> குருத்து: March 2015

March 2, 2015

டாஸ்மாக் ஒழிய அழிவிடைதாங்கி மக்கள் வழியை பின்பற்றுவோம்!




தமிழகத்தில் எல்லா ஆறுகளும் வற்றிக்கொண்டு இருக்க டாஸ்மாக் ஆறு மட்டும் வற்றாத ஜீவநதியை போல ஓடிக்கொண்டே இருக்கிறது!  பெரியவர் முதல் மாணவர் வரை போதையில் மிதக்கிறார்கள்.  சாலையில், சாக்கடையில் புரள்கிறார்கள்.  மெல்ல மெல்ல தனது ஆளுமையை இழக்கிறார்கள். நோயில் சிக்கி உயிர் துறக்கிறார்கள். குடும்பங்கள் சீரழிகின்றன. யார் குடி கெட்டால் என்ன? எனக்கு லாபம் வந்தால் போதும் என ஒரு கேடு கெட்ட முதலாளியை போல அரசு சிந்திக்கிறது.  ஒவ்வொர் ஆண்டும் கூச்சமே இல்லாமல் ஆயிரக்கணக்கான கோடிகளில் லாபம் என பெருமை பேசுகிறது.


கடந்த 20 ஆண்டுகளாக தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் ஏகாதிபத்தியங்களின் நெருக்கடி, ஆளும் கட்சிகளின் அடிவருடித்தனம் காரணமாக வெறித்தனமாக அமுல்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். விளைவாக, விவசாய நாடான இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்குள் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இப்படி  வாழ்விழந்த மக்கள் நாடு முழுவதும் தன்னெழுச்சியாக போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.  ஒருபுறம் போராடுகிற மக்களை ஒடுக்க அரசு காவல்துறையை நவீனப்படுத்தியும், பலப்படுத்தியும் வருகிறது. சீனாவில் பிரித்தானிய அரசு அபினியை இறக்குமதி செய்து போதையில் தள்ளியதைபோல மறுபுறம் மக்களை போதையில் தள்ளுகிறார்கள்.
 
அதிமுக, திமுக தவிர பெரும்பான்மையான கட்சிகள் மதுவிலக்கை ஆதரிக்கிறார்கள்.  சிலர் காலில் விழுகிறார்கள். உண்ணாவிரதமிருக்கின்றனர். வைகோ மாரத்தான் போட்டி நடத்துகிறார். லட்சகணக்கில் அணிகளை வைத்திருப்பதாக சொல்லிக்கொள்கிற  கட்சிகள்கூட அடையாள போராட்டங்களை நடத்துகிறார்கள். இந்த கட்சிகளில் உள்ளவர்கள் தான் டாஸ்மாக் பார்களை நடத்தி கல்லாவும் கட்டுகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அழிவிடைத்தாங்கி கிராமத்தில் பள்ளிக்கருகே டாஸ்மாக் கடை திறந்தார்கள். அன்று தொடங்கி பெண்பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அழிவிடைத்தாங்கி மட்டுமல்ல, சுற்றியிருந்த ஆறு கிராமங்களும் மோசமாக பாதிக்கப்பட்டன.  கடந்த இரண்டு ஆண்டுகளில், கடையை அகற்ற எல்லாவித அறப்போராட்டங்களையும் செய்தார்கள். மூன்றுமுறை முற்றுகையிட்டார்கள்.  அரசு கஜானவை நிரப்ப என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற சாணக்கியவழி வந்தவர்கள்தானே ஆள்கிறார்கள்.  அசைந்துகொடுக்கவில்லை.

எல்லா வழிகளும் அடைபட்ட நிலையில், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சார்ந்த தோழர்கள் ஏழு கிராமத்திலும் பிரச்சாரம் செய்தார்கள். மீண்டும் முற்றுகையிட மக்களோடு பேசி நாளும் குறித்தார்கள்.  ஏழு கிராமங்களிலிருந்தும் குடும்பம் குடும்பமாய் பேரணியாய் திரண்டு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. வழக்கம் போல கத்தி கலைந்துவிடுவார்கள்  என காவல்துறை வேடிக்கைப் பார்த்தனர்.  தோழர்கள் மக்களைப் பார்த்துஇப்போது என்ன செய்வது? வழக்கம் போல கலைந்து செல்வதா? டாஸ்மாக் கடையை அழிக்கப்போகிறோமா?” என்றனர். பேசிக்கொண்டு இருக்கும் போதே ஒருவர் கடைக்குள்ளே போய் ஒரு கேசை தூக்கிப் போட்டு உடைக்க, அடுத்த நொடியில், மொத்த மக்களும் சாராயக்கடைக்குள் புகுந்து உடைக்க ஆரம்பிக்க, சிறுவர்களோ கால்களில் பாட்டில்கள் குத்தி ரத்தம் வந்தாலும் கடைக்குள் புகுந்து துவம்சம் செய்தனர்.

தோழர்களை மட்டும் கைது செய்ய முயன்ற போலீசை, மொத்த மக்களும் ”எங்களையும் கைது செய்! அல்லது அவர்களை விடுதலை செய்” என சொல்ல,  பணிந்த காவல்துறை தோழர்களை விடுதலை செய்தது.

மக்கள் கலைந்து சென்ற நேரம் பார்த்து, காவல்துறை தோழர்களையும், ஆதரவாய் பேசிய ஒரு அம்மாவையும் கைது செய்து, 14 கி.மீ தூரமுள்ள வேறு ஒரு காவல்நிலையம் கொண்டு சென்று 11 பிரிவுகளில் பொய் வழக்கு போட்டு, சிறையிலடைத்தனர்.

மக்கள் ஆதரவோடு தோழர்கள் விரைவில் வெளியே வந்துவிடுவார்கள். ”அழிவிடைதாங்கி மக்களைப்போல, நாங்களும் தயாராக இருக்கிறோம். எங்கள் பகுதிக்கு வாருங்கள் என தொலைபேசியில் மக்கள் பு.மா.இ.முவை உரிமையுடன் அழைக்கிறார்கள். சீனமக்கள் அபினி யுத்தத்தில் வெற்றி பெற்றதுபோல, நாமும் வெற்றி பெறுவோம்!