சட்டத்தை நீதிபதிகள்
மீறலாம்! பொதுமக்கள் மீறக்கூடாதா? – தமிழை வழக்காடும் மொழியாக்கும் வரை விடாது
போராடுவோம்!
அன்பார்ந்த
பொதுமக்களே!
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னை உயர்நீதி
மன்றத்திலும், உயர்நீதி மன்ற கிளை இருக்கும் மதுரையிலும் வழக்கறிஞர்கள் தமிழை வழக்காடும்
மொழியாக்க தொடர் உண்ணாவிரதம், உள்ளிருப்பு போராட்டம் என பலவகைகளில் போராடி
வருகிறார்கள்.
தமிழை வழக்காடும் மொழியாக்கும் கோரிக்கை என்பது
வழ்க்கறிஞர்களுக்கான கோரிக்கை என்பதை விட, பொதுமக்களான நமது கோரிக்கை என்பது தான் சரி! நம்
வாழ்வில் குடும்பத்திலோ; சொந்தங்களில் மத்தியில் ஏற்படும் சச்சரவுகள்
ஏற்படும் பொழுதோ; ஒரு மாணவன் அரசின் தங்கும்
விடுதியில் அடிப்படை வசதிகளுக்காகவோ, தங்களது கல்வி உரிமைக்காகவோ; ஒரு தொழிலாளி முதலாளியால் வேலையிலிருந்து
அநியாயமாக துரத்தப்பட்டாலோ; தொழிலாளிகள் தனது தொழிற்சங்க உரிமைகளுக்காகவோ, நிலங்களை கையகப்படுத்தும் திட்டங்களினால் ஒரு
விவசாயி தனியாகவோ, சக விவசாயிகளுடன் ஒன்று சேர்ந்து போராடும் பொழுது,
காவல்துறையினரையும், அதை தொடர்ந்து நீதிமன்றத்தையோ சந்திக்கவேண்டியிருக்கிறது.
நீதிமன்ற நடவடிக்கைகளோ நமக்கு புரியாத
ஒன்றாகவும், எப்பொழுதும் அந்நியமாகவே இருக்கிறது.
காரணம், கீழமை நீதிமன்றங்களிலும்,
உயர்நீதிமன்றங்களிலும் ஆங்கிலத்தை வழக்காடு மொழியாகவும் அலுவலக மொழியாகவும் பயன்படுத்துகிறார்கள்.
சுதந்திரம் பெற்றதாய் சொல்லப்படும் இந்த 67
ஆண்டுகளில் தனது குடிமக்களுக்கு இந்த அரசால் அடிப்படை கல்வி கூட
கொடுக்கமுடியவில்லை. இதை மத்திய அரசே வெட்கி தலைகுனிந்து வெளிப்படையாக
அறிவித்திருக்கிறது.
நம்மில் பெரும்பான்மையான மக்களுக்கு தமிழே எழுத
படிக்க தெரியாமல் இருக்கும் பொழுது, நம்
சம்பந்தபட்ட வழக்குகளை வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் ஆங்கிலத்தில் உரையாடுவது
அநீதி அல்லவா!
இந்த நிலைக்கு யார் காரணம்? நமது இந்திய
அரசியலமைப்பு சட்டப்படியே அந்தந்த மாநிலங்களில் உள்ள ஆட்சி மொழியை உயர்நீதி
மன்றத்தில் வழக்காடுவதற்கான மொழியாக்க முடியும்.
அதன்படி, இந்தியாவில் பல பத்தாண்டுகளாக ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம்,
பீகார் மற்றும் மத்திய பிரதேசம் என நான்கு மாநிலங்களில் இந்தியை வழக்காடும்
மொழியாக்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக,
தமிழ்நாட்டில் ஆட்சி மொழியான தமிழையும், மேற்கு வங்கத்தில் ஆட்சி மொழியான
வங்காளத்தையும் வழக்காடும் மொழியாக்க கோரி போராடும் பொழுது, மத்திய அரசும், உச்சநீதி
மன்றமும் கூட்டு சேர்ந்து கொண்டு தமிழை வழக்காடும் மொழியாக்க தடையை
ஏற்படுத்தியிருக்கிறது.
உயர்நீதிமன்றத்தில் த்மிழை மத்திய அரசு தடுத்து
நிறுத்தி இருக்கிறது என்றால், கீழமை நீதிமன்றங்களில் தமிழை வழக்காடும்
மொழியாக்கமல் தடுத்து தடை போட்டிருப்பது சென்னை உயர்நீதிமன்றம்.
1956ம் ஆண்டில் மொழிவாரியாக மாநிலங்கள்
பிரிக்கப்பட்ட பொழுது, தமிழ்நாடு ஆட்சி
மொழிச்சட்டப்படி கீழமை நீதிமன்றங்களில் ஆட்சி மொழியான தமிழை வழக்காடும் மொழியாக்க
உத்தரவிட்டது. இருபது ஆண்டுகள் ஜவ்வாக இழுத்து, பல போராட்டங்களுக்கு பிறகு
குற்றவியல் நீதிமன்றங்களில் 1976ம் ஆண்டும், உரிமையியல் நீதிமன்றங்களில் 1982ம்
ஆண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
தமிழ் தெரியாத ஒன்றிரண்டு நீதிபதிகளுக்காக
‘இரக்கப்பட்டு’, பெரும்பான்மை தமிழக மக்களின் உரிமைகளையும், உணர்வையும் காலில்
மித்தித்து, 1994ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில்
உள்ள அனைத்து நீதிபதிகளும் ஒன்று கூடி, தீர்ப்புகளை ஆங்கிலத்திலும் எழுதலாம் என ஒரு
தீர்மானத்தை இயற்றி, ஆட்சிமொழி சட்ட்த்தை குப்பையில் போட்டுவிட்டார்கள்.
ஆங்கிலத்தில் வழக்காடுபவன், தீர்ப்பு எழுதுபவன் ’அறிவாளி’ என்ற பொதுப்புத்திக்கேற்ப ஆங்கிலம் இன்று நீதிமன்றங்களின் அனைத்து
நடவடிக்கைகளிலும் சகலத்தையும் ஆக்கிரமித்து இருக்கிறது.
இதன் விளைவாக
அதிகம் பாதிக்கப்பட்ட்தும், பாதிக்கப்படுவதும் பொதுமக்களாகிய நாம் தான்! வழக்கு
விவரங்கள் எதுவுமே தெரியாமல், மந்தைகளைப் போல நீதிமன்றங்களில் வழக்கறிஞர் சொல்வதையே
’உண்மை’ எனவும், நீதிபதிகள் தீர்ப்பு
எழுதுவதற்கு கட்டுப்பட்டும் வருகிறோம்.
இன்றைக்கும் காலனிய அடிமைப் புத்திக்
கொண்டவர்களும், மக்களின் அறியாமையை பயன்படுத்தி, கல்லா கட்டும் வழக்கறிஞர்களும் ஆங்கிலம்
தான் சிறந்தது என வாதாடுகிறார்கள்.
’சட்டத்தின் ஆட்சி’ ’சட்டத்தின் ஆட்சி’ என மூச்சுக்கு முன்னூறு முறை பேசும் ’மகா கணம் பொருந்திய’ நீதிபதிகள் தான் ஆட்சி
மொழிச் சட்ட்த்த்தை ஒரு தீர்மானத்தின் மூலம் செல்லாகாசாக்கி வைத்திருக்கிறார்கள்.
பொதுமக்களாகிய
நாம் சட்ட்த்தை இம்மி மீறினாலும், காவல்துறையும், நீதித்துறையும் உடனே
பொங்கி எழுந்து வழக்குகளை போட்டு, சிறையில் தள்ளுகிறார்கள். படித்த ‘மேன்மக்களாகிய’ நீதிபதிகள் அதை மதிக்க மறுக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் சொல்லும் நீதி
“இராஜா மட்டும் ’குசு’ விடலாம்!”
இந்தி
திணிப்புக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழகம் பிறகு மெல்ல மெல்ல அடங்கி போனதால்,
இன்று பள்ளிகளில் ஆங்கிலம், கோயில்களில் சமஸ்கிருதம் எங்கும் பிறமொழி ஆதிக்கம் என
மாறிப்போய் தாய்த்தமிழை இழந்து நிற்கிறோம். இந்நிலையை மாற, நீதிமன்றங்களில்
போராடிக்கொண்டிருக்கும் வழக்கறிஞர்களோடு கரம் கோர்ப்போம்!
மத்திய அரசே!
உ.பி. உள்ளிட்ட
நான்கு மாநில உயர்நீதிமன்றங்களில் இந்திய வழக்காடும் மொழியாக்கியது போல தமிழ்நாடு
உயர்நீதி மன்றங்களிலும் தமிழை வழக்காடும் மொழியாக்கு!
சென்னை உயர்நீதி மன்றமே!
தமிழ்நாடு ஆட்சி
மொழிச் சட்ட்த்தை முடக்கி கீழமை நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடும் மொழியாவதை
தடுத்து நிறுத்தி உள்ள உயர்நீதி மன்ற தீர்மானத்தை உடனே திரும்ப பெறு!
உழைக்கும் மக்களே!
தமிழை வழக்காடும்
மொழியாக்கும் வரை தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம்!