> குருத்து: ஸ்விக்கி ஊழியர்களின் நியாயமான போராட்டம் வெல்லட்டும்!

September 24, 2022

ஸ்விக்கி ஊழியர்களின் நியாயமான போராட்டம் வெல்லட்டும்!



லட்சக்கணக்கில் வேலை செய்யும் இந்த தொழிலாளர்கள் கிக் பொருளாதாரத்தில் இந்த நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். இவ்வளவு பேருடைய வாழ்க்கையையும் தொழிலாளர் நலச்சட்டங்கள் வழியாக பாதுகாக்க வேண்டிய ஒன்றிய அரசு வேடிக்கைப் பார்க்கிறது.

****

கடந்த திங்கள்கிழமை துவங்கி தலைநகர் சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் தங்களது ஊதியம் கடுமையாக குறைக்கப்படுவதை எதிர்த்து போராடிவருகின்றனர். இந்த ஊதிய குறைப்பை மற்ற மாவட்டங்களுக்கும் ஸ்விக்கி அடுத்தடுத்து அமுல்படுத்தும் என்பதால், மற்ற மாவட்டங்களிலும் உள்ள ஸ்விக்கி ஊழியர்கள் போராட துவங்கியுள்ளனர்.

பைக், செல்போன், ஸ்விக்கி ஆப்பில் வரும் இங்கிலீசை வாசிக்க தெரியும் அளவிற்கு படிப்பு இருந்தால் வேலைக்கு ஆட்களை எடுத்துக்கொள்கிறார்கள். தொழிலாளர்களுக்கென எந்தவித அலுவலகமும் இல்லை. தெருவோரம் உள்ள மரத்தடிகளில் காத்திருக்கிறார்கள். வாடிக்கையாளரிடமிருந்து ஆர்டர் வந்ததும், வில்லிருந்து கிளம்பும் அம்பு போல கிளம்புகிறார்கள். ஆர்டர் அனுப்பியதும் 30 நிமிடங்களுக்குள் விநியோகிக்கவேண்டும் என்பது விதியாக இருக்கிறது. இதில் சூடாக (Hot), குளிர்ச்சியாக (Cool), காரமாக (Spicy), கூடுதலாக சட்னி, சாம்பார் வேண்டும் என வாடிக்கையாளர்களின் கூடுதல் கட்டளைகளும் உண்டு.

உணவகத்தில் எத்தனை கூட்டம் இருந்தாலும், அங்கு வேகப்படுத்தி வாங்கிக்கொண்டு போய், வாடிக்கையாளர் இடத்தை வேகமாக அடைந்து விநியோகிக்கிறார்கள். இதில் உணவகங்களில் தாமதம், சில்லறை தட்டுப்பாடு, சாப்பாடு பொருளை ஒவ்வொன்றாக பொறுமையாக சோதிப்பது, மனிதர்களை கையாள்வது போல இல்லாமல் ஒரு எந்திரத்தை கையாள்வது போல நடத்துவது என பல பிரச்சனைகளை தினந்தோறும் எதிர்கொள்கிறார்கள். தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது பெரிய பிரச்சனை. இப்படி எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொண்டு தான் வேலைகளை செய்துவருகிறார்கள்.

இந்த நிலையில் தான் ஸ்விக்கி தன் ஊழியர்களுக்கு தரும் ஊதியத்தை ஏதோவொரு காரணம் சொல்லி குறைத்துக்கொண்டே செல்கிறது. இப்பொழுது நடக்கும் போராட்டம் ஏன் என்பதை ஊழியர்களே விளக்குகிறார்கள்.
ஊதியம் கணக்கிடும் முறை என்பது….

1. ஆர்டர் கட்டணம். (ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை ஆர்டர்கள் எடுக்கிறார்களோ, அதற்கு தகுந்த கட்டணம் தருகிறார்கள்.

2. பெட்ரோல் அலவன்ஸ் (ஒரு ஆர்டர் என்பது 3 லிருந்து 4 கிமீ தூரம். கூடுதலாக 6,7 கி.மீ என போகும் பொழுது கொடுக்கப்படும் தொகை)

3. ஊக்கத்தொகை (Incentives) (ஒவ்வொரு நாளும் ஒரு இலக்கு வைக்கிறார்கள். அதை அடைந்தால் தொகை, வாரத்திற்கு இவ்வளவு என இலக்கு அதை அடைந்தால், ஒரு தொகை என தரப்படுவது.)

4. சர்சார்ஜ் தொகை (மழைக்காலங்களில், உணவகத்தில் மிக பிசியான சமயங்களில் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக வாங்குவதில் இருந்து தருவது)
காத்திருப்பு கட்டணம் (Waiting Charges) (உணவகத்தில் காத்திருக்கும் நேரத்திற்காக தரும் தொகை)

மாதாந்திர சம்பளம் என எந்த ஊழியருக்கும் தரப்படுவதில்லை. இந்த ஐந்து வகைகளில் தான் கணக்கிட்டு சம்பளமாய் தருகிறார்கள்.

இப்பொழுது ஸ்விக்கி செய்திருக்கிற மாற்றம் என்னவென்றால்…

ஒரு தொழிலாளி மூன்று சிப்டுகளில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். இப்பொழுது அதை ஐந்து அடுக்குகளாக மாற்றிவிட்டார்கள்.

ஒரு தொழிலாளி 11 மணிக்கு ஸ்விக்கி ஆப்பை உள்ளே நுழைந்தால் (Log in) இரவு 11 மணி வரை, 12 மணி நேரம் வேலை செய்தால், அவர்கள் ஒரு நாளைக்கான இலக்கை அடைந்துவிட முடியும். ஆனால், கட்டணத்தை குறைத்ததன் மூலம் காலை 6 மணிக்கு உள்ளே நுழைந்தால், இரவு 11 மணி வரை வேலை செய்தால் தான் பழைய ஊதியத்தை அடைய முடிகிற அளவிற்கு கொண்டுவந்துவிட்டார்கள். இடையே மதியம் 3 மணிக்கு மேல் ஆர்டர் குறையும் பொழுது, வீட்டிற்கு போய் ஓய்வு எடுக்கமுடியும். இப்பொழுது அப்படி போகமுடியாத படிக்கு செய்கிறார்கள் என புகார் கூறுகிறார்கள்.

முன்பு ஒரு நாளைக்கு ஒரு தொழிலாளிக்கு 25 டெலிவரி தருவார்கள். இப்பொழுது அதை 10 ஆர்டர்களாக குறைத்துவிட்டார்கள். வருகிற ஆர்டர்களை தங்களோடு ஒப்பந்தம் போட்டு இருக்கிற ரேபிடோ (Rapido) போன்ற மற்ற நிறுவனங்களுக்கு தருகிறார்கள். நாங்கள் ஆர்டருக்காக காத்திருக்கும் பொழுது, இப்படி குறைப்பது நியாயமில்லை. என்கிறார்கள்.

முன்பு ஒரு ஆர்டருக்காக ஒரு உணவகத்துக்கு செல்லும் தூரம், அங்கிருந்து வாடிக்கையாளரை அடையும் தூரம் இரண்டையும் கணக்கிட்டு பணம் கொடுத்திருக்கிறார்கள். இப்பொழுது உணவகத்திற்கு செல்லும் தூரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டோம் என தெரிவிக்கிறார்கள்.

முன்பு வாரம் முழுவதும் வேலை செய்து இலக்கை அடைந்தால், ஊக்கத்தொகையாக ரூ. 1200 தருவார்கள். இப்பொழுது அந்த ஊக்கத்தொகை இல்லை என சொல்கிறார்கள்.

இது தவிர ஒரு ஆர்டரை உணவகத்தில் இருந்து வாடிக்கையாளருக்கு தரும் பொழுது, அந்த வாடிக்கையாளர் அந்த தொழிலாளி செய்த சேவையை மதிப்பிட்டு மதிப்பெண்கள் (Stars) தருகிறார்கள். சில வாடிக்கையாளர்கள் அதை குறைத்து தரும் பொழுது அவர்களுக்கு வாரந்திர ஊக்கத்தொகையை கடுமையாக வெட்டுகிறார்கள். வாடிக்கையாளர்கள் தரும் மதிப்பெண்களை ஸ்விக்கி நிறுவனம் மட்டுமே பார்க்கமுடியும். தொழிலாளியால் காணமுடியாது. இதை வைத்துக்கொண்டு ஸ்விக்கி தங்களது தரும் தொகையை பெரிய அளவில் வெட்டுகிறார்கள் என்கிறார்கள்.

வாடிக்கையாளர்களுக்கு அரை மணி நேரத்தில் உணவை சென்று சேர்க்கவேண்டும் என ஸ்விக்கி ஊழியர்கள் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாய் செல்லும் பொழுது, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதற்கு எல்லாம் ஸ்விக்கி பொறுப்பு ஏற்பதில்லை. ஒரு தொழிலாளருக்குரிய அடிப்படையாக தரவேண்டிய இ.எஸ்.ஐ, பி.எப் இரண்டையும் தருவதில்லை.

லட்சக்கணக்கில் வேலை செய்யும் இந்த தொழிலாளர்கள் கிக் பொருளாதாரத்தில் இந்த நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். இவ்வளவு பேருடைய வாழ்க்கையையும் தொழிலாளர் நலச்சட்டங்கள் வழியாக பாதுகாக்க வேண்டிய ஒன்றிய அரசு வேடிக்கைப் பார்க்கிறது. மாநில அரசும் வேடிக்கை பார்க்க கூடாது. விரைந்து அந்த தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

அவர்களுடைய கடுமையான உழைப்புக்கும், பெறும் குறைவான ஊதியத்திற்கும் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு இருந்தாலும், ஸ்விக்கி நிறுவனத்திடம் பழைய ஊதிய முறையை அமுல்படுத்து! என என்று தான் கேட்கிறார்கள். அவர்களுடைய நியாயமான கோரிக்கையை மதிக்காமல், ஸ்விக்கி நிறுவனம் ”வேலை செய்தால் செய்! இல்லையெனில் கிளம்பு!” என்கிற ரீதியில் பேசுவதாய் தகவல்கள் வருகிறது.. இது கண்டிக்கத்தக்கது. ஸ்விக்கி ஊழியர்களின் சேவையை பெறும் பொது சமூகமும் ஸ்விக்கியின் இந்த அராஜகப்போக்கை கண்டிக்கவேண்டும். இல்லையெனில், ஸ்விக்கி உண்டாக்கும் ஊதிய நெருக்கடி என்பது தொழிலாளர்களுக்கும், சேவையை பெறும் மக்களுக்குமான உறவை சிக்கலாக்கும்.

இப்பொழுது மட்டுமில்லாமல், ஸ்விக்கி ஊழியர்கள் கடந்த காலத்திலும் ஊதியம் குறித்து போராடியிருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது ஒரு முன்னேற்றம். தாங்கள் ஒரு சங்கமாக இருக்கிறோம். முன்பு போல எங்களை ஏமாற்ற முடியாது. இந்தமுறை நாங்கள் எங்கள் உரிமைகளை பெற்றேத் தீருவோம் என உறுதியாய் சொல்கிறார்கள்.

தலைநகர் சென்னையில் மட்டும் 9 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் தான் கொரானாவால் ஊரடங்கு அமுலில் இருந்த பொழுது, மக்களுக்கு பசித்த பொழுது துணிந்து வந்து சேவை செய்தார்கள். அவர்கள் முன்பும் மக்களுக்காக தெருக்களில் தான் நின்றார்கள். இப்பொழுது போராடும் பொழுதும் தெருவில் இறங்கி தான் போராடுகிறார்கள். சிவில் சமூகம் தான் அவர்களின் நியாயமான கோரிக்கையை ஆதரிக்கவேண்டும். குரல் கொடுக்கவேண்டும்.

0 பின்னூட்டங்கள்: