கடந்த வாரம் வெளிவந்த செய்தியை கீழே தந்துள்ளேன்.
கடந்த இரண்டு வாரங்களில் இரண்டுமுறை இ.எஸ்.ஐ மருத்துவனை சென்றிருந்தேன்.
நோயாளிகளுக்கு தரப்படுகிற பெரும்பாலான மருந்துகள் பெரும்பாலும் அடுத்த மாதம் அல்லது மூன்று மாதங்களில் அதன் வாழ்வு (Expiry Date) முடிந்துவிடுபவையாக இருக்கின்றன. அவையெல்லாம் அபூர்வ மருந்துகள் அல்ல! வலி நிவாரணம், ஒவ்வாமை மற்றும் சத்து மாத்திரைகள் தான்!
உதாரணத்திற்கு வைட்டமின் பி12 மாத்திரைகளை ஒவ்வொரு நோயாளிக்கும் தினம் மூன்று விதம் 10 நாட்களுக்கு 30 மாத்திரைகள் என அள்ளித்தருகிறார்கள்.
அவைகளின் வாழ்வு (Expiry Date) அடுத்த மாதத்தோடு முடிய இருக்கின்றன. படம் பாருங்கள்.
எடப்பாடி, மோடி ஆட்சியில் ஊழல் மலிவாய் இருக்கிறது. அவர்கள் மருத்துவ துறையையும் விடவில்லை.
தொழிற்சங்கங்கள் இந்த ஊழலை தொழிலாளர்களிடமும், பொதுமக்களிடமும் எடுத்து செல்லவேண்டும். இ.எஸ்.ஐ காப்பாற்றப்படவேண்டும்.
****
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு தொழிலாளர் காப்பீட்டு கழக மருத்துவமனை தொடங்கப்பட்டு 68 ஆண்டுகள் ஆகின்றன. தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் மருத்துவ வசதிகள் செய்து தருவதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள். ஆனால் அனைத்துதுறைகளிலும் ஊழல் செய்வதை ஒரு முக்கிய வேலையாக கருதி செயல்பட்டு வருகிற அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவத்துறை விதிவிலக்கல்ல.
தமிழகத்திலுள்ள 65 இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் கடந்த ஆகஸ்ட் 2017 முதல் ஜூலை 2018 வரை மருந்துகள் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் வாங்குவதற்கு கொள்முதல் திட்டம் ரூ.13.13 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால் மத்திய மருத்துவ சேமிப்பு கிடங்கின் கண்காணிப்பாளர் மருந்துகளுக்கான கொள்முதல் தொகையை ரூ.40.29 கோடியாக தேவையில்லாமல் உயர்த்தி, தனியார் மருந்து நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை பிறப்பித்திருக்கிறார்.
இந்த ஆணை பிறப்பித்திருப்பதற்கு பின்னாலே மருத்துவதுறையின் உயர் அதிகாரிகள் செயல்பட்டிருக்கின்றனர். தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட மருந்துகள் கொண்ட நூற்றுகணக்கான அட்டைபெட்டிகள் மதுரை பிராந்திய இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் அலுவலர் அறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த அட்டைபெட்டிகளை வைப்பதற்கு இடமில்லாத காரணத்தால் பயன்படுத்தாத கழிவறைகளில் இவை வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் ரூ.27.16 கோடிக்கு தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்ததில் நடைபெற்ற ஊழல் குறித்து தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் விசாரணை தொடங்கியது. ஆனால் அந்த விசாரணை தொடக்க நிலையில் இருந்து எந்த முன்னேற்றமும் அடையவில்லை.
தமிழகத்தில் அமைய விருக்கிற புதிய ஆட்சியில் தொழிலாளர்களுக்காக நடத்தப்படுகிற இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்காக மருந்து கொள்முதலில் ஊழல் செய்த மருத்துவதுறை அதிகாரிகள் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment