சென்னை, செப். 10: தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சிகரமான தகவலை பத்திரிகையாளர் பி. சாய்நாத் தெரிவித்தார்.
சினேகா அமைப்பின் வெள்ளி விழா ஆண்டு நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. உலகத் தற்கொலை தடுப்பு நாள் நிகழ்வாகவும் நடந்த அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சாய்நாத் பேசியதாவது:
தற்கொலை மரணம் என்பது உலகெங்கிலும் அதிகரித்து வருகிறது. படித்தவர்கள் அதிகம் நிறைந்த நார்வே, ஸ்காண்டிநேவியா போன்ற நாடுகளிலும் தற்கொலை சம்பவங்கள் அதிகமாக உள்ளன. எனினும், எல்லா நாடுகளிலும் விளிம்பு நிலையில் வாழும் சமுதாயத்தில்தான் தற்கொலைகள் அதிகம் நிகழ்கின்றன.
இந்தியாவைப் பொருத்தவரை கடந்த பத்தாண்டுகளில் மக்கள் தொகை 18 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தற்கொலை மரணங்களும் 15 சதவீதம் அதிகரித்துள்ளன. குறிப்பாக விவசாயிகள் தற்கொலை என்பது மிகப்பெரும் எண்ணிக்கையில் உள்ளது.
கடந்த 1997-ம் ஆண்டிலிருந்து நம் நாட்டில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 600 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். முதல் 6 ஆண்டுகளில் ஒரு ஆண்டில் விவசாயிகளின் சராசரி தற்கொலை என்பது 16 ஆயிரத்து 267 ஆக இருந்தது. அதுவே, 2004-ல் இருந்து அடுத்த 6 ஆண்டுகளில் 17 ஆயிரத்து 105 ஆக அதிகரித்து விட்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாட்டிலேயே விவசாயிகளுக்கு அதிக வசதிகள் செய்து கொடுக்கப்படும் மாநிலம் என்றும், முன்னோடியான விவசாய மாநிலங்களில் ஒன்று என்றும் கூறப்படுகிறது. ஆனால், இங்கேயே 2008-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது விவசாயிகளின் தற்கொலை என்பது இரண்டு மடங்காக அதிகரித்துள்ள அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
2008-ம் ஆண்டு தமிழ்நாட்டில் சுமார் 500 ஆக இருந்த விவசாயிகளின் தற்கொலை மரணம், அடுத்த ஆண்டிலேயே இரண்டு மடங்கு அதிகரித்து 1,260 ஆக உயர்ந்ததாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் விவசாயிகளின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதும், விவசாயத் தொழிலில் ஈடுபட பெரும் பணக்கார நிறுவனங்கள் ஊக்கப்படுத்தப்படுவதும், விவசாயத் துறை விவசாயிகளிடமிருந்து அந்நியமாக்கப்பட்டு, முழுமையாக வர்த்தகத் துறையாக மாற்றும் முயற்சிகளே விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கக் காரணங்களாக உள்ளன.
விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் விவசாயக் கொள்கைகள் மாற்றம் பெறாத வரை, இதுபோன்ற விவசாயிகளின் தற்கொலை மரணங்களையும் தடுக்க முடியாது. குறிப்பாக வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்றார் சாய்நாத்.
தினமணி - 11/09/2011
September 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment