> குருத்து: January 2021

January 18, 2021

Joseph (2018) மலையாளம் - ஒரு நல்ல திரில்லர்


கதை. நாயகன் ஒரு ஓய்வு பெற்ற போலீசு அதிகாரி. துப்பறிந்து வழக்குகளை விடுவிப்பதில் ஆற்றல் மிக்கவராக இருப்பதால், பணி ஓய்வுக்கு பிறகும், போலீசு அவரைப் பயன்படுத்திக்கொள்கிறது.


கடந்தகால வாழ்வும் அப்படியே சொல்லப்படுகிறது. திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கும் பொழுது, விரிசல் ஏற்பட்டு தம்பதிகள் இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். குழந்தை வளர்ந்து கல்லூரி செல்லும் வயதில், ஒரு விபத்தில் இறந்துவிடுகிறாள்.

பிரிந்து சென்ற துணைவியார் இன்னொரு திருமணம் முடிந்து வாழ்ந்துவருகிறார். அவரும் ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். அந்த விபத்துப் பற்றி நாயகன் விசாரிக்கும் பொழுது, அது கொலையென தெரியவருகிறது. இடைவேளை. ஏன் அந்த கொலை என்பதை துப்பறிந்து சொல்கிறார்கள்.

****

சமீபத்தில் பார்த்த திரில்லர்களில் உணர்வுபூர்வமான நல்ல திரில்லர். மொத்தப் படத்தையும் நாயகனாக வருகிறவர் நன்றாக தாங்குகிறார். ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு. இருபது வருடங்களாக திரையில் துணை கதாப்பாத்திரங்களாக பல படங்களில் வந்தவர் தான். முதன்முதலில் தயாரிப்பாளராகி, நாயகனாகவும் நடித்திருக்கிறார். துப்பறியும் பகுதிகளில் ஒரு போலீசு அதிகாரி உதவியிருக்கிறார். நல்ல பாடல்கள். படம் நன்றாக ஓடியிருக்கிறது.

மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் பாகங்கள் பெறப்பட்டு, தேவையானவர்களுக்கு பதிந்தவர்களின் சீனியாரிட்டி படி தரப்படுகிறது என்பதாக படித்திருக்கிறேன். அதில் செய்யப்படும் ஊழல்களை, கொலைகளைப் பற்றி படம் பேசுகிறது. தமிழில் சிவகார்த்திகேயனின் ’காக்கிச்சட்டை’ போன்ற படங்கள் ஏற்கனவே பேசியது தான்!

படத்தில் நாயகன் தன் துணைவியாரை பிரிந்ததற்கான காரணம் பலவீனமாக இருந்தது. கொலையாளிகளை கண்டுபிடிக்க நாயகன் எடுக்கும் முடிவும் உவப்பாக இல்லை. துணைவியாரை திருமணம் செய்தவருக்கும் நாயகனுக்குமான காண்பிக்கப்படும் புரிதல் அருமை. படத்தை தமிழிலும் எடுக்கப்போவதாக செய்தி படித்தேன். தமிழில் அப்படியே எடுப்பார்களா! என தெரியவில்லை.

பார்க்க கூடிய படம். பாருங்கள்.

- 13, ஜனவரி 2021 - முகநூலில்...

கொரானா வருடம், 69 படங்கள் – அனுபவம்




திரையரங்கிலும் வீட்டில் கணிப்பொறியிலும் இரண்டு வாரத்திற்கு ஒருபடம் என்ற கணக்கில் தான் வருடத்தில் 25 படங்களை தொடுவேன்.


கொரானா உயிரிழப்புகள், மக்களின் துயரங்கள், அரசின் அலட்சியமான அணுகுமுறை ஏற்படுத்திய மன உளைச்சலை நண்பர்களுடன் இணைந்து செய்த நிவாரண வேலைகளும், படங்களும் தான் பித்துபிடிப்பதிலிருந்து காப்பாற்றியது எனலாம்.


ஊரடங்கில் வாரம் நான்கு படங்கள் கூட பார்த்திருக்கிறேன். மொத்தம் 150 படங்களுக்கு மேலாக பார்த்திருப்பேன். ஆனால் எழுதியது 69 படங்கள் தான்! தமிழ்ப்படங்களுக்கு பலரும் எழுதுவதால், எழுதுவதில்லை. சில சுமாரான படங்களுக்கு எழுதுவதில்லை. அப்படி எழுதியிருந்தால், நண்பர்களும் சிக்கிக்கொள்ள கூடாது என்ற நல்லெண்ணத்தில் எழுதியிருப்பேன். சில படங்களை எழுதவேண்டும் என நினைத்துக்கொண்டே காற்றில் கரைத்திருப்பேன். எப்பொழுதும் எழுத முடிவதில்லை. ஒரு சில சமயங்களில் ஓரிரு வாக்கியம் கூட எழுதமுடிவதில்லை. சில சமயங்களில் கடகடவென எழுதிவிடுவேன்.

படங்கள் வெவ்வேறு வகைகளில் இருப்பதற்கு காரணம் இதில் பெரும்பாலான படங்களை குடும்பத்தோடு பார்த்திருக்கிறேன். சில அனிமேசன் படங்களை என் பெண்ணுடன் பார்ப்பதுண்டு.

படம் பார்ப்பதை விட தேடுவது என்பது தான் பல சமயங்களில் நிறைய நேரத்தை சாப்பிட்டுவிடுகிறது. இன்னும் பார்ப்பதற்கு நிறைய நல்ல படங்களை குறித்துவைத்திருக்கிறேன். படங்கள் கிடைக்கவில்லை. மேலே உள்ள படங்களை சில நண்பர்களிடமிருந்து முன்பே வாங்கி வைத்திருந்தேன். சில படங்கள் குறிப்பிட்ட தளங்களில் கிடைத்தன.

படங்களால் என் கணிப்பொறி நிறைந்திருக்கிறது. பற்றாக்குறைக்கு 1 TB நாலாயிரம் கொடுத்து வாங்கி, அதிலும் படங்கள் வைத்திருக்கிறேன். பார்க்கவேண்டிய படங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. இருப்பினும் ஒரு நல்லப்படத்தை யாராவது அறிமுகப்படுத்தினால், நேரம் கிடைக்கும் பொழுது தேடி, அதையும் பத்திரமாய் சேகரித்து வைத்துக்கொள்கிறேன்.

ஆகையால், நண்பர்களிடம் வேண்டிக்கொள்வதெல்லாம், நல்ல படங்கள் பார்த்தீர்கள் என்றால், கதையை விளக்காமல், படம் குறித்து உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை ஒரு பத்தியாவது எழுதுங்கள். அது என்னைப் போன்றவர்களுக்கு உதவும்.

மனித குலத்தில் சில லட்சக்கணக்கான மக்களை கொரானாவால் இழந்துள்ளோம். இப்பொழுது தடுப்பூசிகள் உலகம் முழுவதும் போடப்பட்டு வருகின்றன. மனித குலம் எவ்வளவோ பிரச்சனைகளை எதிர்கொண்டு தான் இந்த நிலைக்கு வந்துள்ளோம். கொரானாவிலிருந்தும் விரைவில் விடுபடுவோம்.

மற்றபடி அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

******

1. Oops Noah is gone (2015)
2. C/o. Kancharapalem (2017) தெலுங்கு.
3. மதிலுகள் (1990) மலையாளம்
4. Memories of Murder (2003) தென்கொரியா
5. Crash (2004)
6. The Bourne Identity (2002)
7. Wailing (2016) தென்கொரியா
8. Zindagi Na Milegi Dobara (2011) இந்தி
9. Kavaludaari (2019) கன்னடம்
10. Bad Genius (2017) – Thailand
11. Mathu vadalara (2019) Telugu
12. The present – ஒரு நல்ல குறும்படம்
13. Miracle in cell No:7 - south Korea (2013)
14. பணம் படைத்தவன் (1965)
15. Birbal Trilogy Case No. 1 - (2019) – kannada
16. The silence of the Lambs – (1991) Pshychological Horror
17. பொன்மகள் வந்தாள்
18. IP Man (2008)
19. June - மலையாளம் (2019)
20. Brochevarevarura (who shall save the day) 2019 – தெலுங்கு
21. Andhadhun (2018) – இந்தி
22. Gantumoote (2019) கன்னடம்
23. 12 Angry Men (1957)
24. 9 (2019) மலையாளம்
25. Forensic மலையாளம்
26. Witch தென்கொரியா
27. Ready or Not தென்கொரியா
28. IP Man 4
29. Confession of Murder (2012) – தென்கொரியா
30. One Flew Over the cuckoo’s Nest (1975)
31. பாலுமகேந்திராவின் "மூடுபனி" (1980)
32. The Man from Nowhere (2010) தென்கொரியா
33. Identity (2003)
34. Old Boy (2003)
35. Driving License (2019) மலையாளம்
36. Athiran (2019) மலையாளம்
37. 12 years slave (2013)
38. சிங்கீதம் சீனிவாசராவின் “விஜயபிரதாபன்” என்ற “பைரவ தீபம்” (1994)
39. The Shining (1980)
40. The Sixth Sense (1999)
41. EZRA (2017) மலையாளம்
42. Manjadikuru (2008) மலையாளம்
43. Rec (2007)
44. Coherence (2013) Science Fiction Thriller
45. Green Book (2018)
46. Chaser (2008) தென்கொரியா
47. Memories (2013) மலையாளம்
48. Fracture (2007)
49. Captain Fantastic (2016)
50. Bell Bottom (2019) கன்னடம்
51. Hereditary (2018) Disturbing Horror Movie
52. What happened to Monday (2017)
53. Mindscape ( 2013)
54. The Ninth Gate (1999)
55. Eyes wide Shut (1999) - Erotic mystery psychological drama- Stanley Kubrick Movie
56. Awe (2018) Telugu Psychological thriller
57. Badhaai Ho (2018) இந்தி
58. Drag me to Hell (2009) Horror
59. Stree (பெண்) 2018
60. Fabricated City (2017) South Korea
61. Nightcrawler (2014) English
62. Midnight Runners (2017) Korean
63. The Bucket List (2007)
64. Servant Series (2019) Psychological Horror – Night Shyamalan
65. Before I Fall (2017) Time loop Movie
66. Hush (2016)
67. Lapachhapi (2016) மராத்தி படம்
68. The New Mutants (2020)
69. Yellow Sea (2010) தென்கொரியா
Photos : என் பொண்ணு தொகுத்து கொடுத்தார்.

Yellow Sea (2010) தென்கொரியா


கதை. நாயகன் ஒரு டாக்சி ஓட்டுனர். சைனா, வடகொரியா, ரஷ்யா ஆகியவை சந்திக்கும் இடம் யான்பியான். சைனாவின் பகுதியில் இருக்கிற பகுதி. பெரும்பாலும் கொரியர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் பாதிபேருக்கும் மேலாக கடத்தலில் ஈடுபடுபவர்கள். பலர் சட்டத்திற்கு புறம்பாக தென்கொரியாவிற்கு போய் வேலை செய்பவர்கள்.


நாயகன் தன் துணைவியாரை கடனை வாங்கி தென்கொரியாவிற்கு வேலைக்கு அனுப்பி வைக்கிறான். இவர்களுக்கு இருக்கும் ஒரு குட்டிப்பெண்ணை நாயகனின் அம்மா பொறுப்பில் விட்டிருக்கிறான்.. ஊருக்கு போன துணைவியாரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. அங்கு போய் வேறு யாருடனோ செட்டிலாகியிருப்பாள் என அவன் காதுபட பேசிக்கொள்கிறார்கள். வெறுப்பில் சம்பாதித்த பணத்தை சூதாடுவதும், குடிப்பதுமாக வாழ்க்கையை ஓட்டுவதுமாக இருக்கிறான்.

கடனை வாங்குகிறவர்கள் மிரட்டுகிறார்கள். ஒரு மாபியா ஆள் ”தென்கொரியா போய் ஒரு ஆளை போட்டுத்தள்ளிவிட்டு, அந்த ஆளுடைய கட்டைவிரலை எடுத்துவிட்டு வா! பெரிய தொகை தருகிறேன்!” என்கிறான். முதலில் யோசிக்கும் நாயகன், போனால், பொண்டாட்டியை தேடலாம். கடனையும் அடைத்துவிடலாம் என ஏற்றுக்கொள்கிறான். சட்டத்திற்கு புறம்பான வழியில் போய் சேர்கிறான். பத்தே நாள். ஒரு கொலை செய்யவேண்டும். பொண்டாட்டியை தேடவேண்டும். பொண்டாட்டியை இருக்கும் இடம் தேடி போய்விடுகிறான். அந்த ஆளை கொல்வதற்கு எல்லா திட்டமும் போட்டுவிடுகிறான்.

அதற்கு பிறகு நடப்பது எல்லாம், திருப்புமுனைகள். ரத்தக்களறி தான்!

****

நிலவுகிற முதலாளித்துவ சமூகத்தில் குடும்பங்கள் ஒன்றாக வாழ்வது என்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இந்த ஊரடங்கில் ஒன்றை கவனித்தால், இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் வாழ்வாதாரத்திற்காக உலகம் முழுவதிலும் வேலைக்காக பரந்து கிடக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. எல்லா தரப்பு மக்களுக்குமே இது பொருந்தும்.

வட, வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டுத்தான் பல லட்சம் மக்கள் இங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் சொந்த ஊர்களை விட்டு வரும் பொழுது அவர்கள் அனுபவிக்கிற பிரச்சனைகள் நிறைய. சமூக ஏற்றத்தாழ்வை சரி செய்யாமல், தனிநபர்கள், குடும்பங்களின் சிக்கலை சரி செய்யமுடியாது.

அப்படி ஒரு சாதாரண மனிதனின் கதையைத் தான் படம் பேசுகிறது. அதில் அவன் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்கிறான். இறுதியில் என்ன ஆயிற்று? என்பது அதிரடியாகவும், உணர்வுபூர்வமாகவும் பேசுகிறார்கள்.

இடைவேளை வரை இயல்பாக போகிற படம். பிறகு இயல்புக்கு மீறி போகிறது. கொரியாக்காரர்களுக்கு துப்பாக்கியை விட, கோடாலி பிடித்தமானதாக இருக்கிறது. ஆகையால் ரத்தம் படம் பார்க்கும் நம்மீதும் தெறிக்கிறது. குடும்பத்தோடு பார்க்க வாய்ப்பில்லை.

நல்லபடம். பாருங்கள்.

- 20, டிசம் 2020 முகநூலில்...

The New Mutants (2020)


படம் மிக மிக சுமார்.

படத்தில் பிடித்த ஒரே வசனம். 🙂

Inside every person,
There are two bears
One bear is all things good (compassion, love, trust)
The other is all things evil (Fear, Shame and self - destruction)
I asked him, "which one wins?"
He answered
"The one you feed"

ஒவ்வொரு நபரின் உள்ளேயும்,
இரண்டு கரடிகள் உள்ளன.
ஒரு கரடி எல்லாமே நல்லது (இரக்கம், அன்பு, நம்பிக்கை)
மற்றது எல்லாமே தீமை (பயம், வெட்கம் மற்றும் சுய அழிவு)
நான் அவரிடம், "எது வெல்லும்?"
அவன் பதிலளித்தான்

"நீங்கள் எந்த கரடிக்கு உணவளிக்கிறீர்களோ அந்த கரடி"

Lapachhapi (2016) மராத்தி - பேய் படங்களில் பிடித்தப்படம்!


நகரத்தில் வாழும் ஒரு தம்பதி. சில நாட்கள் தலைமறைவாக இருக்கவேண்டும் என்கிற அளவுக்கு நெருக்கடி. தனக்கு தெரிந்த டாக்ஸி ஓட்டுனரின் கிராமத்திற்கு செல்கிறார்கள். சுற்றிலும் அடர்த்தியான கரும்புக்காடு. நடுவில் அந்த சிறிய வீடு. அந்த சூழலே பயப்படும்படி இருக்கிறது.


இதில் நாயகி நிறைமாத கர்ப்பமாக வேறு இருக்கிறார். அங்கு இருக்க பயப்படும் நாயகிக்கு ஓட்டுனரின் துணைவியார் ஒரு அம்மாவைப் போலவே பார்த்துக்கொள்வேன் என ஆறுதல் சொல்கிறார்.

அந்த அம்மா தன்னுடைய சொந்த மருமகளை மிகவும் மோசமாக நடத்துகிறார். இதில் நாயகிக்கும் அந்த அம்மாவுக்கும் விவாதம் வருகிறது. அங்கு மூன்று பையன்கள் கண்ணாமூச்சி விளையாடுகிறார்கள். ”அந்த பசங்க பக்கத்துல போகாதே!” என எச்சரிக்கிறார். ஏன் என்றால் சொல்ல மறுக்கிறார். மூன்று பசங்களும் ஏற்கனவே கிணற்றில் விழுந்து இறந்து போனவர்கள் என பின்னால் சொல்கிறார்கள்.

ஊருக்கு போய் திரும்பிய கணவனிடம் ”இனி இங்கு இருக்கவேண்டாம். கிளம்புவோம்” என அவசரப்படுத்துகிறார். அதற்கு பிறகு நடப்பது எல்லாம் ரணகளம்.

****

Lapachhapi என்றால் கண்ணாமூச்சி என்கிறார்கள். நமது இந்திய கிராமங்களின் மூடப்பழக்கவழக்கங்கள், மூட நம்பிக்கைகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை ’பேய்’ கதை மூலம் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள்.

கதையும், திரைக்கதையும் வலுவாக இருந்தால், சுற்றிலும் கரும்புக்காடு. நடுவில் ஒரு வீட்டை வைத்து கூட ஒரு நல்லப்படம் எடுக்கலாம் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.

பொதுவாக கர்ப்பிணிகளை திரைப்படங்களில், குறிப்பாக இறுதிக்காட்சிகளில் எல்லாம் பாடாய் படுத்துவார்கள். ஆகையால் திரையில் கர்ப்பிணிகளைப் பார்த்தாலே கொஞ்சம் அலர்ஜி தான். இந்தப்படத்திலும் பார்க்க துவங்கும் பொழுது, அந்த எண்ணம் தான் மனதில் ஓடியது. ஆனால், படம் சொல்லும் செய்திக்கு அது அவசியம் என்பதை பிறகு உணர முடிந்தது.

படத்தில் நடித்த நாயகியும், அந்த வயதான அம்மாவும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படம் சில திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று விருதுகளும் பெற்றிருக்கிறது. படத்தின் வெற்றியில் இப்பொழுது இந்தியில் மீண்டும் எடுக்கிறார்கள்.

பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

- 28, நவம் 2020

Hush (2016) Hunting Movie


கதை. ஒரு அமைதியான காட்டுப்பகுதியில் தனித்திருக்கும் வீடு. நாயகி ஒர் இளம் எழுத்தாளர். தன்னுடைய அடுத்த புத்தகம் எழுதுவதற்கான முனைப்பில் இருக்கிறார். 13 வயதில் ஏற்பட்ட உடல்நலக்குறைபாடு காரணமாக அவளுக்கு காது கேட்கும் திறனும், பேசுகிற ஆற்றலையும் இழந்தவள்.


அவளிடம் புத்தகம் வாங்கி படித்துவிட்டு, அவளிடம் இயல்பாக பேசிவிட்டு செல்கிறாள் அவளுடைய தோழி. கொஞ்ச நேரத்தில் அவள் தலைதெறிக்க வீட்டை நோக்கி ஓடி வருகிறாள். ஒரு சைக்கோ கொலைகாரன் விரட்டி வந்து அவளை கொல்கிறான். நாயகியையும் கொல்லப் பார்க்கிறான். கையில் செல் இல்லை. வீட்டிற்கு வருகிற மின்சாரத்தையும் வெட்டிவிடுகிறான்.

கொலைகாரனிடமிருந்து தப்பித்தாளா என்பது தான் முழு நீளக்கதை.

****

ஒதுக்குப்புறமான ஒரு காட்டுப்பகுதியில் தனித்திருக்கும் வீடு. அங்கு நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ வசிக்க வரும் ஒரு குடும்பம் அல்லது சில நபர்கள். அவர்கள் எதிர்கொள்ளும் அசாதாரண சம்பவங்கள் தான் படம். இப்படிப்பட்ட படங்களை ‘Cabin in the Woods’ என வகைப்படுத்துவார்கள். அப்படிப்பட்ட படங்களில் விறுவிறுப்பான படம் தான் இந்தப்படம்.

படத்தில் அவன் ஏன் கொல்ல துடிக்கிறான்? என்ற விளக்கத்திற்குள் இயக்குநர் போகவேயில்லை. நேரடியாக கதைக்கு வந்துவிடுகிறார். அதனாலேயே படத்தை ஒன்றரை மணிநேரத்திற்குள் முடித்தும் விடுகிறார்.

நமக்கு என்ன சந்தேகம்னா? அமெரிக்கா வீதிகளில் செல்லும் பொழுது, அதுவும் தனியாக செல்லும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். 10 டாலருக்காக கூட நீங்கள் கொல்லப்படலாம் என்பது தான் யதார்த்த நிலை என்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது, ஒரு காட்டுப்பகுதியில், ஒரு பெண் மட்டும் தனித்திருக்கமுடியுமா? அப்படி இருக்கவேண்டும் என்ற சூழலில் எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கவேண்டும்? இந்த கேள்விகளுக்குள் எல்லாம் செல்லாமல், பார்த்தால், விறுவிறுப்பான படம் தான்.

படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள் இருவர் தான். இருவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். நேரம் நிறைய இருந்தால் பாருங்கள். நெட்பிளிக்சில் இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்.

- 26 நவம் 2020 முகநூலில்...

இலக்கியத்தின் பணி


 

Before I Fall (2017) Time loop Movie


ஒரு ஒற்றை நாள் நமக்கு திரும்ப திரும்ப கிடைக்குமாக இருந்தால் இந்த வாழ்க்கையில் எத்துனை விடயங்களை அற்புதமானதாய் அழகானதாய் மாற்றாலாம்.


ஒரு ஒற்றை நாள் மட்டுமே நமக்கு எஞ்சியிருக்கும் எனில் அந்த நாளை நாம் எப்படி பயன்படுத்துவோம், நாம் இலகுவாய் கடந்து போகிற ஒற்றை நாள் வாழ்க்கையின் ஒட்டு மொத்த நாட்களையும் மாற்றக் கூடும்.

அப்படி ஒரு ஒற்றை நாளில் மீண்டும் மீண்டும் எழும் Samantha Kingston அந்த நாளை இன்னும் இன்னும் சிறப்பாக எப்படி மாற்றுகிறாள் என்பதே இந்த திரைப்படம்.

ஒரு நாளின் நிகழ்வுகளின் முடிவில் இறந்து விடும் அவள் அதே நாளின் காலையில் மீண்டும் உறக்கத்தில் இருந்து விழிக்கிறாள். கடந்த விட்ட அந்த நாள் கனவாகிறது. திரும்பவும் நிஜம் என கடக்கும் அந்த நாள் மீண்டும் கனவைப்போல அதே நாளில் மீண்டும் மீண்டும் விழிக்கிறாள். முதலில் குழப்பம் அடையும் அவள் ஒரு நாளின் யதார்த்தை புரிந்து அந்த நாளை அவளுக்குரியதாக மாற்றி அந்த நாளை அழகாக்குவதே திரைக்கதை.

இறுதியில் இந்த வாழ்வின் விடுதலை எது என்கிற கேள்விக்கு ஒரு அற்புதமான பதில் இருக்கிறது!!

கடந்துவிடுகிற இந்த வாழ்க்கை ஒரு கனவை போல நம் நினைவுகளில் நமக்கு எஞ்சியிருக்கும். அந்த நினைவுகள் மட்டுமே நம்மால் நம்மோடு எப்போதும் இந்த பயணத்தில் சுமந்து செல்ல முடிபவை. ஒரு வாழ்வின் இறுதியில் அந்த நினைவுகள் புன்னகையை தருமெனில் ஓர் ஆத்மார்த்தமான வாழ்வை வாழ்ந்திருக்கிறோம். முடித்துக் கொள்ளும் மரணமும் அவனுக்கு கொண்டாட்டமாய், விடுதலையாய் இருக்கும்...

இந்த யதார்தத்தை அற்புதமாக பேசிப் போகும் அழகான திரைப்படம் Before I Fall

- 9 நவம் 2020 முகநூலில்...

Servant Series (2019) Pchychological Horror – Night Shyamalan



கதை. வீட்டிலேயே புதுசு புதுசா சமையலில் செய்து பார்த்து, நன்றாக வருகிற சமையல் வகைகளை பெரிய பெரிய உணவகங்களுக்கு ஆலோசனை சொல்கிற சமையல்கலை நிபுணர். அவருடைய இணையர் ஒரு தொலைக்காட்சியில் நிருபர். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து, 13 வாரத்தில் ‘இறந்து’விடுகிறது. அதனால் அந்தம்மா மனதளவில் கடுமையாக பாதிக்கப்படுகிறார். குழந்தை இறந்த செய்தியை ’மறைத்து’, அவரிடம் ஒரு குழந்தை பொம்மையை கொடுத்து சமாளிக்கிறார்கள்.

அவளும் அந்த பொம்மை குழந்தை உயிருடன் இருப்பது போலவே நம்புகிறாள். தினமும் ஆடை மாற்றி, உணவூட்டி (!), தாலாட்டு பாடி என ஒரு குழந்தைக்கு செய்கின்ற அத்தனையையும் செய்கிறாள்.


அவள் மீண்டும் வேலைக்கு செல்ல, தன் ‘குழந்தையை’ பார்த்துக்கொள்ள விளம்பரம் தந்து, ஒரு இளம்பெண்ணை நியமிக்கிறாள். அவளின் மனநிலை கருதி, எதுவும் சொல்ல முடியாமல் ஏற்றுக்கொள்கிறான்.

இதற்கு பிறகு தான், பிரச்சனை துவங்குகிறது. அந்த பொம்மை குழந்தை இப்பொழுது உண்மையிலேயே குழந்தையாகிவிடுகிறது. குழந்தை இறந்ததை, வெளியே சொல்லாமல் மறைத்துவிட்டதால், திருடனுக்கு தேள்கொட்டியது போல ஆகிவிடுகிறது. இளம்பெண்ணை (Servant) வேலையை விட்டு அனுப்ப முயற்சித்தால், இணையர் கடுமையாக எதிர்க்கிறார்.

அந்த பெண்ணைப் பற்றி விசாரித்தால், அந்த செய்தி இன்னும் ஆச்சர்யமாக இருக்கிறது. அந்த குழந்தை இளம்பெண்ணின் குழந்தையா? அல்லது எங்கும் திருடப்பட்டதா? யாராவது அந்த இளம்பெண்ணை அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவார்களோ? என பல வகைகளில் யோசித்து, யோசித்து அவர்களுக்கு தலைச்சுற்றுகிறது. பிறகு என்ன ஆனது என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

****

மெல்ல மெல்ல திரில்லர் போல துவங்கி, கொஞ்சூண்டு ஹாரர் கலந்து சொல்லியிருக்கிறார்கள். ஆகையால் கோரமான காட்சியும், பயமுறுத்துகிற காட்சியோ இல்லை. கொஞ்சூண்டு அடல்ட் காட்சிகள் உண்டு.

நாயகன் புதிது புதிதாக சமைப்பது நன்றாக இருக்கிறது. அவனுக்கு சுவை அறிகிற தன்மை திடீரென இல்லாமல் போய்விடுகிறது. ஆகையால், வீட்டில் இருப்பவர்களிடம், வீட்டுக்கு வருபவர்களிடம் சாப்பிட சொல்லி, சுவையை சொல்ல சொல்லி கேட்பதும் சுவாரசியமானது. நண்டு ஐஸ்கிரீம் ஹைலைட்.

மொத்தமே மிகவும் குறைவான கேரக்டர்கள் தான். எல்லோருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். ’சிக்ஸ்த் சென்ஸ்’ புகழ் நைட் சியாமளன் தான் இயக்கியிருக்கிறார். புகழ்பெற்ற இயக்குநர்கள் எல்லாம் சீரிஸ் எடுக்கிறார்கள். இதன் வெற்றியில் இரண்டாவது பாகம் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். விரைவில் வெளிவரலாம் என நினைக்கிறேன்.

பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

#10 Episodes
#Total 5 Hours

4 நவம் 2020 - முகநூலில்

The Bucket List (2007)


கதை. ஒரு கார் மெக்கானிக். ஒரு பெரிய செல்வந்தர். இருவரும் வயதானவர்கள். இருவரையும் புற்றுநோய் தாக்குகிறது. இருவரும் ஒரு மருத்துவமனையில் ஒரு அறையில் இருப்பதால், பரஸ்பரம் அறிமுகிறார்கள். இருவருக்கும் மருத்துவம் அளிக்கப்படுகிறது. மெக்கானிக்கிற்கு இன்னும் ஆறு மாதத்திலிருந்து ஒருவருடம் வரைக்கும் தான் அவருக்கு வாழ்க்கை என தெளிவாக சொல்லிவிடுகிறார்கள்.

மெக்கானிக் வாழ்க்கையில் தனது சின்ன, பெரிய ஆசைகளை எல்லாம் (The Bucket List) ஒரு தாளில் குறித்து வைத்திருக்கிறார். இனி அதில் எதுவுமே சாத்தியமில்லை என வருத்தத்துடன் கசக்கி எறிகிறார். செல்வந்தர் கண்ணில்படுகிறது. பணம் ஒரு பிரச்சனையில்லை. அதையெல்லாம் நாம் இரண்டு பேரும் இணைந்து செய்வோம் என்கிறார். முதலில் மறுக்கும் மெக்கானிக் ஏற்கிறார்.


விமானத்தில் இருந்து குதிக்கிறார்கள் (Sky Diving). நீண்ட சீன பெருஞ்சுவரில் மோட்டார் ஓட்டுகிறார்கள். தாஜ்மகாலை பார்க்கிறார்கள். இமயமலையில் ஏறப்பார்க்கிறார்கள். ஒரு மாலை வேளையில் எகிப்து பிரமிடின் மேல் அமர்ந்து ஆற அமர விவாதிக்கிறார்கள்.

இறுதியில் என்ன ஆனது என்பதை மீதிக்கதையில் சொல்கிறார்கள்.

****

மனிதர்களுக்கு சின்னதாகவோ, பெரிதாகவோ கதையில் வரும் நாயகனைப் போல எழுதி வைக்காவிட்டாலும், மனதில் ஒரு பெரிய பட்டியல் இருக்கத்தான் செய்யும். அவர்களிடம் கேட்டால் மிகவும் விருப்பமாக சொல்ல துவங்குவார்கள். வாழ்க்கையில் வசதி, வாய்ப்பைப் பொறுத்து, ஏற்ற இறக்கத்துடன் அதை நிறைவேற்றுகிறார்கள். பல ஆசைகள் நிறைவேறாமலே தான் வாழ்ந்து முடிக்கிறார்கள்.

மெக்கானிக்காக Morgan Freeman, செல்வந்தராக Jack Nicholson – இருவரையும் அவர்கள் நடித்த படங்களின் வழியே நாம் உணர்ந்திருக்கும் இயல்புகளிடனுயே வலம் வருவதாக எனக்குப்பட்டது. இருவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.

இருவருக்கும் புற்றுநோய் என்பதால், அழுது வடிகிற படமில்லை. ஒரு பீல் குட் மூவி தான். பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். படம் பிடிக்கிறதோ இல்லையோ! வாழ்வில் Bucket List முக்கியம் என்பதை உணர்வீர்கள்.

- Nov 2, 2020, முகநூலில்...