> குருத்து: Officer Black belt (2024)

September 30, 2024

Officer Black belt (2024)


நாயகன் தற்காப்பு பயிற்சிகளை ஆர்வமாய் கற்றுக்கொள்கிறார்.  அப்பா நடத்தும் உணவகத்தில், உணவை கொண்டு கொடுக்கும் வேலைகளை செய்துவருகிறார்.  மீதி நேரம் நண்பர்களோடு ஜாலியாக விளையாடிக்கொண்டிருக்கிறார்.

 

கொரியாவில் பெருங்குற்றம் இழைத்து சிறையில் இருந்து விடுதலை ஆகிறவர்களை, தவறுகளுக்கு தக்கவாறு சில ஆண்டுகளுக்கு காலில் ஒரு கருவி பொருத்தி கண்காணிக்கிறார்கள். அந்த வேலையை போலீசிடம் கொடுக்காமல், தனியாக ஒரு துறையை உருவாக்கி கண்காணிக்கிறார்கள்.

 

காலில் பொருத்தப்பட்ட கருவி சார்ஜ் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவருடைய பொறுப்பு. 30% சார்ஜ் குறைந்தால், அலுவலகத்தில் இருந்து அவருக்கு தெரிவிப்பார்கள். ஒருவேளை  அந்த கருவி சார்ஜ் இல்லாமல் போனாலோ, கழற்றப்பட்டாலோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து அவரைத் தேடி வந்துவிடுவார்கள். 

 

 அப்படித் தேடி வந்த ஒரு அலுவலரை, முன்னாள் கைதி தாக்க, எதைச்சையாய் நாயகன் காப்பாற்ற அவரை அழைத்துப் பாராட்டுகிறார்கள்.   அவருடைய தகுதியை வைத்து, தற்காலிகமாக இந்த வேலையை செய்கிறீர்களா என கேட்கும் பொழுது, ஆர்வமாய் இணைகிறார்.

 

துவக்கத்தில் சின்ன சின்ன சவால்களோடு துவங்கும் வேலை,  குழந்தைகளை கடத்தி வீடியோ எடுக்கும் ஒரு மாபியா கும்பலோடு மோதும் பொழுது, பெரிய சவாலாகவும், ஆபத்தானதாகவும் மாறுகிறது.

 

இருக்கின்ற சின்ன படையை வைத்துக்கொண்டு அவர்கள் எப்படி சமாளித்தார்கள் என்பதை  கொஞ்சம் உணர்வுப்பூர்வமாகவும், அடிதடி சண்டைகளோடும் சொல்லியிருக்கிறார்கள்.

****

 


பெரிய குற்றமிழைத்த முன்னாள் கைதிகளை காலில் கருவி மாட்டிக் கண்காணிக்கும் வழக்கம் எத்தனை நாடுகளில் இருக்கிறது என தெரியவில்லை. இந்தப் படத்தின் மூலம் கொரியாவில் இருக்கிறது  என தெரிய வருகிறது.  பெரிய சவாலான பணி தான்.

 

இந்தப் படைக்கு அரசு ஒதுக்கும்  பணம் பற்றவில்லை, ஆகையால் போதுமான அலுவலர்களை நியமிக்காமல், அங்கு வேலை செய்பவர்களை கூடுதலாக வேலைப் பார்க்க சொல்கிறார்கள்.  எல்லா ஊரிலும் இந்த பற்றாக்குறை பஞ்சாயத்து இருக்கும் போலிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு Midnight Runners என்றொரு படம் வந்தது. இந்தப் படத்தின் வெற்றியில், தெலுங்கில் Saakini Daakini என்ற பெயரில் எடுத்திருந்தார்கள். அதுவும் இது போல ஒரு படம் தான்.  அந்தப் படத்தை இயக்கியவர் தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.   அந்தப் படம் என்ன டெம்போவில் இருந்ததோ, அதே டெம்போவில் தான் இந்தப்படமும் இருக்கிறது.

 

நாயகன், அவருடைய சீனியர், அவருடைய நண்பர்கள் என எல்லோரும் நன்றாக செய்திருக்கிறார்கள்.  வழக்கமான ஒரு கமர்சியலான படம். 

 

நெட் பிளிக்சில் தமிம் மொழிமாற்றம் செய்தே வெளியாகியிருக்கிறது. கமர்சியலான, அடிதடி சண்டை பிரியர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

0 பின்னூட்டங்கள்: