ஒரு பக்கம் கொரானா துரத்தியது.
இன்னொரு பக்கம் அரசு
வேடிக்கைப் பார்த்தே கொன்றது.
’சுதந்திர’ தினக்கொண்டாட்டங்களில்
அரசு பரபரவென இருக்கிறது.
சீழ்ப்பிடித்த புண்களை
மறைக்கப் பார்க்கிறது.
அவர்கள் வசதியாய் மறந்து போகலாம்.
நாம் மறக்ககூடாது.
நினைவுப்படுத்திக்கொண்டே இருப்போம்.
ராம்கிர்பால். 65 வயது.
மும்பை துவங்கி
உத்திரபிரதேச காசிலாபாத் வரை
1600 கிமீ தூரம் நடந்தே கடந்தார்.
பிறந்த மண்ணை தொட்டதும்
கீழே விழுந்துவிட்டார்.
சோதித்ததில் செத்துவிட்டார்.
ஆசிப். 22 வயது.
கேரளாவில் செங்கல்சூளை தொழிலாளி.
வேலையும் இல்லை; சோறுமில்லை.
ஊருக்குப்போக வழியும் இல்லை.
தன்னைத்தானே கொன்றுவிட்டான்.
மேற்குவங்கம் முர்ஷிடாபாத் வரை
2900 கிமீ ஆம்புலன்சில் சொந்த ஊரை அடைந்தான்.
ஊர்க்காரர்கள் வசூலித்து
1,30,000 கொடுத்தார்கள்.
அந்த குட்டிப்பெண் ஜோதி
’பெருமைமிகு’ தலைநகர் தில்லியில்
ஏழாம் வகுப்பு படிக்கிறாள்.
காலில் அடிப்பட்ட அப்பாவை வைத்து
1200 கிமீ பயணித்து
பீகாரின் தர்பாங்காவை
ஏழே நாளில் வந்தடைந்தாள்.
அம்ரித் 24 வயது இளைஞன்.
மோடியின் பெருமைமிகு குஜராத்தில் இருந்து
யோகி ஆதித்யநாத்தின் உத்திரப்பிரதேசம்
பஸ்தி மாவட்டம் வரை
1460 கிமீ பயணிக்கவேண்டும்.
மத்திய பிரதேசம் அடைந்த பொழுது
சோர்வானான்.
கோவிட்டுக்கு பயந்து
வழியிலேயே இறக்கிவிடப்பட்டனர்.
நண்பனின் தோளில்
அரை மயக்கத்தில் சாய்ந்திருந்த படம்
வைரலான பொழுது
அம்ரித் இறந்துவிட்டான்.
சாலையில் சென்றால்
போலீசு உதைத்தார்கள்.
முகாம்களில் வதைத்தார்கள்.
கஞ்சியோ, சாவோ
சொந்த ஊரில் என
தண்டவாளங்களிலே நடந்தார்கள்.
சோர்வான பொழுது தூங்கினார்கள்.
கோவிட் சிறப்பு ரயில்
எல்லோரையும்
நிரந்தர நித்திரையில் ஆழ்த்திவிட்டது.
இவையெல்லாம்
பல லட்சக்கணக்கான துயர கதைகளில்
ஊடகங்களில் வெளிவந்தவை.
பேரரசரும் அவரது சகாக்களும்
வேடிக்கைப் பார்த்தே கொன்றார்கள்.
மன்னர்கள் அமைதி காத்தார்கள்.
”நடப்பவர்களை
தடுத்து நிறுத்தவா முடியும்?” என
மைலார்டுகளின் குரல் எதிரொலித்தது.
அவர்கள் வசதியாய் மறந்து போகலாம்.
நாம் மறக்ககூடாது.
நினைவுப்படுத்திக்கொண்டே இருப்போம்.
கொரானாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்தார்கள்.
நின்று கொல்லும் அரசுக்கு?
0 பின்னூட்டங்கள்:
Post a Comment