பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் விடுதலைக்குப் போராடுவோம்!
முன்குறிப்பு : மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய, தமிழகமெங்கும் மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள், வியாபாரிகள் என பரந்துபட்ட அளவில் மக்களின் போராட்ட அலைகள் ஓங்கியடித்தன! இடைக்கால வெற்றியும் கிடைத்துள்ளன. போராட்ட களத்தில் குறிப்பிட்ட தக்க சதவிகித முழக்கங்கள் அரசியலை தள்ளிவைத்து, வெறும் மனிதாபிமான அடிப்படையில் இருந்தன. அரசியலை தள்ளி வைப்பது மக்களை மழுங்கடிக்கும் செயலாகும். இதன் விளைவு தான் முத்துக்குமார், செங்கொடியின் சாவுகள்! இந்த துண்டறிக்கை சரியான அரசியலை முன்னிறுத்துகிறது. படியுங்கள். உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்!
****
அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
குமுறிக்கொண்டிருக்கிறது தமிழகம். தமிழர்கள் உணர்ச்சிப் பிழம்பாய் கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள். இராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை 21 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் வைத்து வதைத்தது போதாதென்று தூக்கிலிடுவதற்கும் நாள் குறித்துவிட்டது, இந்திய அரசு.
அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்க்கெதிராய் போர்க்குற்றங்கள் புரிந்தவர் தான் முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி. ஆகவே, இராஜீவ் கொலை என்பது அடிப்படையில் ஓர் அரசியல் நடவடிக்கை. இந்திய ஆளும் வர்க்கத்தின் தெற்காசிய பிராந்திய மேலாதிக்க - அம்பானி, டாடா, பிர்லா போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் சுரண்டல், ஆதிக்க - நோக்கத்திற்கு ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை, ஒரு கருவியாக பயன்படுத்த முயன்றது இந்திய அரசு. 'இந்திய இலங்கை ஒப்பந்தம்' என்ற அரசியல் சதித்திட்டத்தை ஈழத்தமிழ் மக்கள் மீது திணித்தது. தமது தன்னுரிமையை மறுக்கும் இந்த ஒப்பந்தத்தைப் புலிகளும் ஈழத்தமிழ் மக்களும் ஏற்க மறுத்தனர். இதையே ஒரு முகாந்திரமாக கொண்டு அமைதிப்படை என்ற பெயரில் இந்திய இராணுவம் ஈழத்தின் மீது ஓர் ஆக்கிரமிப்புப் போரை நடத்தியது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும், புலிகளும் கொல்லப்பட்டனர்; பாலியல் வன்முறை உள்ளிட்ட அனைத்து வெறியாட்டங்களையும் இந்திய இராணுவம் நடத்தியது; இறுதியில் தோல்வியுற்று அவமானப்பட்டு திரும்பியது.
இந்த ஆக்கிரமிப்புப் போரின் எதிர்விளைவுதான் இராஜீவ் கொலை. எனவே அது போர்க்க்குற்றவாளிக்கெதிரானதொரு நடவடிக்கை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் புனிதப்படுத்தப்பட்ட தமது ஆக்கிரமிப்பை ஒரு அரசியல் நடவடிக்கையாகச் சித்தரித்துக்கொள்ளும் இந்திய ஆளும் வர்க்கம், இந்த பதில் நடவடிக்கையை மட்டும் அரசியல் வகைப்படாத கிரிமினல் நடவடிக்கையாகச் சித்தரிப்பதும் அதன் அடிப்படையில் தண்டிப்பதும் மோசடியாகும். இந்த அடிப்படையில் தான் மூவரின் தண்டனையை ரத்து செய்யப்படவேண்டும் என்று கோருகிறோம்.
இராஜீவ் கொலை பயங்கரவாத நடவடிக்கை அல்ல, தடா சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது; தடா சட்டமும் காலாவதியாகிவிட்டது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும், அதற்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட சாட்சியங்களும் வாக்குமூலங்களும் தடா கோர்ட்டில் பெறப்பட்டவைதான். மேலும், குற்றம் சாட்டப்பட்டோருக்காக வாதாடிய வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதங்களுக்கு விடை கூறாமலேயே கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பை அளித்தது உச்சநீதிமன்றம். தீர்ப்பை மீளாய்வு செய்யக்கோரும் மனுவை பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளாமல் மரண தண்டனையை மீண்டும் உறுதி செய்தது. தாங்களே புனிதம் என்று கூறும் சட்ட நடைமுறைகளைக் கூட உச்சநீதிமன்றம் அலட்சியப்படுத்தியுள்ளது. எனவே, சட்டரீதியாகச் செல்லத்தக்கதல்ல என்ற அடிப்படையிலும் இத்தண்டனை ரத்து செய்யப்பட வேண்டுமெனக்கூறுகிறோம்.
ஈழத்தில் இந்திய அரசு நடத்திய சதிகள், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மோசடித்தன்மை, 'அமைதி'ப்ப்டையின் அட்டூழியங்கள் ஆகியவற்றை மூடிமறைத்து, இராஜீவ்காந்தி மீது அனுதாபத்தையும், இந்திய தேசிய வெறியையும் வைத்து செய்த இப்பொய்ப் பிரச்சாரம் தோற்றுவித்த உணர்ச்சியின் அடிப்படையில் தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பும், மத்திய மாநில அரசுகளின் முடிவுகளும் அமைந்திருக்கின்றன.
இலங்கை இனவெறிப் பாசிச அரசின் போர்க்குற்றங்கள் சர்வதேச அரங்கில் அம்பலப்பட்டு வரும் இன்றைய சூழலில், இராஜபக்சே அரசையும் பங்காளியான இந்திய அரசையும் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்றுவதற்கும், தமிழுணர்வாளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளுவதற்கும் இம்மூவரின் கருணை மனு நிராகரிப்பு இந்திய ஆளும் வர்க்கத்துக்கு தேவைப்படுகிறது. இராஜபக்சே நடத்தியது சொந்த நாட்டு மக்கள் மீதான ஆக்கிரமிப்புப் போர். இந்தியாவின் ஈழ ஆக்கிரமிப்பு அன்றுடன் முடியவில்லை. முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் முடித்துப் புதைத்து வைக்கும் வரையில் இந்திய அரசு இலங்கை இராணுவத்துக்குத் துணை நின்றது. இன்னமும் நிற்கிறது. இராஜபக்சேயின் மீதான போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படுவதற்கும் இந்தியாதான் தடையாக நிற்கிறது. எனவே, மூவரின் மரண தண்டனை என்பது முள்ளி வாய்க்கால் படுகொலையின் தொடர்ச்சியே.
50000 ஈழத் தமிழ் உயிர்களைக் காவு கொண்ட பிறகும், இந்திய அரசின் தமிழர் மீதான வெறுப்பு அடங்கவில்லை. கச்சத்தீவு, சேது சமுத்திரம், காவிரி-முல்லைப் பெரியாறு என்று தொடரும் தமிழனின் மொழி, இனம், பண்பாடு, அரசியல் அடிப்படையிலான உரிமைகளைப் பறித்து தமிழனின் அடையாளங்களை அழிக்கும் பார்ப்பன ஆதிக்கவெறியின் வெளிப்பாடே மூவரின் மீதான் மரண தண்டனை.ஈழ, இந்திய தமிழர்கள் மீதான வெறுப்பு, வக்கிரம் அடிப்படையிலான தாக்குதல் நடவடிக்கையே!
* பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது.
* இந்தியா மற்றும் எந்த நாட்டுச் சட்டத்துக்கும் இயற்கையான நீதிக்கும் எதிரானது.
* மனிதத் தன்மைக்கும் மனித நேயத்துக்கும் எதிரானது.
* அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் செயல்.
* பேரறிவாளன், முருகன், சாந்தன் உருவத்தில் தூக்குமேடையில் நின்றுக்கொண்டிருப்பது ஒரு அரசியல் நியாயம். ஒரு ஆக்கிரமிப்புப் போர்க்குற்றவாளியைக் 'கொன்றதிற்கு' தூக்குத்தண்டனையா?
மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
தொடர்புக்கு: அ. முகுந்தன்,
110, 2 வது மாடி,
மாநகராட்சி வணிக வளாகம்,
63 ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை 24.
பேசி: 9444834519.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment