> குருத்து: ம.க.இ.க குறித்து அவதூறு பிரச்சாரம் : இந்து முன்னணிக்கு கண்டனம்!

June 21, 2013

ம.க.இ.க குறித்து அவதூறு பிரச்சாரம் : இந்து முன்னணிக்கு கண்டனம்!

இந்துமுன்னணி அமைப்பு எங்களைக் குறித்து அவதூறுப் பிரசாரம் செய்து வருகிறது, இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று மக்கள் கலை இலக்கியக் கழகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று அந்த அமைப்பின் சார்பில் மக்கள் கலை இலக்கியக் கழக பொதுச்செயலர் மருதையன் வெளியிட்ட அறிக்கையில்,
மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற எமது அமைப்பு 1980 முதல் தமிழகத்தில் செயல்பட்டு வரும் பொதுவுடைமைப் பண்பாட்டு அமைப்பாகும். எமது செயல்பாடுகளும் புதிய கலாச்சாரம் என்ற எமது பத்திரிகையும், தமிழக மக்களும் எல்லா அரசியல் இயக்கங்களும் அறிந்தவை. எமது தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சமச்சீர் கல்விக்கான போராட்டத்தையும் தனியார் கல்விக் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தையும் தமிழகம் முழுவதும் நடத்தி வரும் அமைப்பு. விவசாயிகள் விடுதலை முன்னணி முல்லைப்பெரியார் போராட்டத்திற்கு மக்களை அணி திரட்டிய அமைப்பு.

எமது அமைப்பு சமூக மாற்றத்துக்காகவும் புரட்சிக்காகவும் போராடும் அமைப்பு. நக்சல்பாரி புரட்சியாளர்களைப் பற்றிய எமது நிலையை, அரசு ஒடுக்குமுறை பற்றிய எமது கண்டனத்தை எங்கள் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருகிறோம். இதை தமிழகமே அறியும்.

அவ்வாறிருக்கையில் எமது அமைப்பினைப் பற்றிய பொய்களையும், அவதூறுகளையும் இந்து முன்னணி கூறி வருகிறது. அதுவும், நாங்கள் இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் என்பதனால் இத்தகைய அவதூறுகளை இந்து முன்னணி நீண்ட நாட்களாகவே பரப்பி வருகிறது.

1993 இல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை நாங்கள் நடத்திய போது அதற்கு 90 இலட்சம் ரூபாய் பாகிஸ்தானிலிருந்து பணம் வந்தது என்று கூசாமல் பொய் பிரச்சாரம் செய்தது இந்து முன்னணி. பின்னர் சிதம்பரம் கோயிலின் சிற்றம்பலத்தில் தமிழ் பாடும் போராட்டத்தை நாங்கள் நடத்திய போதும், அக்கோயிலில் நடைபெறும் முறைகேடுகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்து வைத்து அதனை அறநிலையத்துறை ஏற்க வழக்கு தொடுத்தபோதும், எமக்கு எதிர் அணியில் இருந்தது இந்து முன்னணி.

தற்போது அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத மாணவர்கள், பிறப்பின் காரணமாக அர்ச்சகராக முடியாமல் தடுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் நாங்கள்தான் வழக்காடுகிறோம். இறுதி விசாரணை நிலையில் உள்ள இந்த வழக்கில் மாணவர்களை அச்சுறுத்தி விரட்டும் பல நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் இன்று இந்து முன்னணி எங்களைக் குறித்து வெளியிட்ட அவதூறு அறிக்கை என்று சந்தேகிக்கிறோம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

- என்று கூறியுள்ளார்.

-தினமணி,  06, June 2013

0 பின்னூட்டங்கள்: