> குருத்து: Rabbit Hole (2010)

August 20, 2019

Rabbit Hole (2010)

கதை. அம்மா, அப்பா, நான்கு வயது பையன் என நியூக்ளியர் குடும்பம். ஓடும் நாயை துரத்தி சென்று சாலையில் கார் விபத்தில் இறந்துவிடுகிறான். 8 மாதங்கள். இருவரும் பையனின் நினைவுகளில் வதைபடுகிறார்கள்.

நாயை அம்மா வீட்டில் விட்டுவிடுகிறாள். அவனின் உடைகளை பிறக்கப்போகும் தங்கை குழந்தைக்கு தரலாம் என எண்ணுகிறாள். தங்கை நாசூக்காய் மறுக்கிறாள். அனாதை நிலையத்திற்கு தந்துவிடுகிறாள். வீட்டை விற்றுவிடலாம் என கணவனிடம் சண்டையிடுகிறாள். பையனின் இழப்பை ஏற்றுக்கொள்வோம். அதற்காக எல்லா அடையாளங்களையும் அழிப்பது சரியில்லை என அவன் சண்டையிடுகிறான்.

மெல்ல மெல்ல பையனின் நினைவுகளிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்களா என்பது முழு நீளக்கதை!

*****
தாத்தா, அம்மா என வயதானவர்களின் இழப்பையே பலரால் தாங்க முடிவதில்லை. குழந்தைகளின் இழப்போ தாங்க முடியாதது.

தனது எட்டு வயது மகன் இழப்பு குறித்து மூலதனம் புத்தகம் எழுதிய மார்க்ஸ் தனது நண்பன் எங்கெல்ஸ்சுக்கு எழுதுகிறார்.

”எங்கள் இல்லத்தின் ஜீவனாக விளங்கிய குழந்தையின் மரணத்திற்கு பிறகு எங்கள் வீடு முற்றிலும் வெறுமையுடன் பாழடைந்து காட்சியளிக்கிறது. எந்த அளவுக்கு குழந்தையின் இழப்பைக் காண்கிறோம் என்பதை என்னால் சொல்லமுடியாது. நான் ஏற்கனவே எல்லா துயரத்தையும் அனுபவித்தவன். ஆனால் இப்பொழுது தான் உண்மையான துயரம் என்ன என்பதை கண்டுள்ளேன். முற்றிலும் நெஞ்சடைத்து நிற்கிறேன்”
.
நடிகர் பிரகாஷ்ராஜ் தனது மகனின் இழப்பு குறித்து…

"அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு ஒருமுறை ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தோம். அங்கே ரிசப்ஷனில் மீன் தொட்டியில் நீந்திட்டிருந்த மீன்களைப் பார்த்ததும் என் ரெண்டு வயசு சித்து கேட்டான், ‘ஏம்ப்பா, இந்த ஃபிஷ்லாம் ஹாஸ்பிடல் வந்திருக்கு. இதுக்கெல்லாம் உடம்பு சரியில்லையா?’ அப்படிக் கேட்ட குழந்தையை, இன்னொரு நாள் அதேபோல ஒரு ஹாஸ்பிடலில் தொலைக்கப்போறேன்னு எனக்கு அப்போ தெரியாது.

கீழே போறேன். என் மனைவி முழிச்சுக்கிட்டா. ‘பையன் கண்ணைத் திறந்துட்டானா’ன்னு கேட்கிறா. ‘கண்ணை மூடிட்டான்’னு சொல்ற தைரியம் என்கிட்டே இல்லை. என் மகனைத் தொட்டுப் பார்க்கிறேன். அவன் உடம்பு சில்லுன்னு ஐஸ் மாதிரி இருக்கு. வழக்கமா அவன் உடம்பு சூடா இருந்தா, பதறுவேன். முதலும் கடைசியுமா அவன் உடம்பு சில்லுன்னு ஆனதுக்காகப் பதறினேன்.

காலமும், சக மனிதர்களும் தான் காயத்தை ஆற்றக்கூடிய அருமருந்து. படத்தில் நடித்த அனைவரும் இயல்பாக வலம்வந்தார்கள். 

பார்க்கவேண்டிய படம். பாருங்கள். தமிழிலும் கிடைக்கிறது.

0 பின்னூட்டங்கள்: