> குருத்து: கர்நாடகம் : கல்வித்துறையின் ஊழலில் திளைக்கும் பிஜேபி!

September 7, 2022

கர்நாடகம் : கல்வித்துறையின் ஊழலில் திளைக்கும் பிஜேபி!


பிஜேபி தன்னை ஊழலுக்கு எதிரான கட்சி என்று பொதுவெளியில் விளம்பரம் செய்கிறது. ஆனால் உண்மை நிலையோ வேறு. பிஜேபி ஆட்சி செய்யும் அத்துனை மாநிலங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.


பிரதமர் மோடி ஊழல் குறித்து பல்வேறு மேடைகளில் முழங்குகிறார். சொந்த கட்சிகாரர்கள் மீது ஊரே காறித்துப்பினாலும் அமைதி காக்கிறார்.
***

கர்நாடகாவில் கல்வித்துறையில் லஞ்சம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி கர்நாடகாவைச் சேர்ந்த 13000 தனியார் பள்ளிகள் ஒன்றிணைந்து இரண்டு சங்கங்கள் சார்பாக பிரதமர் மோடிக்கு புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

கர்நாடகாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில், முறையான விதிமுறைகள் ஏதும் பின்பற்றப்படுவதில்லை. அதோடு புதிய கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில் பெருமளவில் லஞ்சம், ஊழல் நடக்கிறது.

இது தொடர்பாக கல்வியமைச்சார் பி.சி நாகேஷ் மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் பலமுறை புகார் அளித்து இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து, தனியார் பள்ளிகளில் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைகளையும் ஆளும் பிஜேபி செய்துவருகிறது எனவும் புகார் எழுந்து இருக்கிறது.

ஏற்கனவே கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பில் “கர்நாடகாவில் அரசின் திட்ட பணிகளை ஒதுக்கீடு செய்வதற்காக அமைச்சர்கள் 40% கமிசன் கேட்கிறார்கள். இது சம்பந்தமாக முதல்வர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என மோடிக்கு புகார் கடிதம் அனுப்பினார்கள். இதே ஆண்டு மார்ச் மாதம் பிஜேபியை சார்ந்த ஒரு ஒப்பந்ததாரர் “4 கோடிக்கு சாலை பணிகள் செய்தேன். அந்த தொகையை விடுவிப்பதற்கு அமைச்சர் 40% கமிஷன் கேட்டார்” என மனம் நொந்து தற்கொலை செய்தது நினைவுக்கு வருகிறது.

கர்நாடகாவில் நிலைமை இப்படியிருக்க… பிரதமர் மோடியோ ”அரசின் நடைமுறையில் இருந்து ஊழல் வெறியேறவேண்டும். ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு சாத்தியமான நம்பிக்கையை ஏற்படுத்துவதில் கடந்த ஏழு ஆண்டுகளில் அரசு வெற்றியடைந்துள்ளது” என 2021ல் பேசினார். கடந்த ’சுதந்திர’ தின உரையிலும் ஊழல் குறித்து உரக்க முழங்கினார். கர்நாடகாவில் பிஜேபி செய்யும் ஊழல்கள் நாளும் சந்தி சிரிக்கிறது.

0 பின்னூட்டங்கள்: