நான் வேலை விசயமாக வழக்கமாக செல்லும் ஒரு நிறுவனத்தில் இருந்து நேற்று தகவல் சொன்னார்கள். அங்கு வேலை செய்த இருபத்தியொரு வயது இளைஞர் தன் நண்பர்களுடன் கடற்கரைக்கு போய்விட்டு திரும்பும் பொழுது, ரயிலில் சாகசம் செய்திருக்கிறார். அடிபட்டு உடனே இறந்துவிட்டாராம். அந்த இளைஞரிடம் பேசியிருக்கிறேன். நல்ல உற்சாகமான இளைஞர். பெரிய இழப்பு தான்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, கொரட்டூர் ரயில் நிலையத்தில் ரயிலேறும் பொழுது, என்னுடன் ஒரு ரயில்வே போலீசும் ஏறினார். அங்கிருந்தவர்களை நோட்டம் விட்டார். ஐம்பது வயதுத்தக்க ஒருவர் “இவங்க இரண்டு பேர் தான் சார்” என்றார். அவர்கள் இருவரும் பள்ளி மாணவர்கள். பள்ளி யூனிபார்மில் இருந்தார்கள். இருவரையும் அழைத்துக்கொண்டு அடுத்து வந்த நிறுத்தத்தில் இறங்கினார். மிரட்டி அனுப்புவாரா? பெற்றோருக்கு தெரிவித்து வரவழைப்பார்களா? வழக்கு போடுவார்களா? தெரியவில்லை.
இளைய தலைமுறை யூடியூப் பார்த்து, பல சாசகங்களை ரயிலில் செய்கிற செய்திகள் அடிக்கடி வருகின்றன. அதே போல அடிப்பட்டு பலியான செய்திகளும் வந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு காலாண்டும் ரயில்வே சென்னை மின்சார ரயில்களில் அடிபட்டு இறந்தவர்களின் பட்டியலை வெளியிடும். இப்படி சாகசம் செய்தவர்கள், தண்டவாளம் கடக்கும் பொழுது அடிப்பட்டு இறந்தவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் என அந்த பட்டியல் நீளும். 90 நாட்களுக்கு 90 பேர் சராசரியாக இறப்பார்கள் என்பது தான் இதில் கவனிக்கத்தக்கது.
இப்படி ரயிலில் சாகசம் செய்வது போலவே, பேருந்துகளிலும் சாகசம் செய்வது நடந்துகொண்டு தான் இருக்கிறது. பலியாகிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இப்பொழுது பல பேருந்துகளில் தானியங்கி கதவு போட்டு மூடிவிடுகிறார்கள். இப்படி மூடிவிடும் பொழுது சாகசம் செய்ய வாய்ப்பில்லை. இதை ஏன் போக்குவரத்து கழகம் இத்தனை ஆண்டுகள் கழித்து நடைமுறைப்படுத்துகிறது என்பது ஆச்சர்யமாக இருந்தது.
மின்சார ரயில்களில் செய்கிற சாகசம் மெட்ரோ ரயிலில் இல்லை தானே! ஏனென்றால், அங்கு கதவுகள் தாழிடப்படுகின்றன. அப்படி என்றால், மின்சார ரயில்களிலும் தானியங்கி கதவுகள் போட்டு மூடிவிடலாம் தானே? ஏன் தாமதப்படுத்துகிறார்கள்? விஞ்ஞான வளர்ச்சி எவ்வளவோ வளர்ந்துவிட்டது. செய்வதற்கு தான் அக்கறையில்லை.
ரயில்வே கார்டுகளின் தொழிற்சங்க தலைவர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ரயில் விபத்துக்களை எப்படி தவிர்ப்பது என நிறைய பரிந்துரைகளை கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் ”வந்த பின் தான் காப்போம்” என்பது போல, ஒவ்வொரு பெரிய விபத்து நடந்து, பல உயிரிழப்புகளுக்கு பிறகு தான் எங்களது பரிந்துரைகளில் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்துகிறார்கள் என நொந்துகொண்டார்.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ரயில்வே துறையில் தனியார்மயத்தை விரைவுப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். சேவை என்கிற கண்ணோட்டம் காணாமல் போய், வியாபாரம், லாபம், மேலும் லாபம் என்கிற கண்ணோட்டம் தான் எஞ்சும். மக்கள் மீது எல்லாம் அக்கறை கொள்ள வாய்ப்பேயில்லை.
இளைஞர்களின் சாசகத்தை எப்படி பார்ப்பது? இளமைக்காலம் என்பது துடிப்பான காலம். எதையாவது உற்சாகமாக செய்ய தூண்டும் வயது அது. அவர்களுடன் கலந்துரையாடவேண்டும். அவர்களை ஆரோக்கியமான, சமூக அக்கறை கொண்ட செயல்களில் ஈடுபடுத்தப்படவேண்டும். அதற்கு ஆரோக்கியமான முற்போக்கு மாணவர் அமைப்புகள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இயங்கவேண்டும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அரசியலை காயடித்துவிட்டார்கள். எல்லா மாணவர் அமைப்புகளையும் தடை செய்து வைத்திருக்கிறார்கள். விளைவு. அவர்களின் துடிப்பான இளமைக் காலம் என்பது இப்படி அபாயங்களில் போய் மாட்டி தங்கள் உயிரை பலிகொடுக்கிறார்கள்.
மாணவ சமூகம் தான் வருங்கால சமூகம். அவர்கள் சரியான வழியில் கொண்டு வழிநடத்தப்படவேண்டும். அதற்கு மாணவர் அமைப்புகள் உற்சாகமாய் செயல்பட வைப்பதற்கான வேலைகளை செய்யவேண்டும்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment