January 30, 2009
முத்துக்குமாருக்கு மரியாதை செலுத்த செல்கிறோம்!
முத்துக்குமாரின் தியாகத்தால், அவர் எதிர்பார்ப்புப்படி, பல தகவல் தொடர்பு செய்தி நிறுவனங்கள் இருட்டடிப்பை மீறி, தமிழகத்தில் ஈழம் குறித்த போராட்டங்களின் தேக்க நிலை உடைப்பட்டு இருக்கிறது., பல்வேறு அரசியல் தலைவர்களின் சந்தர்ப்பவாத நிலை அம்பலப்பட்டு போயிருக்கிறது.
நேற்று கொளத்தூரில், அந்த பகுதி எம்.எல்.ஏ. முத்துக்குமாரை பார்த்துவிட்டு, மேடையில் நின்று கைகாட்டினானாம். குழுமியிருந்த மாணவர்களும், இளைஞர்களும் அந்த எம்.எல்.ஏ-யையும், பாதுகாப்புக்கு வந்த காவல்துறையையும் ஓட ஓட விரட்டி சாத்தியிருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள், மற்றும் பல தரப்பினர் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள். போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.
முத்துக்குமாரின் அறிக்கை நிதானத்துடன் வாசித்தால், அவர் அனைவரிடனும் எதிர்ப்பார்ப்பது சமூக பொறுப்பைத்தான்.
தான் உண்டு; தான் வேலை உண்டு என்று வாழும் மனித ஜீவராசிகளை சட்டையை பிடித்து உலுக்கி, சுதந்திரத்துக்காக போராடும் படியும், சுதந்திரத்துக்காக போராடும் மக்களுக்கு ஆதரவு தரும்படியும் முத்துக்குமார் வேண்டுகிறார்.
நேற்றைக்கு முழுவதும், அறிக்கையில் உள்ள விசயங்கள் தான், முத்துக்குமாரின் குரலில் மனதிற்குள் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன.
இனி, நெடுங்காலம் முத்துக்குமார் பலருடைய நெஞ்சங்களில் வாழ்ந்து, சமூக அநீதிகளுக்கு எதிராக போராடுவதற்கு உரமாய் நினைவில் நிற்பார்.
அந்த போராளியின் முகத்தைப் பார்க்க, இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மரியாதை செலுத்த இதோ சக தோழர்களுடனும், நண்பர்களுடனும் கிளம்புகிறோம்.
முத்துக்குமாருக்கு எனது வீர வணக்கங்கள்!
அவன் புகழ் ஓங்கட்டும்! தமிழகம் விடியலை நோக்கி நகரட்டும்!
January 29, 2009
“இஸ்ரேல்” – திணிக்கப்பட்ட தேசம்!
கடந்த சில நாட்களாக, ஈழத்தில் இலங்கை அரசு நடத்தும் படுகொலைகளைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கும் பொழுதே, இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் குண்டு மழைகளை பொழிந்துகொண்டிருக்கும் செய்திகளும் வந்து கொண்டிருந்தன. வந்து கொண்டிருக்கின்றன.
இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சனை கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக உலக செய்திகளில் அடிபடுகின்றன.
1900 களில் வாழ்வதற்கு சொந்த தேசமில்லாத யூதர்கள், தங்கள் அரசியல் பலம், பணபலம் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனத்தில் குடியேறினார்கள். ஹிட்லர் யூத இனத்தை கொன்று குவிக்க தொடங்கிய பொழுது, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பெருமளவில் குவிந்தார்கள்.
இப்படி, கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமித்த யூதர்கள் “ஆக்கிரமித்த பகுதியை” 1948ல் “இஸ்ரேல்” என அறிவித்தார்கள். கடந்த 60 ஆண்டுகளாக தங்கள் இழந்த சொந்த மண்ணிற்காக போராடுகிற பாலஸ்தீனர்களை “இஸ்ரேல் அரசு” கணக்கு வழக்கு இல்லாமல் கொன்று குவித்து வருகிறது.
ஈழத்திலாவது எல்.டி.டி.யினர் தனது சொந்த மண்ணிலிருந்து கொண்டு போராடுகிறார்கள். பாலஸ்தீனியர்கள் சுற்றி உள்ள நாடுகளில் இருந்து கொண்டு போராடுகிறார்கள்.
உலக ரவுடி அமெரிக்கா “இஸ்ரேல் அரசு” செய்கிற அத்தனை அக்கிரமங்களுக்கும் முழு ஆதரவு தருகிறது.
பதிவர் லைட்ங்க் – மேலும், பல வரலாற்று தகவல்களுடன் எழுதியுள்ளார். தொடர்ந்து படியுங்கள்.
***
'இஸ்ரேல்' - திணிக்கப்பட்ட தேசம்
அவர்கள் சந்தித்தனர். அவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன்
கொடுப்பவர்கள், ஆம். அவர்கள் யூதர்கள். அவர்களுடைய இனத்திற்கென்று ஒரு பூமி இல்லை. இது தங்கள் தேசம் என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. உலக வரைபடத்தில் முகவரி இல்லை. அவர்கள் தங்களுக்கு இனி ஒரு விலாசம் தேடிக் கொள்வது என்று அந்த சூதாட்ட விடுதியில் முடிவு கண்டனர். அவர்களின் தலைவன் தியோடர்ஹெட்நெல என்பவன்.
அவர்கள் ‘யூததேசிய நிதி’ என்று வலிமை மிக்க ஓர் பெட்டகத்தைத் திறந்தனர். அங்கே கூடியவர்களே ஆளுக்குப் பல்லாயிரம் கோடி டாலர் என்று நிதி அளித்தனர். இது ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே நடந்த நிகழ்வு.
இனி அவர்கள் தங்கள் இனத்திற்கென்று ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். எங்கே உருவாக்குவது? எப்படி உருவாக்குவது ?
அவர்களுடைய வேதத்திற்கு பெயர் ‘தாவுராத்.’ பத்துக் கட்டளைகள் என்றும் கூறுவார்கள். தங்கள் தேசம் எங்கே இருக்கிறது என்பதை அந்த வேதம் சுட்டிக் காட்டியிருப்பதாக கற்பிதம் செய்தார்கள். இப்படித் தான் இஸ்ரேல் என்ற நாட்டிற்காக ஒரு கரு உருவாக்கப்பட்டது.
இதனை முதன் முதலாக எதிர்த்துக் குரல் எழுப்பியவர் அண்ணல் காந்தியடிகள் தான். தங்கள் தேசம் இருந்த இடம் என வேதம் வாக்களித்திருக்கிறது என்று கூறி எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கக் கூடாது.
அப்படி இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப் படுவதை எதிர்க்கிறோம். அதனையும் மீறி அப்படி ஒரு நாடு உருவாக்கப்படுமானால் அதனை உலகம் அங்கீகரிக்கக் கூடாது. கண்டிப்பாக இந்தியா அங்கீகரிக்காது என்று அண்ணல் காந்தியடிகள் தெரிவித்தார்.
ஆனாலும், வட்டிக்காக கடன் பெற்றவளின் கண்களையே கேட்கின்ற அந்த யூத மகாப்பிரபுக்கள் ஜோர்டான் எல்லையை ஓட்டிய பாலஸ்தீனப் பகுதிக்குள் கால்கள் பதித்தனர்.
அரபு மக்கள் ஒரு வகைப்பட்டவர்கள். நாகரிகம் கண்டு குடும்பமாகக் குடியிருப்புகளில் வாழ்பவர்கள் ஒரு வகையினர். இன்னொரு வகையினர் நமது நாடோடி மக்களைப் போல் வசிக்கும் பழங்குடி மக்கள் . அவர்களுக்கு ஜோர்டான் எல்லையோரம் பாலஸ்தீனப் பரப்பிற்குள் சொந்த நிலங்கள் இருந்தன. அவைகள் ரோஜா தோட்டங்களோ, பேரீச்சை தோட்டங்களோ அல்ல. கள்ளிச் செடி மேலும் வானம் பார்த்த பூமி.
அந்த நிலங்களை யூத மகாபிரபுக்கள் வாங்கினர். விலை என்ன தெரியுமா? யானை விலை, குதிரை விலை என்பார்களே அதற்கும் அதிகம்தான். அப்படி வாங்கப்பட்ட இடங்களில் யூதர்கள் குடியமர்த்தப்பட்டனர்.
அப்போது அண்டையிலுள்ள அரபு நாடுகளெல்லாம் அவர்களுக்கு அனுதாபமாகவே இருந்தன. யூத இனத்தையே பூண்டோடு ஒழிப்பது என்பது ஹிட்லரின் லட்சியம். அதற்காக அவன் படை கொண்டு சென்ற நாடுகளிலெல்லாம் முதன் முதலாகச் செய்த கைங்கரியம் யூத மக்களை அழித்ததுதான். தப்பித்த யூதர்கள் அடைக்கலம் தேடி உலகம் முழுமையும் ஓடிக்கொண்டிருந்தனர். இது அண்மைக் கால வரலாறு. ஆனால், சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலேயே ஷியாவும், ஐரோப்பிய நாடுகளும் யூதர் என்றாலே முகம் சுளித்தனர். அவர்களை தண்டிக்கப்பட்ட மக்களாகவே கருதினர்.
அப்படி சரித்திரத்தால் சபிக்கப்பட்ட மக்கள் இங்கேயாவது இளைப்பாறட்டுமே என்று உண்மையில் அரபு மக்கள் அவர்கள் மீது இரக்கம் கொண்டனர். அவர்கள் உருவாக்கிக் கொண்ட குடியிருப்பு நாளை தங்கள் எல்லைகளையே தீண்டப்போகும் மலைப்பாம்பு என்பதனையும் அதற்கு இரையாகப் போகும் மான்குட்டிகள்தான், அரபு நாடுகள் என்பதனையும் அப்போது அவர்கள் உணரவில்லை.
அந்த மலைப்பாம்பு மெல்ல மெல்ல நெளியத் தொடங்கியது. தமது நீளத்தை காட்ட தொடங்கியது. சுற்றிலுமுள்ள அரபு நாடுகளுக்குள் தமது வாலினை நீட்டியது. அந்த நிலமெல்லாம் யூத சமுதாயத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உரிமையாக இருந்தது. எனவே, இப்போது தங்கள் மூதாதையர் விட்டுச் சென்ற பரம்பரைச் சொத்தில் தங்களுக்குப் பாத்தியதை உண்டு என்று யூதர்கள் கோரிக்கை வைக்கவில்லை. அபகரிக்கவேத் தொடங்கினர்.
முதல் உலகப் போருக்குப் பின்னர் பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆளுகைக்குள் வந்தது. பாலஸ்தீனத்தில் யூதர்கள் தமது எல்லைகளை விரிவுபடுத்துவதை பிரிட்டன் ஊக்கப்படுத்தியது. காரணம் அந்த நாட்டை விட்டு வெளியேறினாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மத்தியில் - அரபு நாடுகளுக்கு மத்தியில் ஒரு ஏவல் நாயை வளர்த்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தது.
பின்னர் பிரிட்டனுக்கு துணையாக அமெரிக்காவும் வந்தது. பாலஸ்தீனத்திற்குள்ளேயே யூதர்களின் குடியிருப்புக்கள் பெருகின. பின் னர் இணைந்தன. தங்கள் பூமிக்குள் ஓர் கள்ள தேசம் உருவாவதை அப்போதுதான் பாலஸ்தீன மக்கள் நன்றாக உணரத் தொடங்கினர்.
எனவே, 1920ம் ஆண்டு முதன்முதலாக பாலஸ்தீன மக்களுக்கும், யூதர்களுக்கும் இடையே நேரடி மோதல்கள் வெடித்தன. அடுத்த ஆண்டே இன்னொரு இனக்கலவரம். 1929 ம் ஆண்டு நடந்த மோதல் பயங்கரமானது. `ஹெப்ரான் படுகொலை’ என்று வர்ணிக்கப்பட்ட அந்த வெறித்தனமான மோதலில் ஏராளமான பாலஸ்தீனிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். காரணம் யூதர்கள் வலிமை வாய்ந்த ஆயுதங்களை பெற்றிருந்தனர். அத்தனையும் அமெரிக்க தயாரிப்புத் தான்.
1936ம் ஆண்டு பாலஸ்தீன மக்கள் யூத ஆதிக்கத்தை எதிர்த்து வெகுண்டெழுந்தனர். அந்த எழுச்சி 1939 ம் ஆண்டு வரை பொங்கும் எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்தது. அதே
சமயத்தில் யூதக் குடியிருப்புக்களுக்கு உதவியாக பிரிட்டனும், அமெரிக்காவும் பெருமளவில் ஆயுத உதவிக்கள் செய்தன. கரங்களாலும், கவண் கற்களாலும் பாலஸ்தீனிய இளைஞர்கள் எவ்வளவு காலம் போராட முடியும்?
பாலஸ்தீனத்திற்குள் யூதர்களுக்கு என்ன உரிமை என்பதனை தீர்மானிக்க பல்வேறு கமிஷன்களை பிரிட்டன் அமைத்தது. கடைசியாக இந்தப் பிரச்சனையை ஐ.நா மன்றத்திற்கு கொண்டு சென்றது இப்படி.
பாலஸ்தீனத்தின் இதயத்தைப் பிளந்து உருவாகிவரும் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிப்பது என்பதுதான் தீர்வாகும். எப்படி நமது துணைக் கண்டத்தை இந்தியா - பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக உருவாக்கியதோ, அதே போல பாலஸ்தீனம் அதற்குள் இஸ்ரேல் என்ற கோட்பாட்டை ஐ.நா மன்றத்தில் பிரிட்டன் முன்மொழிந்தது.
இந்த நிலையில்தான், இன்னொரு தேசத்தைத் துண்டாடி ரத்தக்கோடுகளால் இஸ்ரேல் என்று ஒரு நாட்டை உருவாக்குவதை உலகம் ஏற்கக்கூடாது என்று அண்ணல் காந்தியடிகள் அறைகூவல் விடுத்தார்.
ஆனாலும், அரபு மக்களின் தாயகமான பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப்படுவதை ஐ.நா மன்றம் அங்கீகரித்தது. அந்த மன்றம் அமெரிக்கா ஆட்டி வைக்கும் பொம்மை என்பதனை எத்தனையோ முறை மெய்பிக்கவும் செய்திருக்கிறது.
1947 ம் ஆண்டிற்கு முந்தைய உலக வரை படத்தை பாருங்கள். இஸ்ரேல் என்ற நாடே இடம் பெற்றிருக்காது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட உலக வரை படத்தைப் பாருங்கள் இன்றைக்கும் ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிற எல்லைகள் தெரியும். அதற்குள் இருக்கின்ற நாடுதான் இஸ்ரேல்.
‘இஸ்ரேல் என்ற நாட்டை இந்தியா அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீனம் என்பது ஒரே பூமிதான். அதுதான் நாடு. அதைத்தான் அங்கீ கரிக்கிறோம்’ என்று பிரதமர் ஜவஹர்லால் நேரு முரசறைந்தார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலம் வரை இஸ்ரேல் அங்கீகரிக்கப்படவில்லை.
பாலஸ்தீன மக்களின் தானைத் தலைவராக விளங்கிய யாசர் அராபத்தை அழைத்து இந்தியா கவுரவித்தது.
உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஓர் யூதர். உருவாகும் இஸ்ரேல் நாட்டிற்கு அவரே முதல் பிரதமராக இருக்க வேண்டும் என்பதை யூதர்கள் மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் விரும்பின. இன்னொருவர் பூமியை ஆக்கிரமித்து உருவாக்கும் ஒரு நாட்டிற்கு தான் பிரதமராக இருக்க முடி யாது என்று அறிவித்து ஐன்ஸ்டீன் விலகி விட்டார்.
ஆனாலும், 1948ம் ஆண்டு முதல் இஸ்ரேல் என்ற நாடு செயல்படத் தொடங்கியது. தேசமில்லாது அலைந்தவர்கள் ஒரு தேசத்தின் வரலாற்றை துப்பாக்கி முனையில் எழுதத் தொடங்கினர்.
1949 ம் ஆண்டு இஸ்ரேலிலிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனிய மக்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி வெளியேற்றப்பட்டவர்கள் இத்தனை ஆண்டுகளில் நாற்பது லட்சம் பேராக பெருகியிருக்கின்றனர். ஆனால் அவர்களெல்லாம் மீண்டும் வருவதற்கு அருகதையற்றவர்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துவிட்டது. அதே சமயத்தில் கொச்சியிலும், மணிப்பூரிலும் எத்தனையோ நூற்றாண்டுகளாக இருக்கும் யூதர்களை தங்கள் குடிமக்கள் என்று அழைத்துக் கொள்கிறது.
ஒரு நாடாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வலிமை வாய்ந்த ஆயுதச்சாலையாக இஸ்ரேல் தன்னை உருவாக்கிக் கொண்டது. இன்றைக்கு அமெரிக்காவிற்கு ஈடாக ராணுவ வல்லமை பெற்றிருக்கிறது.
பாலஸ்தீனத்திற்குள் உருவான பாம்புப் புற்றை அகற்றுவதற்கு எகிப்து, சிரியா, லெபனான், இராக் ஆகிய நாடுகள் கூட்டாக முயன்றன. அப்போதுதான் இஸ்ரேலின் ராணுவ வலிமை வெளிப்பட்டது. இஸ்ரேலின் கரங்கள் தான் உயர்ந்தன.
அந்த மோதலைப் பயன்படுத்தி அண்டை நாடுகளின் பரப்பளவுகளை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது. அந்தப் பிரதேசங்களும் தங்கள் வேதம் சொல்லும் தங்களின் புனித பூமிதான் என்று வன்முறை வாதம் செய்தது. அனுமானங்கள் தான் அதற்கு அடையாளங்களாம்.
பாலஸ்தீனத்திலிருந்து வெளியேற்றப் பட்ட மக்கள் அண்டை நாடுகளில் குடியேறினர். அந்தக் குடியிருப்புகளெல்லாம் தங்கள் தேசத்திற்கு ஆபத்தானவை என்று கூறி இஸ்ரேல் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியது. அதற்குத் துணை அமெரிக்காதான். தமது ஆயுத வியாபாரத்திற்கு இஸ்ரேல் நல்ல சந்தை என்று அந்த நாடு கருதுகிறது.
இப்படி இன்று வரை பாலஸ்தீன மக்களின் ரத்தத்தில்தான் இஸ்ரேல் நீராடிக் கொண்டிருக்கிறது. 1967 ம் ஆண்டு எகிப்தின் மீது படையெடுத்த இஸ்ரேல் அதன் காசா பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது. ஜோர்டான் மீது படையெடுத்து மேற் குக் கரையை ஆக்கிரமித்துக் கொண்டது.
1948 ம் ஆண்டு உருவான பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தை இஸ்ரேல் அங்கீகரிக்க மறுத்தது. அதனுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த மாட்டோம் என்று அடம்பிடித்தது.
1982ம் ஆண்டு லெபனான் மீது இஸ்ரேல் படையெடுத்தது. எல்லை நெடுகிலும் அந்த நாட்டிற்குள் தங்கியிருந்த 3 ஆயிரத்து 500 பாலஸ்தீனியர்கள் படு கொலை செய்யப்பட்டனர். அவர்கள் ஆயுதங்களே இல்லாத அப்பாவி மக்கள். அந்தப் படுகொலைக்கு இஸ்ரேலிலேயே எதிர்ப்புக் கிளம்பியது. அதனால் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ஓரியல் ஜரான் பதவி விலகினார். இந்த கொடுமைகள் கண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளில் வசிக்கும் பாலஸ்தீனிய மக்கள் வெகுண்டெழுந்தனர். ஆங்காங்கே மூர்க்கத்தனமாக இஸ்ரேல் படைகளுடன் மோதினர். ரத்த தடாகங்களில் அவ்வப்போது வெற்றி மலர்கள் மணம் வீசவே செய்தன.
ஆனாலும் பூச்செண்டுகளைக் கொடுத்தால் இஸ்ரேல் எரிகுண்டுகளை திருப்பிக் கொடுத்தது. எனவே பாலஸ் தீனிய மக்கள் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இஸ்ரேலுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டனர். அவர்களுடைய ஆயுதம் என்ன தெரியுமா? விளைந்த காடுகளில் பறவைகளை விரட்ட நாம் வீசும் கவண் கற்கள்தான் இஸ்ரேலின் ராட்சஷ ஆயுதங்களை வெற்றிகரமாக சந்தித்தன.
1987ம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை எதிர்கொள்ள ஹமாஸ் இயக்கம் தோன்றியது. அந்த இயக்கம் இளைய தலைமுறையின் போர் பாசறை. மேற்குக் கரையிலும், காசா பகுதியிலும் அந்த இயக்கத்தின் செல்வாக்கு சிகரம் தொட்டது. உண்மையில் அந்த இரு பரப்பிலும் சமூகப்பணிகளையும் மேற்கொண்டது.
பாலஸ்தீனிய மக்களை பயங்கர ஆயுத பலத்தால் அடிபணிய வைக்க முடி யாது என்பதனை இஸ்ரேலுக்கு காலம் உணர்த்தியது. எனவே பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரிக்க முன் வந்தது. 1993ம் ஆண்டு ஓஸ்லோ நகரில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது. அந்த மாநாடு முழு வெற்றி என்று கூற முடியாவிட்டாலும், மேற்குக் கரையிலும் காசா பகுதியிலும் சுயாதிக்க அமைப்புகளை பாலஸ்தீன மக்கள் அமைக்கலாம் என்று அந்த மாநாடு முடிவு கண்டது.
அதனைத் தொடர்ந்து பலப் பல மாநாடுகள் நடந்தன. 2000ம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவர் கிளிண்டன் ஓர் மாநாடு கூட்டினார். பாலஸ்தீனியத் தலைவர் யாசர் அராபத்தும், இஸ்ரேலியப் பிரதமர் எகுட்பாராக்கும் கலந்து கொண்டனர். உடன்பாடு ஏற்படவில்லை.
ஆனால் அதே சமயத்தில் இழந்த தங்கள் தேசத்தை இஸ்ரேல் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் பாலஸ்தீனிய மக்கள் போராடுகிறார்கள்; அங்குலம் அங்குலமாக முன்னேறுகிறார்கள்.
மேற்குக் கரையும் காசா பகுதியும் தான் இன்றைக்கு அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீனம். அங்கே ஒருநாள் கூட மக்கள் நிம்மதியாக உறங்கியதில்லை.
2006 ம் ஆண்டு பாலஸ்தீனத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. மக்கள் தீர்ப்பு அறிய அந்தத்
தேர்தல் ஓர் வாய்ப்பு என்று ஐ.நா. மன்றமும் கருதியது. தேர்தலில் காசா பகுதியில் ஹமாஸ் இயக்கம் மகத்தான வெற்றி பெற்றது. மேற்கு கரைப் பகுதியில் மிதவாத அரசு அமைந்தது.
ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அரசை அங்கீகரிக்க மாட்டோம் என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் அறிவித்தன. அதனைத் தொடர்ந்து காசா பகுதியை கலவர பூமியாகவே வைத்திருக்க பிரியப் படுகின்றன. தங்கள் அரசை அங்கீகரிக்க மறுக்கும் இஸ்ரேலை, ஹமாஸ் இயக்கமும் அங்கீகரிக்கவில்லை. தங்கள் தாயகத்தின் இதயப்பகுதியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் யூத ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவோம் என்று ஹமாஸ் இயக்கம் சூளுரைத்து செயல்படுகிறது.
எனவே ஏதாவது ஒரு காரணம் கூறி காசா பகுதிக்குள் அவ்வப்போது இஸ்ரேல் படையெடுக்கிறது. ஒரு பக்கம் வான்வழித் தாக்குதல் - இன்னொரு பக்கம் கடல்வழித் தாக்குதல் - தொடர்ந்து தரைவழித் தாக்குதல் என்று சென்ற மாதம் கூட மூர்க்கத்தனமாக தாக்குதலைத் தொடர்ந்தது. காசா பகுதியில் இன்னொரு ரத்த ஆறு ஊற்றெடுத்தது. ஆனாலும் பாலஸ்தீன மக்கள் அடிபணியவில்லை.
மூன்று வார அநியாய யுத்தத்திற்குப் பின்னர் போர் நிறுத்தம் என்று இஸ்ரேலே அறிவித்திருக்கிறது. ஈவிரக்கமற்ற இஸ்ரேல் படையெடுப்பை ஐ.நா. மன்றம் ஒரு மனதாகக் கண்டித்திருக்கிறது. இன்றைக்கு உலகத்தின் முன்னால் ஆக்கிரமிப்பு நாடு வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது.
முன்னாள் பாலஸ்தீனிய மக்களுக்கு கவண் கற்கள்தான் ஆயுதம். ஆனால் இன்றைக்கு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் பறக்கின்றன. இன்னொரு பக்கம் தரைவழிப் போரில் பாலஸ்தீனிய மக்களை வெல்ல முடியவில்லை. எல்லைகளை முறித்துக் கொண்டு நுழையும் டாங்கிகளை அவர்கள் அப்பளங்களாக நொறுக்குகிறார்கள்.
இன்றைக்கு மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய சக்திகளின் பயங்கர ஆக்கிரமிப்புக்களை பார்க்கிறோம். அரசு பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கு இஸ்ரேல் இலக்கணம் வகுத்துக் கொண்டிருக்கிறது.
ஹமாஸ் இயக்கம்தான் காசா பகுதிக்கும் மேற்குக் கரைக்கும் உண்மையான அரசியல் இயக்கம். அதனை அழித்தொழிக்காது கண் துஞ்ச மாட்டோம் என்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் கொக்கரிக்கிறார்கள். ஆனால் சர்வவல்லமை படைத்த அந்த ஆக்கிரமிப்பாளர்கள் அவ்வப்போது சோர்ந்து போகிறார்கள். அதனால் போர் நிறுத்தம் என்கிறார்கள்.
பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் மிதவாத ஆட்சி அமைந்தாலும் முழு பாலஸ்தீன மக்களின் அங்கீகாரம் பெற்ற மாபெரும் இயக்கமாக ஹமாஸ் தலை நிமிர்ந்து நிற்கிறது. அதனைப் பணிய வைக்க அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் சில அரேபிய நாடுகளே துணை நிற்கின்றன என்பது வேதனை தரும் செய்தி. எனினும் பாலஸ்தீனம் இமயம் போல எழுந்து நிற்கும்.
from
http://lightink.wordpress.com
குறிப்பு : பதிவர்கள் சிலர் எழுதுகிற கட்டுரைகளை நான் பிரசுரிப்பதால், அதில் உள்ள எல்லா கருத்துகளையும் ஏற்றுக்கொள்வதாக அர்த்தம் கொள்ள வேண்டாம்.
நன்றி : படங்கள் - கீற்று, கலையகம்
January 28, 2009
மு.ப. எ. மாநாடு – தோழர் மருதையன் பேச்சு! – சில துளிகள்
மாநாட்டில் கலந்து கொண்ட அனுபவத்தை சில பதிவர்கள் கடந்த இரண்டு நாட்களாக எழுதியும் வருகிறார்கள்.
மாநாடு நடந்த அன்று, மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொதுசெயலாளரான தோழர் மருதையன் சிறப்புரை நிகழ்த்தினார்.
அவர் பேசிய உரையிலிருந்து சில துளிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என தோன்றியது.
குறிப்பு : வரிக்கு வரி எழுதாமல், பேச்சின் சாரத்தை மட்டும் எழுதுகிறேன். சில வார்த்தைகள் மாறியிருக்கலாம்.
அன்பார்ந்த தோழர்களே! இந்த பகுதிவாழ் உழைக்கும் மக்களே!
இந்தியா முழுவதும் “ரிசசன்” – ஆல், எல்லா தொழிற்சாலைகளிலிருந்தும் தொழிலாளர்கள் லே-ஆப் என்று வெளியேற்றப்பட்டு கொண்டேயிருக்கிறார்கள்.
ஹூண்டாய் போன்ற எல்லா நிறுவனங்களுக்கும் இது உற்பத்தி மந்தம். லாபம் குறைவாக கிடைக்கும்.
ஆனால், ஒரு வெளியேற்றப்படுகிற தொழிலாளிக்கு அடுத்த வேலை சோறே பிரச்சனை.
முதலாளித்துவ பயங்கரவாதம்
எதையுமே இவர்கள் ஸ்டாரங்காக சொல்வார்கள். அதைப் போலத்தான் இந்த “முதலாளித்துவ பயங்கரவாதம்” என்று சொல்வதும் என்கிறார்கள்.
பயங்கரவாதம் என்றால் ஆயுதம் கொண்டு தாக்குவது, குண்டு வெடிப்பது என்பது மூலம் தனது கோரிக்கைக்கு மிரட்டி பணிய வைப்பது.
முதலாளிகள் தொழிலாளர்களை “வறுமை, பட்டினி” மூலம் பணிய வைக்கிறார்கள்.
12 மணி நேர வேலை பார்க்கவிட்டால்,
இ.எஸ்.ஐ., பி.எப். கேட்டால்,
சம்பளம் கட்டுபடியாக வில்லை, கூடுதல் சம்பளம் கேட்டால்...
- இப்படி தொழிலாளி தனக்குரிய எந்த உரிமையாவது கேட்டால், உடனே வேலையை விட்டு துரத்துகிறார்கள்.
இப்படி வறுமை, பட்டினி மூலம் தங்களுடைய லாப வெறிக்கு பணிய வைக்கிறார்கள். இதைத்தான் முதலாளித்துவ பயங்கரவாதம் என 100க்கு 100 சதவீதம் சரியாக அழைக்கிறோம்.
நாட்டில் ஆளாளுக்கு, டாக்டர் பட்டம், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி பட்டம் தருகிறார்கள்.
நாங்கள் தருகிறோம் இவர்களுக்கு சரியான பட்டம் “முதலாளித்துவ பயங்கரவாதிகள்”
ஆயுதம் வைத்திருப்பவன் தான் பயங்கரவாதிகளா!
பின்லேடன் கூடத்ததன் ஒரு முனிவன் போல தோற்றமளிக்கிறான்.
அவர்களுடைய நடவடிக்கைகள் தான், பயங்கரவாதிகளா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.
டாட்டா பிர்லா, அம்பானி, மித்தல் – போன்ற பல்வேறு முதலாளிகளின் ஊழல்களின் பட்டியல் சொன்னால், நீண்டுக்கொண்டே போகும். இவர்கள் முதலாளித்துவ பயங்கரவாதிகள் இல்லையா!
லேட்டஸ்ட் பயங்கரவாதி இராமலிங்க ராஜூ
“ஒரு பைசா கூட எடுக்கலை” என்கிறான் ராமலிங்க ராஜூ.
சத்யம் பங்குகளை வாங்கி வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், மற்றும் சத்யத்தின் பங்குதாரர்களுக்கு ராஜூ வைத்திருப்பது வெடிகுண்டு. என்ன! சத்தமில்லாத வெடிகுண்டு.
ராஜூவை நாம் பயங்கரவாதி சொல்வது இருக்கட்டும். இதோ,
சத்யம் மோசடி குறித்து, எல்.ஐ.சியின் தலைமை அதிகாரி சொல்கிறார். “சத்யம் மோசடி மும்பை பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இணையானது”. எல்.ஐ.சியின் பங்குப்பணம் 8000 கோடி சத்தியத்தில் விழுந்து கிடக்கிறது. எல்.ஐ.சி.மக்களிடத்தில் என்ன விளம்பரம் செய்கிறது “உங்களுடைய பணம் பாதுகாப்பாக எங்களிடத்தில் இருக்கிறது.”
இவன் சிறை சென்றால், சத்ய சோதனை ரீமீக்ஸ் எழுதுவான்.
- மீதி...அடுத்த பதிவில் தொடரும்.
January 24, 2009
லெனினிடமிருந்து கற்றுக் கொள்வோம்!
லெனின் நினைவு நாள் : 21, ஜனவரி 1924
அவர்கள் லெனினைப் போல
அரசியல் ஊழியர்களாகப் பணியாற்ற வேண்டும்
தெளிவுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும்
போராட்டத்தில் பயமின்றியும்,
மக்களின் பகைவர்களிடம் ஈவிரக்கமின்றியும்
இருக்க வேண்டும்.
லெனினைப் போல
நிலைமை சிக்கலாகும் பொழுது,
கிஞ்சித்தும் பீதியின்றியும்,
பீதியின் சாயலின்றியும் இருக்க வேண்டும்.
பரிபூரணமான விவரமான கண்ணோட்டமும்,
சாதகமானவற்றையும்
பாதகமானவற்றையும்
விரிவான முறையில் சீர்தூக்கி பார்க்கும் திறமையும்,
தேவையாயிருக்கும் அளவுக்கு
சிக்கலான பிரச்சனைகளைப் பற்றி
முடிவுசெய்வதில் நுண்ணறிவும்
தீர்க்கமாக ஆலோசனை செய்யும் சக்தியும்
பெற்றிருக்க வேண்டும்
லெனினைப் போல
ஒழுக்கமும், நேர்மையும்
பெற்றிருக்க வேண்டும்
மக்களை நேசிக்க வேண்டும்-
ஸ்டாலின் - உரையிலிருந்து
January 22, 2009
முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்சி நிரல்
இடம் :
டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம்,
எஸ்.வி. நகர், ஓரகடம், அம்பத்தூர்
நிகழ்ச்சி நிரல்
தியாகிகளுக்கு வீரவணக்கம்
கருத்தரங்கம்
காலை அமர்வு – காலை முதல் 1 மணி வரை
தலைமை :
தோழர் அ. முகுந்தன்,
தலைவர் பு.ஜ.தொ.மு
சிறப்புரை :
கிள்ளுக்கீரைகள் அல்ல தொழிலாளி வர்க்கம்...
கிளர்ந்தெழுந்தால் நாட்டின் இயக்க்மே நிற்கும்!
தொழிலாளத் தோழனே,
வர்க்கமாய் ஒன்றுசேர்!
வலிமையை நிலைநாட்டு!
தோழர் துரை. சண்முகம்,
ம.க.இ.க.
***
வேலை நேரத்திற்கு வரம்பில்லை...
குறைந்தபட்ச ஊதியமில்லை...
தொழிற்சங்க உரிமையுமில்லை...
உரிமைகளை ஒழிக்கும் உலகமயம்!
வழக்குரைஞர் சி. பாலன்,
கர்நாடகா உயர்நீதி மன்றம், பெங்களூர்
***
மாலை அமர்வு
பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை
பணி நிரந்தரமில்லை....
மருத்துவ வசதியில்லை....
தினக்கூலி, ஒப்பந்தக் கூலி,
அவுட்சோர்சிங் அக்கிரமங்கள்!
தனியார்மயம் – தாராளமயம் – கொத்தடிமைமயம்!
தோழர் சுப. தங்கராசு,
பொதுச்செயலாளர், பு.ஜ.தொ.மு.
***
ஆட்குறைப்பு, வேலை மறுப்பு,
ஆலை மூடல், விலைவாசி ஏற்றம்...
மூலகாரணம் முதலாளி வர்க்கத்தின்
ஊக வணிகச் சூதாட்டம்!
முதலாளித்துவம் கொல்லும்!
கம்யூனிசமே வெல்லும்!
தோழர் பா. விஜயகுமார்,
பொருளாளர், பு.ஜ.தொ.மு.
***
நேருரைகள் :
சங்கம் துவங்கினோம்!
அடக்குமுறைகளை எதிர்கொண்டோம்!
வர்க்க ஒற்றுமையால் வென்றோம்!
போராட்டத்திற்கு தலைமையேற்ற
பல்வேறு தொழிலாளர்களின் அனுபவங்கள்
நன்றியுரை :
தோழர் இல. பழனி,
துணைத்தலைவர் பு.ஜ.தொ.மு.
***
பொதுக்கூட்டம்
மாலை 6 மணி – அம்பத்தூர் O.T. மார்க்கெட்
தலைமை :
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
பு.ஜ.தொ.மு.
மாநாட்டுத் தீர்மான விளக்கவுரை :
தோழர் சுப. தங்கராசு,
பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு.
சிறப்புரை :
தோழர் மருதையன்,
பொதுச் செயலாளர், ம.க.இ.க. தமிழ்நாடு.
***
புரட்சிகர கலைநிகழ்ச்சி
மையக் கலைக்குழு,
மக்கள் கலை இலக்கிய கழகம்,
இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக பதிவர்களும் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள். நிதி உதவியும் அளியுங்கள்.
தொடர்புக்கு :
தோழர் அ. முகுந்தன், தலைவர் பு.ஜ. தொ.மு.: 94448 34519, 94444 42374தோழர் பாண்டியன்: 99411 75876
January 20, 2009
January 19, 2009
அன்பார்ந்த பதிவர்களே!
சென்னை, அம்பத்தூரில் நடக்க இருக்கும் “முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டு"க்காக “புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி” தோழர்கள் தமிழகம் முழுவதும் சுவரெழுத்து, பேனர்கள் மூலமாகவும், பேருந்து மற்றும் ரயில்களில் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியில், சென்னையிலும் கடந்த ஞாயிறன்று சென்னை மெட்ரோ ரயில்களில் தோழர்கள் செய்த பிரச்சாரம் மக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது.
அன்பார்ந்த பெரியோர்களே!
“புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி” என்னும் அமைப்பிலிருந்து வருகிறோம். கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் இயங்கி வருகிறோம். எங்கள் அமைப்பின் சார்பாக வருகிற 25ந் தேதியன்று “முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு” நடத்த இருக்கிறோம். இன்றைக்கு இந்த மாநாட்டின் அவசியம் என்ன?
கடந்த இரண்டு மாதங்களாக பல தொழிற்சாலைகளிலிருந்தும், தொழிலாளர்கள் 50யும், நூறுமாக லட்சகணக்கில் லே ஆப், வேலை இல்லை என்று சொல்லி, எந்தவித இழப்பீடும் இன்றி வேலையிலிருந்து துரத்தப்படுகிறார்கள். ஏன் இந்த நிலை?
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் பொருளாதார சீரழிவால், உற்பத்திக்காக அவர்களை நம்பி இருந்த இந்தியாவிலும் உற்பத்தி முடக்கம், பொருளாதார மந்தத்தால் இந்த நிலை.
நேற்றைக்கு வரைக்கும் குழந்தைக்கு, அம்மாவுக்கு உடம்புக்கு முடியவில்லை என, அரை நாள் லீவு கேட்டால் கூட சலித்து, கோபப்பட்ட முதலாளிகள், இன்றைக்கு உற்பத்தியில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டதும், ஈவிரக்கம் இல்லாமல் வெளியே தள்ளுகிறார்கள்.
முதலாளிகளால் இடத்து வாடகையை குறைக்க முடியவில்லை: அவர்கள் அனுபவிக்கும் கார், ஏசி போன்ற வசதிகளை குறைக்க முடியவில்லை. ஆனால், தொழிலாளர்களை கறிவேப்பிலை போல தூக்கி போடுகிறார்கள்.
முதலாளிகள் கொடுக்கும் சம்பளத்தைக் கொண்டு... அரிசி, பருப்பு, எண்ணெய் தொடங்கி, வீட்டு வாடகை வரை எல்லாம் எகிறி விழி பிதுங்கி சென்னை மாதிரி பெருநகரங்களில் வாழ்வதே பெரிய கொடுமையாய் இருக்கிறது. இப்பொழுது வேலையும் இல்லையென்றால்....? தற்கொலைகள் தான் பெருகும்.
நமக்கு ஏன் இந்த இழிநிலை?
தொழிலாளர்கள் நாம் “சங்கமாய்” இணைந்து இல்லாதிருப்பது தான் பிரச்சனை. தொழிற்சங்கத்தில் இருந்திருந்தால், இப்படி நம்மை துரத்தமுடியமா முதலாளிகளால்?
தொழிற்சங்கம் அமைத்தால், முதலாளிகளுக்கு கசக்கிறது. ஆனால், அவர்கள் அசோசியேசன் வைத்து இருக்கிறார்கள். அமைச்சர்களை சந்திக்கிறார்கள். தங்களுக்கு ஏற்படும் சிறு இழப்புக்கு கூட இழப்பீடு பெற்றுகொள்கிறார்கள்.
ஹெல்பராக வேலை செய்யும் தொழிலாளியிருந்து, ஐ.டி. துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வரை லட்சகணக்கில் வேலையிலிருந்து துரத்தப்பட்டு நிர்க்கதியாய் இருக்கிறார்கள்.
நாட்டில் இது குறித்து ஏதும் பேசப்படாமல், மும்பையில் மூன்று ஏழு நட்சத்திர விடுதிகளுக்குள் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து சில பணக்காரர்களைச் சுட்டதும் ஊடகங்கள் கதறுகிறது. பத்திரிக்கைகள் “தீவிரவாதம், பயங்கரவாதம்” என அலறுகின்றன. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என எல்லா கட்சிகளும் துடி, துடித்துப் போகிறார்கள். பாராளுமன்றத்தில் ஏகமனதாக சட்டங்கள் போடப்படுகின்றன. எல்லா பகுதிகளிலும் செக்யூரிட்டி பலமாக்கப்படுகிறது.
இசுலாமிய பயங்கரவாதத்தை விட, இப்படி பல லட்சகணக்கான தொழிலாளர்களை பட்டினிச் சாவில் தள்ளும் முதலாளித்துவமே ஆகப்பெரிய பயங்கரவாதம். இந்த முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்காமல் பெரும்பான்மையோர் வாழ்வில் விடிவு இல்லை.
மாநாட்டுக்கு வாருங்கள்! கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெறச் செய்யுங்கள்! உங்களால் இயன்ற அளவு நிதி தாருங்கள்!
***
பேசும் பொழுதே மக்களில் சிலர் பிரசுரத்தை அவர்களே கேட்டு வாங்கினார்கள்.
பெண்கள் கவனத்துடன் கேட்டார்கள்.
சில தொழிலாளர்கள் ஆர்வத்துடன் முகவரி கேட்டு குறித்து கொண்டார்கள். மாநாட்டுக்கு வருவதாக சொன்னார்கள். பலர் நிதி உதவியும் அளித்தார்கள்.
உண்ணாவிரதம் இருந்த திருமாவளவன் அவர்களை பார்க்க சென்று கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் அவர்களாக தங்களுக்குள் வசூலித்து நிதி தந்தனர்.
****
பின்குறிப்பு : இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக பதிவர்களும் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள். நிதி உதவியும் அளியுங்கள்.
தொடர்புக்கு :
தோழர் அ. முகுந்தன், தலைவர் பு.ஜ. தொ.மு.
: 94448 34519, 94444 42374
தோழர் பாண்டியன்: 99411 75876
January 18, 2009
முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு!
முதலாளித்துவம் கொல்லும்!
கம்யூனிசமே வெல்லும்!
****************
முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு!
************************
கருத்தரங்கம்
பொதுக்கூட்டம்
கலைநிகழ்ச்சி
****************
ஜனவரி 25, 2009
அம்பத்தூர்
சென்னை
****
ஒரு தொழிலாளி என்று நம்மால் நெஞ்சு நிமிர்த்தி சொல்லிக் கொள்ள முடிகிறதா?
வேலைக்கும், சம்பளத்துக்கும், வாழ்க்கைக்கும் முதலாளிகளின் தயவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அடிமைகளாகத்தான் நாம் வாழ்கிறோம். இந்த உலகத்தையே தன்னுடைய வியர்வையால் படைத்த, தன்னுடைய உழைப்பால் இயக்குகின்ற தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை இப்படித்தான் உள்ளது.
தொழிலாளி வர்க்கம் இதுவரை போராடிப் பெற்ற உரிமைகள் எல்லாம் காகிதத்தில் தூங்குகின்றன. காகிதத்தில் இருப்பவையும் ஒவ்வொன்றாக காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன. தொழிற்சங்கச் சட்டம், வேலை நிரந்தரச் சட்டம், எல்லோருக்கும் ESI, PF என்றெல்லாம் இருந்த சட்டங்கள் எங்கே? பல போராட்டங்கள், அடக்குமுறைகள், வேலை இழப்பு தியாகங்கள் செய்து பெற்ற உரிமைகள் எங்கே?
8 மணி நேர வேலை என்று சட்டம் இருக்கிறது. ஆனால் 10-12 மணி நேர வேலை என்பது கட்டாயம். இப்படி உழைத்தாலும் போதிய சம்பளம் கேட்டால் வேலையே கிடையாது என்கிறான் முதலாளி. வேலையைக் காப்பாற்ற அற்பக் கூலிக்கு பணிந்து போகிறோம். உழைப்புக்கேற்ற கூலிதானே கேட்டோம் என்று குரல் உயர்த்திப் பேச முடியவில்லை. கொத்தடிமையை விட கேவலமாக அல்லவா இருக்கிறது, நம் நிலைமை?
தினம் ஒரு ஆலையைத் திறப்பதாகவும், பல ஆயிரம் பேருக்கு வேலை தரப்படுவதாகவும் அரசாங்கம் பீற்றிக்கொள்கிறது. இதில் எத்தனைப் பேருக்கு நிரந்தர வேலை? நூற்றுக்கு 90 பேர் காண்டிரக்ட் தொழிலாளிகளாகத்தான் இருக்கின்றோம். நிரந்தர வேலை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிறான், முதலாளி. எல்லா வேலைகளும் காண்டிராக்ட்மயமாகி விட்டது. 20 வயதில் உழைக்க்ட் துவங்கினால் 30-35 வயதுக்குள் சக்கையாய் பிழிந்துவிட்டு துரத்திவிடுகிறான். உடம்பில் தெம்பு போன பின்பு என்ன வேலைக்குப் போவது? கடைசியில் செக்யூரிட்டி வேலையில் சேர்ந்து வந்தவன் – போனவனுக்கு சல்யூட் அடித்து நிற்கிறோம். நெஞ்சு வெடிக்கிறது. ஆனாலும் அடங்கிப் போகிறோம்!
480 நாட்கள் வேலை செய்தால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது சட்டம். 480 நாள் வேலை செய்ததற்கு ஆதாரத்தைக் காட்டு என்பது சட்டத்தின் நிர்ப்பந்தம். ஆதாரத்தை தொழிலாளியால் காட்டமுடியாது என்பது சூழ்நிலை. மீறிக்காட்டினால் இருக்கின்ற வேலையும் போய்விடும் என்பது எதார்த்தம்.
ESI, PF – என்கிற சலுகைகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இன்றோ எதுவும் கிடையாது. வேலையில் அடிபட்டு செத்தாலும் நாதியற்ற பிணமாகத்தான் கிடக்க வேண்டும்.
தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை 80 ஆண்டுகளுக்கு முன்பாக போராடிப் பெற்றோம். இன்று ஒரு தொழிற்சாலையில் சங்கம் அமைப்பதாகப் பேசினாலே வேலை பறிக்கப்படுகிறது. ஆலை மூடப்படுகிறது. போலீசும் வருகிறது. தொழிற்சங்கம் வைக்க முயற்சிப்பதே ஒரு கிரிமினல் குற்றமாக்கப்பட்டு விட்டது. ஆனால் முதலாளிகள் சங்கம் வைக்கிறார்கள். அவர்களது சங்கத்தில் தீர்மானம் போடுகிறார்கள். அவர்கள் காலால் இடுவதை அரசாங்கம் தலையால் செய்து முடிக்கிறது. அவர்கள் சொடக்குப் போட்டு கூப்பிட்டால் மந்திரி ஓடுகிறார்.
பட்ஜெட் போடுவதற்கு முன்பாக முதலாளிகளிடம் ஆலோசனை கேட்கிறது, அரசாங்கம். வரிச்சலுகை, மானியங்களை வாரிக் கொட்டுகின்றன, மத்திய-மாநில அரசுகள். வரி ஏய்ப்பு செய்யும் முதலாளிகள் கேட்டதை எல்லாம் செய்கிறது, அரசு. தொழில்துறை முடக்கத்தால் லாபம் குறைந்து போனால் மானியம் தந்து ஈடுகட்டுகிறது, அரசு. மொத்தத்தில் முதலாளிகளின் சங்கம் என்ன சொல்கிறதோ அதுதான் நாட்டின் சட்டமாக ஆகிறது.
ஆனால் 30 கோடி தொழிலாளர்களை ஒரு பொருட்டாகவே அரசு மதிப்பதில்லை. தொழிலாளர்களின் பிரச்சினைக்காகக் கூட தொழிற்சங்க தலைவர்களிடம் அரசு ஆலோசித்ததாக வரலாறு இல்லை.நம்முடைய PF பணம் இரண்டரை லட்சம் கோடி ரூபாயை HSBC, ICICI புரூடன்சியல், ரிலையன்ஸ் ஆகிய வர்த்தகச் சூதாடிகளுக்கு பங்கு போட்டுக் கொடுத்தபோது கூட நம்முடைய அனுமதியை வாங்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் நமது எதிர்ப்பை மீறித்தான் செயல்பட்டது, அரசு.
இதைவிட கிள்ளுக்கீரையாகவும், கேவலமாகவும் யாரையாவது நடத்த முடியுமா? கலவரம் செய்கின்ற, அரசு பஸ்சைக் கொளுத்துகின்ற சாதித் தலைவர்களையும், மதத் தலைவர்களையும் கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்துகிறது, அரசு. ஆனால் உழைப்பால் நாட்டையே இயக்குகின்ற தொழிலாளி வர்க்கத்துக்கு அரசு கொடுக்கும் மரியாதை இதுதான்!
மே தினத்தன்று ஹூண்டாய் கார் கம்பெனியின் தொழிற்சங்க கொடிக்கம்பத்தை நிர்வாகம் பிடுங்கி எறிந்தது. சாதி சங்கத்தின் கொடியையோ, ரசிகர் மன்றத்து பேனரையோ இப்படி பிடுங்கி எறிந்துவிட முடியுமா? சாலையோரத்து கோயிலை இடித்தால் கூட நாலுபேர் மறியல் செய்கிறார்கள். ஆனால், தொழிலாளர் தினத்தன்று தொழிலாளி வர்க்கத்தின் கொடியைப் பிடுங்கி எறிந்த செய்தி கேட்டு நம்மில் எத்தனை பேருக்கு ரத்தம் கொதித்தது? இங்கே தொழிற்சங்கம் துவங்கியதற்காக பழிவாங்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? வேலை இழந்தவர்கள் எத்தனை பேர்? பின்னி, டன்லப், மெட்டல் பாக்ஸ், ஸ்டாண்டர்டு போட்டார்ஸ் என்று தற்கொலை செய்து கொண்ட தொழிலாளர்கள் எத்தனைபேர்? இவர்களெல்லாம் நம்முடைய வர்க்கம் என்று நாம் பதட்டபட்டிருக்கிறோமா? அப்படி பதறி கிளர்ந்தெழுந்திருந்தால் இத்தனை பேர் கேட்பாரின்றி மடிய நேரிட்டிருக்குமா?
ஊரப்பாக்கத்தில் சாதிப் பிரச்சனை என்றால் உசிலம்பட்டியில் பஸ்சை உடைக்கிறார்கள், சாதி சங்கத்தினர். அமர்நாத், அயோத்தி, ராமன் பாலம் என்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கலவரம் செய்கிறார்கள், மதவாதிகள். ஆனால் இந்த தமிழகத்தில் இந்த சென்னை நகரில் பக்கத்து கம்பெனியில் தொழிலாளிக்கு நடக்கும் அநீதியைக் கூட நாம் கண்டுகொள்வதில்லல. அவன் வேறு, நாம் வேறு என்று நினைக்கிறோம். நிரந்தரத் தொழிலாளி-காண்டிராக்ட் தொழிலாளி, அமைப்பாக்கப்பட்ட தொழிலாளி-அமைப்பு சாரா தொழிலாளி என்று தொழிலாளர்களுக்குள்ளேயே முதலாளிகள் புதுவகை பிரிவினையை ஏற்றுக்கொண்டு வர்க்கப் பாசம் இன்றி இருக்கிறோம்.
இன்று அவன் பலி என்றால் நாளை நாம். ஆனால் நாமெல்லாம் ஒரே வர்க்கம் என்று உணர்வதில்லை. நாமெல்லாம் ஒரே வர்க்கம் என்று உணர்வதில்லை. நாமெல்லாம் ஒன்று திரண்டால் எந்த முதலாளித்துவ கொம்பானாலும் நம்மை வீழ்த்தமுடியாது. அவன் அடிபணிந்தே தீர வேண்டும்.
ஓட்டுக் கட்சிகளுக்கு நாம் ஓட்டுப் போடும் எந்திரம். முதலாளிக்கோ உழைத்துப்போடும் மனித எந்திரம்! கெஞ்சிய குரலும், அஞ்சிய வர்க்கமும் உரிமையைப் பெற்றதாக வரலாறு இல்லை. ஒற்றுமை உணர்வும், ஓங்கிய கைகளும் என்றும் தோற்றதில்லை. உழைத்துக் காய்த்த நம் கைகள் ஆயிரம் ஆயிரமாக ஒன்று சேர்ந்தால் முதலாளித்துவத்தின் இரும்புக் கோட்டையும் சிதறிப் போகும். முதலாளிகள் – அரசு கூட்டணியை தூள் தூளாக்கும்! வர்க்கமாய் திரள்வோம்; வலிமையைக் காட்டுவோம்!
- புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
தொடர்புக்கு : அ. முகுந்தன், 110, 2வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம், சென்னை – 600 024 செல் : 94448 34519
- மாநாட்டுக்காக வெளியிட்ட பிரசுரத்திலிருந்து
January 16, 2009
கார்ப்பரேட் கிரிமினல்கள்
நன்றி : லைட்ங்க்
நீங்கள் துப்பாக்கி முனையில் யாரை யாவது மிரட்டி சில ஆயிரம் ரூபாய்களை கொள்ளையடித்தீர்களானால் இந்த நாட்டில் உங்களுக்கு ஆயுள் தண்டனை உறுதி. ஆனால் உங்கள் மீது நம்பிக்கை வைத்து மற்றவர்கள் கொடுக்கிற பெருவாரியான பணத்தை வாரிச்சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டால் உங்களுக்கு அவ்வளவு பெரிய தண்டனை கிடைக்காது. ஓராண்டோ அல்லது அதிகபட்சமாக மூன்றாண்டோ சிறைவாசம் மட்டுமே.
பசியால் துடிக்கிற ஒருவர் ஒரு கடையில் உணவுபொருளை திருடிவிட்டால் அவரை பல ஆண்டுகள் சிறைக்குள் தள்ள முடியும். ஆனால் இந்திய பங்குச் சந்தை, மையம் கொண்டிருக்கிற மும்பை தலால் தெருவில் உட்கார்ந்து கொண்டு, நீங்கள் வாழ்க்கை முழுவதும் சேமித்த பணத்தை சூறையாடிக் கொண்டிருப்பவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. இதுதான், பெரும் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் செய்யும் கடும் குற்றங்கள் மீதான இந்திய சட்ட நடைமுறையின் அதிகபட்ச பிரதிபலிப்பு.
பெரும் நிறுவன கிரிமினல்கள் மீது மிகவும் சாதுவான முறையில் நடந்து கொள்ளும் விதத்திலேயே இந்திய சட்ட அமைப்பு கட்டப்பட்டிருக்கிறது.
கடந்த புதன்கிழமை புத்தாண்டு கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. சில மணி நேரங்களிலேயே, இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு கணிப்பொறி நிறுவனங்களில் ஒன்றான சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில், தாங்கள் முதலீடு செய்திருந்த பணம் பங்குச்சந்தையில் காணாமல் போய்விட்டதை, ஆயிரக்கணக்கான இந்திய முதலீட்டாளர்கள் அறிந்து பதறினர்.
சத்யம் நிறுவனம், அமெரிக்க பங்குச் சந்தை பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில் ஒன்று. உலகம் முழுவதும் பெரும் நிறுவனங்கள் என்று பட்டியலிடப் பட்ட 500 கம்பெனிகளில் இதுவும் ஒன்று.
இந்த நிறுவனத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக பங்குதாரர்களின் பணத்தை சூறையாடிய அதன் தலைவர் ராமலிங்க ராஜூ, தற்போது சட்டத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ளார். நேற்றுவரைக்கும் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து எதையும் செய்யாத இந்த கார்ப்பரேட் பிசினஸ் மேக்னட், இன்று சட்டத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறுவது விந்தையானது.
ராஜூவுக்கு தெரியும், இந்திய சட்ட அமைப்புமுறை தன்னைப்போன்ற பெரும் பணக்காரர்களுக்கு உதவியாகவே இருக்கிறது என்று. தான் சிறைக்கு செல்லப் போவதில்லை என்றும் அவருக்குத் தெரியும். ஒருவேளை அப்படி நடந்தாலும், முதலீட்டாளர்களிடம் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு ஏராளமான வழக்கறிஞர்களை விலைக்கு வாங்கி ஓரிரு நாட்களிலேயே அவரால் பெயிலில் வரமுடியும்.
சத்யம் நிறுவன ஊழல் இந்த நாட்டில் நடக்கிற முதல் ஊழல் அல்ல. ஹர்சத் மேத்தாவில்
துவங்கி, கேதன் பரேக் முதல் சி.ஆர்.பன்சாலி (பார்க்க: படம்) வரை நம்மிடம் ஏராளமான மோசடிப் பேர்வழிகளின் பட்டியல் இருக்கிறது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்த 5,651 கம்பெனிகளில், 2,750 கம்பெனிகள் மாயமாய் மறைந்து போய்விட்டன; சும்மா போகவில்லை, தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் பொது மக்களின் பணத்தை பல நூறு கோடிக் கணக்கில் சுருட்டிக்கொண்டு காணாமல் போய்விட்டன.
ஆனால் இவர்களுக்கெல்லாம் சட்ட ரீதியான தண்டனை கிடைத்ததா?
இந்த பெரும் ஊழல்களின் விளைவாக, அந்த நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த ஏராளமானோர் தற்கொலை செய்துகொண்டு செத்துப்போனார்கள். ஆயிரக்கணக்கானோர், தங்களது வாழ் நாள் சேமிப்பை இழந்தார்கள். ஆனால் குற்றவாளிகள் சட்டத்தால் தண்டிக்கப் படவில்லை.
உலகம் முழுவதும் பொதுவாக ஊழல் பேர்வழிகள் என்று வெறுப்புணர்வு உண்டாக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளை விட, இந்த கார்ப்பரேட் கிரிமினல்கள் ஆபத்தானவர்கள். ஊழல்செய்த அரசியல்வாதிகள் கூட, சில பல ஆண்டுகள் சிறையில் கழிக்கிறார்கள்.
இங்கு நடப்பதற்கு மாறாக சில வளர்ந்த நாடுகளில் கார்ப்பரேட் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படு கிறது. 2006ல் அமெரிக்காவில் நிதி நிறுவன ஊழல் செய்து மாட்டிக்கொண்ட ஜெப்ரி கே ஸ்கில்லிங்கிற்கு 24 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் சிறையில் இருக்கிறார். மிகப்பெரும் ஊழலில் சிக்கிய என்ரான் நிறுவனத்தின் தலைவர் கென்னத் லே-க்கு
(பார்க்க: படம்) 20 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. சிறைவாசம் துவங்குவதற்கு முன்னரே அவர் இறந்துபோனார். அந்த நிறுவனத்தின் ஊழலுக்கு உதவிய தணிக்கையாளர் ஆர்தர் ஆண்டர்சனின் நிறுவனம் மூடப்பட்டது.
நிதி முறைகேடு செய்து குற்றம் நிரூபிக்கப்பட்ட வேர்ல்டு காம் நிறுவனர்களில் ஒருவரான பெர்னார்டு எப்பர்ஸ் 25 ஆண்டு சிறைதண்டனையை அனுபவித்து வருகிறார்.
சத்யம் நிறுவனத்தில் ராமலிங்க ராஜூவும் அவரது கூட்டாளிகளும் நிதி கணக்குகளை கள்ளத்தனமாக மாற்றி எழுதியுள்ளனர். மேலே குறிப்பிடப்பட்ட தண்டனைகளைப் போல இவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் என்று சத்யம் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் எதிர்பார்க்க முடியுமா? இவர்கள் மேற்கொண்ட மோசடி கணக்குகளுக்கு சான்றிதழ் கொடுத்த ஆடிட்டர்களுக்கு சிறைவாசம் கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா? இதற்கு, ‘இல்லை’ என்று ஒரே பதில்தான் இருக்கிறது.
இந்திய தண்டனைச்சட்டம் 1860ல் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தை உருவாக்கிய தாமஸ்
பாபிங்டன் மெக்காலே, (பார்க்க: படம்) முற்றிலும் இன ரீதியான மற்றும் வர்க்க ரீதியான பாகுபாட்டோடுதான் இச்சட்டத்தை வடிவமைத்தார். இச்சட்டம் அப்போதைய பிரிட்டிஷ் முதலாளிகளுக்கும், அவர்களது இந்திய கூட்டாளிகளுக்கும், அவர்கள் எவ்வளவு பெரிய நிதிக்குற்றங்களில் ஈடுபட்டாலும் கூட தண்டனை அளிக்கவில்லை.
பிரிட்டிஷ் இந்தியாவில், நிர்வாகத்திலும் வர்த்தக நடவடிக்கைகளிலும் பிரிட்டிஷ்காரர்களே உயர்அதிகாரிகளாக இருந்தனர். இவர்கள் நிதி தொடர்பான குற்றங்களில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது என்பது தெரிந்தும், அவர்களது உள்ளூர் ஏஜெண்டுகளாக செயல்பட்ட ஜமீன்தார்கள், ஏழை மக்களின் நிலங்களை மோசடி செய்து அபகரித்த போதிலும் அவர்கள் மீது எந்த நட வடிக்கையும் எடுக்காதவிதத்தில் இந்திய தண்டனைச்சட்டம் வடிவமைக்கப்பட்டது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும் கூட, அவர்களுக்கு உடல் ரீதியாக போலீசாரால் தண்டனை ஏதும் தரப்படாதவிதத்தில் இந்த சட்டம் அமலாக்கப்பட்டது.
பிரிட்டிஷ்காரர்கள் இந்த நாட்டை விட்டு போனபின்னரும், இந்த சட்டங்களில் சில, ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவானதாக இன்றளவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய தண்டனைச்சட்டம் மட்டுமல்ல, வேறு சில நிதிச்சட்டங்களும் கூட இந்த வகைப்பட்டவையே. இப்படித்தான், பெரு மளவு வருமான வரி ஏய்ப்பு செய்தாலும் கூட வெகுசில மாதங்கள் மட்டுமே தண்டனை அளிக்கிற வருமான வரிச்சட்டத்தை நாம் பெற்றிருக்கிறோம். வருமானவரி சட்டத்தில், பெரும்பாலான குற்றங்களுக்கு அபராதம் செலுத்தினால் போதும் என்றே விதிகள் உள்ளன.
இதனால்தான் வரி ஏய்ப்பும் மோசடியும் ஊக்குவிக்கப்படுகிறது. சிறிய வணிகர்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை வரி ஏய்ப்பு எளிதாக செய்ய முடிகிறது. பலவீனமான சட்டங்கள் இருப்பது அவர்களுக்கு தெரியும்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்படித்தான் மெகா மோசடிகளை செய்ய அச்சமின்றி துணிந்துள்ளன. இவற்றை தண்டிக்க வலுவான சட்டங்கள் மட்டுமின்றி அரசியல் உறுதியும் தேவை. போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவால் நூற்றுக்கணக்கானோர் பலியாயினர். மிகப்பெரிய பேரழிவு அது. ஆனால் இந்த நிறுவனத்தின் தலைவர் வாரன்
ஆண்டர்சன் (பார்க்க: படம்) கைது செய்யப்பட்ட அடுத்த நாளே வெளியில் வந்துவிட்டார். இந்திய தொழில் நிறுவனங்களின் வரலாற்றில் மிகப் பெரும் குற்றம் இழைத்த இந்த நிறுவனத்தின் தலைவரை, இந்த குற்றத்திற்கு எப்படி பொறுப்பாக்குவது என்று சட்டத்திற்கு தெரியவில்லை.
இந்தியாவில் புதிய பயங்கரவாத ஒழிப்பு சட்டங்கள், பழைய சட்டங்களில் திருத்தங்கள், நீதித்துறை ஆணையம் ஆகியவற்றை பற்றி தீவிரமாக விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன மோசடி வெளியாகியுள்ளது. இந்த மிகப்பெரும் கார்ப்பரேட் குற்றத்தை இந்திய சட்டம் எப்படி கையாளுகிறது என்பதை பார்ப்போம்.
நன்றி : http://lightink.wordpress.com
January 9, 2009
சத்யம் கம்யூட்டர்ஸ் – இன்னொரு “என்ரான் ஊழல்”
இந்தியாவின் கணிப்பொறி நிறுவனங்களில் 4 வது இடத்தில் இருந்தது “சத்யம் கம்யூட்டர்ஸ்”. கடந்த பல ஆண்டுகளாக சத்யத்தில் நடந்த 8000 கோடி ஊழலால் கடந்த இரண்டு நாட்களாக இந்திய பங்குச்சந்தை கதிகலங்கி போயிருக்கிறது. சத்யம் எல்லா சானல்களிலும் பிரேக்கிங் நியூஸில் தவறாமல் இடம்பெறுகிறது.
இன்றைக்கு ஆந்திர அரசு சத்யத்தின் இயக்குநர் ராஜூவை கைது செய்வதற்கான எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறது.
ரூ. 200 ஐ தொட்டுக்கொண்டிருந்த சத்யத்தின் பங்குகள் வீழ்ச்சியாகி, நேற்று ரூ. 40க்கும் கீழே சரிந்துவிட்டன. சத்யம் பங்குகளை வாங்கி வைத்திருந்த பங்குதாரர்கள் போண்டியாகி போனார்கள்.
66 நாடுகளில் வேலை செய்யும் 53000 ஊழியர்களில் அடுத்த மாதம் 10000 ஊழியர்கள் வெளியேற்றப்படலாம் என செய்திகள் வருகின்றன.
இனி விரிவாக பார்க்கலாம்.
****
உலக வங்கி வேலை ரத்து
உலக வங்கிக்கான வேலைகளை சத்யம் செய்துகொண்டிருந்தது. இரண்டு வாரத்திற்கு முன்பு உலக வங்கி, தனது வேலைகளை 8 ஆண்டுகளுக்கு நிறுத்த சொல்லி உத்தரவிட்டது.
காரணம் - தனது டேட்டா பேஸை திருடிவிட்டதாகவும், தனது டாக்குமெண்டுகளை சரியாக ஒப்படைக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியது. அப்பொழுதே அதன் இயக்குநர் ராஜூ ராஜினாமா செய்வார் என பேசப்பட்டது. ஆனால் விலகவில்லை.
சத்யம் இயக்குநர் ராஜூ ராஜினாமா
கடந்த டிசம். 7ந்தேதி ராஜூ ஒரு ஒப்புதல் வாக்குமூலமாய் 5 பக்க அளவில் தயாரித்து சத்யத்தின் போர்டு இயக்குநர்கள் குழாமிற்கும் (Board of Directors), பங்குச்சந்தையை நிர்வகிக்கும் செபி (SEBI), ஸ்டாக் எக்சேஞ்சுகளுக்கும், செய்தி நிறுவனங்களுக்கும் அனுப்பினார்.
தான் செய்த தவறுகளை பட்டியலிட்டு, தான் அதற்காக பொறுப்பேற்பதாகவும், சட்டரீதியாக தான் எதிர்கொள்வதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
கணக்கு வழக்குகளில் நடந்த தில்லுமுல்லுகளில் சில
• நல்ல மதிப்பு வருவதற்காக லாபத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். 2212 கோடிக்கு பதிலாக 2700 கோடி (செப். 2008 – 6 மாத வரவு செலவு அறிக்கைபடி)
• பணம் கையிருப்பை அதிகமாக்கி காட்டியிருக்கிறார்கள். ரூ. 5361 கோடி கணக்கில். உண்மையில் 300 கோடி தானாம்.
• செலுத்த வேண்டிய கடனை குறைத்து காட்டியிருக்கிறார்கள்.
• வர வேண்டிய கடனை அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.
ராஜூ இது தவிர தனது இரண்டு மகன்கள் நடத்திவந்த இரண்டு கட்டுமான (Maytas infra. Ltd, Maytas properties ) நிறுவனங்களை சத்யம் கம்யூட்டர்ஸ் வாங்குவதற்கு எல்லா வேலைகளையும் முடித்து, முதலீட்டாளர்களின், பங்குதாரர்களின் எதிர்ப்பால் கடைசி நேரத்தில் ரத்து செய்திருக்கிறார்.
நடவடிக்கைகள், கண்டனங்கள், வழக்குகள்
பங்குகள் மதிப்பு சரிந்ததால், மும்பை பங்குச் சந்தையும், தேசிய பங்குச் சந்தையிலிருந்தும் நிறுவனங்களின் பட்டியலிருந்து சத்யத்தை தூக்கி கடாசிவிட்டார்கள்.
சத்யத்தின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்த பிரைஸ்வாட்டர் கூப்பர் ஆடிட்டிங் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக இந்திய தணிக்கையாளர்களுக்கான அமைப்பு அறிவித்திருக்கிறது.
“இது எப்படி சாத்தியம்?” என செபி அதிர்ச்சி ஆகியிருக்கிறதாம்.
“நிர்வாக குளறுபடி தான் காரணம்” என இன்போசிஸ் நாராயணமூர்த்தி என்கிறார்.
“இந்திய கணிப்பொறி நிறுவனங்களின் மீது ஒரு நல்ல மதிப்பு இருக்கிறது. அதை மூலதனமாக வைத்து ராஜூ விளையாடிவிட்டார்” என டெக் மஹிந்திரா நிர்வாகம் கோபப்பட்டிருக்கிறது.
'சர்வதேச அளவில் பெரிய நிறுவனங்கள் அனைத்தின் மீதும் மிகப்பெரிய சந்தேகத்தை விதைக்க அவரது மோசடி காரணமாகிவிட்டது” என்கிறார் நாஸ்கம் தலைவர் கணேஷ்.
போர்டும், அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ்-ம் தனது ஆர்டர்களை கைமாத்திவிட்டதாம்.
சத்யத்தில் தங்கள் பணத்தைப் போட்டிருந்த முதலீட்டாளர்கள் அபர்தீன், விஸாட், ஜேபிமோர்கன், எல்.ஐ.சி கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
பங்கு பத்திரங்களை வாங்கி ஏமாந்த அமெரிக்கர்கள் சத்யத்தின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.
கூட்டுக் களவாணிகள்
ராஜூ தான் எழுதிய கடிதத்தில் தான் செய்த இமாலய தவறுகள் வேறு யாருக்கும் தெரியாது என குறிப்பிட்டிருக்கிறார். இது கடைந்தெடுத்த பொய்.
நிர்வாக இயக்குநர்கள் குழாம், தணிக்கை நிறுவனம், அதனுடைய சி.எப்.ஒ. எல்லோரும் கூட்டாய் தான் கொள்ளையடித்திருக்கிறார்கள். நிறுவன நடைமுறைகளில் இப்படி தனியாக கொள்ளையடிப்பது சாத்தியமில்லை. கூட்டாகத்தான் கொள்ளையடிக்க முடியும்.
இந்தியாவில் 4வது இடத்தை பிடித்திருக்கிற சத்யத்தில் இப்படி ஊழல் நடப்பது சாத்தியப்படுகிறது என்றால், அவ்வளவு கோளாறுகள் இங்கு இருக்கின்றன என்று தானே அர்த்தம்.
செபி இன்றைக்கு ஹைதாரபாத்துக்கு தனது அதிகாரிகளை சோதனைக்கு அனுப்பியிருக்கிறதாம். செத்தப்பிறகு போஸ்ட்மார்ட்டம் செய்ய செபி எதற்கு?
முதலாளித்துவ பொருளாதாரம் ஒரு ஏமாற்று
அமெரிக்க திவாலைப் பற்றி தொடர் கட்டுரைகள் எழுத தொடங்கும் பொழுது, முதல் கட்டுரையாக முதலாளித்துவ பொருளாதாரம் பற்றிப் பார்த்தோம்.
//1. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
2. அந்நிய செலாவணி அதிகரிப்பு
3. பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகரிப்பு
4. ஏற்றுமதி அதிகரிப்பு
5. நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பு//
.இது எவ்வளவு போலியானது என அந்த கட்டுரையில் விளக்கியிருந்தேன். இன்றைக்கு அதற்கு ஒரு நல்ல உதாரணம் “சத்யம்”.
அரசு உதவி பெறுகிற சதி
இந்த ஊழல் கடந்த பல ஆண்டு காலமாக நடந்து வந்திருக்கிறது. இப்பொழுது ஏன் ராஜூ அறிவித்தார் என ஒரு கேள்வி எழுகிறது.
“சந்தை பொருளாதாரம் தான் எல்லாவற்றையும் தூக்கி நிறுத்தும்” என தேனெழுக பேசிய முதலாளித்துவவாதிகள் பல தில்லுமுல்லுகள் மூலம் வால்ஸ்டீரிட்டையே தலைகுப்புற கவிழ்த்தார்கள். பிறகு, கொஞ்சம் கூட சொரணையே இல்லாமல் தங்களை காப்பாற்றுமாறு அரசிடம் கையேந்தி நின்றார்கள்.
அமெரிக்க அரசு மக்கள் நலம் நாடு அரசா என்ன? முதலாளிகளின் அரசு தானே! தாராளமாய் உடனே 70000 கோடி டாலரை தூக்கிக்கொடுத்தது.
நம்மை விட பெரிய திருடன்கள் எல்லாம் சுதந்திரமாய் வரும் பொழுது, நாம் வலம் வருவதற்கு என்ன? என்ற எண்ணம் தான் ராஜூவுக்கு தெம்பை கொடுத்திருக்கும். அது அவர் எழுதிய கடித்ததிலேயே நன்றாக தெரிகிறது.
இந்திய அரசு சத்யத்தை காப்பாற்றுகிறேன் பேர்வழி என ஏதேனும் அரசு பணத்தை தூக்கி கொடுத்தால், மக்கள் தான் இதற்கு எதிராய் போராடவேண்டும்.
January 6, 2009
அமெரிக்க திவால் – “மார்க்சியமே உரைகல்”
இன்றைக்கு அமெரிக்க பொருளாதார திவாலுக்கு பிறகு, பல்வேறு கருத்துக்கள், ஆலோசனைகள், அறிவுரைகள் சொல்லப்படுகின்றன. எல்லாம் ஏற்கனவே பலமுறை பேசி, பேசி ஓய்ந்து புளித்துப்போன விசயங்கள். முதலாளித்துவம் அதன் தலை முதல் வால் வரை அனைத்தும் அழுகிவிட்டது.
மீண்டும் மீண்டும் எழும் பொருளாதார சுனாமியைத் தவிர்க்க இதோ மார்க்சியம் தீர்வு சொல்கிறது.
"உற்பத்தியின் மீதும் விநியோகத்தின் மீதும் உழைக்கும் மக்களின் கண்காணிப்பையும், கட்டுப்பாட்டையும் கொண்டு வருவதுதான் தீர்வு".
மார்க்சின் மூலதனத்தை இன்றைக்கு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பலர் வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்களாம். நன்றாக படிக்கட்டும்.
இனி மார்க்சியம் தான் உலகை ஆளும்.
October 20, 2008
Banking crisis gives added capital to Karl Marx’s writings
Roger Boyes in Berlin
Bankers of the world, unite! You have nothing to lose but your bonuses, houses in Esher, holidays in the Caribbean and your Jermyn Street shirts. The upside is that you have the time, at last, to read the complete works of Karl Marx.
The prophet of revolutionaries everywhere, the scourge of capitalism, is enjoying a comeback.
In Germany Das Kapital, which for the past decade has been used mainly as a doorstop, is flying off the shelves as the newly disenfranchised business class tries to work out the root of the present crisis.
“Marx is fashionable again,” declares Jörn Schütrumpf, head of the Berlin publishing house Dietz, which brings out the works of Marx and his collaborator Friedrich Engels. Sales have trebled – albeit from a pretty low level – since 2005 and have soared since the summer.... continues.
http://business.timesonline.co.uk/tol/business/economics/article4974912.ece
****
ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது. (பு.ஜ.வில் வெளிவந்த கட்டுரையின் இறுதிப் பகுதி தொடர்கிறது)
மார்க்சியமே உரைகல்
"முதலாளித்துவ உற்பத்தி முறையில், ஒரு நெருடிக்கடிக்கான தீர்வு இன்னொரு நெருக்கடிக்குத் தான் இட்டுச் செல்லும்; நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு, பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை விழுங்கி, தமது ஏகபோக ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும்; நாடாளுமன்ற என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை மூடி மறைக்கும் திரை'' என மார்க்சியம் முன்னறிந்து கூறிய பல உண்மைகளை இந்த "நெருக்கடி'' உலக மக்களின் முன்னே சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விட்டது.
முதலாளித்துவம் உருவாக்கும் நெருக்கடிகளில் இருந்து உழைக்கும் மக்களைக் காப்பாற்ற சோசலிசம்தான் தீர்வு; உற்பத்தியின் மீதும் விநியோகத்தின் மீதும் உழைக்கும் மக்களின் கண்காணிப்பையும், கட்டுப்பாட்டையும் கொண்டு வருவதுதான் தீர்வு என்கிறது மார்க்சியம்.
ஆனால், முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களில் ஒரு சாரர், பங்குச் சந்தை சூதாட்டத்தைச் சட்டம் போட்டுக் கண்காணிக்க வேண்டும்; கள்ளனை விடக் காப்பாளன் திறமைசாலியாக இருக்க வேண்டும் எனத் தீர்ப்பு சொல்கிறார்கள். காகிதச் சட்டங்களின் மூலம் முதலாளித்துவத்தின் ஊழலையும், மோசடித்தனத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து விடலாம் என நம்புவது கடவுள் நம்பிக்கையைவிட மூடத்தனமானது. முதலாளித்துவச் சட்டங்கள், சுண்டெலியை வேண்டுமானால் பிடிக்குமேயொழிய, பெருச்சாளிகள் தப்பிப் போவதைக் கண்டு கொள்ளாது.
பங்குச் சந்தை சூதாடிகளும், வங்கிகளும் 1930இல் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க, கண்காணிப்புச் சட்டங்கள் போடப்பட்டன. 1990இல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைத் தடுக்க, பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் சட்டங்கள் நீக்கப்பட்டன. இப்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க, ""மீண்டும் சட்டம்கண்காணிப்பு'' என்பது கிழடு தட்டிப் போன தீர்வாகும்.
இன்னொரு பிரிவினரோ, "சந்தை தவறு செய்யாது; பேராசையால் தான் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாக''க் கண்டுபிடித்து, "நிதி நிறுவனங்கள் பேராசையைத் துறக்க வேண்டும்'' என உபதேசித்து வருகிறார்கள். இந்த அறிவுரைக்கு முதலாளிகளின் பதில் என்ன தெரியுமா?
அமெரிக்காவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான "ஏ.ஐ.ஜி''க்கு, 8,500 கோடி
டாலர்களைக் கொடுத்து, அந்நிறுவனம் திவாலாகிவிடாமல் கை தூக்கி விட்டது, அமெரிக்க அரசு. இந்தப் பணம் கைக்குக் கிடைத்த மறுநிமிடமே, அந்நிறுவனம் முகவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில், கலிபோர்னியா மாநிலத்தில் மொனார்க் கடற்கரையில் உள்ள ஆடம்பரமான செயிண்ட் ரேகிஸ் உல்லாச விடுதியில் 4,43,000 டாலர் செலவில் களிவெறியாட்டக் கூத்தை நடத்தியது. ஏ.ஐ.ஜி. அதிகாரிகள் மக்கள் பணத்தில் மஞ்சள் குளிப்பது வெளியே கசிந்தவுடன், அதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. இதனால், ஏ.ஐ.ஜி. மற்றொரு களியாட்டக் கூத்தை நடத்த முடியாமல் கைகழுவியது; எனினும், ""நிகழ்ச்சி ரத்தானது தங்களைச் சோர்வடையச் செய்துவிட்டதாக''க் குறைபட்டுக் கொண்டார்கள், அதன் அதிகாரிகள்.
ஊதாரித்தனத்தையும், ஒட்டுண்ணித்தனத்தையும் கைவிட மறுக்கும் இக்கும்பலை, "சீட்டுக்
கத்தரித்து வாழும் சுகஜீவிகள்'' என அடையாளம் காட்டினார், லெனின். இச்சமூக விரோதக் கும்பலைப் போதனைகளால் திருத்திவிட முடியாது. இவர்களையும், இவர்களைப் பாதுகாக்கும் ஏகாதிபத்திய சமூகக் கட்டமைப்பையும் தூக்கியெறியும் போராட்டமே தீர்வாகும்!
• செல்வம்
நன்றி :
புதிய ஜனநாயகம் – நவம். 2008
January 2, 2009
வங்கிகளின் ‘சேவை’த் தரம்?
பாரத ஸ்டேட் பாங்கு (SBI) வங்கிக்கு நீங்கள் போயிருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் நிச்சயம் கோபபட்டிருப்பீர்கள் அல்லது புலம்பியாவது இருப்பீர்கள். உண்மையா? இல்லையா?
இந்தியாவின் முன்ணணி வங்கிகள் எல்லாம் வாடிக்கையாளர் சேவையில் எரிச்சல் தான் ஊட்டுகின்றன.
***
இந்த பதிவிற்கான தேவை - எஸ்.பி.ஐ. இன்றைக்கு தந்திருக்கிற நாளிதழ்களில் ஒரு விளம்பரம் தந்திருக்கிறது.
பாரத ஸ்டேட் வங்கி தனது 11,111 வது வங்கி கிளையை அசாம் மாநிலத்தில் சோனாபூரில் துவக்கி வைக்க.. உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்களை அழைத்து இருக்கிறது.
அந்த விளம்பரத்தில் “வாடிக்கையாளர்களுடன் எப்போதுமே நேசமிகு நெருக்கத்தை பராமரித்து வருகிறது” என வாசகம் வருகிறது.
எஸ்.பி.ஐ - அரசு ஊழியர்களுக்கான சம்பளம், பென்சன் வழங்குவது என அரசினுடைய பல்வேறு தேவைகளை நிறைவேற்றுகிறது. மேலும், இந்தியாவில் நிறைய கிளைகள், நிறைய ஏடிஎம் மையங்கள் அதிகம் வைத்திருப்பது எஸ்.பி.ஐ தான். இதனால் எப்பொழுமே கூட்டம் நிரம்பி வழிகிறது.
பணம் கட்ட, டிடி எடுக்க என டோக்கன் வாங்கினால் குறைந்த பட்சம் நமக்கு முன்னால் 50
பேர் காத்திருக்கிறார்கள். விடுமுறை நாளுக்கு அடுத்த நாள் போனால்.... 100 க்கும் குறையாமல் காத்திருக்கிறார்கள். கிட்டதட்ட அந்த வேலையை முடிக்க அரை நாள் ஆகிவிடுகிறது. காத்திருக்கும் பொழுதில் அங்கு அமர்ந்திருக்கிற எல்லா வாடிக்கையாளர்களுமே புலம்பித்தள்ளுவார்கள். டென்சனுடன் அமர்ந்திருப்பார்கள்.
மிச்சம் பிடிக்கிறேன் பேர்வழி என தேவையான ஆட்களை நியமிக்காமல், வங்கிக்கு வருகிற எல்லா வாடிக்கையாளர்களையும் காக்க வைப்பது மக்களின் நேரத்தை மதிக்காத போக்குதான்.
எஸ்.பி.ஐ மட்டுமில்லை ஐ.சி.ஐசிஐ, இந்தியன் வங்கி, கனரா வங்கி என எல்லா வங்கிகளும் வாடிக்கையாளர்களை பல்வேறு வேலைகளில் அலைகழிக்கிறார்கள்.
எப்பொழுதும் கூட்டமாய் இருக்கிற எங்கள் பகுதியில் உள்ள இரண்டு இந்தியன் வங்கி-களில்
பியூனே நியமிக்காமல், வாடிக்கையாளர்களையே அங்கே போய் கையெழுத்து வாங்கி வாருங்கள் என பியூனாக பயன்படுத்திக்கொள்வார்கள். இதை அங்குள்ள வங்கி சீனியர் மேனேஜரிடமே இதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறேன். நேரிடையாக பதில் சொல்லாமல், மழுப்பலாய் பதில் சொன்னார்.
இதுதவிர, வாடிக்கையாளர்களை படித்தவர்கள், படிக்காதவர்கள் என பார்த்து, இவர்கள் கையாளுகிற விதம் மக்களைவிட “தாம் மேம்பட்ட மக்கள்” என்கிற போக்கு தெரிகிறது. இதற்கு பல்வேறு உதாரணங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
சமகால நிலைமை என்னவென்றால், இந்திய அரசு பல வழிகளில் நிதிமூலதன கும்பல்களுக்காக வங்கி நடவடிக்கைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது.
உதாரணமாய், வருங்கால வைப்பு நிதி பணத்தை எஸ்.பி.ஐ. வங்கி தான் பாரமரித்து வந்தது. பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பினாலும், அரசு அதை கண்டுகொள்ளாமல், பங்குச்சந்தை வீழ்ச்சியை சரி செய்கிறேன் என்ற பெயரில், வைப்புநிதியை கையாள ஐசிஐசிஐ, ஹச்.எஸ்.பி.சி, ரிலையன்ஸ் கேப்பிடல் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் பிரித்து கொடுத்தது.
இந்த போக்கு தொடரும் பட்சத்தில்... ஒருநாள் அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகள் போல தேசிய வங்கிகளும் மற்ற வங்கிகளும், திவால் நோட்டீஸ் கொடுக்கும் நிலை வந்தாலும் வரலாம்.
மக்கள் தான் மகத்தானவர்கள். மக்களோடு ஐக்கியப்பட்டு அரசு செய்யும் தில்லுமுல்லுகளை மக்களிடம் அம்பலப்படுத்தி போராட்டங்களை கட்டியமைத்தால் மட்டுமே இந்த நிலை வராமல் தடுக்க முடியும். இல்லையெனில், இந்த வங்கி ஊழியர்கள் தனிமைப்பட்டு வேலை இழந்து தெருவில் நிற்கும் காலம் வெகுதூரமில்லை.