> குருத்து: 2017

December 11, 2017

பருத்திப்பாலும் போலீசுகாரரும்!


பருத்திப்பால்.  மதுரை சிறப்புகளில் ஒன்று. பிரியா திரையரங்கு வாசலிலும், நடனா திரையங்கு (இப்பொழுது இல்லை) போகிற வழியிலும் இருவரும் விற்றுக்கொண்டிருப்பார்கள்.  அந்த பக்கம் போகும் பொழுதெல்லாம் தவறாமல் குடிப்பதுண்டு.  

பருத்திவிதை, அரிசிமாவு, (மண்டை) வெல்லம், தேங்காய், ஏலக்காய், - கலவையில் அருமையாக இருக்கும்.  உடம்பு சூட்டை குறைக்கவல்லது. வயிற்றுப்புண்ணுக்கு நல்லது.

சென்னையில் அம்பத்தூரில் ஒரு பெரியவரும், பாடி பிரிட்டானியா அருகே ஒரு பெரியவரும் பருத்திப்பால் விற்றுவருகிறார்கள். எப்பொழுதும் இரண்டு, மூன்று பேர் குடித்துக்கொண்டிருப்பார்கள். தேநீர் குடித்து சோர்வானவர்கள் பருத்திப்பால் அருந்தி பாருங்கள். தொடர்ந்து அருந்துவீர்கள்.  

அது சரி! பருத்திப்பாலுக்கும் போலீசுகாரருக்கும் என்ன சம்பந்தம்? பருத்திப்பால்காரரிடம் இன்னொருவர் பேசிக்கொண்டிருந்தார். 

”பைக்கில் வரும் போலீசு பெட்ரோலுக்கு அரசாங்கம் கொடுக்கிற காசு பத்தலையாம்.  அதனால், மாசம் 200 ரூபாய் மாமூல் கேட்டாங்க!”

“எங்க பகுதியில் மாசம் 300ரூபாய். நீங்க 200 ரூபாய் தான் தர்றீங்க! பரவாயில்லையே” என்று குறுக்கிட்டு சொன்னேன்..  

”அட போங்க தம்பி!  போகும் பொழுதும், வரும் பொழுதும், ஒரு நாளைக்கு மூணு, நாலு கப் (ஒருகப் 10ரூ) ஓசியில்ல குடிச்சுட்டு போயிராங்க.  கணக்குப்பார்த்தா அதுவே மாதம் ரூ. 1000’ வந்துரும்” என்றார்.

பெருகிவரும் குற்றங்களை குறைப்பதற்காகவும், மக்களுக்கும் காவல் துறைக்குமான ’இடைவெளியை’ குறைக்கிறதுக்கு தான் இவர்கள் என்று பீட் ஆபிசர்களை அறிமுகப்படுத்தும் பொழுது ரெம்ப கெத்தா சொன்னாங்க!

பார்த்தா பெட்ரோலுக்கு காசில்லைன்னு வியாபாரிகள் கிட்ட போலீசு பிச்சை எடுக்குதுக!  நமக்கு என்ன கவலைன்னா, நம்ம முதல்வர் எடப்பாடியும், துணைமுதல்வர் ஓபிஎஸ்யும் ரெம்ப மானஸ்தவர்கள் ஆச்சே!  மக்களுக்கு சேவை செய்ய, பெட்ரோலுக்கு காசில்லாம நம்ம போலீசு இப்படி மக்கள்கிட்டேயே பிச்சை எடுக்கிறது தெரிஞ்சா, நாண்டுகிட்டு செத்துறவாங்களேன்னு தான்!

November 17, 2017

தீரன் - ஒரு கேள்வி

நெடுஞ்சாலையோரம் உள்ள தனியாக உள்ள வீடுகளில், கொடூரமாக கொலைகள் செய்து, கொள்ளையடிக்கிறது ஒரு கும்பல்.

ஒரு டிஎஸ்பி தனது குழுவினருடன் தொடர்ந்து உழைத்து கும்பலை பிடிப்பது தான் கதை.
நேர்த்தியான திரைக்கதை. எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

என் கேள்வி. அந்த கொடூர கும்பல் தற்செயலாக, விசாரணயில் ஈடுபட்டிருக்கும் போலீசு வீட்டிலும் கொலை, கொள்ளை செய்கிறது.
ஒருவர் தன் கடைமையை விடாப்பிடியாக செய்வதற்கு, தன் சொந்த இழப்பு இருந்தால் தான் செய்யமுடியுமா என்ன? படத்தில் செண்டிமெண்டுக்காக இப்படி தொடர்ந்து செய்கிறார்கள்.
பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபடுகிற கதாபாத்திரங்களை கூட தனிப்பட்ட இழப்புகளின் பாதிப்பால் தான் செயல்படுகிறார்கள் என்கிற கருத்தை தொடர்ந்து திரைப்படங்களில் செய்து வருகிறார்கள். உதாரணமாக பல படங்களை சொல்லலாம்.

இப்படி சித்தரிப்பது மிக அபத்தம்!  சமூக ஏற்றத்தாழ்வுகளையும், கோளாறுகளையும்  புரிந்துகொண்டு அதை சரி செய்யும் நோக்கத்தில் பலர் சமூக செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.  அவர்களை எல்லாம் தனிப்பட்ட இழப்புகளினால் தான் இப்படி ஈடுபடுகிறார்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவைக்குமா? இல்லையா?  தொடர்ந்து திரைப்படங்களில் சித்தரிப்பு மூலம் சில விசயங்களை அபத்தமாக புரிந்துகொள்கிறோம் என்பதை படத்திலேயே ஒரு காட்சி வைத்திருப்பார்கள்.

November 14, 2017

கம்யூனிசமும் குடும்பமும்! - புத்தக அறிமுகம்

புத்தகத்திலிருந்து… சில  பகுதிகள்...
“தன் தேவைகளைப் பெறவும், நிறைவேற்றிக் கொள்ளவும், ஒரு பெண் சமூகத்தைச் சார்ந்திருக்க வேண்டுமேயன்றி ஒரு தனி மனிதனை அல்ல என்பதை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை” (பக்கம் 7 )
“அவர் தன் கணவருக்கு மனைவியாக, குழந்தைக்குத் தாயாக, முதலாளிக்குத் தொழிலாளியாக என்று தன் ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் வியர்வையாய் சிந்துகிறார். ஆலைத் தொழிலாளியாகட்டும், அச்சகம் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனம் ஆகட்டும், அங்கே வேலை செய்யும் தன் கணவருக்கு சமமாக வெளியே உழைத்துவிட்டு, பின் தன் குடும்பத்தையும் பராமரிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு முதலாளித்துவமானது பெண்களால் தாங்க முடியாத பாரத்தை அவர்கள் மேல் சுமத்தியிருக்கிறது”  (பக்கம் 11)
“உழைக்கும் பெண்கள் தமக்குக் கிடைக்கும் சிறு ஓய்வு நேரங்களிலும் சமையல் வேலைகளால் அவதிப்படுவதை விடுவித்து, பொது உணவு விடுதிகளையும் சமூகச் சமையற்கூடங்களையும் கம்யூனிச சமுதாயம் ஏற்படுத்திக் கொடுக்கும்” (பக்கம் 16)
“அப்படிப்பட்ட பழைய குடும்ப முறையே பாட்டாளி வர்க்க விடுதலைக்கான உணர்வை இறுக்கித் திணறடிக்க வல்லது என்றும் உழைக்கும் ஆண், பெண்களிடையே எழுந்து வளரும் புரட்சி உணர்வை பலமிழக்க வைக்கும் என்றும் முதலாளிகள் நன்கு அறிவார்கள். குடும்பப் பராமரிப்பிற்காகவே உழைப்பாளர்கள் முதலாளிகளுடன் சமரசம் செய்துகொள்கின்றனர். குழந்தைகள் பசியால் வாடும் பொழுது முதலாளியின் எத்தகைய கொடுமையான நிபந்தனைகளுக்கும் உட்பட்டு பெற்றோர் அடிபணிந்து விடுகின்றனர்” (பக்கம் 19)
“வீட்டு வேலைகளிலிருந்து விடுபட்டாலும் கூட குழந்தைப் பராமரிப்பு என்ற ஒன்று இருக்கிறதே என்று நீங்கள் வாதிடலாம். இங்கும் சோவியத் அரசே இந்தப் பொறுப்பை ஏற்கும்” (பக்கம் 16)
“முதலாளித்துவ உலகில் திருமணம் என்பது உண்மையிலேயே துன்பச் சங்கிலியாக இருக்கிறது” பக். 21
“முன்னர் ஆண்-பெண் இருவருக்கிடையில் நீடித்த பழைய உறவுமுறை புதிய வகைப்பட்டதாக உருவாகி மாறிவருகின்றது. அந்த உறவானது அன்பான தோழமையான இரு உள்ளங்களுக்கிடையிலானதாக கம்யூனிச சமூகத்தின் இரு சம உரிமையுள்ள ஆண் பெண்ணுக்கிடையிலானதாக சுயமாக, சுதந்திரமாக ஒருவரையொருவர் சார்ந்து வாழாத இருவருக்கு இடைப்பட்ட உறவுமுறையாக இருக்கின்றது” (பக்கம் 22)
“கம்யூனிச சமூகத்தில் பெண் இனி தன்னைத்தானே நம்பி வாழ்வாளேயன்றி கணவனை நம்பி அல்ல” (பக்கம் 22)
“மேலும் ஆணும் பெண்ணும் அடிப்படையில் நேர்மையான, சுதந்திரமான, விருப்பத்துடன் கூடி வாழும் திருமணங்கள் வளரும். இதனால் விபச்சாரம் முடிவுக்கு வரும்” (பக்கம் 23)
“உழைக்கும் தாயானவள் தன் குழந்தைகளையும் மற்றவர்களது குழந்தைகளையும் வேறுபடுத்திப் பார்ப்பதை நிறுத்திவிடக் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கே இருக்கும் குழந்தைகள் எல்லாம் நம் குழந்தைகள், சோவியத் ரசிய உழைப்பாளர்களின் குழந்தைகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” (பக்கம் 23)
“பல நூற்றாண்டுகளாக மனித சமூகத்தால் கனவு காணப்பட்ட விண்ணுலகம் இம்மண்ணுலகிலேயே எழுந்து மலருவதை இதோ செங்கொடி அறிவித்துக்கொண்டிருக்கிறது!” (பக்கம் 24)
ஆசிரியர் குறிப்பு :
அலெக்சான்ட்ரா கொலந்தாய் 1872 -ல் பிறந்தார். 1899 -ல் ரசிய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியில் உறுப்பினரானார். பின்பு, 1903 -ல் லெனினது போல்ஷிவிக் கட்சியில் இணைந்தார். 1917 புரட்சிக்கு பிறகு சமூக நலத்துறையில் மக்கள் கமிசாராக இருந்தார். சோவியத் ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் பல ஐரோப்பிய நாடுகளில் சோவியத்தின் அரசியல் தூதராக பணிபுரிந்தார். பணிக்காலத்தில் கம்யூனிச உணர்வுக்கு அங்கீகாரமாக அன்று வழங்கப்பட்டு வந்த லெனின் விருது (1933), உழைப்பின் செங்கொடி விருது (1945) போன்ற விருதுகளால் கெளரவிக்கப்பட்டார்.
ரசியப் புரட்சியின் நூற்றாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில்  அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம்.


2011-ல் இப்புத்தகத்தின் முதல் பதிப்பை கொண்டு வந்தார்கள். இடைக்காலங்களில் தேடினாலும் கிடைக்கவில்லை. இப்பொழுது இரண்டாவது பதிப்பையும் கொண்டு வந்துள்ளார்கள்.
படியுங்கள்…
– குருத்து
(1920ம் ஆண்டில் வெளிவந்த Communism and the Family – என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.)
விலை ரூ. 20/- பக்கங்கள் : 24
வெளியீடு :

பெண்கள் விடுதலை முன்னணி,
41, பிள்ளையார் கோயில் தெரு,
மதுரவாயல், சென்னை – 600 095.
தொலைபேசி : 98416 58457
- வினவு  தளத்தில் 14/11/2017 அன்று வெளிவந்தது.

November 7, 2017

சகாயம் சந்தித்த சவால்கள் - ஒரு பார்வை!

ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் லஞ்சம் தவிர்த்து நேர்மையுடன் பணியாற்றியதால்  23 வருடங்களில், 23 முறை வேலை மாற்றல்கள்!

தரமற்ற பெப்சியை ஆய்வு செய்து, பெப்சி நிறுவனத்தை பூட்டு போட்டது; தலைமை செயலர் வரை பதறிப்போய் சகாயத்துக்கு தொலைபேசியில் பேசியது; அரசு எந்த பத்திரிக்கைகளிலும் அந்த செய்தி வெளிவராமல் பார்த்துக்கொண்டது; உடனே வேறு ஊருக்கு தூக்கியடித்தது – இது ஒரு சம்பவம்!

கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பலை கைது செய்ய போய், மாவட்ட ஆட்சியரான சகாயத்தின் மீதே தனக்கு கீழ் உள்ள அலுவலரையே அடித்துவிட்டார் என பொய் வழக்கு போட்டது; சகாயம் சுதாரித்து அதை சாமர்த்தியமாய் எதிர்கொண்டது!- இது ஒரு சம்பவம்!

ஒரு கட்சிக்காரர் வீட்டுவசதிவாரியத்தின் கோடிக்கணக்கான மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறார்.  சகாயம் நடவடிக்கை எடுக்கிறார். உடனே கட்சிக்காரர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை வேறு ஊருக்கு மாற்றுகிறார்.

இப்படி பல சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகிறார். கூடுதலாக, முன்பெல்லாம் அரசு அலுவலர்கள் அடிப்படை தேவைகளுக்கு லஞ்சம் வாங்கியவர்கள் இப்பொழுது கூடுதலான நுகர்வு தேவைகளுக்கு லஞ்சம் வாங்குவதாக சொல்கிறார்.   இப்பொழுது அரசு ஊழியர்களில் பெரும்பாலோர் லஞ்சம் வாங்குவதாக அவரே சொல்கிறார்.   இதிலிருந்து நமக்கு புரிவதெல்லாம், அரசும், அரசாங்கமும் லஞ்சத்தில்  ஊறித்திளைக்கிறது.  சகாயம் மாதிரி ஆட்கள் எல்லாம் லட்சத்தில் ஒருவர் என சொல்லிவிடலாம்.

என் 10 ஆண்டு கால அனுபவத்தில் 30 வருங்கால வைப்புநிதி (PF Enforcement officers) அதிகாரிகளை பார்த்திருப்பேன். ஒரு ஆள் கூட கை சுத்தமான ஆள் இல்லை. அதே போல இஎஸ்ஐ 30 அதிகாரிகளில் கை சுத்தமான அதிகாரி ஒருவரை மட்டுமே சந்தித்தேன். அவர் பெயர் துரைராஜ்.  அதே போல விற்பனை வரி துறையில் ஒரு நேர்மையான அதிகாரி கூட பார்த்ததில்லை. இதே போலவே கலால் வரி துறையிலும்!

இந்த அரசை ஆளும் வர்க்கம் .இயக்கிக்கொண்டிருக்கிறது என சொன்னால், அதன் நடைமுறை என்பது, தரகு முதலாளிகளும், நிலச்சுவாந்தாரர்களும் தங்களுக்கான வேலைகளை முடிக்க அரசையும், அரசாங்கத்தையும் லஞ்சத்தின் மூலமாக தான் காரியம் சாதித்துக்கொள்கிறார்கள்.  ஆக உடைமை சமுதாயம் நீடிக்கும் வரைக்கும் லஞ்சம் நீடிக்கும் என்பது தான் யதார்த்தம்.  அதாவது மூக்கு உள்ளவரை சளி இருக்கும் என்பது தான்!

ஆக, சகாயம் தான் நேர்மையான நபர் என்பதை  பக்கத்துக்கு பக்கம் சொல்கிற பொழுதே இந்த அரசும், அரசாங்கமும் மாற்றவே முடியாத அளவிற்கு புரையோடி போய்விட்டதையும், பெரும்பாலான மக்களுக்கு எதிராக நிற்பதையும்தான் நிரூபிக்கிறது.   ஆனால், சகாயமோ இளைஞர்களை அணிதிரட்டி ’மக்கள் பாதை’ என்ற அமைப்பை உருவாக்கி, கடந்த சில ஆண்டுகளாக இந்த இத்துப்போன அரசமைப்பை மாற்றலாம் என நம்பிக்கை தந்து வழிநடத்திக்கொண்டிருக்கிறார். இதுதான் பெரிய நகைமுரண்.

மேலும், சகாயத்தின் பெற்றோர்களை அறிமுகப்படுத்தும் பொழுது, உபகாரம் பிள்ளை என குறிப்பிடப்பட்டுள்ளது. சகாயம் சொன்ன மாதிரி “ என்னோட ரோல் மாடல் எங்க சித்தப்பா அருளாந்து பிள்ளை” என எந்தவித தயக்கமில்லாமல் சொல்லியிருக்கிறார். சாதியக்கண்ணோட்டமும் கோளாறு தான்!

ஆனந்தவிகடன் வெளியீட்டிருக்கிறது.  விலை ரூ. 95 பக்கங்கள் : 96

நூலை எழுதிய ஆசிரியர் : கே. ராஜா திருவேங்கடம் (இப்பொழுது சன் தொலைக்காட்சியில் பல பிரபலங்களை பேட்டி எடுத்துக்கொண்டிருக்கிறார்)

October 21, 2017

தீப ஒளி திருநாள்!


எப்பொழுதும்
பற்றாக்குறைகளுடன்
போராடும் அம்மாவுக்கு
பண்டிகை வந்தாலே பதட்டமாகிவிடும்!

ஐந்து குழந்தைகளுடன்

பொறுப்பை தட்டிகழிக்கும் அப்பாவோ
"எல்லாவற்றையும்
துணைவியார் பார்த்துக்கொள்வாள்!" என
நழுவிக்கொள்வார்.

வாராவாரம் சிறுக சிறுக சேமித்து
கட்டிய பண்டுதான்
பலகாரங்களுக்கு பொருட்கள் தரும்!

குறைந்தபட்ச வட்டி கடனில்
சொசைட்டி தான் அனைவருக்கும்
துணி வழங்கும்!

தைக்க, இதர செலவுகளுக்கு
வட்டிக்கு வாங்கும் கடன் தான் சமாளிக்கும்!

எங்கு சென்றாலும்
அம்மாவுக்கு கடைக்குட்டி
நான் தான் துணை!

அம்மா எதிர்கொள்ளும் - அத்தனை
சங்கடங்களுக்கும்
சிரமங்களுக்கும்
கண்ணீருக்கும்
நானே மெளன சாட்சி!

பண்டிகையில் செய்யப்படும்
இனிப்புகள்
எப்போதும் அம்மாவிற்கு
இனிப்பதேயில்லை!
அம்மாவிடம் பட்டாசு கேட்க
வாய் வருவதேயில்லை

October 20, 2017

இவான் - அறிமுகம்


ரசிய நாவல்களின் வரிசையில் மிகவும் பிடித்தமான நாவல். 100 பக்கங்களை கொண்டது.

இரண்டாம் உலகப் போரில் இட்லரை வீழ்த்தி உலகத்தை பாசிசத்திலிருந்து காப்பாற்றியதற்காக ரசியா கொடுத்த விலை இரண்டு கோடி பேர். அதில் ஒருவன் தான் இவான்.

ரசியாவின் எல்லைப்புறத்தில் நதியின் கரைகளில் நடந்த உக்கிரமான போரில், நாஜிப்படை இருக்கும் பகுதிகளில் உளவு பார்க்கும் இவான் ஒரு சிறுவன்.
போரில் தன் குடும்பத்தை தொலைத்தவன். எதிரிகளை வீழ்த்த, நடுங்கும் கடும்குளிரை தாங்குவது, சிக்கினால் தன் உயிர் போய்விடும் என தெரிந்தும் ஈடுபடும் துணிவு. ராணுவ ஒழுங்கை கறாராக கடைப்பிடிக்கும் பண்பு எல்லாம் பிரமிக்கத்தக்கவை.

இவானை போன்ற உறுதி கொண்டவர்களால் தான் இட்லர் வீழ்த்தப்பட்டான். சோர்வாக இருக்கும் பொழுதெல்லாம் இவானை தான் நாடுகிறேன்.
 
#50_Books_Challenge_2

August 29, 2017

ஹாரி பாட்டரும் ரசவாத கல்லும்!


2001ல் ஹாரி பாட்டர் முதல் பாகத்தை ஆச்சர்யத்துடன் பார்க்க ஆரம்பித்தேன். மந்திர தந்திர பள்ளி, மாயாஜாலங்கள், பறக்கும் துடப்பங்கள், மறையும் அங்கி, உயிரோட்டம் கொண்ட புகைப்படங்கள், நல்லவைக்கும், தீயவைக்கும் நடக்கும் போராட்டம் என நிறைய ஆச்சர்யங்கள். 

இப்படி பார்க்க துவங்கி, என் பொண்ணுடன் 2011ல் இறுதிப் பாகத்தை இணைந்து பார்த்தேன். சில படங்கள் தமிழில் டப்பாகி வரும். சில படங்கள் தமிழில் வராது. தொலைக்காட்சிகளில் பாட்டர் படங்களை போடுவதால், இப்பொழுது எல்லா பாகங்களும் தமிழில் டிவிடிகளாக கிடைக்கின்றன.  இடையிடையே நானும் என் பெண்ணும் பாட்டர் படங்களை பார்ப்பதுண்டு. துணைவியாருக்கு இந்த மாதிரி படங்கள் பார்ப்பதில் ஆர்வம் இல்லையென்பதால் கடுப்பாவார். ஒண்ணும் செய்யமுடியாது.

400, 800 பக்க நாவல்களை இரண்டரை மணி நேர படமாக்குவதால், சில இடங்களை வெட்டி சுருக்குவதால், நமக்கு சில இடங்கள் புரியாது. படத்தை திரும்ப திரும்ப பார்த்தாலும் புரியாது தான். 6 மாதங்களுக்கு முன்பு பாட்டருடைய எல்லா நாவல்களும் ஆங்கிலத்தில் பிடிஎப் யாக கிடைத்தன.  எனக்கு ஆங்கிலத்தில் நல்ல‌ நாவல்களை படிக்கவேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக உண்டு. மன்னிக்கவும். சில வருடங்களாக உண்டு.  சரி! பாட்டர் கதைகளிலிருந்து துவங்குவோம் என படிக்க ஆரம்பித்தேன்.  ரெளலிங் எழுத்துக்கள் வேகமாக படிக்கிற அளவிற்கு இல்லை. அதை இப்படியும் சொல்லலாம். எனக்கு ஆங்கில அறிவு குறைவு என்றும் சொல்லலாம்.  ஒருமுறை புத்தகம் சம்பந்தமாக தேடும் பொழுது, தமிழில் பாட்டர் கதைகள் கிடைப்பதாக அறிந்தேன்.  கொஞ்சம் தேடி, முதல் பாகத்தை வாங்கிவிட்டேன். முன்னுரை படித்ததோடு சரி! பிறகு வேலை நெருக்கடியில் தொடரவில்லை.

இந்த ஆண்டின் இறுதிக்குள் 50 புத்தகம் சவாலில்  முதல் புத்தகமாக படித்துவிடலாம் என 350 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை ஒரு வாரத்திற்குள் படித்துவிட்டேன். நாவல் படிக்கும் பொழுது நேர்கோட்டு தன்மையில் தான் செல்கிறது. வெட்டி சுருக்கியதாலும், திரைக்கதையிலும் படத்தில் சில இடங்கள் புரியாததாக இருக்கின்றன. ஒரு இடம் சொல்லவேண்டுமென்றால்,  ஹெர்மாயினியின் திறமைக்கு நாவலின் இறுதியில் ஒரு பகுதி உண்டு. ஆனால், படத்தில் இல்லை. (ஹெர்மாயினி எவ்வளவு அழுதிருப்பாள்(?))


மொழிபெயர்ப்பு செய்தவர் குமாரசாமி.  அருமையாக செய்திருக்கிறார்.  பாட்டர் படங்களை பார்க்கதாவர்கள் ஒருமுறை பாருங்கள். பிறகு திரும்ப திரும்ப பார்ப்பீர்கள்.

#50Books_Chllenge_1

50 புத்தகங்கள் சவால்!

இரண்டு மூன்று நாட்களாக மூளையை கசக்கி, புரண்டு, புரண்டு படுத்து யோசித்து அதிஷா செய்தது போல நானும் 50 புத்தகங்களை இந்த ஆண்டிற்குள் படித்து முடிக்கும் சவாலை ஏற்றுக்கொண்டுவிட்டேன்!

சின்ன புத்தகம், பெரிய புத்தகம் என்ற கணக்கில்லாமல், அரசியல், பண்பாடு, பொருளாதாரம் என கலவையாய் என எல்லாம் கலந்து தேர்ந்தெடுக்கலாம் என முடிவு!

என்னென்ன படித்தேன் என அவ்வப்போது தெரிவிக்கிறேன். சிறு குறிப்பு கூட தர முயற்சி செய்கிறேன்.

நிறைய இடைவெளி விட்டால், கொஞ்சம் விசாரியுங்கள்! அதற்காக தான் உங்களிடம் இதை பகிர்ந்துகொள்கிறேன்.

அதிஷாவிற்கு நன்றி.

- குருத்து

*****

இது மனதிற்கான டீடாக்ஸ்

****

ஃபேஸ்புக் நம் வாசிப்புப்பழக்கத்தை அடியோடு நிறுத்திவிட்டதா? அது நேரத்தை விழுங்குகிறதா? நாம் ஏன் முன்புபோல நிறைய வாசிப்பதில்லை? என்கிற டைப் கேள்விகளை இப்போதெல்லாம் அதிகமாக எதிர்கொள்கிறேன். சமீபத்தில் சில நண்பர்களோடு இதுகுறித்து விவாதித்துக்கொண்டிருந்தேன். நண்பர்கள் வெவ்வேறுவிதமான கருத்துகளை முன்வைத்தனர்.

1 - ஃபேஸ்புக் நம் நேரத்தை அதிகமாக விழுங்கிவிடுகிறது. அதில் நேரம் போவதே தெரியாமல் மூழ்கிவிடுகிறோம். 

2 - ஃபேஸ்புக்கில் ஒவ்வொருநாளும் நூற்றுக்கணக்கான பக்கங்களை நாம் அறியாமலேயே வாசிப்பது மனச்சோர்வை உண்டாக்குவது

3 - ஃபேஸ்புக் வாசிப்பிலேயே திருப்தி அடைந்துவிடுவது

4 - இப்போதெல்லாம் நூல்கள் வாசிக்க அத்தனை மகிழ்ச்சியாக இருப்பதில்லை. சுஜாதா போல எழுத யாருமே இல்லை. 

இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு விதமான காரணங்களை முன்வைத்தனர். எல்லாமே ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணமாகத்தான் இருந்தன. ஆனால் இதையெல்லாம் தாண்டி வேறொரு முக்கியமான பிரச்சனை ஒன்று இருக்கிறது. அது கவனச்சிதறடிப்பு. 

சமூக வலைதளங்களுக்கு நாம் எப்படி அடிமையாக இருக்கிறோம்... என்பதைப்பற்றி சென்ற ஆண்டு ஆனந்தவிகடனில் ஒரு கவர்ஸ்டோரி எழுதியிருந்தேன். அதற்காக நிறைய ஆய்வுக்கட்டுரைகளை பத்து பதினைந்து நாட்கள் உட்கார்ந்து வாசிக்கவேண்டியதாயிருந்தது. உலகம் முழுக்க வெவ்வேறு ஆய்வுகளில் இந்த கவனசிதறடிப்பு என்கிற விஷயம் நம்மிடையே பரவிவருவதை பிரதானமான ஒன்றாக குறிப்பிடுகிறார்கள்.

ஃபேஸ்புக்கில் நீங்கள் ஒரே ஒரு ஸ்டேடஸை (சற்றே நீளமான) பொறுமையாக நிறுத்தி நிதானமாக படிப்பதில்லை என்பது பலருடைய ஆய்விலும் தெரிந்திருக்கிற தகவல். ஒரு வீடியோவைக்கூட நம்மால் முழுமையான கவனத்தோடு ஒன்றரை நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடிவதில்லை என்கிறார்கள். அடுத்தடுத்து டைம்லைனில் நாம் காண்கிற வெவ்வேறு செய்திகளும் தொடர்ச்சியாக நம் கவனத்தை சிதறடிக்கின்றன. எதையுமே தவறவிடக்கூடாது என்கிற ஆவலும் சேர்ந்து கொள்ள நாம் எந்த ஒன்றிலுமே முழுமையான கவனத்தோடு இருக்கமுடியாமல் போய்விடுகிறது. வாசிக்கும்போது தலைக்கு மேல் ஒளிரும் சிகப்பு நிற நோட்டிபிகேஷன் உங்களை மேலும் மேலும் பலவீனப்படுத்துகிறது. 

இது ஃபேஸ்புக்கில் மட்டும் அல்ல. நம் அன்றாட வாழ்விலும் கூட நிகழ ஆரம்பித்திருக்கிறது. டிவி பார்ப்பது, மால்களில் ஷாப்பிங் செல்வது, ஹோட்டல்களில் சாப்பிடுவது, நண்பர்களோடு உரையாடுவது என எல்லா இடங்களிலும் இந்த கவனசிதறடிப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.  எங்கெல்லாம் அதிகமாக சாய்ஸ்கள் இல்லாமல் இருக்கிறதோ அங்கெல்லாம் நம்முடைய கவனம் அதிகரிக்கும். ஆனால் நாம் எல்லாம் மோசமான நுகவர்வோர்களாக மாற்றப்பட்டு வருகிறோம். எதையுமே பொறுமையாக யோசித்து ஆராய்ந்து தீர்மானிப்பதற்கு முன்னால் உங்களிடம் ஒரு பொருளை விற்றுவிடவேண்டும் என்கிற வியாபார யுக்தி தொடர்ச்சியாக செயல்படுத்துப்படுகிறது. அதன் ஒருபகுதியே இந்த கவனசிதறடிப்பு. 

இத்தகைய கவனசிதறடிப்பால்தான் நம்மால் நூல்களை முன்புபோல வாசிக்கமுடிவதில்லை. முன்பெல்லாம் ஒரு சிறுகதையை ஒரே அமர்வில் படித்துவிடுகிற நாம், இப்போது ஒரு சிறுகதைக்கு ஒன்பது இன்டர்வெல் விடுகிறோம். 

மொபைல் பார்க்க, டிவி பார்க்க, பராக்கு பார்க்க என்று ஒன்றரை பக்கங்களுக்கு மேல் நம்மால் தொடர்ச்சியாக கவனத்தை குவித்து எப்படிப்பட்ட ஜனரஞ்சக படைப்பையும் வாசிக்க முடிவதில்லை. அதற்கு மாறாக ஒவ்வொரு நாளும் ஃபேஸ்புக்கில் எந்த படைப்பையும் ஆழ்ந்து வாசிக்காமல் ஸ்கிப் செய்து வாசிக்கவும், வாசிக்காமல் நகர்வதையும், ஒரு படைப்பின் முதல் இருவரிகள் பிடிக்கவில்லை என்றால் அடுத்த படைப்பிற்கு தாவுவதையும் நாம் அறியாமலே பயில்கிறோம். நூல்களை எடுத்து வாசிக்க அமரும்போது அந்த ஃபேஸ்புக் பயிற்சி நம் கவனத்தை மேலும் மேலும் சிதறடிக்கிறது. முதல் இரண்டு பக்கங்களே சோர்வைத்தருகின்றன. 

நம்முடைய வாசிப்பு கணிசமாக குறைந்து போனதற்கு முழு முதற்காரணம் கவனசிதறல்தான். அதனால்தான் நம்மால் ஃபேஸ்புக்கில் யாராவது 300சொற்களுக்கு மேல் எழுதுவதை வாசிக்க முடிவதில்லை. ஃபேஸ்புக்கில் அதிகமாக நேரம் செலவிட்டாலும் தொடர்ந்து திரைப்படங்கள் பார்க்க நம்மால் முடிகிறது. ஊர்சுற்ற முடிகிறது. நண்பர்களோடு உரையாட முடிகிறது.ஆனால் ஏன் புத்தகங்கள் வாசிக்கமுடிவதில்லை? திரைப்படம் பார்ப்பது போலவோ, உணவு உண்பதைப்போலவோ எளிதான செயல் அல்ல புத்தக வாசிப்பு. அதன் ஆதாரமாக இயங்குவது கவனம். 

