> குருத்து: Ronth (2025) மலையாளம்

August 19, 2025

Ronth (2025) மலையாளம்

கேரளாவின் வடக்கு பகுதி எல்லையில் உள்ள கண்ணூர் மாவட்டம். அங்கு ஒரு தர்மசாலா என போலீஸ் ஸ்டேசன்.


20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ள ஒரு எஸ்.ஐ, பணிக்கு சேர்ந்து ஆறு மாதமே ஆன ஒரு கான்ஸ்டபிள். இருவருக்கும் அன்றைக்கு ஊரை வலம் வருகிற ரோந்து (Patrol) வேலை தரப்படுகிறது.

அந்த ஒரு நாள் இரவில் அவர்களுக்கு பலவித அனுபவங்கள் ஏற்படுகிறது. ஒரு காதல் ஜோடி வீட்டுக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கிறது. மனநிலை சரியில்லாத ஒருவர் தன் குழந்தையை யாராவது கடத்தி கொண்டு போய்விடுவார்கள் என ஒரு டிரம்மில் அடைத்து வைத்திருக்கிறார். ஒரு வீட்டில் ”ஒரு பெண் தற்கொலைக்கு முயல்கிறார். காப்பாற்றுங்கள்” என அடுத்தடுத்து அவர்களுக்கு செய்தி வருகிறது.

அடுத்தநாள் காலையில் எதிர்பார்க்காத ஒரு இறுதிக்காட்சியோடு படம் முடிவடைகிறது.

*****


போலீஸ்காரராக இருந்து, ஜோசப், நாயாட்டு, ஆபிசர் ஆன் டுயூட்டி என கதாசிரியராக மாறி, இள வீழ பூஞ்சிறா இயக்கி இப்பொழுது இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார்.

படம் இயல்புத்தன்மையோடு இருப்பதற்கு இது முக்கிய காரணம். பெண் போலீஸ் ரோந்து கிளம்பும் அந்த போலீசிடம் “குடிகாரர்களை பிடித்து வந்துவிடாதீர்கள். இங்கு களேபரம் செய்துவிடுகிறார்கள்.” என்கிறார். கணவரிடம் இருந்து போன் வரும் பொழுது, கொஞ்சம் தள்ளியிருங்கள் என அந்த பெண் போலீசு சொல்வார். பேசிவிட்டு, “என் புருசன் சந்தேக பேர்வழி. அதனால் தான் சொன்னேன். தப்பா எடுத்துக்கொள்ளாதீர்கள்” என்பார்.

இயக்குநர் அரசியல் புரிந்தவராகவும் இருப்பதற்கு, அந்த அதிகாரி கான்ஸ்டபிளிடம் “பணக்காரர்களிடமிருந்து ஏழைகள் எதுவும் பிடுங்கிவிடக் கூடாது என்பதற்காக தான் போலீசே!” என்பார். அடுத்து அந்த பாதிரியிடம் பேசும் காட்சியும் அதற்கு எடுத்துக்காட்டு. இரண்டு போலீஸ்காரர்களின் வாழ்வையும் இணைத்து சொன்னது இயல்பாக இருந்தது.

செல்வாக்கு உள்ளவர்களோடு இணைந்து அதிகாரத்தில் உள்ளவர்கள் தனக்கு கீழ் உள்ளவர்களை எப்படி மாட்டிவிடுவார்கள் என்பதையும் போகிற போக்கில் சொல்லியிருக்கிறார்கள். நல்லவர்களும், அப்பாவிகளும் போலீஸ் துறையில் எவ்வளவு அல்லல்படுவார்கள் என நினைக்கும் பொழுது பதட்டமாய் இருக்கிறது.

இரண்டு முக்கிய போலீஸ் பாத்திரங்களான திலீப் போத்தனும், ரோஷன் மாத்யூ இருவரும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள்.
திலீப் போத்தன் இன்னும் சிறப்பு.

பார்க்கவேண்டிய படம். தமிழிலும் மாற்றம் செய்திருக்கிறார்கள். நன்றாக இருக்கிறது. ஜியோ சினிமாவில் இருக்கிறது. பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: