வீட்டு சமையல் சிலிண்டரின் விலை ரூ. 50 அதிகரிப்பு
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ. 350 அதிகரிப்பு.
மார்ச் ஒன்றாம் தேதியிலிருந்து வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலை சென்னையில் ரூ. 50 அதிகமாகி ரூ 1118.50 என எகிறியிருக்கிறது. தலைநகர் தில்லியில் ரூ. 1103 என தொட்டிருக்கிறது. அதே போல 19.2 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர்களின் விலையையும் அதிகரித்திருக்கிறார்கள். சென்னையில் ஒரு சிலிண்டருக்கு விலை ரூ. 350 அதிகமாகி இப்பொழுது விலை ரூ. 2268 என உச்சத்துக்கு போயிருக்கிறது. தில்லியில் ரூ. 2119க்கு விற்கிறார்கள்.
சமையல் எரிபொருளிலேயே மிகவும் பாதுகாப்பானது எல்பிஜி சிலிண்டர் தான். மக்கள் பயன்படுத்தும் மாற்று எரிபொருட்களான விறகு, எருவாட்டி, மரம் அறுக்கும் தூள் எல்லாமும் கார்பன் உமிழ்வை அதிகம் உண்டாக்குபவை. சமைப்பவர்களின் உடலை மிகவும் தொல்லைக்குள்ளாக்குபவை. வீடுகளில் பெரும்பாலும் பெண்கள் தான் சமைக்கிறார்கள் என்பதால், மாற்று எரிபொருட்களை பயன்படுத்துவதால் இதயம், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய், பக்கவாதம் போன்ற நோய்களுக்கு உள்ளாகி, ஆண்டுக்கு ஐந்து லட்சம் பெண்கள் இறக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். மாற்று எரிபொருட்களின் கார்பன் உமிழ்வு அதிகம் என்பதால், சுற்றுப்புற சூழ்நிலையையும் மிக மோசமாக பாதிக்கிறது.
அதனால் தான் பெண்கள் மீதும், சுற்றுப்புற சூழ்நிலையின் மீது அக்கறை கொண்டவர்கள் போல உஜ்வாலா என்ற திட்டத்தை பந்தாவாக அறிவித்தார்கள். அதில் சில சலுகைகள் கொடுத்து கிராமங்கள் வரைக்கும் சிலிண்டர்களை விநியோகித்தார்கள். இப்பொழுது விலைவாசி உயர்வால் மக்கள் தங்களுக்கு கொடுத்த முதல் சிலிண்டருக்கு பிறகு இரண்டாவது சிலிண்டர் வாங்க முடியாமல் பல லட்சம் பேர் நிறுத்திவிட்டார்கள். சிலிண்டர் கொடுக்கிறோம் என்பதை சொல்லி ஏற்கனவே மண்ணெணெய் கொடுத்ததையும் நிறுத்திவிட்டார்கள். இப்பொழுது மக்களின் நிலை இன்னும் சிக்கலாகிவிட்டது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கூடியதன் மூலம் தேநீரின் விலை ரூ. 12 லிருந்து ரூ. 15 யாக உயரும். அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் அதிகமாகும்.
இவ்வளவு விலையேற்றத்திற்கும் காரணம் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல், சிலிண்டருக்கான மானியங்களை பெரும்பாலும் வெட்டியது தான் காரணம். சிலிண்டருக்கான மானியத்தை வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் வரவு வைக்கிறோம் என நேர்மையின் சிகரமாய் பேசினார்கள். அது இப்பொழுது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் 2018ல் ரூ. 465 என இருந்து மானியம் இப்பொழுது ரூ. 25 என சுருங்கி நிற்கிறது. சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனங்கள் ரூ. 30, 40 என கொடுக்கும் மானியத்தை விட அதிகமாய் புடுங்கிகொள்கிறார்கள்.
ஆக, இந்த ஒன்றிய அரசை ஆளும் மோடி கும்பலுக்கு பெரும்பாலான மக்களை, விலைவாசி உயர்வைப் பற்றியெல்லாம் கவலையே இல்லை என்பது தான் இதிலிருந்து பளிச்சென தெரிகிறது. மோடி கும்பலுக்கு கார்ப்பரேட் புரவலர்களான அதானி, அம்பானிகளை வளப்படுத்துவதற்கும், காப்பாற்றுவதற்குமே தங்கள் ஊன், உயிர், சிந்தனை என எல்லாவற்றையும் அர்ப்பணிக்கிறார்கள். நமக்கான நெருக்கடிகளை நாமே எதிர்கொள்ளவேண்டும். சமூக அக்கறை கொண்ட ஜனநாயக சக்திகளுடன் இணைந்து தெருவில் இறங்கி போராடவேண்டும். வேறு குறுக்கு வழிகளில்லை.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment