> குருத்து: Vivarium (2019) அயர்லாந்து

September 29, 2024

Vivarium (2019) அயர்லாந்து


நாயகி ஆசிரியராக இருக்கிறார். நாயகன் ஒரு தொழில்நுட்ப வேலையில் இருக்கிறார். இருவரும் ஒரு பள்ளியில் வேலை செய்கிறார்கள். இருவரும் காதலிக்கிறார்கள். ஒரு வீடு வாங்குவது அவர்களுடைய தேவையாகவும், ஆசையாகவும் இருக்கிறது.


வீடுகள் விற்கும் ஒரு நிறுவனத்தின் அலுவலகத்திற்கு போய் இருவரும் விசாரிக்கிறார்கள். அங்கு இருக்கும் நடுத்தர நபர் கொஞ்சம் விநோதமாய் பேசினாலும், வரவேற்கிறார். ”அருகிலேயே இருக்கிறது. தாங்கள் கட்டியிருக்கும் வீடுகளுக்கு வந்து பாருங்கள்” என்கிறார். அவர் தன் காரில் முன்னே செல்ல, இவர்கள் தங்கள் காரில் பின்தொடர்கிறார்கள்.

தனித்தனி வீடுகளாய், ஒரே மாதிரி வரிசையாய் இருக்கும் வீடுகளில், ஒன்பதாம் எண் கொண்ட வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார். வீடு அவர்களுக்கு பிடித்தமானமாக, அழகாக இருக்கிறது. வீட்டைச் சுற்றி காண்பிக்கும் பொழுது, அந்த நபர் திடீரென காணாமல் போகிறார். அவர் வந்த காரும் வாசலில் இல்லை.

சரி! இருவரும் கிளம்பலாம் என தங்கள் காரில் ஏறுகிறார்கள். அந்த வீடுகளைச் சுற்றி உள்ள எந்த தெருவில் நுழைந்து சென்றாலும், மீண்டும், மீண்டும் அதே வீட்டின் வாசலுக்கு வந்து சேருகிறார்கள். பெட்ரோல் தீரும் வரையில் மாலை வரை சுற்றுகிறார்கள். பிறகு சோர்வடைந்து, கவனிக்கும் பொழுது தான் ஒன்றை உணர்கிறார்கள். சுற்றி உள்ள எந்த வீட்டிலும் யாரும் குடியேறவில்லை. சூரியன் இருந்தாலும், செயற்கை மேகங்களாக இருக்கின்றன. அந்த பகுதியே யாரால் புதிதாக செயற்கையாய் உருவாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது. தாங்கள் ஒரு லூப்பில் மாட்டிக்கொண்டதாக உணர்கிறார்கள்.

அடுத்தநாள், வாசலில் ஒரு பெட்டியில் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தையை வளர்த்தால், நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள் என்ற வாசகமும் இருக்கிறது. தினமும் அவர்கள் வாழ்வதற்கு தேவையானவை பெட்டியில் வந்து சேர்கிறது. அந்த குழந்தை அவர்களோடு நாளும் வளர்கிறான். மிக விரைவில் வளர்கிறான்.

அவர்கள் தப்பிப்பதற்கான வழிகளை யோசித்து யோசித்து முடியாமல் போக… சோர்வாகிறார்கள். பிறகு என்ன ஆனது என்பதை முக்கால் வாசி படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

*****


விரல் விட்டு எண்ணக்கூடிய சில படங்கள் படம் பார்த்த பிறகு இந்தப் படம் என்ன சொல்ல வருகிறது என தேடுவோம். அப்படிப்பட்ட படமாகிவிட்டது இந்தப் படம்.

Vivarium என்றால் என்ன தேடினால், செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது என சொல்கிறது கூகுள். படம் எழுத்துப் போடும் பொழுது, ஒரு பறவையின் கூட்டை வைத்து சில காட்சிகள் வைத்திருப்பார்கள். இந்தப் படம் என்ன சொல்ல வருகிறது என்பதை படம் முடிந்த பிறகு உங்களுக்கு நிச்சயம் மண்டை காயும். படத்தின் பெயரும், எழுத்து போடும் பொழுது சில காட்சிகளையும் இணைத்து நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டியது தான்.

இந்தப் படத்தை ”அறிவியல் உளவியல் பூர்வ திரில்லர்” என வகைப்படுத்துகிறார்கள். அதைச் சுருக்கமாக பேண்டசி கதை என புரிந்துகொள்கிறேன்.

படத்தின் பிரதானப் பாத்திரங்கள் நான்கு தான். சில படங்களில் வசனங்கள் பேசினால், எங்கே கதையை நகர்த்திக்கொண்டு போக முடியாது என பேசுவதையே தவிர்ப்பார்கள். இந்தப் படத்திலும் அப்படித்தான். இப்படி சிக்குண்டால், எத்தனை புலம்புவார்கள்? எத்தனை பேசுவார்கள்? படத்தின் வசனங்கள் பத்து பக்கத்திற்கு கூட தாண்டாது.

நாயகனும், நாயகியும் தான் முக்கிய பாத்திரங்கள். இதில் நாயகி தான் மொத்தப்படத்தையும் தாங்குகிறார்.

சில படங்கள் தமிழ் டப்பிங்கில் இருப்பதாலேயே பார்ப்பேன். பிரைமில் தமிழ் டப்பிங்கிலேயே இருக்கிறது. யூடியூப்பிலும் கிடைக்கிறது. இந்த மாதிரி வித்தியாசமான படங்கள் பார்ப்பவர்கள் மட்டும் பாருங்கள். மற்றவர்கள் பார்த்துவிட்டு குழம்பி திட்டவேண்டாம்.

***
இது குடும்ப அமைப்பை கிரிட்டிசைஸ் பண்ணுற மேஜிக்கல்
ரியாலிச வகையறை...தங்கலான் மாதிரி...ஜெனிபர் லாரன்ஸ் நடிச்ச மதர் படமும் இதே மாதிரிதான்...ஒரு குடும்பத்தின் முக்கிய பணி என்ன...குழந்தை வளர்ப்பு...அது ஒரு தனி மனிதனை எவ்வாறு சுரண்டுகிறது ...அதற்காகவே வாழ்ந்து மடிந்து இறந்து போகும்போது காதலினால் வரும் துக்கம் மேலிட மனைவி அழும்போது வளர்ந்த குழந்தை அதை எவ்வாறு பார்க்கிறது...முதலாளித்துவத்தின் பிடியில் குடும்ப அமைப்பு வந்தபின்பு மனிதர்கள் எவ்வாறு மான்ஸ்டர்களாக மாற்றப்படுகிறார்கள் என்பதுதான் அந்த குழந்தையின் ஒவ்வொரு நடவடிக்கையும் பேச்சும்..

கிளைமாக்ஸ்ஸில் நாயகி ஒவ்வொரு அறையிலும் போய் பார்ப்பது அல்லது ஒவ்வொரு வீட்டிலும் போய் பார்ப்பது அந்தந்த குடும்பங்கள் வேறுமாதிரி சீரழிந்து கொண்டிருப்பதின் உருவகம்...

- @Magellan Michel படம் குறித்துத் தன் கருத்தைப் பகிர்கிறார்.
****

உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் உறைவிடம் தேவை என்பதே பறவைக் கூட்டை காட்டும் காட்சி. மேலும் அவைகள் வீடுகளை வாங்குவதில்லை அவைகளே கட்டி உருவாக்கிக் கொள்கின்றன என்பது அதன் பொருள்.

"விவேரியம்" என்பதன் பொருள் செல்ல பிராணிகளின் கூண்டு என்று கூறுகிறார்கள்.

இங்கே ரியல் எஸ்டேட் காரர்களும் பில்டர்களும் கட்டிக் கொடுக்கும் கூண்டுகளில் அடையும் செல்ல பிராணிகள் மக்கள்.

ரியல் எஸ்டேட் மார்க்கெட்டிங் செய்பவர்கள் நம்மை அழைத்துக் கொண்டு போய் கண்ணை கட்டி வழி தெரியாத இடத்தில் விட்டுவிட்டு நம்மை சிக்கலில் மாட்டிவிட்டு காணாமல் போய்விடுவார்கள் என்பதுதான் அந்த சேல்ஸ் எக்ஸிகியூடிவ் காணாமல் போகும் காட்சியின் அர்த்தம்.

மற்ற வீடுகளில் யாரும் இல்லை என்பதன் பொருள் யார் இருந்தும் பயனில்லை. மேலும் விற்காமல் பல ஆயிரம் வீடுகள் இன்று உலகில் உள்ளன.

மேலும் மொத்தமாக இருந்தாலும் நாம் அங்கு தனித்து விடப்பட்டவர்களே பொருளாதார ரீதியில்.
அந்தக் குழந்தையை வளர்த்தால் தப்பிக்கலாம் என்பதன் பொருள் அது இஎம்ஐ வட்டி வளர்ந்து கொண்டே இருக்கும் நாளுக்கு நாள் வேகமாக.

கூர்ந்து கவனித்தால் நிறைய பொருள்கள் மறைமுகமாக இருக்கும் அற்புதமான மெசேஜ் கூறும் படம். - PrahashArjun

0 பின்னூட்டங்கள்: