூதிய அமல் குழு' பரிந்துரைத்திருக்கிறது. தொழிலாளர் வைப்புநிதியத்தின் மத்திய அறக்கட்டளை உறுப்பினர்களைக் கொண்ட துணைக்குழுதான் இந்த ஓய்வூதிய அமல் குழு. குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும், தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்துக்கான சந்தாவை மேலும் 0.63 சதவீதம் அரசு உயர்த்திச் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
ஓய்வூதியம் கணக்கிடுவதற்கான மாதாந்திர ஊதிய அதிகபட்ச அளவை இப்போதிருக்கும் ரூ.6,500-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
இப்படி உயர்த்தினால் மாதாந்திர ஓய்வூதியம் அதிகபட்சம் ரூ.7,500 கிடைக்கக்கூடும்.
அப்படியே இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டு மாதாந்திரம் ரூ.7,500 ஓய்வூதியம் அளித்தால்கூட இப்போதுள்ள விலைவாசியில் முதியவர்கள் அதைக் கொண்டு உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் ஆகிய செலவுகளைச் சமாளிப்பது கடினம்தான். தனக்கிருக்கும் நிதி நெருக்கடியில் இந்த அளவுக்கு ஓய்வூதியத்தை உயர்த்துவது இயலாதது என்று அரசு கை விரிக்கிறது.
ஓய்வூதியத்துக்கு தொழிலாளி அல்லது ஊழியர் மாதந்தோறும் தன்னுடைய ஊதியத்தில் 12 சதவீதத்தை "சந்தா'வாக அளிக்கிறார். ஆலை நிர்வாகம் அல்லது முதலாளி, ஊழியரின் மாதாந்திர ஊதியத்தில் 3.67 சதவீதம் அளவுக்கு மட்டுமே தன்னுடைய பங்காகச் செலுத்துகிறார். இவ்விதம் மொத்தம் 15.67 சதவீதம் "சந்தா'வாகச் செலுத்தப்படுகிறது. "ஓய்வூதிய நிதி'யத்துக்கு ஆலை நிர்வாகம் அல்லது முதலாளி சார்பில் 8.33 சதவீதம் செலுத்தப்படுகிறது. மத்திய அரசு 1.16 சதவீதம் செலுத்துகிறது. மொத்தம் 9.49 சதவீதம்.
(ஓய்வூதியச் சந்தா வேறு, ஓய்வூதிய நிதியம் வேறு என்பதை மனதில் கொள்ள வேண்டும்). மேலோட்டமாகப் பார்த்தால் ஓய்வூதிய நிதிக்கு தொழிலாளர் ஏதும் செலுத்துவதில்லை, ஆலை நிர்வாகம் அல்லது முதலாளி தரப்பும் அரசும்தான் செலுத்துகிறது என்று தோன்றும். ஆலை நிர்வாகம் சட்டப்பூர்வமாக, தான் செலுத்த வேண்டிய ஓய்வூதியப் பங்களிப்பைத்தான் இரண்டு பிரிவுகளாகப் பிரித்துச் செலுத்துகிறது. வைப்பு நிதிக்கு ஒரு பங்கையும் ஓய்வூதியத்துக்கு ஒரு பங்கையுமாக பிரித்துச் செலுத்துகிறது. ஓய்வூதியம் இல்லையென்றால் இந்தத் தொகையும் வைப்புநிதியிலேயே சேரவேண்டும். உண்மையில், இந்த ஓய்வூதியப் பிடித்தம் காரணமாகத் தொழிலாளர்தான் வைப்பு நிதியில் கணிசமான தொகையை இழக்கிறார்.
2009 முதல் 2012 வரையிலான மூன்றாண்டுகளுக்கு "வருங்கால வைப்பு நிதி'யில் 1.51 லட்சம் கோடி ரூபாய் சேர்ந்தது. "ஓய்வூதிய நிதி'யத்தில் 0.38 லட்சம் கோடி ரூபாய் சேர்ந்தது.
2012 மார்ச் வரையிலான காலத்தில் வைப்பு நிதி (பிராவிடண்ட் பண்ட்), ஓய்வூதிய நிதியம் (பென்ஷன் பண்ட்) ஆகியவை முறையே ரூ.2.37 லட்சம் கோடியாகவும் ரூ.1.62 லட்சம் கோடியாகவும் இருந்தன.
இதைப் பார்க்கும்போது பிரம்மாண்டமான தொகையாகத் தெரிகிறது. ஆனால் இப்போதுள்ள ஓய்வூதியர்களுக்கு நடப்புக் கணக்கில் ஓய்வூதியம் வழங்கவே பணம் பற்றாக்குறையாக இருக்கிறது!
ஓய்வூதிய திட்டத்தைப் பரிசீலித்த சில நிபுணர்கள், குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை - தொழிலாளர்கள் தங்களுடைய கடைசி பணியாண்டில் வாங்கிய கடைசி 12 மாத சராசரி ஊதியத்தின் பாதியளவு வரை உயர்த்தலாம் என்று கூறியுள்ளனர்.
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் 102-வது வழிகாட்டு நெறியின்படி, தொழிலாளரின் "வைப்புநிதி பிடித்தத்துக்குரிய' ஊதியத்தில் சரிபாதியை மாதாந்திர ஓய்வூதியமாகத் தரலாம் என்று கூறுகிறது. ஆனால் இதை ஏற்றால் நியாயம் கிடைக்காது.
ஏனென்றால் இந்தியாவில் "வைப்புநிதி பிடித்தத்துக்குரிய ஊதியம்' மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. உண்மையான ஊதியத்தின் சரிபாதியைவிட, வைப்பு நிதி ஊதியத்தின் சரிபாதி மிகமிகக் குறைவாக இருக்கிறது.
இ.பி.எப்.ஓ. அமைப்பு உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களைச் சந்தாதாரர்களாகவும் ஓய்வூதியதாரர்களாகவும் பெற்றிருப்பதாக பெருமை பேசுகிறது. இது ஓரளவுக்கு உண்மையும் கூட. 6.91 லட்சம் தொழில் அமைப்புகள் சந்தா செலுத்துகின்றன.
2012 மார்ச் 31 கணக்கின்படி 8.55 கோடி தொழிலாளர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். 41 லட்சம் பேர் மாதாந்திர ஓய்வூதியம் பெறுகின்றனர். செயல்படாத கணக்கில் மட்டும் ரூ.22,636.57 கோடி குவிந்து கிடக்கிறது!
எனவே தொழிலாளர் அல்லது ஊழியர் தனது பதவிக் காலத்தின் கடைசி கட்டத்தில் வாங்கும் ஊதியத்தில் சரிபாதியை ஓய்வூதியமாக அளிப்பதை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். "மக்கள் நல அரசு' தன்னுடைய கடமையைச் செய்யாமல் பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது. ஓய்வூதிய நிதியத்துக்கு அரசு இப்போது தரும் தொகையை மேலும் உயர்த்தவேண்டும். ஆலை நிர்வாகங்களையும் மேலும் அதிகம் சந்தா செலுத்தச் சொல்ல வேண்டும். பெரிய தொழில் நிறுவனங்களின் பங்களிப்பைக் கணிசமாக உயர்த்த வேண்டும். ஓய்வூதியர்கள் கெüரவமாக தலைநிமிர்ந்து வாழ்வதை உறுதி செய்வது சமுதாயக் கடமையாகும்.

- பி.எஸ்.எம். ராவ்
நன்றி : தினமணி

May 2, 2013

“சாதி: ஆதிக்க அரசியலும் அடையாள அரசியலும்”


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வெளியீடு,

விலை ரூ. 60.00

நூலின் முன்னுரை

நாய்க்கன் கொட்டாயில் ஒரு கொடிய வன்கொடுமைக் குற்றத்தை அரங்கேற்றியது மட்டுமின்றி, சாதி கடந்த திருமண எதிர்ப்பு, வன்கொடுமைச் சட்ட எதிர்ப்பு என்று ஆதிக்க சாதி வெறியர்கள் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். வன்னிய சாதிப் பெண்களைக் காதலித்த தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் திட்டமிட்டு கொல்லப்படுகின்றனர். இவையனைத்துக்கும் இன்று தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கும் பா.ம.க தலைவர் ராமதாசு, 90 களின் துவக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமையின் நாயகனாக காட்டப்பட்டவர்.

எண்பதுகளின் இறுதியில் வன்னியர் சங்கத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசியல் அரங்கில் இறக்கியபோதே, அதன் சாதிய பிழைப்புவாத முகத்தை புதிய ஜனநாயகம் அம்பலப்படுத்தியது. இருப்பினும் எம்.ஜி.ஆருக்கு வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் கட்சியும் கொள்கையும் தயார் செய்து கொடுத்தது போலவே, ராமதாசுக்கு புரட்சி வேசம் கட்டி விடுவதற்கு ஏராளமான அறிஞர்களும் பேராசிரியர்களும் வரிசையில் நின்றனர்.

“இழக்கப் போவது சாதிகளை மட்டுமே! அடையப் போவதோ பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி அதிகாரம்!” “ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே, ஒன்று சேருங்கள்! ஆளும் பாசிச கும்பல்களைத் தூக்கி எறியுங்கள்!” என்ற முழக்கங்களை பா.ம.க. மீது சுமத்தி, ராமதாசுக்கே தோன்றாத கோணங்களில் இருந்தெல்லாம் அவரது ஒவ்வொரு அசைவுக்கும் அறிவாளிகள் பொழிப்புரை போட்டனர். நிறப்பிரிகை கனவான்கள், ப.கல்யாணி, பழமலய், பிரபஞ்சன், பெருஞ்சித்திரனார், புலவர் கலியபெருமாள் பெ.மணியரசன், பழ.நெடுமாறன், தியாகு, சுப.வீ என இவர்களுடைய பட்டியல் மிக நீண்டது. இட ஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதி, சாதி ஒழிப்பு, நாடாளுமன்ற முறை மூலம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் ஆகியவை சாத்தியம் என்ற மாயையை உருவாக்குவதில் மாஜி புரட்சியாளர்கள், மற்றும் அறிவுத்துறையினர் முன்னிலை வகித்தனர்.

சாதிய, வர்க்க ஒடுக்குமுறையை நிலைநிறுத்தும் பொருட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, ஊட்டி வளர்க்கப்படும் மேற்படி அரசு அமைப்பு, சமத்துவத்தையோ, ஜனநாயகத்தையோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இத்தகைய அரசு அமைப்பை தாக்கித் தகர்க்கும் அரசியல் புரட்சியின்றி சமூகப் புரட்சி சாத்தியமில்லை. பழைய கட்டுமானத்தின் கீழ் ஒடுக்கப்படும் சாதியினர் சமத்துவம், ஜனநாயகத்தைப் பெற முடியாது என்ற புரட்சிகர அரசியலை நிராகரித்து, அடையாள அரசியலையும் அதன்வழி சாதிய பிழைப்புவாத அரசியலையும் இவர்கள் கொண்டாடினர். புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை ராஜதுரையும் ராமதாசு, திருமாவளவன் உள்ளிட்டவர்களை நிறப்பிரிகை கும்பலும் துதிபாடினர்.

தங்களால் கொண்டாடப்பட்ட இந்த நபர்கள், காங்கிரசு, பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க என்று மாறி மாறி கூட்டணி சேர்ந்து கொண்டபோது இவர்கள் வாய் திறக்கவில்லை. தாங்கள் முன்வைத்த அரசியல் தவறு என்று ஒப்புக்கொள்ளவோ விளக்கம் கூறவோ இல்லை. தாங்கள் முன்வைத்த கருத்துகளை நம்பி, இந்தப் பிழைப்புவாதிகளின் பின்னால் சென்ற எண்ணற்ற இளைஞர்கள் சீரழிந்து போனது பற்றியும் இவர்கள் கவலைப்படவில்லை. கம்யூனிசக் கொள்கை மற்றும் புரட்சிகரக் கட்சியின் மீது இளைஞர்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துவதும், குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களை புரட்சிகர இயக்கங்களில் சேரவொட்டாமல் தடுப்பதுமே இவர்களுடைய நோக்கமாக இருந்து வருகிறது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடனோ அல்லது உதவியில்லாமலோ இவர்கள் இந்த ஆளும்வர்க்கத் தொண்டினை நிறைவேற்றி வருகிறார்கள்.

ஓட்டுக்கட்சித் தலைவர்கள் கூட தமது அரசியல் சந்தர்ப்பவாதங்களுக்கு மக்களிடம் விளக்கமளிக்கிறார்கள். அவற்றின் விளைவாக மதிப்பிழக்கிறார்கள். ஆனால் அடையாள அரசியல் என்ற பெரில் சாதிய பிழைப்புவாதிகளையும், சாதி வெறியர்களையும் உருவாக்கி, வளர்த்து விட்ட இந்த அறிவுத்துறையினர் மட்டும், தாங்கள் தயாரித்த தீவட்டிகள் ஊரையே கொளுத்துவது தெரிந்தும், ஒரு பாசிஸ்டுக்குரிய அலட்சியத்துடன் மவுனம் சாதிக்கிறார்கள். தாங்கள் பிரச்சாரம் செய்த கருத்துகளின் சமூக விளைவுகளுக்குப் பொறுப்பேற்காமல் நழுவுகிறார்கள். பின் நவீனத்துவம், பெரியார், அம்பேத்கர், காந்தி, முகமது நபி என்று காற்றடிக்கும் பக்கமெல்லாம் பறந்து, பசையுள்ள இடங்களில் ஒட்டிக் கொள்கிறார்கள்.

நாடாளுமன்ற அரசியலின் சீரழிவு, சாதிய பிழைப்புவாதிகளை சுயேச்சையாகத் தோற்றுவிப்பதையும், அடையாள அரசியல் அத்தகைய பிழைப்புவாதங்களுக்கு கவுரவமும் அந்தஸ்தும் அளித்து, ஜனநாயகப் புரட்சி அரசியலை சீர்குலைப்பதற்கு பயன்படுவதையும் இந்நூலின் கட்டுரைகளை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள இயலும்.
_________________________________________________________________________________

சாதி – தீண்டாமை ஒழிப்பு: என்ன செய்யப் போகிறீர்கள்?
விலை ரூ.10 – மகஇக-புமாஇமு-புஜதொமு-விவிமு-பெவிமு, வெளியீடு

1997ல் கொடியங்குளம் ‘கலவரத்தை’ ஒட்டி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலை எதிர்த்து கோயில் நுழைவு, பொதுக்கிணற்றில் நீர் எடுத்தல், தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை உடைப்பு, அடிமைத் தொழில் செய்ய மறுப்பு, சாதி-தீண்டாமை மறுப்புத் திருமணங்கள் போன்ற வடிவங்களில் எமது அமைப்புகள் சாதி வெறிக்கு எதிரான போராட்டத்தை நடத்தின. ஆதிக்க சாதி வெறி கருத்துக்களை அம்பலப்படுத்தும் இந்த சிறு வெளியீடும் பல்லாயிரக் கணக்கில் கொண்டு செல்லப்பட்டது.

அன்று போக்குவரத்துக் கழகத்துக்கு விடுதலை வீரன் சுந்தரலிங்கத்தின் பெயர் சூட்டப்பட்டதை எதிர்த்த சாதிவெறியர்கள், இன்று சாதி கடந்த காதல் திருமணங்களை எதிர்த்து நாயக்கன் கொட்டாய் சாதி வெறித் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். பா.ம.க. தலைவர் ராமதாசு, அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை என்ற சாதிவெறி அமைப்பு உருவாக்கியிருக்கிறார். காதல் திருமணங்களாலும் வன்கொடுமை வழக்குகளாலும் ஆதிக்க சாதியினர் பாதிக்கப்பட்டிருப்பது போல சித்தரிப்பதன் மூலம், சாதி-தீண்டாமை கருத்துக்களை இக்கும்பல் புதுப்பிக்கிறது.

இதன் பொருட்டு இவர்கள் இன்று முன் வைக்கும் வாதங்கள் அனைத்தும், அன்றும் முன்வைக்கப்பட்டவைதான். அவ்வாதங்களை முறியடிக்கும் இவ்வெளியீடு சாதி வெறியை முறியடிக்கும் கையேடாக பயன்படும் என்பதால், அதனை மீண்டும் பதிப்பித்திருக்கிறோம்.

******

புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
கீழைக்காற்று, 10, ஔலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை – 2
தொலைபேசி – 044-2841 2367

புதிய கலாச்சாரம்
16, முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக்நகர்,
சென்னை – 600083

தொலைபேசி – 044 – 2371 8706, 99411 75876