*******

இதை சரிசெய்வது எப்படி என வெவ்வேறு விதமான விஷயங்களின் வழி முயற்சி செய்திருக்கிறேன். ஒட்டுமொத்தமாக இங்கிருந்து விலகுவது என்பது நல்ல தீர்வாக இருக்காது. பயணம் போவது கூட பலன் தரவில்லை. காரணம் வாசிப்புப் பழக்கத்தை மீட்டெடுப்பதோடு கவனச்சிதறலையும் சரிசெய்ய வேண்டும். கவனச்சிதறல் என்பது நேரடியாக நம் வாழ்வை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. அலுவலகத்தில் வீட்டில் எதையுமே கவனத்தோடு செய்ய முடியாமல் போவது அதன் இன்னொரு கோணம். இந்த கவனசிதறல் சிக்கலில் இருந்து மீளவும், மீண்டும் பழையபடி உற்சாகமாக வாசிக்க விரும்புகிற நண்பர்கள் சிலருக்காக ஒரு சின்ன சவால் ஒன்றை உருவாக்கினேன். ''50 Books Challenge"

இந்த சவால் மிக எளிமையானது. இன்றுதான் சவாலைத் தொடங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இன்றிலிருந்து ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூகவலைதளங்களை பர்சனல் விஷயங்களுக்காக பயன்படுத்தாதீர்கள். லாக் ஆஃப் செய்துவிடவும். அடுத்து வரும் நாட்களில் உங்களுக்கு பிடித்தமான 50 நூல்களை வாசிக்க ஆரம்பியுங்கள். 

50 நூல்களையும் முழுமையாக வாசித்து முடிக்கும் வரை ஃபேஸ்புக்கிற்கு திரும்பாதீர்கள். 50நூல்களையும் ஒரே நாளில் வாசித்தாலும் சரி ஒருவருடத்தில் வாசித்தாலும் சரி... ஆனால் முழுமையாக 50நூல்களையும் வாசித்து முடித்த பிறகுதான் மீண்டும் ஃபேஸ்புக்கிற்கு திரும்பவேண்டும். திரும்பியதும் அந்த 50நூல்களின் பட்டியலையும் வெளியிடுங்கள். அவ்வளவுதான் 50புக்ஸ் சேலஞ்ச். 

இது கொஞ்சம் கடினமான சவால்தான் என்றாலும். நிச்சயம் நல்ல பலன் தரும். கவனசிதறடிப்பு பிரச்சனையிலிருந்து மீண்டுவர உதவும். நண்பர்கள் சிலர் அதை இப்போதும் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒல்லி ஒல்லியான நூல்களை கூட தேர்ந்தெடுத்து படித்து முடித்துவிட்டு இங்கே ஓடிவந்துவிடலாம். ஆனால் 50 மஸ்ட்டு. இதன்மூலம் பழையபடி வாசிப்புப்பழக்கம் அதிகரிக்கும், ஒரு சவாலை செய்து முடித்தோம் என்கிற திருப்தி, ஃபேஸ்புக் பிடியிலிருந்து சிறிய விடுதலை என நிறைய பலன்கள் கிடைக்கும். 

இது ஒருவகையான மனதிற்கான Detoxதான். எல்லோருக்குமே இதுத் தேவைப்படாது. தேவைப்படுபவர்கள் செய்துபார்க்கலாம். இந்த சவாலில் நீங்களேதான் உங்களுக்கு அம்பயர். நீங்களேதான் உங்களை கண்காணித்து வழிநடத்த வேண்டும். 

எனவே ஒரு சுயபரிசோதனை முயற்சியாக நான் இன்றிலிருந்து 50Books Challange ஐ தொடங்குகிறேன். 50நூல்களை வாசித்துமுடித்துவிட்டு இங்கே திரும்புகிறேன். என்னோடு நண்பர்கள் விரும்பினால் இணையலாம். 
அதுவரை டாட்டா பைபை.... 

- அதிஷா,
பத்திரிகையாளர்

கனவு!

 
மண்டையை குடைந்து கொண்டிருக்கும்
ஒரு பிரச்சனைக்கு
இன்று விடிகாலையில் விடை கிடைத்தது!
ஆஹா! அருமை! என்றேன்.
உடனே விழிப்பும் வந்தது!

என்ன பிரச்சனை?
என்ன தீர்வு?  
காலையில் இருந்து யோசிக்கிறேன்.
ஞாபகத்துக்கு வரவேயில்லை! 😇

August 1, 2017

யு டர்ன் - ஒரு பார்வை!

பெங்களூரு பிரதான மேம்பாலத்தில் சுற்றிப் போவதற்கு சங்கடப்பட்டு, கற்களை நகர்த்தி யு டர்ன் எடுத்து பறக்கிறார்கள் பைக்வாசிகள்.

விதிமீறும் இவர்கள் ஒவ்வொருவராக மர்மமாக மரணிக்கிறார்கள். ஏன் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லி இருக்கிறார்கள்.

'லூசியா' தந்து ஆச்சர்யப்படுத்திய கன்னட இயக்குநரின் இரண்டாவது படம்.

சுரங்கங்களை முழுங்குனவன், பல கோடிகளை லஞ்சம் வாங்குனவெல்லாம் வெள்ளையும் சொள்ளையுமா சுதந்திரமா சுத்தும் பொழுது, முதலாளி திட்டுவார் என அவசரமாய் செல்கிறவர்களை கொல்வது எல்லாம் ரெம்ப அக்கிரமம். நம்ம ஊர் சங்கர் சட்டியில் போட்டு வறுப்பார். இவர் டீஸண்ட். வலிக்காமல் கொன்றுவிடுகிறார்.

உண்மை சம்பவம் என படத்தின் இறுதியில் பாலத்தில் விதி மீறி செல்பவர்களை காட்டுகிறார்கள்.

பல உயிர்களை பலி வாங்கும் பாலத்தில் ஒரு அடி சுவர் எழுப்புவது அரசாங்கத்தின் வேலைதானே! அது என்ன தனிநபர் செய்கிற காரியமா? ஒரு இடத்திலும் இயக்குநர் வாயை திறக்கவேயில்லை

July 10, 2017

அத்தை

அத்தை!

ஒவ்வொரு அத்தைக்கும்
ஒவ்வொரு சிறப்புண்டு!

'என்ன மருமகனே!'
என அழைப்பதில்
அத்தனை அன்பு ததும்பும்!

"எனக்கு ஒரு பொண்ணு இருந்தா
உனக்குத்தாண்டா கட்டிக் குடுத்திருப்பேன்" 
எப்பொழுதும் வாஞ்சையுடன் சொல்வார்
ராக்கு அத்தை!

அத்தைகளின் அன்பை
இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே
எல்லா அத்தைகளின் பெண்களையும் 
கட்டிக்கொள்ளவேண்டும் என 
நினைத்த காலம் உண்டு! 😜

சொந்த ஊர் பாசத்தில்
அத்தைகளின் அளவில்லாத 
அன்பும் உண்டு!

எந்த அத்தை பெண்ணையும் கட்டாமல்
சாதி மறுப்பு திருமணம் செய்த பொழுதும்
வருத்தம் இருந்தாலும்
மாறாத அன்பு காட்டினார்கள்.

பிச்சை அத்தை கோரவிபத்தில் 
இறந்த பொழுது கலங்கிபோனேன்.

கால இடைவெளியில் 
அத்தைகள் மறையும் செய்திகள் 
வந்து கொண்டே இருக்கின்றன!

அத்தைகள் இல்லாத உலகத்தை
நினைத்துப் பார்ப்பது 
சிரமமாய் இருக்கிறது!

March 20, 2017

ஆதார் மசோதா : பண மசோதா என்பது என்ன?

"ஆதார் மசோதாவை பண மசோதாவாக மக்களவைத் தலைவர் அனுமதித்தது நடைமுறையில் ஏற்பட்ட தவறு மட்டுமல்ல, அரசியல் சட்டத்தின் 110-வது ஷரத்தையே மீறும் செயல். அரசின் எதேச்சாதிகாரப் போக்கை வெளிக்கொணரும் விதத்தில்தான் ஆதார் மசோதா இருக்கிறது. இந்தத் தவறான முன்னுதாரணம் தொடர்ந்தால், எதிர்காலத்தில் இதையே உதாரணமாகக் கொண்டு, பல சட்ட மீறல்களையும் இனிவரும் காலத்தில் அரசுகள் செய்ய முடியும்."

பண மசோதா என்பது என்ன?

- சுரீத் பார்த்தசாரதி,
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்,

ஒரு முக்கியமான வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷால் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ‘ஆதார் சட்டம் - 2016 செல்லத்தக்கதா?’ என்று பரிசீலிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார் அவர். மத்திய அரசு வழங்கும் பணப் பயன், மானியம் மற்றும் சில வகை சேவைகள் யாரை இலக்காகக் கொண்டிருக்கின்றனவோ, அவர்களுக்கு மட்டும் கிடைப்பதற்காக அவரவர் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வகை செய்வது இச்சட்டம். இந்த மசோதாவை ‘பண மசோதா’ என்று வகைப்படுத்தி, மக்களவையில் சாதாரண பெரும்பான்மை வலு ஆதரவில் நிறைவேற்றி சட்டமாக்கிவிட்டது பாஜக அரசு. ஆக, மாநிலங்களவையில் எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு பயனற்றதாகிவிட்டது.

இந்தச் சட்டம் மக்களுடைய உரிமைகளை ஆபத்தில் சிக்கவைப்பதுடன், வெளிப்படையாகவும், நீண்ட கால நோக்கிலும் தீங்கு விளைவிக்கும் வகையில் இருக்கிறது. மேலும், அரசியல் சட்டம் வகுத்துள்ள நியதிகளுக்கும் முரணாக இருப்பதை உற்று நோக்கினால் புலப்படும்.

ஜனநாயகத்துக்கு முரணானது

அரசு அளிக்கும் மானியங்களையும் பணப் பயன்களையும், நியாயமாகவும் சமமாகவும் அனைவருக்கும் விநியோகிக்கும் வகையில் மக்களுக்குத் தனிப்பட்ட அடையாள எண் வழங்க வேண்டும் என்றுதான் ஆதார் திட்டம் கொண்டுவரப்பட்டது. முன்கூட்டியே சட்டபூர்வ ஏற்பாடு இல்லாமல், ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது ஜனநாயக முறையிலான நிர்வாகத்துக்கு முற்றிலும் முரணானது என்பதில் சந்தேகம் இல்லை. இதற்காக ஜெய்ராம் ரமேஷ் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்க வேண்டும். ஆனால், அந்தத் தவறை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டது பாஜக.
அதாவது, காங்கிரஸ் 2010-ல் இதை வரைவு மசோதாவாக மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தும்போது, சாதாரண மசோதாவாகத்தான் அறிமுகப்படுத்தியது. அது அதிகாரபூர்வச் சட்டமாக மாற வேண்டுமானால், மக்களவை - மாநிலங்களவை இரண்டுமே அதற்கு ஒப்புதல் தந்தாக வேண்டும் என்ற நிலை அப்போது இருந்தது. ஆனால், அந்தச் சட்ட வரைவில் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய அம்சங்கள் சில இருந்தன. எனவே, அதை ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு, அரசின் கருத்துடன் வேறுபடும் வகையில் விரிவான அறிக்கை தந்தது. “ஆதார் எண் தொடர்பான தரவுகளை வேறு எவர் கைக்கும் சிக்காமல் பாதுகாக்க வேண்டும், தனி மனிதர்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைத்திருக்கப்பட வேண்டும்” என்று அந்த அறிக்கை வலியுறுத்தியது.

தந்திர மசோதா

சட்டம் இயற்றப்படாமலேயே அதை அமலாக்கத் தொடங்கியதால் பலரும் பொது நலன் வழக்குகளைத் தொடுத்தனர். சில குறிப்பிட்ட அரசுத் திட்டங்களுக்கு மட்டும் அதை அனுமதித்த நீதிமன்றம், அடுக்கடுக்காகப் பல தடை ஆணைகளை இடைக்கால உத்தரவுகளாகப் பிறப்பித்தது. இதனிடையே புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக அரசு, 2016 மார்ச்சில் முந்தைய காங்கிரஸ் அரசு தாக்கல்செய்த மசோதாவைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, புதிய வரைவு வாசகம் கொண்ட மசோதாவை ‘ஆதார் மசோதா-2016’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா, தந்திரமான வகையில் பண மசோதா என்று வகைப்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்திய அரசியல் சட்டப்படி பண மசோதாக்களுக்கு மக்களவை ஒப்புதல் தந்தால் போதும். ஆக, மாநிலங்கள வையில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோது, மக்களவையில் தன்னுடைய பெரும்பான்மையை வைத்து, மசோதாவை நிறைவேற்றிக்கொண்டது பாஜக.

ஷரத்து சொல்வதென்ன?

பண மசோதா எது என்று அரசியல் சட்டத்தின் ஷரத்து 110 விவரிக்கிறது. நிதி நிர்வாகம் தொடர்பான ஏழு அம்சங்களை மொத்தமாகக் கொண்டது அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டதுதான் பண மசோதா என்று அது கூறுகிறது. வரி விதிப்பது, குறைப்பது, கூட்டுவது, ரத்துசெய்வது உள்ளிட்ட ஒழுங்காற்றுச் செயல்கள், மத்திய அரசு கடன் வாங்குவதை ஒழுங்காற்றுவது, இந்தியத் தொகுப்பு நிதியத்திலிருந்து பணத்தைத் திரும்ப எடுப்பது அல்லது நிதியத்தில் சேர்ப்பது போன்றவை இந்த ஏழு அம்சங்களில் அடங்கும். வரைவு மசோதா மேலே குறிப்பிட்ட அம்சம் எதையும் கொண்டிருக்காவிட்டாலோ, திட்டமிடாமல் வேறு ஏதேனும் ஒன்றுடன் இணைந்து வந்தாலோ அது பண மசோதாவாகிவிடாது என்கிறது ஷரத்து. ஒரு மசோதா பண மசோதாவா, இல்லையா என்ற சர்ச்சை ஏற்பட்டால், சபாநாயகரின் முடிவே இறுதியானது என்றும் கூறுகிறது.

