> குருத்து: மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த இடைக்கால வெற்றி!

August 29, 2011

மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த இடைக்கால வெற்றி!

3 பேரின் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற, உயர்நீதிமன்றம் 8 வாரம் தடை!

ராஜிவ் படுகொலை வழக்கில் 3 பேரின் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற 8 வாரம் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்ததையடுத்து செப்டம்பர் 9-ம் தேதி இவர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது.

இந்த நிலையில் இவர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், 8 வாரத்துக்கு 3 பேரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என உத்தரவிட்டது

******
ஆயுள் தண்டனையாக குறைக்க சட்டசபையில் தீர்மானம்!

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சட்டசபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது என்றார்.

இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் தீர்மானத்தை ஆதரித்து அதை நிறைவேற்றினர்.

இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 பின்னூட்டங்கள்: