> குருத்து: தந்தீ!

June 19, 2013

தந்தீ!

'இது உங்கப்பா செத்துப்போய்ட்டாருன்னு உங்கம்மா கொடுத்த தந்தி!
இது உங்கம்மா செத்துப்போய்ட்டாங்க‌ன்னு உங்கப்பா கொடுத்த தந்தி!
குடும்பமே குளோஸ்'

- என அன்பேவா படத்தில் மனோரமாவை கலவரப்படுத்துவார் நாகேஸ்.

இத்தனை ஆண்டுகாலமாக, நமது துக்கத்தையும், மகிழ்ச்சியையும் நம் உறவுகளுக்கு கொண்டு சேர்ந்த 'தந்தி' நம்மிடமிருந்து ஜூலை 15 விடைபெற இருப்பதாக பி.எஸ்.என்.எல் இந்த மாதம் அறிவித்திருக்கிறது.

இப்பொழுது மின்னஞ்சலும், செல்பேசியும் தகவல் பரிமாற்றத்தை எளிதாக்கிவிட்டன. இதெல்லாம் இல்லாத காலத்தில், தந்தி தான் எல்லா தகவல்களையும் கொண்டு சேர்த்து நமக்கு உதவியது.

சொல்லத்தக்க சுவாரசியமான என்னுடைய தந்தி அனுபவம் என்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு, நண்பர்களுடன் இரவு படத்திற்கு போகும்பொழுது,  தோழியின் பிறந்தநாள் அடுத்த நாள் என‌ நினைவுக்கு வந்தது. வாழ்த்து அட்டை அனுப்புவதற்கு நாள்கள் இல்லாததால், போகிற போக்கில் ஒரு வாழ்த்து தந்தி அனுப்பிவிட்டு படத்திற்கு போய்விட்டேன்.

சில நாள்களுக்கு பிறகு, இன்னொரு தோழியை சந்தித்த பொழுது, "நீ அனுப்பிய தந்தி எவ்வளவு கலவரப்படுத்திவிட்டது தெரியுமா!  அந்த பகுதிக்கு தந்தி என வந்தால், யாராவது இறந்த செய்தி தான் வரும். உன் தந்தியை கேள்விப்பட்டதும், ஒரு அழுகை. பிறகு, 'வாழ்த்து செய்தி' என தெரிந்ததும், வாழ்த்து செய்தியை யாராவது தந்தி அனுப்புவார்களா! என அன்றைக்கு முழுவதும், அந்த பெண்ணுக்கு பிறந்தநாளில் ஒரே அர்ச்சனை! அனுப்பிய உனக்கும் அர்ச்சனை!" என்றார்.

இன்றைய தலைமுறைக்கு தந்தி குறித்த செய்திகள் ஆச்சரியமாக தான் இருக்கும். அன்றைக்கு இரவு, பகல், தூரம் பாராது அவசர செய்திகளை பல சிரமங்களை மேற்கொண்டு சேர்த்த தந்தி ஊழியர்களை இந்த நாளில் நாம் நன்றியுடன் நினைவுகூறவேண்டும்.

இந்தியாவில் இன்றைக்கும் கூட செல்பேசிகளும், இணையமும் நமது குக்கிராமங்களையும், பழங்குடி மழைவாழ் கிராமங்களையும் சேர்ந்திருக்க வாய்ப்பேயில்லை. தொலை தொடர்புகளில் கவனம் செலுத்துகிற தனியார் நிறுவனங்கள் நிறைய‌ கல்லா கட்டும் பெருநகரங்களிலும், நகரங்களிலும் தான் கவனம் செலுத்துகிறார்கள்.

இன்றைய அரசுக்கு 'சேவை' என்ற வார்த்தை பிடிக்காததாகி, 'லாப‍‍நட்ட கணக்கு' பார்க்கும் அரசாக மாறிவிட்டது. அதனால், அந்த மக்களுக்காக தந்தி சேவையை பாதுகாக்கவேண்டும். நம் அனைவரும் ஒரு தந்தி கொடுத்து நமது எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும்.

0 பின்னூட்டங்கள்: