August 29, 2008
அலைமோதும் மக்கள்! அள்ள நினைக்கும் அரசு
சென்னையில் வீட்டு வாடகை எகிறி கொண்டு, எங்கேயோ போய்கொண்டிருக்கிறது. வாடகைத்தர நடுத்தர வர்க்கங்களே திணறிக்கொண்டிருக்கிறார்கள்.
வீட்டு சொந்தகாரர்கள் இப்பொழுதெல்லாம், வாடகையை அதிகப்படுத்தி கேட்பதில்லை. மாறாக, காலி பண்ண சொல்கிறார்கள். ரூ. 3000 நாம் தந்து கொண்டிருந்தால், காலி பண்ண வைத்து, புதியவர்களிடம் ரூ. 5000க்கு வாடகைக்கு விடுகிறார்கள்.
பல குடும்பங்களுக்கு, சென்னையில் ஒரு வீடு என்பது கனவாகத் தான் இருக்கிறது. என் நண்பர்களில் இருவர் நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். இருவரும் சேர்ந்து, சென்னையில் வீடு வாங்க நினைத்து, எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது, ஆச்சரியப்படுகிறேன்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், மக்களின் மனநிலை புரிந்து, அரசு ஒரு திருடன் மாதிரி, மக்களிடமிருந்து முடிந்ததை சுருட்டப் பார்க்கிறது.
கடந்த ஜுலை 31ந் தேதி செய்தித்தாள்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒரு விளம்பரம் செய்திருந்தது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - சென்னை முகப்பேர் ஏரி திட்டப்பகுதியில் மத்திய தர வர்க்கத்தினருக்காக 170 வீடுகள் 1998 - ஆம் ஆண்டு மற்றும் 2002ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்தன.
இடைக்காலத்தில் பல்கலை கழக மாணவர்களால் பயன்படுத்தப்பட்டு, இப்பொழுது, "உள்ளது உள்ளபடியே உள்ள நிலையில்" (மழையால் வீடு ஒழுகுது, ஓட்டை இருக்கிறது, அதனால் பாம்பு வருகிறது என சரி செய்து கொடுங்கள் என வீட்டு வசதி வாரியத்திடம் யாரும் உரிமை கோரமுடியாது). குறைவான விலையில் ரூ.6 1/4 லட்சத்திலிருந்து 7 1/2 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்திருக்கிறது.
விண்ணப்பம் - ரூ. 110. பதிவு செய்ய ரூ. 400 (BY D.D.) (பணம் திரும்ப தரப்பட மாட்டாது.)
20தேதி வரை 1.5 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகியிருக்கின்றன என பத்திரிக்கை செய்திகள் சொல்கின்றன.
கணக்குப் போட்டுப் பார்த்தால்.... 170 வீடுகள் @ 7 லட்சம் எனில்.... ரூ. 12 கோடி
1.5 லட்சம் விண்ணப்பம் விற்பனையெனில் .... 1.5 லட்சம் @ ரூ. 510.... 7 கோடியே 65 லட்சம்
இந்த மாத இறுதிக்குள் 2 லட்சத்தை எட்டிவிடும். அவ்வளவு கூட்டமாம். அப்படியானால்..
அடப்பாவி மக்கா! வீடு விற்காமலே, 10 கோடி லாபம்.
170 வீடுகள் 170 மக்கள் பெற இருக்கிறார்கள். அவ்வளவு தான். ஆனால், 2 லட்சம் மக்களிடம் கொள்ளையடிப்பது எந்த விதத்தில் சரி!
இந்த கொள்ளையை ஊடகங்களில் அம்பலப்படுத்தி, தொடர்ச்சியாய் பேசப்படவும்... முதலவர் கருணாநிதி 22ந் தேதி பதிவுக்கட்டணத்திற்காக வாங்கும் ரூ. 400 பணத்தை, திரும்ப தருவதாக அறிவிப்பு செய்திருக்கிறார்.
இந்த அரசின் மீது இன்னும் நம்பிக்கை வைத்தால், நாம் தாம் பரிதாபத்துக்குரியவர்கள்.
******
பின்குறிப்பு : கூட்டம் அலை மோதி, சுற்றியுள்ள வங்கிகள் தனது அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதை உணர்ந்து, வீ.வ.வாரியத்திற்கு DD தருவதை நிறுத்திவிட்டன. மக்கள் வங்கி வங்கியாக அலைகிறார்கள்.
அடுத்து ஒரு தலை போகிற பிரச்சனை இருக்கிறது. இது நாள் வரையும், வீ.வ.வாரிய அலுவலகங்கள் 4 இடங்களிலேயும், 4 வங்கிகளின் கிளைகள் 20 இடங்களிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்து முடித்துவிட்டார்கள்.
ஆனால், பதிவதோ, வீ.வ.வாரிய 4 இடங்களில் மட்டும். அங்கெல்லாம், கடந்த 1 வாரமாக திருவிழா கூட்டமாம். நாளையும், நாளை மறுநாளும் இன்னும் மக்கள் கூட்டம் அதிகமாகும். அரசு தகுந்த ஏற்பாடு செய்யவேண்டும். இல்லையெனில், அடிக்கிற வெயிலில் மக்கள் நின்று, பலர் மயங்கி விழுவர். அதிகபட்சமாக கூட்ட நெரிசலில், சில தலைகள் நசிவது நிஜம்.
பொறுப்பில்லாத அரசு. பாவம் மக்கள்.
August 26, 2008
எல்லாம் 'பய' மயம்!
'தெனாலி' பயம்
சமைக்க துவங்கினால்
சிலிண்டர் தீர்ந்துவிடுமோ என பயம்
ஏறும் விலைவாசியினால்
அரிசி, பருப்பு வாங்க பயம்
அலுவலகம் கிளம்ப
வண்டியை உதைத்தால்
பெட்ரோல் தீர்ந்துவிடுமோ பயம்
அலுவலகம் போனால்
மின்சாரம் இருக்காதோ பயம்
லிப்ட்-ல் போனால்
பாதியில் நின்று போய்விடுமோ பயம்
பிரவசத்துக்கு மனைவியை
மருத்துவமனையில் சேர்க்க பயம்
பிறந்த பிறகு
குழந்தையை மாற்றிவிடுவார்களோ பயம்
வளரும் பொழுது
சொட்டுமருந்து கொடுக்க பயம்
கொடுத்தால்
செத்துவிடுமோ பயம்
அம்மாவுக்கு
கண் ஆபரேசன் பண்ண பயம்
செய்தால்
கண்ணே போய்விடுமோ பயம்
மன்மோகன்சிங் யாரிடமாவது
சிரித்து கைகொடுத்தால் பயம்
சிதம்பரம் வாயைத்திறந்தால்
வரி பற்றிய அறிவிப்பு பயம்
கருணாநிதி புரிந்துணர்வு
ஒப்பந்தம் போட்டால் பயம்
எல்லாவற்றையும் சிந்திக்க
பயம்
சிந்தித்தால்
கிறுக்கு பிடித்துவிடுமோ
பயம்
இங்கு
சர்வமும் 'பய' மயம்
அரசு அதிகாரி - குட்டிக்கதை
முன்குறிப்பு : இது எனது முதல் சிறுகதை. நிஜமான அனுபவம் என்பதால், எழுத எளிதாக இருந்தது. படித்துவிட்டு, பின்னூட்டமிடுங்கள். தவறுகள் இருந்தால் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இல்லையெனில், இதே மாதிரி தொடர்ந்து எழுதுவேன். உங்களுக்குத்தான் சிரமம்.
******
மணி 9.30
அலுவலகம் போய்கொண்டிருந்த பொழுது, போன் வந்தது
"சார்! நீங்க சொன்னபடியே ESI இன்ஸ்பெக்டர் நம்ம ஆபிஸ்க்கு வந்துகிட்டு இருக்கிறாராம்" ராஜ்குமார்.
நாம் ஒரு வேலை நினைத்தால், திடீர் திடீரென வேறு வேலை வருகிறது. சே!
மணி 12
அந்த கம்பெனிக்கு போய் சேர்ந்தேன். அங்கு இருந்தது பி.எப் இன்ஸ்பெக்டர்.
விறைப்பாக தொடர்ச்சியாக கேள்விகள் கேட்டார்.
"எல்லா ரிஜிஸ்டர்ஸ் எடுங்க! கேஷ் புக் எடுங்க! பேலன்ஸ் சீட் எடுங்க! வாடகை ஒப்பந்தத்துல வேற பெயர். EB அட்டையில் வேறு பெயர். இது நீங்க தயாரிச்ச அட்டன்டன்ஸ், சம்பள ரிஜிஸ்டர். உண்மையானதை எனக்கு காட்டுங்க!"
சந்தோசமாயிருந்தது. இப்படித்தான் சீரியசா, கரெக்டா இருக்கனும். என மனசுக்குள் நினைத்தேன்.
அந்த நிறுவனத்தின் முதலாளி கரடி ராஜ்குமார் திருதிருவென விழித்தான்.
"எல்லாம் ஆடிட்டர் ஆபிஸில் இருக்கு சார்!" என்றான்
"இப்படித்தான் எல்லாரும் சொல்றீங்க! பி.எப். அப்ளை பண்ணியிருக்கீங்க! பரிசோதிக்க எல்லாம்
தயாரா இருக்கனுமா! இல்லையா! இப்ப எல்லாத்தையும் எடுத்துக் காட்டலைன்னா நான் ரிப்போர்ட் எழுதிடுவேன். உங்களுக்கு பி.எப். நம்பர் கிடைக்காது. - இன்ஸ்பெக்டர் சிங்கம் கர்ஜித்தது.
சிங்கம் சொல்கிற படி, எல்லாம் தயாரித்தது தான். 1 வருடத்துக்கு முன்னாடியே பி.எப். நம்பர்
வாங்கியிருக்க வேண்டும். வாங்கவில்லை. அப்புறம் எடுத்துக்கலாம்-னு கரடி மிச்சம் பிடித்தது.
அவசர வேலையால், அங்கிருந்து நகர்ந்தேன். 1 மணி நேரம்.
மணி 1.30
என்ன ஆச்சோ! சிங்கம் கரடியை கடிச்சு துப்பிக்கிட்டு இருக்குமோ! என வேகமாய் போனேன்.
கரடியும், சிங்கமும் மிலிட்டரி ஹோட்டலில் ஆடு, கோழிகளைத் தின்றுவிட்டு, சிரித்துப் பேசி வந்து கொண்டிருந்தன.
கோபமாய் இருந்த சிங்கத்தின் முகம் சாந்தமாய் மாறியிருந்தது.
கரடியைத் தனியாய் அழைத்து ரகசியம் கேட்டேன். 5 ஆயிரம் கொடுப்பதென பேசி முடிக்கப்பட்டதாம்
வீடு திரும்பும் பொழுது, இதே பாண்டி சிங்கம் போல தேவ சிங்கம், சசி சிங்கம், குரு சிங்கம்,
லோக சிங்கங்கள் எல்லாம் வரிசையாய் மனதுக்குள் வந்தன.
பாண்டி சிங்கம் இங்கு. மற்ற பி.எப். சிங்கங்கள் எங்கு வேட்டையாடிக் கொண்டு இருக்கிறனவோ?
குளிர் காய்கிற கரடிகள். பாவம் ஊழியர்கள்.
*******
பின்குறிப்பு : இது உண்மைச் சம்பவம். CBI - லஞ்சம் வாங்கினால், தெரியப்படுத்துங்கள் என சமீபத்தில் எனக்கு SMS அனுப்பியது. எனக்கு வேறு வேலை வாங்கித்தருவதாய் இருந்தால், நான் அப்ரூவராய் மாறத்தயார்.
August 25, 2008
பிரான்ஸ் ஜோடி - இந்து முறைப்படி திருமணம்
முன்னொரு அனுபவம் : சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நிறுவனத்தில் வேலை செய்த பொழுது, சக ஊழியர்களில் ரத்தினம், சுஜாதா என இருவரும் வேலை செய்தனர்.
அப்பொழுது ரத்தினத்துக்கு வயது 23. சுஜாதாவுக்கு வயது 19. காதலிக்கும் வயது. இருவரும்
காதலித்தனர். நாளடைவில், இந்த விசயம் அந்த பெண்ணின் வீட்டுக்கு தெரிந்து விட்டது.
அந்த பெண் வேலைக்கு செல்லக்கூடாது என சொல்லிவிட்டனர். இவர்களுடைய காதலை
மறுப்பதற்கு காரணம் சாதி பிரதானமாக இருந்தது. அந்த பெண் செட்டியார் சாதி. அவர்
பிள்ளைமார் சாதி.
இரண்டு நாள் கழித்து, வீட்டாருக்கு தெரியாமல், ரத்தினத்துக்கு சுஜாதா போன் பேசியது.
அழுதுகொண்டே, தனக்கு திருமண ஏற்பாடு வீட்டில் செய்வதாகவும், சாதியைச் சொல்லித்தான்
மறுப்பதாகவும், ஆகையால், "நீங்க எங்க சாதிக்கு மாறிடுங்க! என்றது.
*******
சமீபத்தில் பத்திரிக்கைகளில் ஒரு செய்தி.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸை சேர்ந்த ஜான்மார்க் என்பவர் தனது நாட்டைச் சேர்ந்த தன்
காதலியான மரிஸை புதுச்சேரியில் இந்து முறைப்படி திருமணம் செய்தார் எனப் படித்தேன்.
மேலும், ஜான்மார்க் தனது பெயரை கண்ணன் என்றும், மரிஸ் தனது பெயரை ராதா என்றும்
மாற்றிக்கொண்டனாராம்.
ஜான்மார்க் - ஒரு விசயத்தில் தப்பித்துவிட்டார். தன் பெயரை கண்ணன் என்று மாற்றி, ஒரு இந்து பெண்ணை கல்யாணம் முடிக்கவேண்டும் என்ற முடிவோடு வந்திருந்தால்.. அவர் கதி அதோ கதியாயிருக்கும்.
ஜான்மார்க் என்ற கண்ணனை இந்து மதத்தைச் சேர்ந்த எந்த சாதியினர் அவரை நம்ம சாதி என
ஏற்றுக்கொள்வார்கள்? ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். பின்பு, எப்படி அவருக்கு பெண் கொடுப்பார்கள்?
ஜான்மார்க் என்ற கண்ணன் பெண்ணைத் தேடித்தேடி கடைசியில் வெறுத்துப்போய் இருப்பார். இந்து மதத்தின் உண்மையான முகம் அறிந்து, நொந்து, வெந்து... பிரண்ட்ஸ் திரைப்பட வடிவேல் மாதிரி, "ஆணியே பிடுங்க வேண்டாம்டா!" என்கிற மாதிரி, "கல்யாணமே வேண்டாமடா! என சொல்லி பிரான்ஸ் பறந்திருப்பார். பிறகு, இந்து, இந்தியா கேட்டாலே உடலுக்குள் நடுக்கம் வரும் அவருக்கு.
August 19, 2008
அப்பாவின் நினைவாக!
அப்பாவின் நினைவாக
ஏட்டுக்குரிய தொந்தியுடனும்
ஏட்டுக்குரிய அசமந்தத்துடனும்
தோற்றம் கொண்டவர்.
அப்பா – அன்பான அப்பா
பிள்ளைகளை ஒருநாளும்
அடித்தவரில்லை.
வீட்டுல ஒரு (அம்மா) ஆள்
அடிச்சா போதும்! என்பார்.
அப்பா கைப்பிடித்து
நடக்கும் வேளைகளில்
நான் கேட்கும்
ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு
சளைக்காமல் பதில் சொல்வார்.
அம்மா படிக்காதவர்.
கைநாட்டாய்
இருக்கக்கூடாது என
கையெழுத்துப் போட – அம்மாவுக்கு
சொல்லிகொடுத்தவர்.
இப்பொழுதும் - மணியார்டரில்
அம்மா கையெழுத்தை
பார்க்கும் பொழுது
அப்பா நினைவுக்கு வருகிறார்.
அப்பா – கும்பகர்ணனுக்கு
தூரத்துச் சொந்தம்
ஆறு மாதம்
மிக சாதுவான மனிதராய்
உலாவருவார்.
வார்த்தைகளை எண்ணி
பேசுவார்.
மறு ஆறுமாதம்
அவரே - வலிந்து
பேசுவார், பாடுவார்
அப்பா - பாதி நாத்திகர்
கையெடுத்து சாமி
கும்பிட்டவரில்லை
அம்மாவின் வற்புறுத்தலால்
தன் வாழ்வின் இறுதிவரை
இடுப்பில் தாயத்தோடு திரிந்தவர்
அப்பா ஊர்சுற்றி
கட்டிய வேட்டி, சட்டை
ஒரு துண்டோடு
இரண்டு வருடத்திற்கொருமுறை
இரண்டுமாதம்
காணாமல் போய்விடுவார்
கடும் தலைவலி என சொல்லி
கோமாவில் விழுந்தார்
நினைவு திரும்பாமலே
உயிர் துறந்தார்.
மோசமான சிகிச்சையால்
தன் நோயிலிருந்து
விரைவில் விடுபட
அரசு மருத்துவமனை
அவருக்கு உதவி செய்தது.
நிறைய வருடங்கள்
உயிரோடு இருப்பார் என்ற
நம்பிக்கையில்
அப்பாவுடன் சண்டைகள் போட்டே
நாட்களை கடத்திவிட்டேன்.
இன்று
அப்பாவின் நினைவுநாள்
20.08.1999
August 18, 2008
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி - கள்ளனிடமே சாவி!
முன்குறிப்பாக : கடந்த ஜீலை 30 தேதியன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் இந்த செய்தியைப் பார்த்ததும்... இதன் முக்கியத்தும் கருதி உடனடியாக பதிவு எழுத வேண்டும் என நினைத்தேன். தாமதமாகி விட்டது
இப்பொழுது தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்வதால், பல செய்திகள் அருகில் இருந்து அறிய முடிகிறது.
நிறுவனம் தொடங்கி, 10 தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்தால் E.S.I யும், 20 தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்யும் பொழுது பி.எப். யும் நிறுவனம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது அரசு விதி. (இந்த விதியே அபத்தமானது)
ஆனால், நடைமுறையில், 20 தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்தாலும், எந்த ‘நல்ல’ முதலாளி கூட தொழிலாளர்களுக்கு E.S.I, பி.எப். வழிவகை செய் வதில்லை. காரணம் – லாப சதவிகிதம் குறைந்துவிடும். கொடிபிடித்து சங்கம் வைத்துவிடுவார்கள் என்பது தான். பல முதலாளிகள் இதை வெளிப்படையாகவே சொல்கிறார்கள். மேலும், பாதிக்குப் பாதி தான் தொழிலாளர்களை கணக்கு காட்டுகிறார்கள்.
அரசு அதிகாரிகள் இந்த நிறுவனங்களைக் கண்காணிக்க வேண்டுமே! அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று பார்த்தால்.... அவர்கள் முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தப்புக்கு தகுந்த லஞ்சம் வாங்கிகொள்கிறார்கள். வாங்கியதற்கு கைமாறாக எப்படி கணக்கை சரி செய்வது என்ற டெக்னிக்கையும் சொல்லி தருகிறார்கள்.
ஏறிக்கொண்டே இருக்கிற விலைவாசியில், 2000, 3000 சம்பளத்தில் வாழ்வதற்கே பிரச்சனையாக இருக்கிற பொழுது, எதிர்கால சேமிப்பாக பி.எப். பிடித்தம் செய்வதை, பல தொழிலாளர்களே வேண்டாம் என்கிறார்கள்.
இப்படி பல கண்டங்களை தாண்டித்தான், 4 கோடியே 20 லட்சம் தொழிலாளர்கள் பி.எப். பில் இணைந்திருக்கிறார்கள். இந்த பணத்திற்கு கி.பி. 2000 க்கு முன்பு வரை, வருட வட்டியாக 12% வழங்கிவந்தார்கள். வழக்கம் போல, பணவீக்கத்தை காரணம் காட்டி, கி.பி. 2000க்கு பிறகு, 8.5% ஆக குறைத்துவிட்டார்கள்.
அதற்கு பிறகு, தொழிற்சங்கங்கள் “குறைத்ததை தா!” என பல ஆண்டுகளாக அரசிடம் கோரிவருகிறார்கள். இப்பொழுது தொழிலாளர்களுடைய பணத்தைச் பெருமுதலாளிகளிடமும், பன்னாட்டு முதலாளிகளிடமும் பங்குச் சந்தையில் சூறையாட தூக்கிகொடுத்து இருக்கிறார்கள்.
ஏற்கனவே, ICICI Prudential, HSBC மட்டும் தான் பரிசீலனையில் இருந்திருக்கிறார்கள். கடைசி நேரத்தில், ரிலையன்ஸ் கேப்பிடலை திணித்து இருக்கிறார்கள். கோடிகளை செலவழித்து எம்.பி.க்களை விலைக்கு வாங்கி, மன்மோகன்சிங் அரசை காப்பாற்றியதற்கு அன்பு பரிசு.
மேலும் இது தொடர்பான செய்திகளை பின்வருகிற துண்டறிக்கை விரிவாக விளக்குகிறது.
நாடுமுழுவதும் இந்த நடவடிக்கைக்கு தொழிற்சங்கங்கள் போராட்டங்களை அறிவித்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
அனைத்து தொழிலாளர்களர்களும், இதன் விபரீதம் உணர்ந்து போராட்டத்துடன் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும்.
- சாக்ரடீஸ்
*******
அன்பார்ந்த தொழிலாள தோழர்களே!
முதுகெலும்பு உடைய பல ஆண்டுகள் வேலை செய்தும் போதிய சம்பளமோ, வேலை நிரந்தரமோ இல்லாமல் லட்சக்கணக்கான தொழிலாள்ர்கள் இருக்கின்றனர். எந்த உரிமையைக் கேட்டாலும் முதலாளிகள் வேலையை விட்டே துரத்தி விடுகின்றனர். தொழிலாளர்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்சம் பாதுகாப்பே சேமநலநிதி எனப்படும் பிராவிடண்ட் பண்ட் சேமிப்புதான்.
நம்முடைய எதிர்கால பாதுகாப்பு கருதி நமது சம்பளத்தில் பிடித்தம் செய்து அரசு அலுவலகத்தில் சேமிக்கப்படும் இந்த PF பணத்தை வேலையில் இருந்து ஓய்வு பெறும் போதோ அல்லது வேலையை இழக்கும் போதோ எடுத்துக் கொள்கிறோம். நம்முடைய சம்பளத்தில் பிடிக்கும் தொகைக்கு சமமாக முதலாளிகளும் பங்குத் தொகை போடவேண்டி இருப்பதால் லாபக் கணக்கு பார்க்கும் முதலாளிகள் பலர் PF பிடித்தம் செய்வதே இல்லை. மேலும் PF பிடித்தம் செய்தால் நாம் வேலை செய்ததற்கு ஆதாரமாகிவிடும் என்பதால் சில முதலாளிகள் PF பிடிக்காமல் ஏய்த்து வருகின்றனர். கொஞ்சமாவது பிடிக்கப்ப்டும் PF பணத்திலிருந்து நம்முடைய வயதான காலத்தில் பென்சன் வாங்குகின்ற வசதியும் உள்ளது. இந்த PF பணத்துக்கும், பென்சனுக்கும் வேட்டு வைத்துவிட்டது, மன்மோகன்சிங் அரசு.
இந்தியாவில் PF சட்டம் நடைமுறைக்கு வந்த 1952-ம் ஆண்டு முதல் தொழிலாள்ர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பணத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EFPO) மொத்தமாக சேகரிக்கிறது. இப்படி சேகரிக்கப்படும் பணத்தை அரசு வங்கியான ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கிறது. ஸ்டேட் வங்கியானது மொத்த பணத்தையும் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து தொழிலாளர்களின் சேமிப்புக்குரிய வட்டியை வழங்குவதுடன், பென்சன் வழங்குவது போன்றவற்றையும் மேற்கொள்கிறது.
இந்த பணியை செய்வதற்காக EFPO அமைப்பு ஸ்டேட் வங்கிக்கு பராமரிப்பு நிதி தருகிறது. ஸ்டேட் வங்கி அரசு வங்கி என்பதால் அங்கு ஒப்படைக்கப்படும் தொழிலாளர்களது பணத்துக்கு பாதுகாப்பு உத்திரவாதமானது. மேலும் ஸ்டேட் வங்கி பல்வேறு அரசுத் துறைகளிலும், மக்கள் நலத்திட்டங்களிலும் முதலீடு செய்வதால் தொழிலாளர்களது பணம் ஓரளவுக்கு மக்கள் சேவையில் ஈடுபட்டது என கூறலாம்.
1994-ல் நரசிம்மராவ் - மன்மோகன் - சிதம்பரம் கும்பல் ‘காட்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு தனியார்மயம் - தாராளமயம் – உலகமயம் என்கிற மறுகாலணியாதிக்க சேவையில் விசுவாசமாக ஈடுபட்டது. உலக வங்கியின் கைக்கூலியும், முதலாளிகளின் சேவகனுமான மன்மோகன் தற்போது பிரதமராக உள்ள சூழலில், இந்த மறுகாலனியாதிக்க கொள்கைகளை முன்பைவிட வேகமாக செயல்படுத்தி வருகிறது. எல்லா பொதுத்துறைகளையும் தனியாரிடம் விற்பது அல்லது அவற்றுக்கு போட்டியாக பன்னாட்டு / உள்நாட்டு தனியார் நிறுவனங்களை கொம்புசீவி இறக்கி விட்டு பொதுத்துறையை ஒழிப்பது என்கிற துரோகத்தனத்தில் மன்மோகன் – சிதம்பரம் ஜோடி கனகச்சிதமாக ஈடுபட்டுவருகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக வலது – இடது போலிக் கம்யூனிஸ்டுகளின் தயவில் ஆட்சியை நடத்தியபோது பொதுத்துறைகளின் பங்குகளை விற்பது, தனியாரை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் அப்பட்டமாக ஈடுபடாத மாதிரி போக்கு காட்டிக் கொண்டிருந்தது காங்கிரசு கும்பல். ஜூலை 22-ல் நடந்த நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பணம் கொடுத்தும், பதவி ஆசை காட்டியும் ஆட்சியைத் தொடர்வதை உத்திரவாதப்படுத்திய பிறகு அப்பட்டமான முறையில் தனியார்மய தாராளமய – உலகமயக் கொள்கையை அமலாக்கத் துவங்கிவிட்டது.
எம்பிக்களை விலைக்கு வாங்க துணை செய்த தரகு முதாளிகளுக்கு முதல் மரியாதை செய்ய வேண்டும் என்கிற விசுவாசத்தில் PF பணத்தில் கைவைத்துள்ளது. 56 ஆண்டுகளாக ஸ்டேட் வங்கியின் பராமரிப்பில் இருந்த இரண்டரை லட்சம் கோடி PF பணத்தை பராமரிக்கும் வேலையை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிடல், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடன்சியல், HSBC போன்ற தனியார் கம்பெனிகளுக்கு பங்கு பிரித்து தந்துள்ளது.
இப்படி தந்ததன் மூலம் முன்பு ஸ்டேட் வங்கிக்கு பராமரிப்பு கட்டணமாக தந்ததில் இரண்டு கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என்ன அயோக்கியத்தனமாக மத்திய அரசு கூறியுள்ளது. இரண்டரை லட்சம் கோடி ரூபாயை பங்குச் சந்தை சூதாட்டத்தில் இறக்கப்போகும் ரிலையன்ஸ் உள்ளிட்ட 3 தனியார் நிறுவனங்களும் நாள் ஒன்றுக்கு பல கோடியை லாபமாக சுருட்டப் போகிறார்கள்.
ஸ்டேட் வங்கி பெயரளவிற்காவது நாட்டு நலத்திட்டங்களில் முதலீடு செய்த தொழிலாளர்களின் பணத்தை தரகு முதலாளிகளும், பன்னாட்டு நியாதிக்க கும்பல்களும் சூதாட்டத்தில் ஈடுபடுத்துவதும், அதற்கு மத்திய அரசு வழிவகை செய்வதும் எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம்! யார் பணத்தை யார் சூதாடுவது? மன்மோகன் நிதியமைச்சராக இருந்த காலத்தில் பங்குச்சந்தை தரகன் அர்சத் மேத்தாவின் சூதாட்ட திருவிளையாடலில் பல லட்சம் கோடி சூறையாடப்பட்டதைப் போல நம் சேமிப்பும் சூறையாடப்படும்.
தொலைத் தொடர்புத் துறையில் ரிலையன்ஸ் பல்லாயிரம் கோடி ரூபாயை மோசடி செய்தது வரலாறு. விமானம் வாங்கியதில் பலகோடி வரி ஏய்ப்பு, அம்பானி சகோதரர்கள் எந்த தொழிலில் ஈடுபட்டாலும் மோசடியையே முதலீடாகப் போடும் திறன் கொண்டவர்கள். வங்கி மற்றும் காப்பீடு போன்ற துறைகளில் செயல்பட்டு வரும் ஐ.சி.ஐ.சி.ஐ., மோசடிக்குப் பெயர் பெற்றது. நுகர்வோர் நீதிமன்றங்கள் பலவற்றில் இழப்பீடு வழங்க உத்திரவிடப்பட்டு தண்டனை பெற்ற ‘புகழ்’ வாய்ந்தது. இவர்களிடம் தான் நம்முடைய சேமிப்பு ஒப்படைக்கப்படுகிறது.
பங்குச் சந்தை சூதாட்டத்திலும், கோல்மால் வேலைகளிலும் நம்முடைய பணம் ஏப்பம் விடப்படப்போவதை நாம் அனுமதிக்க முடியுமா? காங்கிரசு – பிஜேபி உள்ளிட்ட எல்லா ஓட்டுக் கட்சிகளும் இந்த துரோகத்தனத்தில் ஒரே அணியாகத்தான் உள்ளன. வாழ்வுரிமையை இழந்து வரும் உழைப்பாளி மக்கள் மட்டும் எதிரணியாக உள்ளோம். ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தி வரும் மறுகாலனியாதிக்க துரோகத்தை முறியடிக்க நக்சல்பாரி புரட்சியாளர்களின் பாதையில்; புதிய ஜனநாயகப் புரட்சிப்பாதையில் அணிதிரள்வது ஒன்றே நம்முன் உள்ள ஒரே வழி.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
சென்னை - காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 9444834519, 9444442374
August 15, 2008
தற்கொலைகள் தொடரும்!
சமீபத்தில் தினமலரில் ஜப்பான் பற்றி செய்தி பார்த்தேன்.
ஜப்பானில்
2003-ல் 34,487 தற்கொலைகள்,
2007-ல் 33,500 தற்கொலைகள்.
2003ல் தான் மிக அதிகம். 2006-ல் கொஞ்சம் குறைந்து மீண்டும் 2007ல் ஏறிவிட்டது.
365 ஆல் வகுத்துப் பார்த்தால் தினசரி 92 பேர்.
1997 கணக்குப்படி, ஜப்பானில் மக்கள்தொகை 12 கோடியே 60 லட்சம். அவர்களுடைய மக்கள்தொகைக்கு இது மிக அதிகம்.
மன உளைச்சல், நோய், கடன், குடும்ப பிரச்சனை - என காரணங்களை ஆய்வில் சொல்லியிருக்கிறார்கள்.
மேலும், குறிப்பாக வேலைக்கு செல்லும் இளைஞர்களிடையே தற்கொலை மனப்பன்மை அதிகரித்திருக்கிறதாம்.
தற்கொலை செய்துகொள்கிறவர்களில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாம். 71 சதவிகிதம்.
ஜப்பானை பற்றி நம்மிடையே உள்ள பொதுப்புத்தி வேறாய் இருக்கிறது. ஜப்பானியர்கள் கடும் உழைப்பாளிகள். அவர்கள்
தங்களுடைய கோரிக்கைகளை, எதிர்ப்பைக்கூட எப்படி தெரிவிப்பார்கள் என்றால் நிறைய உற்பத்தி செய்து குவிப்பார்கள். இந்தியத் தொழிலாளர்கள் போல வேலை நிறுத்தம் செய்யமாட்டார்கள் என்பார்கள்.
இந்த செய்திக்கும் தற்கொலைக்கும்தான் அதிக நெருக்கம் இருப்பதாக படுகிறது.
இங்கு இந்தியாவில் உருவாகியிருக்கும் புதிய தொழிலாளிகளான கணிப்பொறி வல்லுநர்கள் அதிக நேரம் வேலை செய்வதும், அதனால் பல்வேறு மன உளைச்சலுக்கு உள்ளாவதும், தற்கொலைகள் தொடர்வதும் இந்தியாவில் புதிய செய்திகள்.
"கூலியுழைப்பு பாட்டாளிக்குச் சொத்தையா படைத்தளித்திருக்கிறது? இல்லவே இல்லை. அது படைப்பது மூலதனம் தான்" - (ப. 67)கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ்.
இப்படி கடும் உழைப்பால் இவர்கள் உருவாக்குகிற தனி உடைமை மூலதனம் என்னனென்ன தீமைகள் சமூகத்துக்கு செய்யும் என்பது கணக்கில்லாதது.
சமீபத்திய செய்தி -
செலவைக் குறைக்கிறேன் பேர்வழி (Cost Cutting) என பல நிறுவனங்களில் பலரை வேலையே விட்டு தூக்குகிறார்களாம். குறிப்பாக - சீனியர்களுக்கு கொடுக்க கூடிய சம்பளம் அதிகமாக இருப்பதால், அவர்களை வீட்டுக்கு அனுப்புவதில் மும்முரமாக இருக்கிறார்களாம்.
இங்குள்ள கணிப்பொறி வல்லுநர்கள், படித்த அறிவாளிகள் கனவில் மிதக்காமல், தரையில் கீழிறங்கி தன்னை தொழிலாளி வர்க்கம் என உணர்வதும், தன்னுடைய கோரிக்கைகளுக்காக மற்ற தொழிலாளி வர்க்கத்தினோரோடு இணைந்து போராடுவதும் தான் இதற்கு தீர்வு.
இல்லையில்லை. நாங்க மெத்த படித்தவர்கள். அறிவாளிகள். நாங்க பார்த்து கொள்கிறோம் என்றால், ஜப்பானியர்களுக்கு நிகழ்வது இங்கும் தொடரும். தாம் எதற்காக தற்கொலை செய்துகொள்கிறோம் என்ற உண்மை அறியாமலேயே.

August 14, 2008
வாழ்க 'சுதந்திரம்'!
August 11, 2008
நில ஒதுக்கீடும், எரியும் காஷ்மீரும்!
முன்குறிப்பு : காஷ்மீரில் 'பனிலிங்கத்தை' வழிபடும் பக்தர்களுக்கு வசதி செய்து கொடுப்பதற்காக காஷ்மீர் அரசு நில ஒதுக்கீடுசெய்தது. அதற்கு பிறகு, காஷ்மீர் மக்களின் தொடர்போராட்ட்ங்களுக்கு பிறகு அரசு ரத்து செய்துவிட்டது.
இப்பொழுது, ஆர்.எஸ்.எஸ்.யும் அதன் பரிவாரங்களும் இந்த பிரச்சனையை கையில் எடுத்து நாடு முழுவதும் வழக்கம் போல கலவரங்களை செய்து வருகிறார்கள்.
சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு இடமில்லையா? என விசப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த கட்டுரை இந்த பிரச்சனைக்கு பின்பு அரசியலை தெளிவாக விளக்குகிறது.
*******
காசுமீர் மாநிலத் தலைநகர் சிறீநகருக்குத் தென்கிழக்கே 111 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் உருவாகும் பனிலிங்கத்தைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக, 39.88 ஹெக்டேர் வனப்பகுதி நிலத்தை, சிறீஅமர்நாத் ஆலய வாரியத்திற்குச் சில நிபந்தனைகளுடன் கடந்த மே மாத இறுதியில் கை மாற்றிக் கொடுத்தது, காங்கிரசுக் கூட்டணி அரசு.
பல்டால்தோமெயில் வனப்பகுதியில் உள்ள இந்த நிலத்தை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பக்தர்கள் யாரும் முன்வைக்கவில்லை. அம்மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், சிறீ அமர்நாத் ஆலய வாரியத்தின் முன்னாள் தலைவருமான எஸ்.கே.சின்ஹாதான் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். ஆளுநருக்கு, பக்தர்கள் மீது அப்படியென்ன கரிசனம் என்று கேட்கிறீர்களா? முன்னாள் உயர் இராணுவ அதிகாரியான எஸ்.கே.சின்ஹாவின் மனமும், மூளையும் ஆர்.எஸ்.எஸ். கருத்துக்களால் நிறைந்தது என்பதுதான் இதற்கான காரணம்.
மாநில ஆளுநரே முன்வைத்தபோதும், இந்தக் கோரிக்கை மாநில அரசின் ஒப்புதலைப் பெற முடியாமல், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தூசிப் படிந்து கிடந்தது. எஸ்.கே.சின்ஹாவின் பதவிக் காலம் முடியும் தருணத்தில்தான், அவரின் ஆசை நிறைவேறியது. இந்த ஒப்புதலை அளித்ததன் மூலம் அக்.2008இல் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில், ஜம்முவில் உள்ள இந்துக்களின் வாக்குகளை அள்ளிவிட முடியும் எனக் கணக்குப் போட்டது, காங்கிரசுக் கட்சி. ஆளுநர் எஸ்.கே.சின்ஹா மனநிறைவோடு, ஜூன் மாத இறுதியில் காசுமீரை விட்டு வெளியேறிப் போக, காசுமீர் பள்ளத்தாக்கில் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரும் போராட்டங்கள் வெடித்தன. இப்போராட்டங்கள், 1990களில் காசுமீரின் சுயநிர்ணய உரிமைக்காக நடந்த போராட்டங்களுக்கு இணையாக இருந்ததாகத் "தேசிய'ப் பத்திரிகைகள் அரண்டு போய் எழுதியிருந்தன.
இந்திய அரசுக்கு எதிரான காசுமீர் மக்களின் உணர்வை, 2002இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுக்களாக அறுவடை செய்து கொண்ட மக்கள் ஜனநாயகக் கட்சி, அத்தேர்தல் முடிந்தவுடன் காங்கிரசோடு சந்தர்ப்பவாதக் கூட்டணி வைத்துக் கொண்டு, ஆட்சியில் அமர்ந்தது. அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்தான், சீறிஅமர்நாத் ஆலய நிர்வாகத்திற்கு 39.88 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கிக் கொடுக்க ஒப்புதலும் கொடுத்தார். ஆனால், இந்த ஒதுக்கீடுக்கு எதிராக காசுமீர் முசுலீம்களின் போராட்டம் வீச்சாக எழுந்தவுடன் தேர்தல் பயத்தால் இக்கட்சி பிளேட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டியது.
மக்கள் ஜனநாயகக் கட்சி, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியதோடு நில்லாமல், கூட்டணி ஆட்சிக்குக் கொடுத்து வந்த ஆதரவையும் விலக்கிக் கொண்டது. காங்கிரசுக் கட்சி சட்டசபையில் பெரும்பான்மையை இழந்துவிட்ட நிலையில், நில ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்ததோடு, ஆட்சியையும் பறி கொடுத்தது.
நில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை, இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகப் பிரச்சாரம் செய்தது பா.ஜ.க. ''ஒரு 40 ஹெக்டேர் நிலத்தைப் பெறும் உரிமைகூட இந்துக்களுக்கு இல்லையா?'' என்ற கேள்வியைப் போட்டு, "இந்துக்களை' உருவேற்ற முயன்றது, அக்கட்சி. நில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, ஜூலை 3 அன்று ''பாரத் பந்தை'' அறிவித்து, நிலப்பிரச்சினையைத் "தேசிய'ப் பிரச்சினையாக்க முயன்றது.
அமர்நாத் பனிலிங்கத்தைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு ஒரு 40 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு, காசுமீர் முசுலீம்கள் மத அடிப்படைவாதத்தில் மூழ்கிப் போய்விட்டதாகத் தேசியப் பத்திரிகைகள் இப்போராட்டத்தைச் சாடி எழுதியிருந்தன. சமகால காசுமீரின் வரலாற்றை அறிந்திராத சாதாரண வாசகன்கூட, இந்தக் கேள்வியை எழுப்பக் கூடும். பா.ஜ.க.வும், தேசியப் பத்திரிகைகளும் எழுப்பிய இக்கேள்வியில் நியாயம் இருப்பதாகக் கருதக்கூடும். ஆனால், அமர்நாத் பனிலிங்க வரலாறு வேறானது.
···
அமர்நாத் யாத்திரை என்பது ஆண்டாண்டு காலமாக நடந்து வருவது அல்ல; மேல்சாதி இந்துக்கள் தங்களின் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் காசிஇராமேசுவரத்திற்குச் சென்று வருவது போன்ற "புனிதமானதும்' அல்ல. காணாமல் போன தனது கால்நடைகளைத் தேடிப் பனிக் காடுகளில் அலைந்து திரிந்த ஒரு முசுலீம்தான், அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனிக்குன்றை முதலில் பார்த்தார். அந்த முசுலீம் வந்து சொல்லித்தான் இந்துக்கள் இந்த அதிசயத்தைத் தெரிந்து கொண்டனர். அந்தப் பனிகுன்றுக்குப் பனிலிங்கம் எனப் பெயரிட்டு, அதற்கு ஏதோ மகிமை இருப்பதாகக் கருதி, ஆண் டுதோறும் யாத்திரை போய் தரிசித்து வரத் தொடங்கினர்.
இந்தப் பனிலிங்கம் மற்றும் அதைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்து கொடுக்கும் பொறுப்பு, பேடாகுந்த் பகுதியில் வசிக்கும் முசுலீம் குடும்பங்களிடம் தான் இருந்து வந்தது. 1990களில் காசுமீரில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் வெடித்த பிறகு, அதற்கு எதிரான ஆயுதமாக, இந்து மதவெறியைத் தூண்டிவிடும் வாய்ப்பாக, இந்த யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசப்பட்டதோடு, அரசே ஏற்பாடு செய்து நடத்தும் யாத்திரையாக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். கும்பலோ, ஹஜ் யாத்திரையைப் போன்று, அமர்நாத் யாத்திரையை புனிதப்படுத்தும் தில்லு முல்லைச் செய்தது; செய்தும் வருகிறது. பார்ப்பனர்கள் கொண்டாடி வந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகை, முசுலீம்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டிவிடும் விநாயகர் ஊர்வலமாக மாற்றப்பட்டதைப் போல, அமர்நாத் யாத்திரை, காசுமீர் முசுலீம்களுக்கு எதிரானதாக உருமாற்றப்பட்டது. பக்தி, இந்து பாசிசமாகியது.
கரசேவைக்குத் தொண்டர்களைத் திரட்டி அனுப்புவதைப் போல, ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் யாத்திரைக்கும் "இந்துக்களை'த் திரட்டி அனுப்புவதை ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாகவே செய்து வருகிறது. இதனால் பனிலிங்கத்தை வணங்க வரும் "பக்தர்களின்' எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகிக் கொண்டே செல்லத் தொடங்கியது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பைக் காரணமாகக் காட்டி, இரண்டு வாரமே நடந்து வந்த அமர்நாத் யாத்திரையின் காலஅளவு, ஒரு மாத காலமாக நீட்டிக்கப்பட்டது. யாத்திரையை நிர்வகிப்பது என்ற பெயரில் தனியாக வாரியம் அமைக்கப்பட்டது. இந்த வாரியத்தின் தலைவராக ஜம்முகாசுமீர் மாநில ஆளுநர் இருப்பார் என்றும்; அதே சமயம் ஆளுநர் இந்துவாக இருந்தால் மட்டுமே வாரியத்தின் தலைவராக முடியும் என்றும் விதிகள் உருவாக்கப்பட்டன. முசுலீம்களின் மேற்பார்வையிலும்; உதவியோடும் நடந்து வந்த அமர்நாத் யாத்திரையை அவர்களிடமிருந்து பறித்து, இந்துமயமாக்கும் சதிகள் 1990க்குப் பிறகு ஒவ்வொன்றாக அரங்கேற்றப்பட்டன.
எஸ்.கே.சின்ஹா, ஜம்முகாசுமீர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, இந்த இந்துமயமாக்கம் மேலும் தீவிரமடைந்தது. ''அமர்நாத் யாத்திரையின் கால அளவை ஒரு மாதத்தில் இருந்து இரண்டு மாதமாக அதிகரிக்க வேண்டும்; பகல்காமிலிருந்து அமர்நாத் செல்லும் பாதையிலும்; பால்தாலில் இருந்து அமர்நாத் செல்லும் பாதையிலும் உள்ள வனப்பகுதி நிலங்களை அமர்நாத் வாரியத்திற்கு ஒதுக்க வேண்டும்; அமர்நாத் வாரியம் அரசின் தலையீடின்றி, சுதந்திரமாக இயங்க வேண்டும்'' என மாநில அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து வந்தார், அவர். அமர்நாத் வாரியத்திற்கு திடீரென 39.88 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக வாரியத்தின் தலைவர் என்ற முறையில் ஆளுநர் பதில் அளிக்க வேண்டும் எனச் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிய பொழுது, ''ஆளுநர் சட்டமன்றத்துக்கு கட்டுப்படத் தேவையில்லை'' எனத் திமிராகப் பதில் அளித்தார், எஸ்.கே.சின்ஹா.
ஜம்முகாசுமீர் மாநிலத்தை இந்திய ஒன்றியத்துடன் கட்டாயமாக இணைத்துக் கொண்டபொழுது, ''காசுமீரைச் சேராதவர்கள் அம்மாநிலத்தில் ஒரு துண்டு நிலம் வாங்குதற்குக் கூட அனுமதி கிடையாது'' என்ற உரிமை அளிக்கப்பட்டது. இந்திய இராணுவம் பாசறைகளை அமைப்பது என்ற பெயரில், ஏராளமான நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு, இந்த உரிமையை மீறி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில், காசுமீர் பள்ளத்தாக்கு மக்களின் பங்கின்றி உருவாக்கப்பட்டுள்ள அமர்நாத் வாரியத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டதை, காசுமீரி முசுலீம்கள் இன உரிமை மீறலாகவும், ஆக்கிரமிப்பாகவும் பார்த்தார்கள். பாக். தீவிரவாதிகளை ஒழிப்பது என்ற பெயரில் காசுமீரி முசுலீம்களை வேட்டையாடிவரும் இந்திய இராணுவத்தின் அக்கிரமங்களுக்கு எதிராக காசுமீரி முசுலீம்களிடம் கனன்று கொண்டிருந்த கோபம், இந்த நில மாற்ற உத்தரவால் பற்றி எரியத் தொடங்கியது.
அரசு வெளியிட்ட நில மாற்றம் தொடர்பான உத்தரவில், ''அமர்நாத் வாரியம் அந்நிலத்தில் யாத்திரை வரும் பக்தர்கள் தங்கிச் செல்ல வசதியாகத் தற்காலிகக் குடியிருப்புகளை அமைத்துக் கொள்ளலாம்'' என்ற சலுகையை வழங்கியிருந்தது. காசுமீரி முசுலீம்கள் அச்சலுகையை, ஜம்முகாசுமீரில் இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சதித்தனம் நிறைந்ததாகவே பார்த்தார்கள். ''இந்துக்கள் இரண்டு மாதம் மட்டுமே தங்கிச் செல்லுவதால், மக்கள் தொகையில் எப்படி மாற்றம் வரும்?'' என்ற கேள்வியை எழுப்பிய பா.ஜ.க.வும், தேசியப் பத்திரிகைகளும், காசுமீரி முசுலீம்களின் சந்தேகம் ஊதிப் பெருக்கப்படுவதாகக் குற்றஞ்சுமத்தினர்.
இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து சிறுபான்மையினர் ஆகிவிடும் அபாயம் இருப்பதாகப் புளுகிவரும் பா.ஜ.க; காசுமீர் முசுலீம்களின் சந்தேகத்தைக் குற்றஞ்சுமத்துவது வேடிக்கையானது. இதுவொருபுறமிருக்க, காசுமீர் பிரச்சினையைத் தீர்க்க, முசுலீம்கள் நிறைந்த காசுமீர் பள்ளத்தாக்கையும்; இந்துக்கள் நிறைந்த ஜம்முவையும் மற்றும் லடாக் பகுதியையும் தனித்தனியாகப் பிரித்து, காசுமீரைக் கூறு போட்டுவிடலாம் என்ற திட்டம் பா.ஜ.க. ஆட்சியில் இருந்த பொழுது பரிசீலிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்ம், அமெரிக்காவும் இணைந்து உருவாக்கிய இத்திட்டத்தின் அடிப்படையில் பார்த்தால், காசுமீர் முசுலீம்களின் சந்தேகத்தைத் தேவையற்ற அச்சம் என ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
அமர்நாத் வாரியத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி காசுமீரி முசுலீம்கள் போராடிக் கொண்டிருந்த பொழுதுதான், இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரையும் தொடங்கியது. இப்போராட்டத்தை ஒடுக்க போலீசும், துணை இராணுவப் படைகளும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு காசுமீரி முசுலீம்கள் கொல்லப்பட்டனர். எனினும், இப்போராட்டத்தால் அமர்நாத் யாத்திரைக்கோ, அதில் கலந்து கொண்ட "இந்துக்களுக்கோ', முசுலீம்களாலோ, முசுலீம் அமைப்புகளாலோ சிறு இடையூறும் ஏற்படவில்ல. வழக்கம்போலவே, மலைமேல் ஏற முடியாத பக்தர்களைப் பல்லக்கில் தூக்கிச் செல்வது தொடங்கி, "இந்து' பக்தர்களுக்கு உணவு, தங்குமிடம் அளிப்பது உள்ளிட்டு எல்லாவிதமான உதவிகளையும் காசுமீரி முசுலீம்கள் செய்துகொடுத்தனர். காசுமீரி முசுலீம்கள் நடத்திய போராட்டம் மதவெறியின் அடிப்படையில் நடைபெறவில்லை என்பதை அமைதியாக நடந்த அமர்நாத் யாத்திரையே நிரூபித்து விட்டது.
ஆனால், காசுமீர் மக்களின் போராட்டத்திற்கு எதிராக ''பாரத் பந்த்'' நடத்திய பா.ஜ.க. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜம்முகாசுமீர் கலைக்கூடத்தை அடித்து நொறுக்கியது; மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள இந்தூர் நகரில், ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் முசுலீம்களின் குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்தூர் முசுலீம்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள முயன்றபொழுது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் இறந்துபோனார்கள்.
சிறீ அமர்நாத் ஆலய வாரியத்திற்கு அளிக்கப்பட்ட நிலம் ரத்து செய்யப்பட்டதை, காசுமீரி முசுலீம்கள் இந்துக்களின் மீதான வெற்றியாகப் பார்க்கவில்லை. சுயநிர்ணய உரிமையை மறுத்து வரும் இந்திய அரசின் மீதான வெற்றியாகவே கருதுகிறார்கள். அமர்நாத் யாத்திரை பக்தியின் அடிப்படையில் நடைபெறுவதாகக் கருதும் "இந்துக்கள்', யாத்திரையில் ஆர்.எஸ்.எஸ். தலையீடு செய்வதை எதிர்க்க வேண்டும்; பேடாகுந்த் முசுலீம்களின் உரிமையை மறுத்து அமைக்கப்பட்டுள்ள வாரியத்தைக் கலைக்கக் கோர வேண்டும். இது அவர்களின் "கடமை' மட்டுமல்ல; இரு நூற்றாண்டுகளாக அமர்நாத் யாத்திரை எவ்விதத் தடங்கலும் இன்றி நடைபெறுவதற்கு பொறுப்போடு உதவி வரும் காசுமீரி முசுலீம்களுக்குச் செலுத்தும் நன்றிக் கடனும் ஆகும்.
· செல்வம்
புதிய ஜனநாயகம் - ஆகஸ்ட் இதழிலிருந்து
நன்றி - தமிழரங்கம்
http://www.tamilcircle.net/index.php?view=article&catid=68%3A2008&id=2601%3A2008-08-07-21-09-07&option=com_content&Itemid=30
August 9, 2008
அறியப்படாத அமெரிக்கா
நாம் தமிழ் திரைப்படங்கள் மற்றும் இந்திய படங்கள் அமெரிக்கா பற்றி பேசி, நமக்குள் உருவாக்கியிருக்கும் கருத்தாக்கம் வேறு.
உண்மையான அமெரிக்கா வேறு. இன்றைய அமெரிக்காவின் நிலை எதைத் தின்றால் பித்தம் தீரும் என்ற நிலை தான்.
அதை இந்த கட்டுரையில் உள்ள உண்மைகள் நிரூபிக்கின்றன.
******
ஒரே மாதத்தில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைஇழப்பு! குபேரபுரியாகச் சித்தரிக்கப்படும் உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து வீதியில் வீசியெறியப்பட்டுள்ளனர். உற்பத்தித் தேக்கம், ஆலை மூடல், ஆட்குறைப்பு ஆகியவற்றால் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மேலும் 50,000 பேர் வேலையிழந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக பல ஆலைகளில் லேஆஃப் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றிப் பரிதவிக்கின்றனர்.
சொர்க்கபுரி; குப்பை கூட்டும் தொழிலாளி கூட காரில் வந்திறங்கிப் பணியாற்றுவார்; எந்தக் கவலையுமின்றி சுகமாக வாழும் மக்கள்; பொருளாதார வளமும் ஜனநாயக மாண்புகளையும் கொண்ட நாடு; குடி, கூத்து, கும்மாளம் என ஆனந்தமாகப் பொழுதைக் கழிக்கும் மக்கள் என அமெரிக்க வல்லரசின் செல்வச் செழிப்பைப் பற்றி முதலாளித்துவ எழுத்தாளர்கள் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்கள்.
ஆனால், அதே அமெரிக்காவில்தான் வறுமை, வேலையின்மை; வேலையிழந்து வாழ்விழந்து உழைக்கும் மக்கள் பிச்சை எடுக்கும் அவலம்; தற்கொலைகள், போதை மருந்து, கொலைகொள்ளைகள் என சமூகம் அழுகி நாறிக் கொண்டிருக்கிறது. மறுபுறம், மீளமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி, அந்நாடு விழிபிதுங்கி நிற்கிறது.
கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் ஐந்து பெரும் கடன் முதலீட்டு வங்கிகளுள் ஒன்றான பேயர் ஸ்டேர்ன்ஸ் என்ற வங்கி, ஒரே நாளில் குப்புற விழுந்து திவாலாகியது. அதை மீட்டெடுத்து முட்டுக் கொடுக்க அமெரிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன. அமெரிக்காவின் பணவீக்கம், கடந்த ஆண்டைவிட 4.3% அதிகரித்து அத்தியாவசிய உணவுப்பொருட்கள் எரிவாயுவின் விலை விண்ணை முட்டுகிறது. அமெரிக்காவின் 3.7 கோடிமக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாகவும், இது மொத்த மக்கள் தொகையில் 12.7% என்றும், ஆண்டுக்கு 50 லட்சம் பேர் வீதம் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அமெரிக்க அரசே ஒப்புக் கொள்கிறது.
ஒருபுறம், டாலரின் மதிப்புச் சரிவு; மறுபுறம், உற்பத்தித் தேக்கம், பணவீக்கம். இதுவும் போதாதென ""சப்பிரைம் லோன்'' எனும் தரமற்றவர்களுக்குத் தரப்படும் கடன் கொள்கையால் அமெரிக்காவின் வீட்டுமனைக்கடன் வியாபாரத் தொழில் மிகப் பெரிய நிதி நெருக்கடியலில் சிக்கி, அந்தாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டங்காண வைத்துவிட்டது.
இன்னொருபுறம், வர்த்தகப் பற்றாக்குறை. அதை ஈடுகட்ட வழிதெரியாமல் செயற்கையாக 75,000கோடிக்கும் மேலான அமெரிக்க டாலர்களைப் புழக்கத்தில் விட்டுள்ளது அந்நாடு. அமெரிக்காவின் உற்பத்தியின் மதிப்பை விட பலமடங்கு மிதமிஞ்சிய அளவில் காகிதப் பணத்தை அச்சிட்டு தள்ளி புழக்கத்தில் விட்டு, டாலரின் மதிப்பை செயற்கையாக ஊதிப் பெருக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வரம்பை மீறிய இத்தகைய அராஜக சூதாட்டங்களால் டாலரின் மதிப்பு சரியத் தொடங்கி, அந்நாட்டின் பொருளாதாரமே மீளமுடியாத நெருக்கடியில் சிக்கித் தத்தளிக்கிறது.
1930களில் ஏற்பட்ட உலகின் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை விஞ்சும் வகையில், இதுவரை கண்டிராத மிகப்பெரிய நெருக்கடியில் நாம் சிக்கிக் கொண்டுள்ளோம்'' என்று அலறுகிறார், பிரபல நிதி முதலீட்டாளரும், உலகின் மிகப்பெரிய கோடீசுவரர்களில் ஒருவருமான ஜார்ஜ் சோரஸ்.
இந்த நெருக்கடியின் சுமைகள் அனைத்தையும் ஏழை நாடுகளின் மீது திணித்து தப்பித்து வந்த ஏகாதிபத்தியவாதிகள், சந்தைப் பொருளாதாரத்தின் அராஜகத்தாலும் ஊகவணிகச் சூதாட்டத்தாலும் உள்நாட்டிலேயே பொருளாதார முறைகுலைவுகள் ஏற்படத் தொடங்கியதும், அந்நெருக்கடியின் சுமைகளை சொந்த நாட்டு உழைக்கும் மக்களின் மீது சுமத்துகின்றனர். ஆலை மூடல், ஆட்குறைப்பு, ஊதிய வெட்டுகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் போராட்டங்கள் அமெரிக்காவில் அடுத்தடுத்து பரவத் தொடங்கியுள்ளன.
நமது நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது, அன்று வெள்ளைக்காரன் ஆங்காங்கே கஞ்சித் தொட்டி வைத்து, பட்டினியால் செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு ஒருவேளை கஞ்சி ஊற்றி மனிதாபிமான நாடகமாடினான். அதைப் போலவே, அமெரிக்காவில் வேலையிழந்து வாழ்விழந்த தொழிலாளர்களுக்கு அரசாங்கமே ஒருவேளை கஞ்சி ஊற்றுகிறது. மேலை நாடுகளில் இதனை ""பிரட் லைன்'', ""சூப்லைன்'' என்று குறிப்பிடுவார்கள். குபேரபுரி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டும் இத்தகைய கஞ்சித் தொட்டிகளில் ஒரு துண்டு ரொட்டியும் ஒரு குவளை சூப்பும் பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கானோர் தினமும் வரிசையில் காத்திருக்கின்றனர்.
1970களில் 3.9 சதவீதமாக இருந்த அமெரிக்காவின் வேலையற்றோரின் எண்ணிக்கை, 1980களில் 11 சதவீதமாக உயர்ந்து, இன்று 16% அளவுக்கு அதிகரித்து விட்டது. முழுமையாக வேலையற்றவர்களோடு, வேலையிழந்து வேறிடத்தில் பகுதி நேரமாக வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால், இது ஏறத்தாழ 20%க்கும் மேலாக இருக்கும் என்று அமெரிக்கப் பத்திரிகைகளே குறிப்பிடுகின்றன.
அமெரிக்கக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் வேலை தர வேண்டியது அரசின் கடமை. வேலை கொடுக்க இயலாத நிலையில், வேலையற்றோருக்கு அரசு உதவித் தொகை அளிக்க வேண்டும். ஆனால், பல்வேறு மோசடிகள் மூலம் வேலையில்லாத இளைஞர்களில் ஏறத்தாழ 40% பேருக்கு மட்டுமே அமெரிக்க அரசு உதவித் தொகை வழங்குகிறது. ஈராக்கை ஆக்கிரமித்து அந்நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்காக அமெரிக்க இராணுவத்துக்கு நாளொன்றுக்கு 70 கோடி டாலர்களை (ஏறத்தாழ ரூ. 3000 கோடி) வாரியிறைக்கும் புஷ் அரசு, வேலையற்றோருக்கான உதவித் தொகையை அனாவசியச் செலவு என்று கூறி, அதைப் பெருமளவு குறைத்து விட்டது. இதனால், வாழவழியின்றி வேலையற்றவர்கள் பலர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இத்தகைய உழைக்கும் மக்கள், ரயில் நிலையங்கள், சுரங்கப் பாதைகள், பூங்காக்கள், டெலிபோன் "பூத்'துகள் என பொது இடங்களில்தான் வாழ்கின்றனர். கடுங்குளிர் நிறைந்த அமெரிக்காவில் இவர்களால் எப்படி வாழ முடியும்? பெரிய அட்டைப் பெட்டிகளில் புகுந்து கொண்டு படுத்துறங்குவது, குப்பைத் தொட்டிகளிலிருந்து கிழிந்த கம்பளி ஆடைகளை எடுத்துப் போர்த்திக் கொள்வது முதலானவற்றால் எப்படியோ பலர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உறை பனிக்கும் கீழான கடுங்குளிரில் விறைத்து மாண்டு போனவர்கள் ஏராளம்.
அரசின் புள்ளிவிவரப் படியே, குபேர நாடான அமெரிக்காவில் வீடிழந்து தெருவில் வாழும் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை 20 லட்சம் பேர். நியூயார்க் நகரில் மட்டும் இத்தகையோரின் எண்ணிக்கை 70,000 பேருக்கும் மேலாகும் என்று அம்மாநகர ஆளுநரின் அறிக்கை குறிப்பிடுகிறது. லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஏறத்தாழ 80,000 பேர் வீடற்றவர்களாக, வேலையற்றவர்களாக உழல்கின்றனர். இவர்களில் கருப்பின மக்களே மிக அதிகமாக உள்ளனர். அமெரிக்காவின் ஒட்டு மொத்த கருப்பின மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமையில் சிக்கித் தவிப்பதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.
அமெரிக்கா மட்டுமல்ல; மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், வேலையற்றோரின் எண்ணிக்கை 10.9 சதவீதமாக ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஏறத்தாழ 11%க்கும் மேலான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாக ஐரோப்பிய பொருளாதாரக் குழுமத்தின் ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது.
ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்பு ""கம்யூனிசம் தோற்றுவிட்டது; உலக முதலாளித்துவம் வெற்றிக் கொடி நாட்டிவிட்டது'' என்று எக்காளமிட்ட ஏகாதிபத்திய உலகம், சந்தைப் பொருளாதாரத்தின் படுதோல்வியாலும் பொருளாதார வீழ்ச்சியாலும் தடுமாறித் தத்தளிக்கிறது. ஏகாதிபத்திய நாடுகளில் வளம் கொழிக்கவில்லை; வறுமை தாண்டவமாடத் தொடங்கி விட்டது. ஒருபுறம், உலகைச் சூறையாடும் ஏகாதிபத்திய நிதியாதிக்கக் கும்பலின் செல்வம் கோடானுகோடிகளாகப் பெருத்துக் கொண்டே போகிறது.
மறுபுறம், வறுமையும் வேலையின்மையும் கொள்ளை நோய் போலப் பரவி வருகிறது. மலைக்கும் மடுவுக்குமான இந்த இடைவெளி, இன்று அமெரிக்காவின் நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைத் தொடர்ந்து தீவிரமாகிக் கொண்ட வருகிறது. மரணப் படுக்கையில் வீழ்ந்துவிட்ட ஏகாதிபத்தியத்தின் தலையைச் சீவி, இனி அதன் உயிரைப் பறிப்பதுதான் இன்றைய உடனடித் தேவையாகியுள்ளது.
நன்றி புதிய ஜனநாயகம்

Subscribe to:
Posts (Atom)