குறையுள்ள எதிர்வாதம்

ஜெய்ராம் ரமேஷின் ஆட்சேபத்துக்கு அரசின் பதில், எதிர்பார்த்தபடியே இரு அம்சங்களைக் கொண்டிருக்கிறது. “பண மசோதாதான் என்று சபாநாயகர் ஒப்புதல் வழங்கிய பிறகு, அதை எந்த நீதிமன்றமும் பரிசீலிக்க முடியாது. அரசியல் சட்டத்தின் தேவைக்கேற்ப எல்லா விதத்திலும் ஆதார் மசோதா - பண மசோதாதான்” என்று இப்போது அரசுத் தரப்பு கூறுகிறது. வெகு கவனமாக ஆராய்ந்தால், இந்த இரு அம்சங்களிலும் அரசு சொல்வது தவறு என்பது புரியும்.

அரசியல் சட்டத்தின் 110-வது ஷரத்து சபாநாயகருக்குக் கட்டுப்பாடற்ற விருப்ப அதிகாரத்தைத் தந்துவிடவில்லை. பண மசோதாவுக்குரிய அம்சங்கள் என்று 110-வது ஷரத்து கூறுவதில் உள்ள அம்சங்கள் ஏதும் இல்லாவிட்டால், அதைச் சாதாரண மசோதாவாகத்தான் கருத வேண்டும் என்று அரசியல் சட்டம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. அப்படி இல்லாத ஒன்றைப் பண மசோதாவாகக் கருதுவது அரசியல் சட்டப்படி பெரும் தவறாகும்.
2007-ல் நடந்த ‘ராஜா ராம் பால் - எதிர் - சபாநாயகர்’ வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பு என்ன சொல்கிறது என்றால், ‘நாடாளுமன்றம் ஒரு விஷயத்தில் எப்படி முடிவெடுத்திருந்தாலும் அதை நீதிமன்றங்கள் ஆராயவும் பரிசீலிக்கவும் தடையில்லை’ என்கிறது. சபாநாயகர் சட்டத்துக்குப் புறம்பாக வேண்டும் என்றே வகைப்படுத்தி னாலோ, அரசியல் சட்டம் எதிர்பார்க்கும் அடிப்படைக் கூறுகளைப் புறந்தள்ளினாலோ, தான்தோன்றித்தனமாக முடிவெடுத்தாலோ, நேர்மையற்ற உள்நோக்கத்துடன் ஒரு முடிவுக்கு வந்தாலோ, அவருடைய முடிவே இறுதியானது என்று இருந்துவிடாமல் பரிசீலிப்பதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்கிறது தீர்ப்பு.

ஆதார் சட்ட அம்சங்கள்

ஆதார் சட்டத்தைச் சாதாரணமாக வாசித்தாலே அதன் கூறுகள் அரசியல் சட்டத்தின் 110-வது ஷரத்து கூறுவனவற்றையும் தாண்டிச் செல்வது புலனாகும். அரசின் பொது நிதியிலிருந்து பணம் எடுக்க அல்லது பணத்தைச் சேர்க்க அந்த ஷரத்து வகை செய்கிறது. ஆதார் சட்டத்தில், குடிமக்களிடம் திரட்டப்படும் அனைத்துத் தரவுகளையும், கண்விழி அடையாளம் - ரேகை அடையாளம் உள்ளிட்ட தனிப்பட்ட அங்க அடையாளங்களையும் பொதுவாகச் சேர்த்து வைக்க வழி செய்கிறது. ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய தேவைப்படும் பணத்தை அனுமதிப்பதுதான் பண மசோதா.
ஆதார் மசோதாவில் இப்படிப்பட்ட அம்சம் ஏதுமில்லை. எனவே, இதைப் பண மசோதாவாக மக்களவைத் தலைவர் அனுமதித்தது நடைமுறையில் ஏற்பட்ட தவறு மட்டுமல்ல, அரசியல் சட்டத்தின் 110-வது ஷரத்தையே மீறும் செயல். அரசின் எதேச்சாதிகாரப் போக்கை வெளிக்கொணரும் விதத்தில்தான் ஆதார் மசோதா இருக்கிறது. இந்தத் தவறான முன்னுதாரணம் தொடர்ந்தால், எதிர்காலத்தில் இதையே உதாரணமாகக் கொண்டு, பல சட்ட மீறல்களையும் இனிவரும் காலத்தில் அரசுகள் செய்ய முடியும். எனவே, அரசின் இந்த முடிவில், சபாநாயகரின் இந்த முடிவில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும். நீதியை நிலைநாட்ட வேண்டும்!

- சுரீத் பார்த்தசாரதி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்,

சுருக்கமாகத் தமிழில்: சாரி

இந்து நாளிதழ்

March 5, 2017

வீடு!

திடீரென தெருவில் தோன்றிய
பெரியபூனை, குட்டிப்பூனை இரண்டும்
பத்து நாட்களாக வீடு தேடி அலைகின்றன!

ஆபத்து காலத்தில்
எங்க முருங்கை மரத்தில்
ஏறிக்கொள்கிறது குட்டிப்பூனை!
எதனுடனோ சண்டை போட்டு
உடம்பெல்லாம் காயம்.
முனகலோடு சுற்றிவருகிறது
பெரியபூனை!

வாடகை, காற்றோட்டம், நீர்
வீட்டுக்காரர் என எல்லாம்
பொருந்தி வருவது
வரன் அமைவது போல
ஆக சிரமமான காரியம்!

வீட்டில் செல்லப்பிராணிகள்
வளர்த்ததில்லை
உங்களுக்கு சோறுபோடுவதே
பெரிய விசயம்டா என்பார் அம்மா.

அடைக்கலம் கொடுக்கலாம் என்றால்
வீட்டில் உள்ளவர்களுக்கோ
பூனை அலர்ஜி!
மீறி சேர்த்தால்
நானும் பூனைகளுடன்
தெருவில் சுற்றவேண்டியிருக்கும்

நிம்மதில்லாத பூனைகளுடன்
என் நினைவுகளும்
அலைந்துகொண்டேயிருக்கின்றன.

தொடர்ந்து பிரேக்கிங் நியூஸ் பார்ப்பதால்
சின்னம்மாவிடம் பூனைகளை தரலாம்
என தோன்றுகிறது!
பேச்சுத்துணைக்கு ஆகும்!