> குருத்து: What women want (2000)

September 21, 2024

What women want (2000)


அமெரிக்க காதல், கற்பனை கலந்த நகைச்சுவைத் திரைப்படம்

 

நாயகன் ஒரு ஜாலியான ஆள். விவாகரத்தானவன்.  நிறைய பெண்களுடன் உறவு வைத்துக்கொண்டு இருக்கிற ஆள். அவனுக்கு கல்லூரி செல்லும் வயதில் ஒரு பெண்.  ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை செய்கிறான்.  அடுத்து தனக்கு தான் பதவி உயர்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருக்கும் பொழுது, நிறுவனமோ… எங்கிருந்தோ  திறமையான நாயகியை அழைத்து வந்து அந்த பதவியில் வந்து அமர்த்துகிறார்கள்.

 

பதவி உயர்வு கிடைக்காத துக்கத்தில், தண்ணியைப் போட்டு சலம்பும் பொழுது, தவறி விழுந்து, மின்சாரம் ஷாக் அடித்து எழுந்ததில்…  பெண்களின் அருகே சென்றால் என்ன சிந்திக்கிறார்கள் என்பதை அறியும் சக்தி கிடைக்கிறது.

 

முதலில்  சுற்றி உள்ள பெண்களின் குரல்களை தொடர்ந்து கேட்கும் அவன் டார்ச்சர் அடைகிறான்.  நேரே அவனுடைய பெண் மருத்துவரைப் பார்த்தால், ”பெண்களின் மனதை பிராய்ட்டே அறிந்து கொள்ள முடியாமல் திணறிய விசயம்.  இது யாருக்கும் கிடைக்காத ஒரு வரம்.  சரியாக பயன்படுத்திக்கொள்” என அறிவுரை சொல்கிறாள்.

 

நிறுவனத்தில் நாயகியின் சிந்தனையை உணர்வதன் மூலம், அவளுடைய செயல்களை முன் கூட்டியே இவன் செய்துவிடுகிறான்.  பெண்கள் நினைப்பதை எல்லாம் அறிந்து கொள்வதால், அவன் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் வந்தன என்பதை கொஞ்சம் உணர்வுப்பூர்வமாகவும், கலாட்டாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

 

****

ஒரு கற்பனை குட்டிக்கதை. ஒரு கார்ப்பரேட் சாமியார் வேறு ஒரு பவர்புல் சாமியாரை  பார்க்கும் பொழுது, உன்னை சந்திப்பவர்கள் என்ன சிந்திக்கிறார்கள் என அறியும் ஒரு மந்திரம் இருக்கிறது. நீ கற்றுக்கொள்ள விரும்புகிறாயா?  இவர் வேண்டாம் என மறுத்துவிடுகிறார்.  என்னைப் பார்த்தால், ஒருவன் புன்னகைக்கிறான். நல்ல மொழிகள் சொல்கிறான். அது போதும்.  உள்ளே பேசுவதை எல்லாம் கேட்க ஆரம்பித்தால், என் நிலை சிக்கலாகிவிடும் என்றாராம்.

 

பெண்களுக்கு வாய்விட்டு பேசுவதை கேட்பதற்கு தான் ஆட்கள் இல்லை. மனதில் உள்ளதை எல்லாம் ஒரு மனிதன் கேட்டால் என்ன ஆவான்? என்பதை ஜாலியாக, நேர்மறையாக எடுத்து கையாண்டிருப்பது நல்ல அம்சமாக இருந்தது. சில பெண்கள் வெளியே புன்னகைத்து கொண்டே பேசுவதும், உள்ளே வண்டை வண்டையாய் திட்டுவதையும் ஜாலியாக காட்டியிருக்கிறார்கள்.

 

மெல் ஜிப்சனை ஒரு சில படங்களில் சீரியசாக பார்த்துவிட்டு,  இப்படி ஜாலியாக பார்ப்பது நன்றாக இருக்கிறது.   நாயகியும் நன்றாக செய்திருக்கிறார்.  அதே போல மற்றவர்களும்! வெற்றிப்படமாகவும் ஓடியிருக்கிறது.

 

இப்போதைக்கு எந்த ஓடிடியிலும் இல்லை. வேறு வகைகளில் முயலுங்கள்.

0 பின்னூட்டங்கள்: