> குருத்து: மயிரிழையில்...!

August 20, 2019

மயிரிழையில்...!


காரைக்குடி வரை சொந்தவேலையாக போயிருந்தேன். 15 வருடங்கள் ஓடிவிட்டன. பெரிதாய் மாற்றமில்லை. எங்கேயாவது போகலாம் என தேடிப்பார்த்தால்.. சுற்றி சுற்றி கோயில்கள் தான் இருந்தன.

இரவு 9 மணிக்கு பழைய பேருந்து நிலையம் சென்றேன். அரசு பேருந்தில் ஏற்கனவே பதிவு செய்திருந்தேன்.

பேருந்துக்கு வாசல் அருகே, இரண்டு ஆச்சிகள் "இதெல்லாம் இருக்கைகளா? இதில் ஏறி, சென்னை வரை எப்படி போகமுடியும்? நாளைக்கு போய் எந்த வேலையாவது செய்யமுடியுமா?" என கோபமாய் பேசிக்கொண்டு இருந்தார்கள். எட்டிப்பார்த்தேன். படுமோசமாக தான் இருந்தன. நடத்துநர் ஏதும் பேசவேயில்லை.

ஆச்சிகளிடமே கேட்டேன். இது 9.30 மணியா? என்றேன். 9 மணி என்றார். மயிரிழையில் தப்பித்தேன். "முன்னாடியெல்லாம் குறைவா இருந்தது. இப்பத்தான் தனியார் அளவிற்கு வாங்குகிறார்களே? பிறகென்ன ஒழுங்கா பராமரிக்கலாமே!" என்றார் என்னைப் பார்த்து! பெரிதாய் தலையாட்டி ஆமோதித்தேன்.

தமிழ்நாட்டில் அண்ணா காலத்தில் அரசுடைமையாக்கினார்கள். பட்டி தொட்டியெல்லாம் அரசு பேருந்துகள் ஓடின. மக்கள் பயன்பெற்றார்கள். 20 வருடங்கள் பிரச்சனையேயில்லை. லாபம் அதிகமாய் வந்து, போக்குவரத்து கழகம் சார்பில் சில கல்லூரிகள் கட்டியிருக்கிறார்கள். ஆராய்ச்சிக்கெல்லாம் காசு செலவழித்திருக்கிறார்கள்.

அடுத்த 20 வருடங்கள். தனியார்மய காலம். புதுசு புதுசா கிரியேட்டிவா சிந்தித்து பல்லாயிரம் கோடிகள் கடனாளியாக்கிவிட்டார்கள். 60% க்கும் மேலாக காலாவதியான பேருந்துகளை உயிரை கையில் பிடித்து கொண்டு, வண்டிகளை ஓட்டுகிறார்கள். அவர்களுடைய வைப்பு நிதியையும் தின்று தீர்த்துவிட்டார்கள். கடுப்பாகி பழனியில் ஒரு ஊழியர் மோசமான பேருந்துகளை காணொளியாக்கி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்காக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களை பள்ளிகளுக்கு உதவ சொல்லி அவ்வப்பொழுது அமைச்சர் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். அது போல போக்குவரத்து கழகத்தில் பயணித்த முன்னாள் பயணிகளிடம் கெஞ்சமுடியாது அல்லவா!

அரசுத்துறைகளை தனியார்மயமாக்குவதை மத்திய மாநில அரசுகள் கவனமாக செய்துவருகிறார்கள். அதற்காக மக்களுடைய மனதையும் தயார் செய்துவருகிறார்கள். கோபமாய் பேசிய ஆச்சி கூட "நாம் டிக்கெட் போடும் பொழுதே வேணாம்னு சொன்னேன். நீ தான் கேட்கலை" என்றார் சக ஆட்சியிடம்!

கல்யாணம், கருமாதிக்கு ஊர்ப்பக்கம் போய்வருகிறேன். வெகுசீக்கிரத்தில் அதுக்கும் வழியில்லாமல் செய்துவிடுவார்கள்.

0 பின்னூட்டங்கள்: