இந்த தொடர் ஆரம்பித்த பிறகு தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வருங்கால வைப்பு நிதி தொடர்பாக தங்களுடைய சந்தேகங்களை கேட்டு வருகின்றனர். ஆகையால் தொழிலாளர்களால் அடிக்கடி கேட்கப்படும் சந்தேகங்களுக்கு பதிலளித்தால் சரியாக இருக்கும் என எழுதியுள்ளேன்.
தொழிலாளியினுடைய
சம்பளத்திலிருந்து மாதம்தோறும் பி.எப் நிதியை
நிறுவனம் பிடித்தம் செய்கிறது. நிறுவனம் தான்
செலுத்தவேண்டிய பங்களிப்பையும் சேர்த்து பி.எப் நிறுவனத்திற்கு மொத்தமாக செலுத்துகிறது. ஒருவேளை நிறுவனம் தாமதமாக செலுத்தினால் தொழிலாளிக்கு கிடைக்கவேண்டிய
வட்டி குறைவாக கிடைக்குமா?
நிறுவனம் தொழிலாளியிடமிருந்து பிடித்தம் செய்ய வேண்டிய
தொகையை சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யவேண்டும். தன்னுடைய பங்கையும் சேர்த்து, பி.எப்.க்கு செலுத்தவேண்டிய
நிதியை ஒவ்வொரு மாதமும் 15 தேதிக்குள் செலுத்திவிடவேண்டும். ஒருவேளை சில நாட்களோ, சில மாதங்களோ செலுத்த தாமதப்படுத்தினால்,
அதற்கான வட்டியையும், அபராதத்தையும் செலுத்தவேண்டும்.
தொழிலாளியினுடைய நிதியை கையாளும் பி.எப். நிறுவனம் தொழிலாளிக்கு 2023 – 24 கணக்காண்டுக்கு தருகிற வட்டி
8.25%. நிறுவனம் தான் செலுத்தவேண்டிய நிதியை தாமதமாக செலுத்தினால், செலுத்தவேண்டிய
வட்டி ஆண்டுக்கு 12%. இது மட்டுமில்லாமல், அபராதமாக (Penal Damages) 2 மாதம் வரை 5%, 4 மாதம் வரை 10%, 6 மாதம் வரை 15%, ஆறு மாதங்களுக்கு மேலாக என்றால்
25% லிருந்து அதிகப்பட்சம் 100% வரை அபராதம் விதிப்பார்கள்.
ஆகையால், தாமதமாக நிறுவனம் செலுத்தினால், அதற்குரிய வட்டியையும், அபராதத்தையும் பி.எப் பெற்றுவிடுவதால்,
தொழிலாளிக்கு வட்டி குறையும் என்ற பேச்சுக்கு இடமில்லை.
இதில் இன்னொரு சிரமம் என்னவென்றால், அந்த நிறுவனம் தாமதமாக பணம் செலுத்தும் பொழுது, இந்த இடைவேளைக்குள் பி.எப். நிதிக்காக தொழிலாளி
விண்ணப்பிக்கும் பொழுது, நிறுவ்னம் பணம் செலுத்தும்
வரை, தொழிலாளியின் பணத்தை விடுவிக்கமாட்டார்கள். அதுவரை தொழிலாளி காத்திருக்கவேண்டும்
என்கிறது பி.எப்பின் நடைமுறை.
ஒவ்வொரு மாதமும் நிறுவனம் பி.எப். நிதி செலுத்திய ஒரு வாரத்திற்குள்
தொழிலாளியின் கணக்கில் எவ்வளவு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது என்ற ஒரு குறுஞ்செய்தியை பி.எப் நிறுவனம் அனுப்பிவைக்கிறது. (இந்த குறுஞ்செய்தி, ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிற
பத்து பேரில் ஐந்து பேருக்கு மட்டும் இப்போதைக்கு வருகிறது. எதிர்காலத்தில் இந்த பிரச்சனையை
சரி செய்யும் என நம்புவோம்.)
சரிபார்ப்பதற்கு இன்னொரு வழி, பி.எப். Umang (என்றால் உற்சாகம்)
என்ற ஆப் ஒன்றை செயல்படுத்துகிறது. அதன் மூலம்
பல வசதிகளை பெறமுடியும். குறிப்பாக நிறுவனம் நிதியை செலுத்துகிறதா எனவும் தொழிலாளி
தெரிந்துகொள்ளமுடியும்.
இன்னொரு வழியாக,
பி.எப். (https://passbook.epfindia.gov.in/MemberPassBook/login)
ஒரு தளத்தை பராமரித்து வருகிறது. அதில்
UAN, கடவுச்சொல்லை பயன்படுத்துவதின் வழியாக உள்ளே போய் சரிபார்க்கமுடியும்.
இப்படி சோதிப்பதின் மூலம் பணம் வரவில்லை என தெரியும் பொழுது,
நிறுவனத்தை தொழிலாளர்கள் ஏன் செய்தி வருவதில்லை என நிறுவனத்தை கேட்பதின் மூலம் ஒவ்வொரு
மாதமும் உரிய தேதியில் செலுத்த கோரமுடியும்.
ஒருவேளை
நிறுவனம் பல மாதங்கள் பி.எப். பணத்தை செலுத்தவில்லை என்றால் என்ன செய்வது? அவர்கள்
செலுத்துகிற வரை தொழிலாளி காத்திருக்கத்தான் வேண்டுமா?
பி.எப். ஒரு குறிப்பிட்ட
இடைவேளையில் (ஆறு மாதங்களுக்கு மேலாக) பணம் செலுத்தாத நிறுவனங்களை கண்டறிந்து, ஏன்
தாமதம் என பதில் கேட்டு அறிவிப்பை வழங்கும் (Notice) வழங்கும். எவ்வளவு செலுத்தவேண்டும்? நேரில் வந்து பதில் சொல்வதற்கு
வாய்ப்புகளை தரும். அவர்கள் சொல்லும் காரணம் பொருத்தமாக இருந்தால், காரணத்தை ஏற்கும்.
பணத்தை கட்டுவதற்காக சில நாட்கள் அனுமதிக்கும் அதற்கு பிறகும் நிறுவனம் செலுத்த தவறும் பட்சத்தில்… அந்த நிறுவனத்தின்
வங்கி விவரங்களை பி.எப். நிறுவனம் துவங்கும் பொழுதே வாங்கி வைத்திருப்பதால், நிறுவனத்தின் வங்கி கணக்கு செயல்படும் வங்கி மேலாளருக்கு
அவர்கள் செலுத்தவேண்டிய தொகையை ஒரு அறிவிப்புடன் தெரிவிக்கும்.
வங்கி மேலாளர்
அந்த நிறுவனத்தின் கணக்கில் பணம் இருந்தால், அதற்கு ஒரு DD எடுத்து பி.எப்.
நிறுவனத்திற்கு அனுப்பிவைப்பார். ஒருவேளை அப்போதைக்கு
பணம் இல்லையெனில், பணம் வரவாகும் பொழுது, முதல்
வேலையாக அதைச் செய்வார். இப்படி பணத்தை எடுப்பதற்கு
நிறுவனத்தின் அனுமதியும் தேவையில்லை. ஏற்கனவே நிறுவனத்திற்கு முறையாக அறிவிப்பையும்
கொடுத்துவிடும்.
ஒருவேளை வங்கி கணக்கில் பணம் இல்லை. இனி வருவதற்கும் வாய்ப்பு இல்லை நிலை இருந்தது என்றால்..
அடுத்து அந்த நிறுவனத்தின்/முதலாளியின் சொத்துக்களை
ஜப்தி செய்வதற்கான ஏற்பாடுகளை முறையாக செய்யத் துவங்கும்.
இப்படி பணம் செலுத்த கோரி பிஎப். நோட்டிசு அனுப்பாத பட்சத்தில், ஒரு தொழிலாளி தன்னுடைய
பி.எப். தொகையை பெற விண்ணபிக்கும் பொழுது, அந்த நிறுவனம் பணம் செலுத்தாதது, பி.எப்.
நிறுவனத்திற்கு தெரியவரும். அதற்குப் பிறகு
நோட்டிஸ் அனுப்பி மேலே சொன்ன நடைமுறையை அமுல்படுத்துவார்கள்.
தொழிலாளியிடமிருந்து
ஒரு குறிப்பிட்ட தொகையும், ஒரு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையையும் பிஎப்-க்கு செலுத்தவேண்டும். நிறுவனத்தின் பங்காக செலுத்தவேண்டிய நிதியையும்
தொழிலாளியிடமிருந்து பிடித்தம் செய்யலாமா?
இப்படி நிச்சயம் கூடாது. அப்படி பிடித்தம் செய்வது கிரிமினல்
குற்றம்.
ஒரு
தொழிலாளி நிறுவனத்தில் இருந்து விலகும் பொழுது, தொழிலாளி தன்னுடைய பி.எப். பணத்தைப்
பெறுவதற்கு நிறுவனத்தின் அனுமதி தேவைப்படுமா?
வேலை செய்யும் பொழுது நடந்த ஏதோ ஒரு முரண்பட்டை காரணம் சொல்லி, பணத்தை எடுக்கவிடாமல்
நிறுவனம் தடுப்பது சாத்தியமா?
ஒரு தொழிலாளியின் கணக்கில் செலுத்தப்படும் பி.எப். நிதி
என்பது அவருக்கு சொந்தமானது. பி.எப். உருவாக்கிய
விதிகளுக்கேற்ப அந்த தொழிலாளி அந்த நிதியை கையாளலாம். இதில் நிறுவனம் எந்த காரணத்தை முன்னிட்டும் தலையிட
முடியாது.
பி.எப். தொழிலாளர்களுடைய பி.எப் பணத்தை கையாள்கிறது. ஆனால் அந்த தொழிலாளியை அடையாளம் காணுவதற்கு அதற்கென
பிரத்யேக வழியில்லாத நிலை முன்பு இருந்தது.
அதனால், ஒரு தொழிலாளியை தனிப்பட்ட முறையில் நன்கு தெரிந்தவர் என்ற அடிப்படையில், நிறுவனத்தின் முதலாளி/அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி
அந்த தொழிலாளி பி.எப் பணத்தைப் பெறுவதற்குரிய விண்ணப்பத்தில் கையெழுத்திடுவது தவிர்க்க
முடியாத அவசியமாக இருந்தது.
ஆனால், ஆதார் அமுலாக்கத்திற்கு பிறகு, ஆதார் பயோ மெட்ரிக் அடையாளத்துடன் இருப்பதால், ஆதாரை ஒரு
முக்கிய அடையாளமாக பிஎப். இறுகப் பிடித்துக்கொண்டது. அதனால் நிறுவனத்தின் முதலாளி கையெழுத்திட வேண்டிய
அவசியம் இப்பொழுது இல்லை. ஆதாரை அடிப்படையாக
கொண்டு தொழிலாளியே பணத்தை பெற்றுவிடமுடியும்.
ஆனால், ஒரு தொழிலாளி வேலை செய்யும் பொழுதே, தன்னுடைய பி.எப்.
கணக்கில் ஆதார், வங்கிக்கணக்கு எண், பான் எண்ணை
எல்லாம் இணைத்திருக்கவேண்டும். அதை அந்த நிறுவனம்
தன்னுடைய டிஜிட்டல் கீ கொண்டு அங்கீகரித்து இருக்கவேண்டும். ஒருவேளை
நிறுவனம் அதை அங்கீகரிக்க தவறினால், பி.எப். அலுவலகத்தில் இது தொடர்பாக முறையிட்டால்,
நிறுவனத்திற்கு அதை செய்ய சொல்லி சம்பந்தப்பட்ட அலுவலர் வலியுறுத்தி செய்ய சொல்வார்.
நஷ்டம்,
நொடித்துப் போதல் என வேறு வேறு காரணங்களினால், சில நிறுவனங்கள் மூடப்படும் பொழுது, அந்த நிறுவனத்தில்
வேலை செய்த தொழிலாளி ஆதார், வங்கிக்கணக்கு,
பான் எண்ணை டிஜிட்டல் கீ கொண்டு அங்கீகரிக்க முடியாத பொழுது என்ன செய்வது?
நிறுவனம் மூடப்பட்ட நிலையில், நிறுவனத்தினுடைய முதலாளி/அங்கீகரிக்கப்பட்ட
அலுவலருக்கு பதிலாக நீதிபதி, அஞ்சல், அஞ்சல்
உதவி அதிகாரி, வங்கி மேலாளர், அரசு பொறுப்பு அதிகாரி (any Gazetted Officer) என இன்னும்
சிலரை கையெழுத்திடுவதற்கு பி.எப். அனுமதிக்கிறது. ஆகையால், கவலைப்பட தேவையில்லை.
ஒரு
தொழிலாளி தன்னுடைய பி.எப். பணத்தை பெறக்கோரி விண்ணப்பிக்கும் பொழுது, எல்லா ஆவணங்களும்
சரியாக இருக்கும் பொழுது, பணம் தொழிலாளியின் வங்கி கணக்கிற்கு 20 நாட்களுக்குள் வந்துவிடும். ஒருவேளை வங்கி கணக்கு வரவில்லையென்றால் யாரிடம்
முறையிடுவது?
முதலில் பி.எப் சம்பந்தமாக புகார் கொடுப்பதற்காக, பி.எப்
நிர்வாகமே ஒரு ”EPF : புகார் மேலாண்மை அமைப்பு” என்ற பெயரில் ஒரு வலைத்தளத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வலைத்தளத்தில் தொழிலாளியினுடைய அடிப்படை பி.எப்.
விவரங்கள், மொபைல் எண், என்ன குறைபாடு என்பதை சரியாக தெரியப்படுத்தவேண்டும்.
https://epfigms.gov.in/grievance/grievancemaster
ஒரு வாரத்திற்குள் தொழிலாளி கொடுத்த எண்ணுக்கு அந்த புகாருக்கு
உரிய பதிலை அல்லது என்ன செய்யவேண்டும் என்பதை அனுப்பி வைக்கும். அதை சரி செய்துவிட்டு, மீண்டும் விண்ணப்பித்தால்,
பணம் வந்துவிடும்.
ஒருவேளை அந்த பதில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்தி அளிக்கவில்லை
என்றால், தொழிலாளி வேலை செய்கிற/செய்த நிறுவனத்திற்கென்று ஒரு அருகில் உள்ள பி.எப்
அலுவலகத்தை தொடர்புகொள்ள வேண்டியிருக்கும். சென்னையில் தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில்
இருக்கிறது. துணை அலுவலகங்களாக அம்பத்தூர்
பி.எப் அலுவலகம் முகப்பேரிலும், தாம்பரம் பி.எப் அலுவலகம் தாம்பரத்திலும் இருக்கின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பி.எப். அலுவலகங்கள் உண்டு. ஆகையால் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு எந்த பி.எப். அலுவலகம் என கேட்டுக்கொண்டு, அங்கு
அணுகவேண்டும்.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணியிலிருந்து
மாலை 5 மணி வரை அலுவலகங்கள் இயங்கும். தொழிலாளி
தான் வைத்திருக்கிற அடிப்படை விவரங்களை எடுத்துக்கொண்டு, அலுவலகம் சென்றால், தொழிலாளியின்
குறைபாடு கேட்கப்பட்டு, என்ன செய்வது என்பது உரிய வழிகாட்டல்களைத் தருவார்கள். அதைச்
சரி செய்தோம் என்றால், தொழிலாளியின் பி.எப். பணம் வங்கிக்கு வந்துவிடும்.
ஒரு
தொழிலாளி ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் வேலை செய்திருக்கும் பொழுது, இப்பொழுது
பி.எப். பணத்தை பெற விண்ணப்பிக்கும் பொழுது, எல்லா நிறுவனங்களில் கணக்குகளும் கடைசியாய்
வேலை செய்த கணக்கிற்கு மாற்றவேண்டும் என பி.எப். கோருகிறது. எல்லா கணக்குகளிலும் தொழிலாளியின்
அடையாள எண்ணான ஓரே UAN (Universal Account No.) தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால்
அதுவாகவே மாறாதா?
UAN என்ற அடையாள எண்ணை பி.எப் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு,
ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் நிறுவனத்தின் கணக்கு எண்ணை அடிப்படையாக
கொண்டு, தரப்படும். அந்த தொழிலாளி ஒவ்வொரு நிறுவனம் மாறும் பொழுது,
பழைய கணக்கை புதிய கணக்கிற்கு மாற்ற உரிய விண்ணப்பம் கொடுத்து மாற்றிக்கொள்ளவேண்டும்.
ஆனால், UAN என்ற அடையாள எண் ஒவ்வொரு தொழிலாளிக்கு கொடுத்த
பிறகும், இன்னும் பழைய முறையான உரிய வின்ணப்பத்தை பி.எப் தளத்தில் கொடுத்து பழைய கணக்குகளை
புதிய/கடைசி கணக்கிற்கு மாற்றிக்கொள்ளவேண்டும் (Transfer) என்கிற நடைமுறை தொடர்கிறது.
விரைவில் பி.எப். இந்த முறையை மாற்றி எளிமைப்படுத்தும் என நம்புவோம்.
இன்னும் வளரும்.
இரா. முனியசாமி,
பி.எப்., இ.எஸ்.ஐ,
ஜி.எஸ்.டி ஆலோசகர்.
9551291721
மின்னஞ்சல் முகவரி : ilakkiyaassociates@gmail.com
****
பின்குறிப்பு :
”தொழில் உலகம்” இதழுக்கு மார்ச் 20 தேதியன்று, இப்படித்தான் ஐந்தாவது அத்தியாயத்தை எழுதி முடித்து அனுப்பினேன். ஏப்ரல் 1ந் தேதி கட்டுரை வெளியானது. ஏப்ரல் 3 ந்தேதி இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
பி.எப். சந்தாதாரர்களின் குரலை நாம் பிரதிபலிக்கிறோம் என்பது மகிழ்ச்சி.
https://www.business-standard.com/finance/personal-finance/new-epfo-rule-for-you-no-need-to-request-for-pf-transfer-on-changing-jobs-124040300403_1.html
0 பின்னூட்டங்கள்:
Post a Comment