நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை வாசித்ததும், பெரும்பாலான பத்திரிக்கைகள் இது 2024 தேர்தலை ஒட்டி போடப்பட்டுள்ள பட்ஜெட் என தலைப்புச் செய்தியாக எழுதினார்கள். வாக்கு வங்கியை மனதில் கொண்டு தேர்தலுக்காக பெரும்பாலான மக்களின் நலனை ஒட்டி நிறைய திட்டங்களை அறிவித்துவிட்டார்களோ..? இவங்க அந்த அளவுக்கு நல்லவங்க இல்லையேஎன ஒவ்வொரு திட்டத்தையும் உற்றுப் பார்த்தால்… நம் நம்பிக்கை பொய்த்துவிடவில்லை. வழக்கம் போல வாயிலேயே வடை சுட்டிருக்கிறார்கள். இதை ஏன் இந்த ஊடகங்கள் இவ்வளவு பெரிதுப்படுத்துகிறார்கள் என கேள்வி வந்தது. மோடி ஒரு பேட்டியில்… ”தங்களுடைய பலவீனம் என்ன? என பத்திரிக்கையாளர் கேட்கும் பொழுது.. “மீடியாவை கையாள்வதில் தேர்ச்சி இல்லை!” என பதில் சொன்னார். இப்பொழுது அந்த பலவீனத்தையும் மோடி களைந்துவிட்டார் என புரிந்துகொள்ள முடிகிறது.
2023 பட்ஜெட்டில் ஒரு ரூபாயில் – வருமானம் எவ்வளவு? செலவு எவ்வளவு?
நமது நாட்டின் வருமானத்தையும், செலவுகளையும் ஒரு ரூபாயில் கணக்கிடுவது பறவைப் பார்வையில் பட்ஜெட்டைப் புரிந்துகொள்வதற்கு உதவும்.
எந்தெந்த வகையில் வருவாய் வருகிறது?
கடன்கள் 34
கார்ப்பரேட் வரி 15
வருமான வரி 15
சுங்கவரி 4
மத்திய கலால் வரி 7
ஜி.எஸ்.டி 17
மூலதன வருவாய் 2
வரிகள் அல்லாத வருவாய் 6
ஆக மொத்தம் 100
எந்தெந்த வகையில் செலவுகள் செய்கிறோம்?
ஓய்வூதியம் 4
இதர செலவுகள் 8
மாநில வரி வருவாய் 18
நிதி ஆணைக்குழு 9
வட்டி 20
மத்தி துறை திட்டம் 17
ராணுவம் 8
மானியம் 7
மத்திய நிதி உதவி
பெறும்
திட்டங்கள் 9
ஆக மொத்தம் 100
ஒரு ரூபாய் செலவு செய்கிறோம். வருமானம் போதாமல் 34 பைசா கடன்கள் வாங்கி சமாளிக்கிறோம் என்பது எவ்வளவு பெரிய அபாயத்தில் இருக்கிறோம். இப்படி ஒரு குடும்பம் இருந்தால், நாம் என்ன சொல்வோம்? விரைவில் திவாலாகி தெருவுக்கு வந்துவிடும் என்று தானே! ஏற்கனவே உலக அளவில் சில நாடுகள் திவாலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. இதில் நாம் எத்தனை கவனத்துடன் செயல்படவேண்டும். ஆனால் அலட்சியத்துடன் செயல்படுகிறார்கள்.
2014ஆம் ஆண்டில் காங்கிரசு கூட்டணி ஆட்சியை விட்டு சென்ற பொழுது.. இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் ரூ.54 லட்சத்து 90 ஆயிரத்து 763 கோடியாக இருந்தது. இப்படியும் சொல்லலாம். “சுதந்திரம் பெற்று” 67 ஆண்டுகளில் அவ்வளவு தான் கடன் இருந்தது. ஆனால், மோடி ஆட்சி செய்த எட்டு ஆண்டுகளிலேயே செப்டம்பர் 2022 வரை ரூ. 147 லட்சம் கோடிகளாக உயர்த்தியுள்ளார். இடையில் ஒருமுறை மோடி தனது சிறந்த ஆளுமைத் திறனால்.. வெளிநாட்டு கடன்கள் அனைத்தையும் அடைத்து ஏறக்கட்டிவிட்டார் என சங்கிகள் வழக்கம் போல ஒரு வதந்தியை பரப்பினார்கள். பிறகு அப்படியெல்லாம் கடனை அடைக்கவில்லை. ஒரு மடங்காக இருந்த கடனை மூன்று மடங்காக பெருக்கி வைத்திருக்கிறார் என எதிர்க்கட்சியினரும், பத்திரிக்கைகளும் காறித்துப்பினர். மோடி கும்பல் வாங்கிக் குவித்த கடனுக்கு தான் ஒரு ரூபாயில் இருபது பைசா வட்டி மட்டுமே கட்டுகிறோம்.
மறைமுக வரிகள் உயர்வு; கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி வரி குறைப்பு
ஒரு நாடு சிறந்த முறையில் நிர்வாகம் செய்கிறது என்றால்… பெரும்பாலான மக்களை பாதிக்கிற அரிசி, பருப்பு, பெட்ரோல், டீசல் என பெரும்பாலான பொருட்களின் மீதான மறைமுக வரியை குறைக்கவேண்டும். அப்பொழுது தான் விலைவாசி குறையும். அதே போல நேரடி வரியை அதிகப்படுத்தவேண்டும். இவர்கள் ஏற்கனவே கொடுத்துக்கொண்டிருந்த மானியங்களை வெட்டுவதன் மூலம் மறைமுக வரியை அதிகமாக்கி மக்கள் மீது சுமையை ஏற்றிக்கொண்டே போகிறார்கள். கார்ப்பரேட்டுகளுக்கு வரியை குறைப்பதன் மூலம் அவர்களை செல்லப்பிள்ளைகளாக நடத்துகிறார்கள்.
ஏழை மக்களுக்கான மான்யங்கள் வெகுவாக குறைப்பு
கல்வி, மருத்துவம், விவசாயம் என பெரும்பாலான மக்களுக்கு தரும் மானியங்களை படிப்படியாக குறைத்துக்கொண்டே வருகிறார்கள். கிராமப்புற ஏழை மக்களை உயிர்வாழ வைத்துக்கொண்டிருக்கிற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்புத் திட்டத்திற்கு கடந்த ஆண்டு ரூ. 73,000 கோடி ஒதுக்கியிருந்தார்கள். இந்த ஆண்டு ரூ.60,000 கோடியாக குறைத்துவிட்டார்கள்.
பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவு பி.எம்.போசன் திட்டத்திற்கு கடந்த ஆண்டு ரூ.12,800 கோடி ஒதுக்கினார்கள். ஆனால் இந்த ஆண்டு ரூ.11000 கோடி தான் ஒதுக்கியுள்ளார்கள். உணவு மானியங்களுக்காக கடந்த ஆண்டு ரூ. 2,87,194 கோடி ஒதுக்கியிருந்தார்கள். இந்த ஆண்டு ரூ. 1,97,350 கோடிகளாக குறைத்துள்ளார்கள்.
கடந்த ஆண்டு நாம் வைத்திருந்த ரூ. 100யும் இப்பொழுது நாம் வைத்திருக்கும் ரூ. 100ன் மதிப்பும் சமமில்லை. கடுமையான விலைவாசி உயர்வு, டாலரின் மதிப்பு உயர்வு, இந்திய பணத்தின் வீழ்ச்சி என பணத்தின் மதிப்பு குறைந்துகொண்டே இருக்கிறது. இதைத் தான் பணவிக்கம் என்கிறோம். இதன் அடிப்படையில் முதல் ஆண்டு ரூ.100 ஒதுக்கினால், அடுத்த ஆண்டு ரூ. 110 என ஒதுக்கினால் தான் நியாயம். மோடி அரசு முதல் ஆண்டை விட, அடுத்த ஆண்டு மான்யங்களை குறைத்துக்கொண்டே போவது என்பது பெரும்பாலான மக்கள் மீது அக்கறை இல்லாமல் தான் இந்த பட்ஜெட் போட்டிருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது.
ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு எங்கே?
நம் நாட்டில் வேலை வாய்ப்பின்மை பெருகி கொண்டே போகிறது. படித்தவர்களுக்கும் பொருத்தமான வேலையில்லை. படிக்காதவர்களுக்கும் போதுமான வேலையுமில்லை. நகர்ப்புறத்தில் 8% வேலையின்மை இருக்கிறது. ஊரகப் பகுதிகளில் 8.3% வேலையின்மை இருக்கிறது என சிஎம்ஐ ஆய்வு சொல்கிறது. தேர்தலின் பொழுது மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என பந்தாவாக அறிவித்தார். அதுவும் மோடி அறிவித்த பொய்களில் ஒன்றாக காற்றில் கரைந்துவிட்டது. ஒன்றிய அரசு நிறுவனங்களிலேயே 10 லட்சம் காலியிடங்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் சமீபத்தில் அறிவித்தார்கள். ஆனால் நிரப்ப மறுக்கிறார்கள்.
புதிய வருமான வரித் திட்டம்
ஏற்கனவே தனிநபர் வருமான வரி செலுத்துவதில் இரண்டு விதமான திட்டங்கள் இருக்கின்றன. இப்பொழுது புதிய வருமான வரித் திட்டம் ஒன்றை சாதனை அறிவிப்பு போல செய்திருக்கிறார்கள். சேமிப்புக்கோ, சில குறிப்பிட்ட செலவுகளுக்கோ கொடுக்கிற வரிச் சலுகைகள் இல்லாமல்… “சம்பாதி! அப்படியே மொத்தத்தையும் செலவழிச்சுக்கோ” என்கிற ரீதியில் இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.
சேமிப்பை பொறுத்தவரையில்… மொத்தம் மூன்று வகைகள். 1. தனிநபர் சேமிப்பு 2. நிறுவனங்களின் சேமிப்பு 3. பொதுத்துறை நிறுவனங்களின் சேமிப்பு. இதில் நன்றாக இயங்குகிற பொதுத்துறை நிறுவனங்களை கூட வித்து வித்து தின்று செமித்து வருவதால், அதில் சேமிப்பு இல்லாமல் போய்விட்டது. சேமிப்பு இருந்தால் தானே மூலதனமாக உருமாறும். ஆனால், பணப்புழக்கத்தை அதிகமாக்க இந்தத் திட்டத்தை கொண்டு வந்ததாக அறிவிக்கிறார்கள். பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவதற்கு நேர்மறையாக எதையும் உருப்படியாக இவர்களால் செய்யமுடியவில்லை. மக்களின் பையில் கையை விட்டு எடுக்கிறார்கள். அவ்வளவு தான்.
மேலும் நமது நாட்டில் இன்றைய நிலவரப்படி 48 கோடிக்கும் மேலாக பான் கார்டு வைத்திருக்கிறார்கள். இதில் தனிநபர் வருமான வரி செலுத்துவர்களின் எண்ணிக்கை என்பது நம் நாட்டில் மொத்தமே 1.4 கோடி தான். இதில் 5 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கையே ஒரு கோடி பேர் இருக்கிறார்கள் என கடந்த ஆண்டு மோடியே புலம்பினார். நம் நாட்டில் மக்கள் தொகை 141 கோடி. அதில் மிக மிக குறைந்த சதவிகித்தை தான் பெரிய சாதனை போல பேசுகிறார்கள்.
விவசாயிகளுக்கு 20 லட்சம் கடன் உதவி
ஒரு வருடம் கடுமையான பனியிலும் மழையிலும் வெயிலிலும் போராடிய விவசாய மக்களுக்கு நிறைய மான்யங்களை அறிவித்துவிட்டார்களா என பார்த்தால், அதிலும் ஒன்றுமேயில்லை. விவசாயிகளுக்கான பிரதமர் கிஷான் நிதி ஒதுக்கீடு 68 ஆயிரம் கோடியில் இருந்து அறுபதாயிரம் கோடியாக குறைத்திருக்கிறார்கள். பெரிய சாதனையாக 20 லட்சம் கடன் உதவி என பெருமை பீத்துகிறார்கள். வங்கிகளை விவசாயிகளுக்கு கடனை கொடுக்க சொல்வதெல்லாம் ஒரு சாதனையில் வருமா? காலக்கொடுமை.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலை
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையின் விளைவாக கடந்த 2015 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. மூன்றாண்டுகள் எந்த நகர்வுமின்றி கிடப்பில் போட்டனர். தொடர்ச்சியான நினைவூட்டலுக்கு பிறகு மருத்துவமனைக்கு 2018ல் மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பப்பட்டது. 2019ல் மோடி அடிக்கல் நாட்டினார். இன்னும் அடிப்படை கட்டுமானம் கூட எழுப்பப்படவில்லை! வெறும் செங்கல் சுற்றுச் சுவருடன் வெற்று மைதானம் பல் இளிக்கிறது!
மதுரையில் எய்ம்ஸ் அறிவிப்புக்கு பிறகு, அடுத்தடுத்தகட்டமாக அறிவிக்கப்பட்ட குஜராத், ஜார்க்கண்ட், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் எய்ம்ஸ் கட்டுமானங்களும் நிறைவடைந்து செயல்பாட்டிற்கே வந்து விட்டன. மதுரை எய்ம்ஸ் திட்டம் மட்டுமே கடந்த 4 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் அங்கமாக தமிழ்நாட்டை பாஜக அரசு கருதுகிறதா? இல்லையா? எனச் சந்தேகம் வலுக்கிறது.
பட்ஜெட் அறிவிப்புகளும், அதன் உண்மைத் தன்மைகளும்!
சமீபத்தில் புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்த ஒரு இளைஞரிடம் பட்ஜெட் பற்றிப் பேசிக்கொண்டிருந்த பொழுது.. அவர் ஒரு கேள்வியை கேட்டார். “ஒவ்வொரு திட்டத்திற்கு இவ்வளவு, இவ்வளவு என பட்ஜெட் என அறிவிக்கிறார்கள். வருமானத்திலும், செலவுகளிலும் நடைமுறையில் நிறைய மாற்றங்களும் வரும். எவ்வளவு திட்டமிட்டோம். உண்மையில் எவ்வளவு வருமானம் வந்தது, எவ்வளவு செலவழித்தோம் என கணக்கை வருட இறுதியில் அறிவிக்கவேண்டும் அல்லவா! அது தானே சரியான முறை!” என்றார். நியாயமான கேள்வி.
நம் தெருவில் உள்ள சின்ன கோவிலில் திருவிழாக்கென வீட்டுக்கு இவ்வளவு வரி என வசூலிப்பார்கள். செலவு செய்வார்கள். திருவிழா முடிந்த பிறகு, ஒரு சிலேட்டில் இவ்வளவு வரி வசூலித்தோம். இவ்வளவு செலவு செய்தோம். கையிருப்பு இவ்வளவு அல்லது கடன் இவ்வளவு என நேர்மையாக எழுதிப்போடுவார்கள். அந்த எளிய நேர்மை இந்தியாவை ஆள்கிறவர்களுக்கு எப்பொழுதுமே இருந்ததேயில்லை. நாடாளுமன்றத்தில் யாராவது ஒரு குறிப்பாக ஒரு திட்டம் குறித்து கேள்வி கேட்டால் மட்டும், குறிப்பான பதிலை சொல்வார்கள். அவ்வளவு தான்.
இந்தியாவை சூறையாடும் கார்ப்பரேட் காவி கும்பல்
இப்படி பட்ஜெட்டில் எந்த திட்டத்தை எடுத்துக்கொண்டு விவாதித்தாலும், பெரும்பாலான மக்களுக்கு பாதகமாகவும், கார்ப்பரேட்டுகளுக்கு பார்த்து பார்த்து கவனமாய் செய்கிற ஆட்களாக தான் மோடி கும்பல் ஆட்சி செய்கிறது. அதானி அத்தனை அயோக்கியத்தனங்களும் செய்து தான் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கிறார் என்பதும், இப்பொழுது அதானியின் ராஜ்யம் சரிந்து விழுவதையும் சங்கிகளால் பொறுக்க முடியவில்லை. ”நம்மாட்களில் ஒருவர் மேலே வருவது பிடிக்காமல் சதி செய்கிறார்கள்” என சங்கிகள் பொருமுகிறார்கள். திட்டித்தீர்க்கிறார்கள். கதறி அழுகிறார்கள். ”நம்மாட்கள்” என பெரும்பான்மை மக்களை சங்கிகள் எப்பொழுதும் கருதுவதில்லை. கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யவே தாங்கள் பிறந்திருக்கிறோம் என்பதாக அவர்கள் சிந்தனை, செயல்களுமாக இருக்கிறது.
சமூக ஏற்றத்தாழ்வுகள் முன்பை விட அதிகரித்து இருக்கிறது. வாழ்வதற்கு அடிப்படையாக தேவைப்படும் அத்தனை பொருட்களின் கடுமையான விலைவாசி உயர்வால் பெரும்பாலான மக்கள் திகைத்துப் போயிருக்கிறார்கள். இந்த நாட்டில் சிறிய, நடுத்தர முதலாளிகள் கூட தொழில் செய்ய முடியாமல், திணறி வருகிறார்கள். கார்ப்பரேட்டுகளும், காவி கும்பல்களும் இந்தியாவை சூறையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பளிச்சென புரிந்துகொள்ள முடிகிறது. இலங்கையை போல, பாகிஸ்தானை போல எல்லாம் கையை மீறி போவதற்குள் மக்கள் விழித்துக்கொள்ளவேண்டும்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment